
தொலைதூரக் காட்சிகள் – காக்க நாடன் ( மலையாள சிறுகதை) மொழிபெயர்ப்பு – தி.இரா. மீனா.
மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள, கவித்துவமான நடையில் ஒரு சிறுகதை.
கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒரு தடுப்பறை. ஒருவரே புழங்கக்கூடிய அளவில் இருக்கும் அந்த அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அந்த அறையில் நேரம் காலம் தெரியாமல், எத்தனை வருடங்கள் அங்கு இருக்கிறான் என்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், அவன் இருக்கிறான்.
கடற்கரையின் பலமான பாறைகள் மீது கருங்கல்லால் கட்டப்பட்ட வெளிச் சுவர்கள் மிகவும் உறுதியானவை. கடலை ஒட்டி இருந்த அவனது அறையின் ஜன்னல் கம்பிகளை ஒரு யானையால் கூட அசைக்க முடியாது. ஜன்னல் வழியே அவன் காணும் புற உலகக் காட்சிகளையும், அறையில் தன் உள்மன எண்ணங்களை அசைபோடுவதையும் இந்த கதை சொல்கிறது. காட்சிகள் எல்லாமே, அவனைப் பொறுத்தவரை தொலைதூரக் காட்சிகள் தான்; ஆழமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டபோது உள் மனமும் அவனுக்கு மிகவும் தொலைவாகத்தான் தெரிந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல். தொடுவானம் வரை கடல். 24 மணி நேரமும் அருமையான கடல் காற்று. காற்று கடுமையானால் மட்டுமே ஜன்னல் மூடப்படும். மீனவர்களின் படகுகள், கடலுக்கு மேலே குவியலாக வட்டமிடும் பறவைகள், தொலைவில் அபூர்வமாக கப்பல்கள் கடப்பது, ஜன்னலில் ஒரு பக்கமாக நகர்ந்தால் கடற்கரை, மீன் விற்பனை என ஜன்னலின் வழியே பார்க்கலாம்!
அவன் ஒரு கொலைக் குற்றவாளி. இருந்தாலும், உயர் அதிகாரிகளுடன் நல்லுறவில் இருக்கிறான். அதனால் நான்கு அல்லது ஐந்து முறையாவது அந்த அறைக்கு வெளியே அவன் செல்ல முடியும்! அறைக்குள்ளேயே “சிறுநீர் கழிப்பது மலம் கழிப்பது என்பவை அவனுக்கு சிறிது கடினமாக இருந்தது” ராத்திரிகளை அவன் ஜன்னல் வழியாகவே சமாளிப்பான். பகல் நேரங்களில் கடலும், சூரியனும் தன்னை பார்ப்பதாக அவன் பயப்படுவான்! தனிமையில் எப்படிப்பட்ட எண்ணங்கள் அவனுக்கு வருகின்றன?
ஒரு கித்தான் நாற்காலி, புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிப்பது, எதையாவது கிறுக்குவது என அவன் பொழுது போகின்றது. கடல் மற்றும் வாழ்க்கையின் முடிவற்ற தன்மையை சிந்தித்துப் பார்ப்பது, கனவுகளைப் பின்தள்ளுவது, எதிர்காலத்தைத் திட்டமிடுவது என அவனது எண்ணங்கள் மிகச் சிறப்பாக சொல்லப்படுகின்றன.
உள் மனம் காட்டும் தொலைதூரக் காட்சிகள் வருத்தமும் துக்கமும் உடையவை. சரசு என்கிற சரஸ்வதியின் வெளுத்த முகமும், ரத்த சோகையான கண்களும், ஒட்டிய கன்னங்களும், வறண்ட உதடுகளும் அவன் நினைவுக்கு வருகின்றன. ‘அது ஒரு புனிதமான அழகு’ என்கிறான் அவன். “சரசு என்றால் காதலின் சுருக்கம் மற்றும் சரணடையும் அன்பு” எந்த நிலையிலும் அவளது கண்கள் தளும்பியே இருக்கும். சோகம், சந்தோஷம், காதல், சிரிப்பு என எல்லா நிலையிலும் அவள் கண்கள் ஈரமாக இருக்கும். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறி, ‘என்னுடன் வாழ, கனவு காணாதே. எனக்கான வாழ்க்கை என்பது சாத்தியம் இல்லாதது’ என்கிறான் அவன். ஆனால் அவளோ, ‘என் விதி இப்படி இருக்கிறதே’ என குறைபட்டுக் கொள்ளவில்லை. மாறாக, ‘நான் மிகத் திருப்தியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த விதிதான் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், சம்பந்தத்தையும் தந்திருக்கிறது’ என்று சொல்லி, அவன் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறாள்.
மனதில் இன்னொரு காட்சியாக, காட்டுக்கு வெளியே, பனைக் கூரையுடன், மண் சுவர் வைத்த ஓர் அறையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், புல் தரையில் அமர்ந்து புரட்சியாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘பசியைத் தாண்டிய புரட்சி தாகம்.’ அவர்களின் உணவு பீடியும், தண்ணீரும்தான். முன்பே அவர்கள் பிரட்டை சாப்பிட்டு முடித்து விட்டார்கள். அது செரித்தும் போயிருந்தது. பசி மீண்டும் வயிற்றை எரிக்க தொடங்கியது. சரியாக அன்றிலிருந்து ஒரு வாரம் சென்று மீண்டும் சந்திக்க முடிவு செய்து, அவர்கள் பிரிகிறார்கள்.
மற்றும் ஒரு காட்சியாக, காட்டிலிருந்து அவன் வீட்டுக்கு வருகிறான். கிராமத்தில் நில பிரபத்துவ சமுதாயத்தில் அதிகாரம் நிறைந்த செல்லப்பன் பிள்ளை இவனின் தலைவரான ராமனின் மகள் – 15 வயதேயான தாராவை -அரிசனப் பெண்ணை கற்பழித்து விட்டான் என்ற செய்தி கிடைக்கிறது. இதைப் பற்றி, கேட்க போன ராமனையும் அவன் நண்பர்களையும் செல்லப்பன் பிள்ளையும் அவன் கூட்டளிகளும் அடித்து நொறுக்கி விடுகின்றனர். கேள்வி கேட்க ஆளில்லாத தைரியம், செல்லப்பன் பிள்ளையின் அகங்காரமும், பிரபுத்துவ ஆணவமும் கண்டு கொதிப்படைகிறான் இவன். ”அராஜகம் செய்பவர்களைக் கேள்வி கேட்க இந்தப் பகுதியில் சிலர் இருக்கிறார்கள்” என்று எண்ணியபடி அவன் செல்லப்பன் பிள்ளை அவன் நண்பர்களுடன் இருக்கும் இடத்திலேயே சந்திக்கிறான். கேள்வி கேட்கும் இவனைக் கேலி செய்கிறார்கள். அவர்களுடன் மூர்க்கமான சண்டை – தன் உயிருக்கு ஆபத்து என்னும் நிலையில், செல்லப்பன் பிள்ளையின் கையில் இருக்கும் குத்துவாளைப் பிடுங்கி, அவனை ஆழமாக குத்துவிடுகிறான். ஆலமர உச்சிக்கு ரத்தம் பீய்ச்சி அடித்ததாகப் பார்த்தவர்கள் கூறினார்களாம்!
அடுத்த காட்சி அவன் ஜெயில் அறையில்.
“அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு வானத்தில் ரத்தத்தை சிதற செய்து கொண்டிருந்தான். அவன் தன் முகத்தை தேய்த்துக் கொண்டான். தாடி வளர்ந்து விட்டது. பரவாயில்லை, நாளை சிறைக்கு முடிதிருத்துபவன் வருகிற நாள்” என்று கதை முடிகிறது.
புரட்சிக்காரன், நில பிரபுத்துவம், ஒரு காதல்என வழக்கமான கதை என்றாலும் அது சொல்லப்படுகின்ற உத்தியிலே வாசகனைக் கவர்ந்து இழுத்து விடுகிறது. சிறுகதை என்றாலும், கவித்துவமான வர்ணனைகளும், தத்துவார்த்தமான சிந்தனைகளும் வாசிப்பவனுக்கு நிறைந்த மகிழ்ச்சியையும் திருப்தியும் கொடுத்து விடுகின்றன!
மிக இயல்பான நடையில் மொழிபெயர்ப்பென்றே தெரியாத அளவிற்கு சிறப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள கதை.
(Ref: பிம்பங்களுடன் கை குலுக்க மறுத்த பொழுதில்…. (மொழிபெயர்ப்புக் கதைகள்) தி.இரா.மீனா. புஸ்தகா டிஜிடல் மீடீயா).
