
கும்பகோணத்தில் தூரத்துச் சொந்தம் வீட்டுத் திருமணம். முதல்நாள் மதியம் சாரதியுடன் கிளம்பி, கூகிள் வழிகாட்ட, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என ஊர்களை பைபாஸ் செய்து சென்றோம். அநுகூலச் சத்ரு என்பார்களே, அது போல ஏதோ சுற்று வழியில், கிட்டத்தட்ட திருச்சி எல்லை வரை சென்று, கும்பகோணம் அழைத்து வந்து சேர்த்தது கூகிள் சாமி! தங்குமிடம் வந்த போது, எங்களைக் கடந்து சென்றது மாப்பிள்ளை ஊர்வலம் – ஆமாம் ஊர்வலமேதான், பாரம்பரிய பந்ததி மாறாத திருமணம்! அவசரமாக உடை மாற்றி, ஐந்து நிமிடம் நடந்து, திருமண மண்டபம் அடைந்தோம். நிச்சயதார்த்தம் முடிந்து, தலைவாழை இலையில் பசு நெய் மணக்க, வடை பாயசத்துடன் தஞ்சை வளநாட்டு சாப்பாடு – இரவு உணவுக்குப் பிறகு தங்குமிடம் வந்தோம்.

மறுநாள், முகூர்த்தம் முடிந்த கையோடு – பெயர் தெரியாத நாதஸ்வர வித்துவான், அசத்தலான வாசிப்பு – கோனேரிராஜபுரம் செல்வதாக ஏற்பாடு.
கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம். கும்பகோணம் – காரைக்கால் சாலையில் எஸ்.புதூரில் இருந்து தெற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில்.

ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சேக்கிழார், நளன் தமயந்தி ஆகியோர் வழிபட்ட திருத்தலம். வித்தியாசமாக, இங்கு மட்டும்தான் சனி பகவான் வெள்ளை நிற ஆடை அணிந்திருப்பார் என்ற குறிப்பு ஒன்று உள்ளது.
கோனேரிராஜபுரம் அக்ரஹாகாரம் மிகவும் அழகானது. வரிசையான வீடுகள், சுத்தமான தெரு, திண்ணைகள், ஓட்டு வீடுகள், வீட்டுக்குள் தாழ்வாரங்கள், முற்றம், ஆளோடி, ரேழி, மரத்தில் மச்சு, ஊஞ்சல் – உயிர்ப்புடன் உள்ள கிராமத்துச் சூழல்.

பெரிய மதில்சுவர், நான்கு பேர் நுழையக் கூடிய சிறிய வாசல், வேட்டி கட்டிய வாட்ச்மேன், எதிரில் சமீபத்தில் செப்பனிடப்பட்ட அழகிய குளக்கரை, விநாயகர், வானத்து மேகங்கள் மிதக்கும் குளத்து நீர்!
இடது புறம் முருகன், வலது புறம் பிள்ளையார். நேராகச் சென்றால் நீண்ட மண்டபம், நடுவில் த்வஜஸ்தம்பம், சுவர்களில் உரிந்து உயிரிழந்துகொண்டிருக்கும் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள்.
“பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் இந்தக் கோயிலுக்கு வரமுடியும். ஒரு முறை வந்தால், மீண்டும் மீண்டும் வரத்தோன்றும் கோவில் இது” என்றபடி, தல வரலாறு சொன்ன அர்ச்சகருக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம்.
இங்கு சன்னதி கொண்டுள்ள மூர்த்தங்கள்: ஸ்ரீ தேகசுந்தரி சமேத ஸ்ரீ உமா மகேஸ்வரர், ஸ்ரீ வைத்தியநாதர், ஸ்ரீ நடராஜர். (உமா மகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்- தேகசவுந்தரி, தங்கவளநாயகி ) பிரம்ம தீர்த்தம் – சக்தி தீர்த்தம்; வழிபட்டோர் – சம்பந்தர், அப்பர், சேக்கிழார், நளன் தமயந்தி).
கோனேரிராஜபுரத்தில் உள்ள கோவில், பொதுவாக நடராஜர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. உலக இயக்கமே நடராஜப் பெருமானின் திருநடனத்திலேயே இயங்குகிறது. உடுக்கை ஒலியாலும் அக்னி ஒளியாலும் உலகைப் படைத்து, பின் தனக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்ளும் தத்துவத்தை உணர்த்தும் அற்புதமான கோலம் நடராஜரின் திருவடிவம். பெரும்பாலும் நடராஜரின் திருமேனி பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இங்கிருக்கும் 9 அடி உயர சுயம்பு நடராஜர் பஞ்சலோகத்தால் ஆனவர். ஒன்பது அடி உயரம்… கைரேகைகள், தேமல், மச்சம்… என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி… நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!
சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும், அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். திருநல்லம்(கோனேரிராஜபுரம்) கோயிலிலும் ஸ்ரீநடராஜரின் சிற்பம் அமைக்கத் தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர்.
திருநல்லத்தில் ஸ்தபதி நடராஜரை வடிக்கும்போது இரண்டடி, மூன்றடி, நான்கடி, எனப் பலமுறை முயன்றும் சரியாக அமையவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் நடராஜர் சிலையை வடிக்க முடியாமல் வருத்தத்துடன், ஆதங்கத்தில் இருந்தார் ஸ்தபதி.. நாட்கள் நகர்ந்தன… எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் இருக்க, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்‘ என்று எச்சரித்தான்.
ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ‘’உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா’’ என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ‘’காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றான்! அத்துடன் தனது நிலையையும் விவரித்தான்.
இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகி, மறுகணம்… அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஸ்தபதி எதிர்பார்த்தது போன்ற அழகிய விக்கிரகங்களாகக் காட்சி தந்தனர். வந்தது சிவ பார்வதி என்பதை அறிந்து மெய்சிலிர்த்தான் ஸ்தபதி.
விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான்.அந்த சிலை, நகங்கள் உரோமங்கள் மச்சம், மரு என மிக உயிரோட்டமாக இருந்ததைக் கண்ட மன்னன், ‘இவ்வளவு விரைவாக எப்படி இப்படி அற்புதமான சிலையை செய்ய முடிந்தது?’ என்று கேட்டார். சிற்பி நடந்ததை கூற, அது பொய் என்று நினைத்த மன்னன் அவரை வெட்ட வாளை ஓங்கினார். வாள் சிலையின் காலில் பட, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறை உணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன.
நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தைக் காணலாம். கூடவே கையில் ரேகைகள், நகங்கள், மார்பில் மச்சம், மரு என அனைத்தையும் அந்தத் திருமேனியில் காண முடியும்.
கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான்.
ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.
இந்தக் கோயிலில்சோழ மன்னன் கண்டராதித்தன் அவன் மனைவி செம்பியன் மகாதேவி அவர்களின் மகன் உத்தமசோழன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டுகளில் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இந்த குறிப்புகளால், இக்கோவில் இரண்டரை நூற்றாண்டுகளாக சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது என்பது தெளிவாகிறது.
செம்பியன் மாதேவியார் 10 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்தக் கோயிலின் சுவர்களிலும் கூரைகளிலும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு திருவிழா நாளில் தெய்வத்தின் ஊர்வலத்தின் குறிப்பிட்ட ஓவியம் மனதைக் கவர்கின்றது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த திருவிழா சூழல்கள், அன்று மக்கள் அணியும் உடை, இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. கோவிலின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ‘சுவரொட்டி வண்ணப்பூச்சு’ வகை ஓவியங்களில், பெரும்பாலானவை அழிகின்ற நிலையில் உள்ளன. வரலாற்று ஆவணமாக உள்ள இவ்வோவியங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உமா மகேஸ்வர் மேற்கு நோக்கியும் அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிர திசையில் அருள் பாலிப்பது, மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் இருப்பதால், இத்திருக்கோவிலில் தரிசனம் செய்தால், திருமணத் தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள வைத்தியநாதன் சன்னதியில் பூஜை செய்தால் நோய்களிலிருந்து நிவர்த்தி கிடைக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் (1878–1921) தமிழ்நாட்டைச் சேர்ந்த, கர்நாடக இசைப் பாடகராவார். 1971 ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவரும், கர்நாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை இயற்றிய இசை அறிஞருமான பாபநாசம் சிவன், இவரது சீடராவார். ‘சங்கீத கலாநிதி’ பட்டம் பெற்ற முடிகொண்டான் வெங்கடராம ஐயரும் இவரது மாணவராக இருந்தார்.
அர்ச்சகர், முந்தைய நாள் மஹா அபிஷேகப் பிரசாதத்துடன் கொடுத்த கையடக்கப் புத்தகம் – “ஶ்ரீ பூமீஸ்வர க்ஷேத்ர மஹாத்மியம்” எனப்படும் “திருநல்லத் தலவரலாறு” (கோனேரிராஜபுரம்). (காலஞ்சென்ற திரு கே.கோவிந்தசாமி முதலியாரின் பிள்ளைகள் வெளியிட்டுள்ளார்கள். வடமொழியிலிருந்து தமிழாக்கம் எஸ்.ஜானகி, கோனேரிராஜபுரம்).
சோழ மண்டலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் மாயூரம் தாலுகாவில் கோனேரிராஜபுரம் என்று இப்போது வழங்கப்படும்
ஸ்ரீ பூமீஸ்வர க்ஷேத்திரத்தின் மகாத்மியம் வடமொழியில் ஸனத்குமாரருக்கு நந்திகேஸ்வரரால் உபதேசிக்கப்பட்டதாக ஸ்கந்த புராணத்தில் 10 அத்தியாயங்களில் காணப்படுகிறது.
“மேற்கு நோக்கி உள்ள ஈசனின் ஆலயத்திற்கு சமமாய் மற்றொரு தலம் தற்போதும் இல்லை, இனி எப்போதும் இல்லை. சிறந்த அறிவாளியான புரூரவஸால் நிறுவப்பட்டு மேற்கு நோக்கி காட்சியளிக்கும் ஆதி வைத்தியநாதரை ஒரு அரைக்கணமாவது கண்டு பூஜிப்பவன் குஷ்டம் முதலிய எல்லாவிதமான நோய்களிலிருந்தும் உடனே விடுபடுகிறான், சந்தேகமில்லை. பிறவியில் ஒரு முறையேனும் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவனும், நந்தி தேவர் எதிரில் இல்லாமல் மேற்கு நோக்கி இருக்கும் ஈசனை தரிசித்து அவர் எதிரில் திருநீறு தரித்து, ஐந்து எழுத்து மந்திரத்தை ஒரு முறையேனும் ஓதுபவனும் கோடி முறை ஓதிய பலனை பெற்று முக்தி அடைகிறான்” – பிரம்மா.
உமா மகேஸ்வர், சனத்குமாரலிங்கம், கண்வலிங்கம், சுந்தரேசலிங்கம், பிரம்ம லிங்கம் வைத்தியலிங்கம் ஆகிய லிங்கங்களை தரிசித்து ஞானக்கிணற்று நீரைப் பருகினால் அவன் கோடிலிங்கங்களை தரிசித்த பலனை பெற்று முக்தி அடைவான் – இத்தலம் மிகவும் புண்ணியத்தை கொடுக்கிறது. மிகவும் சௌக்கியத்தை கொடுக்கிறது. நாம் விரும்பியதை எல்லாம் கொடுக்கிறது. நமக்கு நிச்சயம் மோட்சத்தையும் கொடுக்கிறது. இவ்விதமாக கந்தபுராணத்தில் ஸனத்குமாரருக்கு சொல்லப்பட்ட ‘ஸ்ரீ பூமீஸ்வர க்ஷேத்திர மகாத்மியம்’ குறிப்பிடுகிறது.
கோவிலுக்குள்ளேயே அர்ச்சனைத் தட்டு வாங்கிச் சென்றோம். ஶ்ரீ நடராஜ மூர்த்தியின் முன் நின்று அண்ணாந்து பார்த்தால், ருத்ராட்சக் கூரையின் கீழ், தில்லையம்பதி கூத்தன் விஸ்வரூபம் எடுத்து ஆனந்த நடனம் செய்வது போலத் தோன்றியது! சாமந்திப் பூச்சரங்களினால் இறுக்கமாகச் சுற்றிய தலைப் பாகையின் அடிப்பக்கம் நாங்கள் கொடுத்த மல்லிச்சரத்தைச் சொருகி வைத்தார் அர்ச்சகர். அர்ச்சனை முடிந்து, தலவரலாறு சொல்லி, தீப ஆராதனை செய்யும்போது, தலையிலிருந்த மல்லிச் சரம் வலது பக்கம் நெகிழ்ந்து, அய்யனின் முகத்துக்கு நேரே அழகாக ஆடியது, சிலிர்க்க வைக்கும் அனுபவம்.
அழகான அமைதியான கோவில். இன்னும் பெரு நகரக் கோயில்களில் ஆக்கிரமித்திருக்கும் செயற்கைத் தனம் நுழையாத புராதனக் கோயில்!
அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்!

அருமையான பதிவு. எங்களையும் அழைத்துச்சென்ற புண்ணியம் உங்களுக்கு.