
(இன்று கவி அரங்கத்தில் வாசித்த கவிதை)
போர் எங்கோ நடக்கிறது
நீங்களும் நானும்
பதட்டப்படாமலிருப்பதில்லை
தலைகள் துண்டிக்கப்படுவதையும்
கைகால்கள் சிதறடிக்கப்படுவதையும்
அறிகிறோம்
பனிப்பிரதேசத்தில்
சாயும் தலைகளின்
எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது
மலை முகடுகளில்
சரிந்து விழும் உடல்களைக்
கண்டெடுக்க முடிவதில்லை
அமைதியை விரும்பும்
எண்ணற்றவர்கள்
எல்லையைவிட்டு
இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள்
துயரங்களின் சுமைகளோடு
கொல்லப்பட்ட
வீரர்களின் சார்பாக
இராணுவ முழக்கம்
மூடிய சவப்பெட்டிகளின்
முன் கூடிநிற்கும்
உறவினர்களின் புலம்பல்
போரில் அடிபட்டு
உடலுறுப்புகளை இழந்தவர்கள் பலர்
மருத்துவமனைகளில்
போர் நின்று விட்டதாகச் செய்தி
வருகிறது
போர் நமக்களிக்கும் செய்தி என்ன
உலகமெங்கும்
எப்போதும்
என்றும்
போர் ஓயப்போவதில்லை
அது ஏற்படுத்தும்
துயரமும்
