2025, புக்கர் விருது பெறும்கன்னட பெண் எழுத்தாளர்

முகநூலில் படித்தது


~
இரவு படுக்கைக்குப் போகும்முன்
ஒரு நல்ல செய்தி. டெலிகிராஃப் பத்திரிகையில் காண நேர்ந்தது.
மே 20, 2025 அன்று லண்டனில் நடைபெற்ற சர்வதேச புக்கர் விருது நிகழ்வில் கன்னடத்தைச் சேர்ந்த
பானு முஷ்டாக் , அவரது ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதைத் தொகுப்புக்காக,
புக்கர் விருதைப் பெற்றிருக்கிறார்.

1990 – 2023 க்கு இடையில் கன்னடத்தில் வெளியிடப்பட்ட 12 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தீபா பஸ்த்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்நூலை பதிப்பித்துள்ளது.

பானு முஷ்டாக் ஏப்ரல் 3, 1948 அன்று கர்நாடகாவின் ஹாசனில் பிறந்தார். எழுத்தாளர் என்பதைத் தவிர்த்து,
இவர் ஒரு சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியாகவும் இயங்கியவர். தொழிலதிபரான மொஹியுதீன் முஷ்டாக்கை மணந்தார்.

1970 களில் எழுதத் தொடங்கியவர் பானு. இவரது முதல் கதை 1974 இல் பிரஜாமாதா என்ற பத்திரிகையில் வெளிவந்தது . பெண் உரிமைகள்,
சாதி மற்றும் மத அநீதி எதிர்ப்பில் கூர்மையான கவனம் செலுத்துபவர் பானு முஷ்டக்.

இன்று புக்கர் விருது மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருத்திருக்கும் பானுவின் கதைகள் கர்நாடகாவின் மலைப்பாங்கான மலநாடு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து தொடங்கியவை.

1981 மற்றும் 1990 க்கு இடையில், கவிஞரும் எழுத்தாளருமான பி. லங்கேஷ் (சங்பரிவார் கும்பலால் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் தந்தை) அவர்களால் பத்திரிகை துறைக்கு கொண்டுவரப்பட்டவர் பானு முஷ்டக்.

1980களில் கன்னட இலக்கியத்தின் பந்தயா இயக்கத்துடன் தொடர்புடையவர். சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக போராடிய இயக்கம் இது. முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் உள்ளிட்ட ஓரங்கட்டப்பட்ட குரல்களுக்கு இடமளிக்கும் எதிர்ப்புப் பாரம்பரியத்தில் உருவான இயக்கம்.

1983 ஆம் ஆண்டு ஹாசன் நகர நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பானு.
1990 ஆம் ஆண்டு, பத்திரிகைத் துறையை விட்டு வெளியேறி, வழக்கறிஞராகப் பணி செய்தார். இத்தகைய நெடிய இயக்கம் ,
இவரது கதைகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்துக்கான உள்ளடக்கத்தை வழங்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.

இதுவரை இந்தியாவிலிருந்து
வி.எஸ். நைபால் (ஒரு சுதந்திர மாநிலத்தில், 1971), சல்மான் ருஷ்டி(மிட்நைட்ஸ் சில்ட்ரன்
1981) அரவிந்த் அடிகா (வெள்ளைப் புலி
2008) ,கிரண் தேசாய் (இழப்பின் மரபுரிமை 2006), அருந்ததி ராய் (சிறிய விஷயங்களின் கடவுள் 1997) போன்றோர் புக்கர் விருது பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இப்போது பானு முஷ்டாக் .

இதுவரை புக்கர் விருது பெறும்பாலும் நாவலுக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. முதன் முறையாக இப்போது ,
ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு கிடைத்திருக்கிறது.

‘கன்னட மொழியில் எழுதுவது என்பது பிரபஞ்ச அதிசயம் மற்றும் ஆரம்பகால ஞானத்தின் மரபைப் பெறுவதாகும். எந்தக் கதையும் ஒருபோதும் சிறியதல்ல என்ற நம்பிக்கையிலிருந்து இந்தப் புத்தகம் பிறந்தது. நம்மைப் பிரிக்க அடிக்கடி முயற்சிக்கும் உலகில், இலக்கியம் என்பது நாம் ஒருவருக்கொருவர் மனங்களுக்குள் வாழக்கூடிய கடைசி புனித இடங்களில் ஒன்றாகவே உள்ளது .’
என தன் விருதுச் செய்தியில் குறிப்பிடுகிறார் பானு முஷ்டக்.

எனக்கு இதில் என்ன மகிழ்ச்சி என்றால், இவ்விருது ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஓர் இசுலாமியப் பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது. ஈழத்திலிருந்து ‘தாயைத் தின்னி’ போன்ற சர்வதேச கவனத்தை எட்டும் வகையில் அமைந்த
வலிமையான நாவல்கள் தமிழில் வெளியாகின்ற. தமிழிலும் இசுலாமியப் பெண் எழுத்தாளர்களின் பிரத்யேக அழகியல் கூடிய புனைவெழுத்துகள் பரவலாக கவனம்பெறுகின்றன. அம்பை, சு. தமிழ்ச்செல்வி, பாமா,
என தமிழில் நீண்ட பெண் வரிசை இருக்கிறது. பானு முஷ்டக் பெற்றிருக்கும் புக்கர் விருது,
ஒரு நல்ல சமிக்ஞை.