ஆர் வத்ஸலா வாசித்த 5 கவிதைகள்

16/5/25 அன்று “கவிதை வாசிக்கலாம் வாங்க” 33 ஆவது கூட்டத்தில் நான் வாசித்த 5 கவிதைகள்

1

என்றும்
ஆர் வத்ஸலா

இல்லாவிட்டாலும்
இருக்கிறாய்
நீ

மருத்துவரின் விதி மீறி
இனிப்பை கையில் எடுத்தால்
உனது நெற்றியின் சுருக்கம்
என்னை லேசாக கண்டிக்கிறது

ஆனால்
சில சமயம் பரிதாபப் பட்டு
நான் தேநீரில்
சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொள்ள வசதியாய்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறாய்

படுக்கையில் நான் புரளும் பொழுது
கால் கெண்டைக்கு மேல் தூக்கிக் கொள்ளும்
நைட்டியை இழுத்து விடுகிறாய்
இயல்பாக
புத்தகம் படித்துக் கொண்டே

அமர்ந்திருக்கிறாய்
இரவில்
அருகில்
நான் உறங்கும் வரை

என்னுடன் இல்லாவிட்டாலும்
இருக்கிறாய்
நீ
என்னுள்

2

விவாதத்தில் நேர்மை

விவாதத்தில் நேர்மை
இந்த சொற்றொடரை கேட்டதும்
விழுந்து விழுந்து சிரித்தாய்

அக்கணம்
என் காதல்
காய்ந்து போனது

என்றுமே விவாதம் தொடங்கியதும்
என் குரல் உனக்கு கேட்காமல் போகிறது எனும்
எனது சந்தேகம்
பூரணமாக
நிரூபணம் ஆகியது

உனக்கு என்னை பிடிக்கும்
ஒரு பொருளை
ஒரு செல்லப் பிராணியை
பிடிப்பது போல
உன்னை மணந்தால்
என்னை நன்றாக ‘வைத்துக் கொள்வாய்’
ஊர் உலகத்தின் மொழியில்

ஒரு பிரச்சினையும் இருக்காது
எனக்கு
என் கருத்து உனதோடு
ஒத்துப் போகும் வரை

அப்படி அல்லாத போது வரும்
நமக்குள்
விவாதம்
என் தர்க்க ரீதியான விவாதத்திற்கு
பதில் கூற முடியாது போனால்
திசை திருப்புவாய்
சம்பந்தமில்லாமல்

என் வருமானம் உனதை விட
கொஞ்சம் அதிகமானதால்
அல்லது
எனது தந்தை
ஒரு அரசியல் செல்வாக்குள்ளவர்
என்பதால்
இப்படி ஏதாவது ஒரு காரணம் சுட்டி
எனக்கு அதனால் மமதை என்று குற்றம் சாட்டுவாய்

வேதனையில் சுருங்கி
விவாதம் தொடர மறப்பேன்
நீ விவாதத்தில் வெற்றி அடைந்ததாக
உன்னை நம்ப வைத்துக் கொண்டு
பழையபடி ஒரு நல்ல காதலனாக
நடந்து கொள்வாய்

மன்னித்து விடு
விவாதத்தில் நேர்மை முக்கியம்
காதலர்களிடையேயும்

3

உனது விமர்சனம்

தூபம் போட்டு ஆசீர்வதிக்கும் இஸ்லாமிய பெரியவரின் மயிலிறகின் தீண்டலென
உணர வைக்கும்
உனது விமர்சனம் கிடைக்கும் என
நம்பித் தான்
உதிக்கின்றன
எனது கவிதைகள்

4
வதை

விட்டு விட்டுப் பெய்கிறது மழை

ஒரு சில கணங்கள்
நிலத்தை குளிர்வித்த பின்
அதை மறுபடியும் விரகத் தீயிலிட்டு தவிக்க விட்டுச்
சென்று விடுகிறது

போகும் முன் –
தன்னை மறந்து
நிலம்
நிம்மதி அடையாமல் இருக்க
தன் மணத்தை நான்கு திசைகளிலும் பரவ விட்டு

5

பேனா

நான்கு வகுப்பு‌ வரை
முழு பலப்பத்தை மூன்று துண்டாக்கி
ஒரு துண்டு வழங்கப் படும் கருணையுடன்
ரேஷனில் –
தேயும் வரை பயன்படுத்துதலின் அவசியத்தை வலியுறுத்தியபடி

அடியுடன்
வழங்கப் படும்
இன்னொரு தம்மாத்தூண்டு துண்டு
அதே வலியுறுத்தலுடன்
தேயுமுன் தொலைத்தால்

ஐந்தாம் வகுப்புக்கு
பின்
இதே காட்சிகள்
‘ரிபீட் மோட்’ டில்
பென்சில் துண்டுடன்
‘பெரிய’ பெண் என்பதால்
சற்றே லேசான
அடியுடன்

எட்டாம் வகுப்பு‌ முதல்
தாவணி‌ கொடுத்த
தனிமையுடன்‌ கூடிய போலி பாதுகாப்புடன்
பொலிவான பேனாவும்
மசி நிரப்புனரும்
அழகான நீல நிற மசி புட்டியும்

கையில் நிரந்தரமான
மசிக் கறையுடன்
உறவாடும்
எண்ணெய்க் கறையும் பெருமையுடன்
அவ்வப்போது சமையலறை சிற்றரசியாக
செயல்பட்டதன் அடையாளமாக

மசிக் கறை‌ அழிந்து
மருதாணி சிவப்பேறி
பசலை வாசமும்
எண்ணெய்க் கறையும்
”பாதுகாப்பும்”
நிரந்தரமான பின்னரும்
விரல் தடவுகிறது
வீட்டு ஆணின்
கறை‌ தராத
நவீன‌ எழுதுகோலை
ரகசியமாக

16/5/25