
பாலா சார் – ஒரு இதமான சிநேகிதம்
2001ஆம் வருடம் என்று நினைவு. வருடாந்திர முழு மருத்துவப் பரிசோதனை சென்னையில் செய்து கொண்டேன்.
பரிசோதித்த மருத்துவமனையோ, என் இதயத்தில் ஏதும் பிரச்னை இருக்குமோ என்று கலவரப்படுத்தியது.
‘ஹார்வே ஹாஸ்பிட்டல்’ இதய நோய் நிபுணர் டாக்டர் சிவகடாக்ஷம் அவர்கள் என் அம்மாவின் ஆஸ்தான டாக்டர். அவருடன் எங்கள் குடும்பத்துக்கு நல்ல பரிச்சயம் இருந்தது.
இதமாகப் பேசும் இதய நிபுணர் சிவகடாக்ஷத்திடம், என் இதயம் நொண்டுகிறதோ என ஆலோசனை கேட்க ஏற்பாடு செய்தேன்.
என் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்தபின், ஒரு ஆஞ்சியோகிராம் டெஸ்ட் எடுத்துவிட முடிவு செய்தார் டாக்டர். உடனேயே என்னை அவருடய மருத்துவமனையில் சேர்த்தும் விட்டார்.
ஆஞ்சியோ பரிசோதனையில் இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று உறுதி செய்தார். ஆஞ்சியோ முடிந்து என்னை வார்டுக்கு மாற்றினார்கள்.
சற்றே கண்ணயர்ந்தேன். பேச்சுக்குரல் கேட்டு விழித்தேன். அருகே டாக்டரும் , அவரிடம் பரிசோதனைக்கு வந்திருந்த எழுத்தாளர் பாலகுமாரனும் நின்றிருந்தார்கள்.
டாக்டர் சிவகடாக்ஷம் அவர்கள் பாலகுமாரனிடம் என்னை நல்ல இலக்கிய ஆர்வலன் என்றும், ரசிகமணி என்றும் அறிமுகம் செய்து வைத்தார்.
பாலகுமாரனோ அருகே இருந்த ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டுக் கொண்டு என் கையைப் பிடித்தபடி கண்மூடி தியானித்தார்.
“இதயத்தில் ஏதும் பிரச்னை இல்லை என்று டாக்டரே சொல்லிட்டாரே” என்று சொல்லியபடி சிவகடாக்ஷம் அவர்களைக் கைகாட்டினேன்.
பாலகுமாரனோ , “ஒண்ணுமில்லேன்னு சொன்னது உங்களுக்கு ஆறுதல். உங்களுக்கு இதயம்னு ஒண்ணு இருக்குன்னு தெரிய வந்தது குடும்பத்துக்கு ஆறுதல்!” என்றபடி சிரித்தார். சாவகாசமாகப் பேசலாம் என்று அவருடைய தொலைபேசி எண்ணைத் தந்து விலகினார்.
அதன் பிறகு சிலகாலம் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
‘இப்பத் தான் உம்மை நினைச்சேன்யா!’ என்பார். நிறைய நம்மை பேசவிட்டுக் கேட்பார்.
“மோகன் ! முதலைக்கு தண்ணீரில் பலம் இருப்பதுபோல், உமக்கு ஆன்மீகம் தான் பலம். அதைத் தான் உம்மால் அள்ளிஅள்ளி தரமுடியும்” என்பார்.
என் சென்னை வாசம் முடிந்து பணி மாற்றலான பின், அவருடனான தொடர்பு மெல்ல நின்று போனது. படைப்பாளிகளுடன் தொடர்பு என்பது வாசிப்பின் மூலமாக இருப்பதே யதார்த்தம் என்று நினைத்துக் கொள்வேன்.
எப்போது பாலகுமாரனின் எழுத்து எனக்கு அறிமுகமாகியது என்று யோசிக்கிறேன்.
கணையாழி கவிதைகளிலா?
சில நல்ல மனக்காட்சிகளை விரித்தன அவரின் ஆரம்ப காலக் கவிதைகள்.
‘குழல் விளக்கில் முட்டிமுட்டி பால் குடிக்கும் விட்டில் பூச்சிகள்’,
‘ உனக்கென்ன சாமி பூதம் கோயில் குளம் ஆயிரமாயிரம்’ என்ற காத்திருப்பின் அங்கலாய்ப்பு.
கவிதைகளில் மேலும் சிக்கிக் கொள்ளாமல் கதை சொல்ல வந்தது அவர் எடுத்த நல்ல முடிவு.
சுஜாதாவை ஆதர்சமாகக் கொண்டதாகச் சொல்லியவர் அவர். சுஜாதாவோடு முரண்பட்டு பாலகுமாரன் எழுதியதும் , சுஜாதா எதிர்க் கவிதையாக ‘ராயப்பேட்டை பாலு வா!’ என்று எழுதியதும் அந்நாளைய ஞாபகமாக நினைவிலாடுகிறது. அவரின் இரும்புக் குதிரைகள்,அகல்யா, மெர்க்குரிப்பூக்கள்,
கரையோர முதலைகள், திருப்பூந்துருத்தி, அப்பம் வடை தயிர்சாதம் போன்ற கதைகள் இன்றும் நினைவில் இருக்கிறது.
சிறுசிறு வாக்கியங்களில் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வது பாலகுமாரனுடைய பாணி. உரையாடல்களிலேயே கதை ஒசிந்து செல்லும். கதைக்களம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து சூழல். பெண்களை உயர்வாகவே சித்தரித்தவர். எழுதிக் குவித்தார் எனலாம். மாத நாவல், கேள்வி பதில்கள், ஆன்மீகம் என எழுதியபடியே இருந்தார். நான் கடைசியாகப் படித்தது அவருடைய ‘உடையார்’. முதல் இரண்டு பாகங்களில் கதை சொல்லலில் இருந்த விறுவிறுப்பும் கூர்மையும் மெல்ல அடுத்தடுத்த பாகங்களில் குறைந்ததுபோல் தோன்றினாலும், புதினத்துக்கான அவருடைய மெனக்கெடலும், உழைப்பும் பாராட்டுக்குரியவை.
சோழ தேசத்தின் மேலிருந்த அவருடைய அபிமானத்தை அவர் எழுத்தில் தெளிவாக உணரலாம்.
சுஜாதா, பாலகுமாரன் இவர்களுக்கு ஈடு இணை இல்லை என்று என் மனைவி அருகிலிருந்து கொண்டு சொல்கிறாள். என் பல நண்பர்களின் இல்லத்தரசிகளும் அவரை ஒரு மானசீக குருவாக வரித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நேயத்தை ஒரு போராட்டக்காரனின் ஆவேசத்தோடு எழுதி வந்தவர்.
அவருடைய திரைப்பட வசனங்கள் நளினமானவை. பல வசனங்கள் மனதில் உறைந்து போனவை.
பாலகுமாரனின் நினைவு நாள் இன்று.
‘மிஸ்ஸிங் யூ’ பாலா சார்!
