நான் பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர் வெளிப்படையாக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்தியதில்லை. இன்று, தனது உரையில் வெளிப்படையாக பாகிஸ்தானையும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அதன் நடவடிக்கையையும் கண்டித்துள்ளார்.
இரண்டு, டொனாடு டிரம்ப், போர் நிறுத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிரதமர் மோடியோ, ஆபரேஷன் சிந்தூர் ‘நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று மட்டும் சொன்னார்.
பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, இந்திய ராணுவத் தலைவரிடம் பேசிக் கேட்டுக்கொண்டதாலேயே இந்த ஆயுத பயன்பாடு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தது முக்கியமானது. அதிபர் டிரம்ப்பும், ஜே.டி. வான்ஸும் இதரரும் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது என்று பரப்பப்படும் பொய் பிரசாரத்துக்கு பிரதமர் கொடுத்திருக்கும் மறைமுக ஆனால் தெளிவான பதில் இது.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் தொடர்பாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று அவர் தெரிவித்திருப்பது இன்னொரு முக்கியமான முன்னேற்றம். அதாவது, ஜம்மு, காஷ்மீர் பிரச்னை இன்னும் தொடர்வது போலவும், அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருவதன் பின்னேயுள்ள அரசியலை பிரதமர் மோடி, முற்றாக நிராகரித்துள்ளார்.
மிகவும் வலிமையான பேச்சு. நமது வலிமையை உணர்த்தும் பேச்சு.

