
அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் .
சமீபத்தில் மதுரை, உத்தரகோசமங்கை, புக்குளம், நயினார்கோவில் என்று சொந்த ஊர்களுக்குப் பயணம் சென்று வந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்து இன்று காலையில் எழுதிய கவிதைகள்
பக்திப் பயணம்
பக்திப் பயணங்களில் – ஒரு
பரவசம் இருப்பதுண்டு
பார்க்கப் போகும் கோயில் – நாம்
பழகி வந்த கோயில் என்றால்
ஏக்கமும் அதிகம் – உள்ளே
எதிர்பார்ப்பும் அதிகம்
இறங்கிப் பார்க்கும்போது – அங்கே
ஏமாற்றம் கிடைக்குமென்றால்
காலத்தின் குற்றம் அது – அந்தக்
காட்சிகளில் குற்றம் இல்லை
தூரம் போனவை
கலங்கிக் கிடந்த கண்மாயில்
குளித்திருக்கக் கூடாது
நிரம்பி வழிந்த கோயிலுக்குள்
நுழைந்திருக்கக் கூடாது
பூக்கள் உதிர்ந்த சோலைக்குள்
போயிருக்கக் கூடாது
பூட்டியிருந்த அந்த வீட்டைப்
பார்த்திருக்கக் கூடாது
தூரம் போன நினைவுகளைத்
தொந்தரவு செய்திருக்கக் கூடாது
ஊர்க் கோயில்
ஒளிந்து பிடித்து விளையாடிய வாகனங்கள்
ஒளிந்து கொண்டன கூண்டுக்குள்
உளிச்சத்தம் கேட்ட வெளிப் பிரகாரத்தில்
ஊர்ப் புரணிச் சத்தம்
திறந்து கிடந்த தெப்பக்குளத்தைத்
தேடிப் பார்த்தால் தெரிகிறது
கர்ப்பக் கிரகத்தில் தரிசித்த சாமியும்
கண்ணெட்டும் தூரத்தில் காட்சி
பக்கத்துக் கிராமத்து அம்மன் மட்டும்
பரிச்சயப் புன்னகை பக்கத்தில் தந்தாள்
தரிசனம்
உலகப் புகழ் பெற்று விட்ட
திருவிழாக் கூட்டத்தில்
உள்ளூர் ஜனங்கள் எல்லாம்
வரிசையில் தெருவில் நின்று
அம்மன் தரிசனத்திற்கு
வேர்த்திருந்து காத்திருந்தோம்
பேத்தி போன இடம்
கீழடியின் பொருட்காட்சி
ஜிகர்தண்டா வாயோடு
பழங்காலத் தரிசனத்தில்
பாட்டிப் பனைமரம்
பார்த்த மனிதர்க்கெல்லாம்
பாராத முகங்கள்
பனை மரம் ஒன்று மட்டும்
பாசத்தோடு பார்த்தது
பதனியும் நுங்கும்
பனங்காயும் கிழங்கும்
ஊட்டி வளர்த்துவிட்ட
பாட்டிப் பனைமரத்தின்
பேத்தி அதுவென்று
அப்போது புரிந்தது
