
இன்னும் இருபது நாள்தாம் இருக்கு. அதுக்குள்ளே போனஸ் வந்திருமா? வீட்டம்மாவுக்கும், ரெண்டு புள்ளைங்களுக்கும் டிரெஸ் எடுக்கணுமேங்கிற கவலை. எனக்கு இந்த வருஷம் வேண்டாம். போன வருஷம் மாமா அவங்க ரிடையர்மென்ட்க்கு வந்த துணியைத் தந்தாங்க. அதை தைச்சு ஒப்பேத்திரலாம். ஸ்கூல் ஃபீஸ் கட்ட வாங்கின கடனை மொதல்ல அடைக்கணும். கைமாத்தா வாங்கினது கொஞ்சம் இருக்கும். அதையும் கொடுத்திரணும். அப்பத்தான் அடுத்த முறை கேக்கும் போது, இவன்கிட்டயிருந்து எப்படியும் திரும்ப வந்திரும்ன்னு மீண்டும் தருவாங்க. இவனுங்க என்னடான்னா இன்னும் போனஸே பேச ஆரம்பிக்கல்ல. என்னைக்கு ஆரம்பிச்சு, என்னைக்கு பேசி, என்னைக்கு முடிச்சு, என்னைக்குத் தர?
வர வர பண்டிகைன்னாலே ஏண்டா வந்து தொலைக்கின்னு எரிச்சல் வந்திடுது. சின்ன வயசுல எப்படா தீபாவளி, பொங்கல், பூஜை வைப்பு வரும்ன்னு இருக்கும். அதுலயும் பூஜை வைப்புன்னா ரெண்டு நாளு படிக்க வேண்டாம். அப்படி ஒவ்வொரு லீவும் இருந்தா எப்படி இருக்கும்ன்னு தோணும்.
இங்கே வாங்குற சம்பளம் வரவுக்கும் செலவுக்குமே சரியாப் போவுது. வெலவாசி வேற கிர்ருன்னு ராக்கெட் வேகத்துல ஏறிட்டு போகுது. பருப்பு ஒரு பக்கம் ஏறிச்சுன்னா மறுபக்கம் தக்காளி, கத்தரிக்காய் ஏறுது. இப்போ தேங்காய். என்னத்த சொல்ல?
பிஎஃப்பில இருந்து எடுத்து கொஞ்சம், அவள் நகையை வித்து கொஞ்சம் என பணத்தைப் போட்டு பழையவீடுன்னாலும் குடியிருக்கும் வீடு, வெலைக்கு வந்த போது ஒருவழியா வாங்கிட்டோம். நல்ல மனுஷன் அவர். ஒங்களுக்கு வேண்டாம்ன்னு சொன்னாதான் மத்த ஆளைப் பாப்பேன்னார். இதுக்கு மேல கொறக்க வழியில்லைன்னு நல்லாவே கொறைச்சு தந்தார். நல்ல மனுஷன் வயிறெரியாம தந்ததால இன்னைக்கு இங்கே நல்லபடியா குடியிருக்கோம்.
இரவுப்பணி இருக்கும் என்று சொல்லியும் திருமணத்துக்கு ஒத்துகிட்ட மஞ்சுவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். இப்போ நான் வேலை பாக்குற இடத்தில குடோவுன்ல்ல வேலை பாக்குறவனுக்கு பொண்ணு பார்த்தப்போ, பையனுக்கு நைட்டு கியிட்டு வேலை கெடையாதேன்னு கேட்டாங்களாம். வாரத்துக்கு ரெண்டு நைட்டு. ஏதாவது வேலை வந்தால் நாம வாங்குற கூட நைட்டு என எப்படியும் மாசத்துக்கு பத்து நைட்டுக்கு மேல வந்திரும். மொத்தத்தில நாலுநாள்தான் வார விடுமுறை.
தொழிற்சாலை என்பதால் லீவெல்லாம் கெடைக்கிறது குதிரைக்கொம்புதான். விருந்தாளுக திடீர்ன்னு வீட்டுக்கு வந்ததும் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே வீட்டிலதானே இருப்பீகன்னு நெனைச்சேப்பாங்க. ஆனா, அன்னைக்கு நமக்கு நைட் டூட்டி . செவ்வாக்கெழமைதான் வாரலீவு. அன்னைக்குத்தான் பொருளெல்லாம் வாங்க, வைக்க முடியும். செவ்வாக்கெழமையும் அதுவுமா வாங்குதீயளேங்கிற வசனம் கேட்டு, கேட்டு எரிச்சல் வரும். எந்த கெழமைன்னா என்ன? என்று எண்ணத் தோன்றும்.
மஞ்சு, நமக்கு பணமே சேர மாட்டேங்கிறதுக்கு செவ்வாக்கெழமை கொடுக்கல் வாங்கல் வைக்கிறதுதான் காரணமா? என்று எப்பவாவது கேட்பாள். அட போம்மா! என்னை மாதிரி ஷிப்ட் டூட்டி பாக்கிறவங்களுக்கெல்லாம் நாளென்ன? கெழமை என்ன? எல்லாம் ஒன்னுதான் என்பேன். ஏதோவொரு ஜோசியக்காரன் செவ்வாக்கெழமை பொருள் வாங்குங்க. விருத்தியாகும். ஒங்க ரெண்டு பேர் கெரகத்துக்கும் அதான் நல்லதுன்னு சொன்னதிலிருந்து, ஏங்க! இந்த செவ்வாக்கெழமை விடுமுறையை மாத்தாதீங்க என்றாள் மஞ்சு. ஒரே கெழமைதான். எப்படியெல்லாம் மாறுது பாத்தியளா என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.
எத்தனை வருட பாரம்பரியம் மிக்க தொழிற்சாலை. ஆனா லீவுன்னு கேட்டா மட்டும் மொகமெல்லாம் அக்கா வந்து உக்காந்திருவா. என்னமோ அவுங்க பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுக்கிற மாதிரி அப்படி ஒரு கோவம் பொத்துக்கிட்டு வந்திரும். பொதுவிடுமுறைன்னு ஆறு நாள், அப்புறம் பிரிவு விடுமுறைன்னு சொல்ற இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம்ங்கிற பிரிவு விடுமுறை மூன்று என மொத்தம் ஒன்பது நாள்தான் விடுமுறை. தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த விடுமுறை இவ்வளவுதான்.
தீவாளி, பொங்கல் போன்ற நல்ல நாள் பொழுதெல்லாம் சீனியர்கள் இருக்கிற வரை அவர்களுக்குத்தான் லீவுக்கு முன்னுரிமை. ஆனா, இப்போ காலம் அப்படியே மாறிப் போச்சு. ஜுனியர்கள் எடத்தைக் காலி பண்ணிப் போயிருவாங்களாம். அவங்களுக்கு போகத்தான் மீதி.
தீவாளி, பொங்கல் இப்படி பண்டிகை நாட்களிலெல்லாம் எனக்கு எப்போதும் நைட் டூட்டிதான். எழுதப்படாத விதி அது. வெளியூரிலிருந்து வருவதால அந்தச் சலுகையாம். ஏதோ பகல் நேரம் வீட்டில இருக்க முடியுதே, கூடமாட கொஞ்சம் ஒத்தாசை பண்ண முடியுதே, கோயில் கொளத்துக்கு போக முடியுதேன்னு நைட் டூட்டியை ஏத்து ஏத்து அதுவே திணிப்பாகிப் போச்சு.
நைட் வேலைங்கிறது அப்படின்னா என்னான்னே தெரியாது இருந்த என் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் புரிஞ்சுகிட்டாங்க. வாரத்தில ரெண்டு நைட் அப்பா நம்ம கூட இருக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. அதையும் தாண்டி எப்பப்பா மாறும்ன்னு அடிக்கடி கேப்பாங்க. கொஞ்ச காலம் தான் மாறிடும் மாறிடும்ன்னு சொல்லிச் சொல்லியே மாஞ்சு போனதுதான் மிச்சம். பெரியவன் கல்லூரி படிப்பு முடிந்து பணிக்குச் சேர்ந்தும் கூட இன்னும் நைட் டூட்டி நம்மள விட்டபாடில்லை. நம்மகிட்டதான் சாமிக்கு கருணை இல்லை. பெரியவனுக்காவது நைட் டூட்டி இல்லாத வேலையா அமையணும்ன்னு வேண்டாத சாமி கிடையாது. வேண்டுதல்படியே பெரியவனுக்கு நைட் டூட்டி இல்லாத வேலையா கெடைச்சது. அவனது எண்ணம் வேற. எங்களுக்காக கேம்பஸ்ல்ல கெடைச்ச வேலையில சேர்ந்தான். சேர்ந்து இன்னும் ரெண்டு மாசம் கூட முழுசா முடியலை. அவன் எண்ணம் வசப்பட ஆண்டவன்தான் கண்ணைத் தொறக்கணும்.
வேலை கெடைக்கறதே குதிரைக்கொம்பா இருக்கற சூழல், கொரனாக்கப்புறம் வேலை பாக்கிறவங்களுக்கு கெடைக்க வேண்டிய நியாயமான சம்பளமோ, ஊக்கத்தொகையோ கெடைக்காத நெலைமை இன்னைக்கு வரைக்கும் சரியா வரலை. ஆனா பாருங்க கொரானாவுக்கு பொறகு நாம வாங்கின எல்லா பொருளின் வெலையும் ஏறின ஏத்தம் இருக்கே கொஞ்ச நஞ்சமா அது. அப்புறம் எப்படி எல்லாக் கம்பெனிகளும் ஒரேடியாக நிலைமை சரியாயில்லைன்னு சொல்லுதாகளோ. ஒரு மண்ணும் மட்டுப்படமாட்டேங்குது. அதுக்குன்னு தனியா எம்.பி.ஏ ஏதும் படிக்கணும் போல. வேலை பாக்கிறவளுக்கு கண்டிப்பா கொடுக்கணும்ன்னு என்ன சட்டமா?
சின்னவனை இந்த வருஷந்தான் காலேஜில சேர்த்தோம். அவன் விரும்பின படிப்பு. அதுக்காக கொஞ்சம் செலவானாலூம் பரவாயில்லைன்னு சேர்த்து வைச்சோம். என்னத்த.. சொத்தா சேத்து வைச்சு கொடுக்கிறதுக்கு பதிலா அறிவுங்கிற சொத்தைக் கொடுக்கப் போறோம்ன்னு மனசைத் தேத்திக்கிட்டு கடனை உடனை வாங்கி சேத்து வைச்சிருக்கோம். தேறி வந்து தன்னைக் காப்பாத்திக்குவான்னு நம்பிக்கை இருக்கு. ஒலகமே நம்பிக்கையிலதானேய்யா சொழந்துகிட்டு இருக்கு.
இன்னும் நாலு நாள்தாம் இருக்கு. இன்னைக்கு பேச்சுவார்த்தை முடிஞ்சிரும்ன்னு சொல்லுதாங்க. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
கூட இருக்கிறவங்க கிட்ட கடன் எங்கே கேக்கிறது? நம்மளைப் போலத்தானே அவங்களும் வாய்க்கும் வயத்துக்கும் நடுவுல அல்லாடுவாக.
திடீரென வந்த அலைபேசியைத் தெறந்தா மாமாவோட எண் அது.
” சொல்லுங்க மாமா”, என்றேன். நாளைக்கு காலையில அங்கே வர்றமாறி கெளம்பி வார்றோம். ஒன்னும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் மஞ்சு சொல்லிட்டா. இப்போ எங்கிட்ட பேங்க்ல சும்மா இருக்கிற பணம் ஒங்களுக்கு ட்ரெஸ்ஸா வரப்போகுது. ஒங்களுக்கு காசு வந்ததும் மத்ததைப் பார்த்துக்கலாம். மாமா! என்பதற்குள், “இல்லை மாப்ளே! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நேர்ல வந்து பேசிக்கிடுவோம்” என்று சொன்னார். மறுக்க இயலவில்லை. சரி வாங்க என்றேன்.
ச்சே!. மாசத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வைச்சிருந்தா கூட இந்த நெலைமை வந்திருக்காது. ஒவ்வொரு வருசமும் நெனைக்கேன். மொத ரெண்டு மாசம் மட்டும் கரெக்டா இருக்குது. எங்கேயிருந்துதான் அப்படி செலவு வருமோ தெரியாது பொத்துன்னு வந்து விழும். சேர்த்த எல்லாத்தையும் சுனாமி அலை அடிச்சிட்டு போன மாதிரி சுவடே இல்லாம அடிச்சிட்டு போயிடும். மாசச் சம்பளக்கார நமக்கே இப்படி தவிடு தாங்குதே அன்னாடங்காய்ச்சிகளின் நெலைமைப் பத்தி யோசிச்சா பாவம் அதோகதிதான் போல.
நாளைக்கு மாமா வந்து தர்ற உடுப்புலதான் இந்த வருச தீவாளியே ஆரம்பமாகப் போவுதுங்கிற போது என்னத்த சொல்ல. நாம சரி, மஞ்சுவுக்கு கூட ஆசை இருந்தாலும் சரி இப்போ இல்லைன்னா பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்குவா. புள்ளைகள்தாம் பாவம். எவ்வளவு ஆசை ஆசையா இருக்கும். கூட இருக்கிறவங்க புது ட்ரெஸ் போடும் போது, வெடி வெடிக்கும் போது நமக்கு இல்லையேன்னு ஏங்கிறுமே. இப்படி ஒரு நெலைமை யாருக்கும் வரக்கூடாதுய்யா. நம்மளோடேயே இதெல்லாம் போயிரணும். ‘முருகா! காப்பாத்துப்பா!’ என்று கையை தலைக்கு மேல் தூக்கினேன்.
நாளைக்குதான் தீபாவளி. இன்னைக்காவது லீவுதாங்கன்னு கேட்டா, கெடையாதுன்னுட்டாக. பாவம் ரெண்டு பையன்களும் காலையில வீட்டுக்கு ஆட்டோ புடிச்சுதான் வர வேண்டி இருக்கும். பையன்களைக் கூட கூப்பிட்டு வந்து வீட்டுல விட முடியாத அளவுக்கு நான் பாக்குறது பெரிய உத்தியோகம்தான்னு மனசைத் தேத்திக்க முடியலை. என்ன பண்ணி என்ன? நேத்தைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு. இப்படியே கேட்டு கேட்டு காலத்தை கடத்திட்டு போயிட்டிருக்கேன். என்னைக்கு எதுல போய் முடியுமோ. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
ஒன்னும் பிரச்சினை இல்லைப்பா நாங்க வந்துகிடுதோம்ன்னு ரெண்டு பையன்களும் சொன்னாலும் அவுங்களுக்கும் மனசுல ஒரு ஏக்கம் இருக்கத்தானே செய்யும். இதெல்லாம் புரிஞ்சுக்காத அதிகாரிகள் என்ன ஜென்மமோ?
தினந்தெனந்தான் இப்படி நோவுதோம். இன்னைக்குமா என்று சலிப்பும், எரிச்சலும் வந்தாலும் போய்த் தொலையத்தானே வேண்டியிருக்குன்னு வந்து சேர்ந்தேன்.
இன்னைக்குப் பார்த்தா இந்த மெஷின் நிக்கணும். எல்லாம் நம்ம நேரம். வந்தது வந்தாச்சு. ரெடி பண்ணிக் கொடுத்திட்டுத்தானே போகணும். நான் சாப்பிடக் கூட போகாம ரெடி பண்ணிக் கொடுத்தேன். நீங்க வேணும்ன்னா ஒன் ஹவர் பெர்மிஷன்ல்ல போங்க மிஸ்டர் கதிர் என்றார் மேனஜர். “நன்றி சார்!” என்றவன் ஓட விட்டு பார்த்து விட்டே கிளம்பினேன். ‘சார்! பிரச்சினை இல்லாமல் ஓடிரும்ல்லா?’ என்று கேட்ட தோழரிடம் அதெல்லாம் ஓடிரும். நீங்க கொஞ்சம் கவனமா கூட நின்னு பார்த்துக்கிடுங்க என்றேன் நான்.
ஸ்ஸப்பா! என்னா கூட்டம்! பண்டிகைன்னா ஊருக்கு போக வர ஆட்கள் இருக்கும்தானே. ஏற முடியாம ஏறி ஃபுட்போர்டுல நின்னேன். அடுத்தடுத்த இறக்கத்தில ஆட்கள் எப்படியும் எறங்குவாங்க, அப்போது உள்ளே போயிரலாம் என்று எண்ணிக் கொண்டேன்.
பைக் ஷெட்ல இருந்து வண்டியை எடுத்திட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. யப்பா! என்னா டிராபிக். சாரை சாரையாக மக்கள் போகவும் வரவுமாக இருந்தார்கள். சாலையோரக் கடைகளில் பெண் பிள்ளைகளுக்கான ஃபிராக்குகள், சுடிதார்கள் கடை விரித்து வைக்கப்பட்டிருந்தது. அருகே நூறு ரூபாய்க்கு சட்டை, டிசர்ட், ட்ராக் பேண்ட் என பல்வேறு வண்ணங்களில் மக்களைக் கவரும் விதத்தில் விரிக்கப்பட்டு இருந்தது. “எல்லாம் நூறு ரூவாதான் சார், நூறு ரூவாதான் அம்மா” எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். கடைசி நேரம் எப்படியாவது வித்திடும் என்பது அவர்களது நம்பிக்கை. வாங்குற கூட்டத்துக்கும் குறைவு இல்லைதான்.
இவர்கள் இதுவரை எங்கே இருந்தார்கள். எப்போது இங்கே வந்தார்கள். நாளை எங்கே இருப்பார்கள். இவை எல்லாம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது. மீந்து போனதை என்ன செய்வார்கள் என பலப்பல கேள்விகள் எனக்கு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
பைக் சத்தம் கேட்டதும், அப்பா! என்றழைத்தவாறே வாசலுக்கு இருவரும் ஓடோடி வந்தனர். எப்பப்பா வந்தீங்க என்று கேட்டுக் கொண்டே வண்டியை வெளியிலேயே விட்டு விட்டு இறங்கினேன். குளோப் ஜாமூன் மாவு, அதிரசம் மாவு மற்றும் நாளை பூஜைக்கு வேண்டிய பூ, பழம், இலை இவற்றை எல்லாம் ஒன்றொன்றாக எடுத்துக் கொண்டு போனார்கள்.
கிச்சனைத் துடைத்துக் கொண்டிருந்த மஞ்சு, பசங்க இருந்தாங்களோ பெழச்சேனோ நான் என்றாள். வீடைத் தொடைச்சுக் கொடுத்திட்டாங்க. இதோ இப்போ இங்கே முடிஞ்சிரும். இனி அரைப்பு வேலை மட்டுந்தான் பாக்கி என்றாள்.
எங்கிருந்தோ வைத்த அணுகுண்டின் வெடியோசை இங்கே வீட்டை அதிர வைக்க விடிஞ்சிட்டுப்பா, வெடிச்சத்தம் மீளாது என்றேன் நான். வெடிச்சிட்டுப் போவட்டும். தீவாளின்னா வெடிக்காம எப்படி என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள் மஞ்சு. பையன்களை எழுப்பி விடவா என்று கேட்டதற்கு அவர்கள் கொஞ்சம் தூங்கட்டும். பிறகு எழுப்பிக் கொள்ளலாம் என்றாள்.
சின்னவன் குளிச்சிட்டு புது உடைகளுக்கு ஓரமாக மஞ்சள் வைத்துக் கொண்டிருந்தான். பெரியவன் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து முடித்திருந்தான்.
கொஞ்சமா சுட்ட பலகாரங்கள், புது உடைகள் இவற்றை சாமி படத்துக்கு முன்பு வைத்து பூஜை செய்து அவரவருக்கான உடைகளை அவர்களுக்கு கொடுத்தேன். தீவாளிப்படி ஏதும் கெடையாதாம்மா? என்று சின்னவன் நைய்யாண்டி செய்தான். கொடுத்திட்டாப் போச்சு என்று ஆளுக்கு நூறு ரூபாய் புதுத்தாள்களை வழங்கினேன்.
இரவுப்பணிக்கு ஆயத்தமாகத் துவங்கினேன். எதுவும் வேண்டாம்மா. மதியம் சாப்பிட்ட பலகாரங்கள் வயித்தில கம்முன்னு கெடக்கு என்றேன். கொஞ்சம் பொரிவிளங்காய், முறுக்கு இவற்றை டப்பாவில் வைத்து நைட் ஷிப்ட் மக்களுக்கு கொடுங்கள் என்று மஞ்சு தந்தாள்.
‘என்னப்பா! இந்த வருஷமாவது லீவு கேட்டுருக்கலாம்ல்லாப்பா!’ என்று இரு பையன்களும் சொன்னதும், கெடைக்கலைப்பா. உங்களை நாளைக்கழிச்சு பஸ் ஏத்தி விடுறதுக்கு வாங்கி இருக்கேன் என்று சொன்னேன். அதுதான் நாங்க போயிடுவோமே இன்னைக்காவது கூட இருக்கலாமே என்றுதான் கேட்டோம் என்றார்கள். அப்பா இங்கே இருந்தாலும் தூங்கத்தானே போறாங்க. அதுக்கு அங்கே வேலைக்கு போனா இன்னொரு நாள் லீவு கெடக்கும்ல்லா. நாளைக்கு காலையிலதான் அப்பா வந்திருவாங்களே என்று சமாதானம் சொன்னாள் மஞ்சு.
வானமெங்கும் வண்ண வண்ணமாய் ஒளிச்சிதறல்கள், நிற்காத வெடிச்சத்தங்கள். நான் மட்டும் தன்னந்தனியாக அண்ணாந்து பார்த்தவாறு
போய்க்கொண்டிருந்தேன். அமாவாசை இருள் எங்கே? என்று எண்ணிக் கொண்டே மேம்பாலத்தில் ஏறி இறங்கினேன். ‘இன்னக்கும் வேலையாப்பா?’ என்று பையன்கள் கேட்ட கேள்வி காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களின் ஓரம் என்னையுமறியாமல் கண்ணீர் ததும்பி முதல் துளி கையில் விழுந்தது.
“கிருஷ்ணா! நீ ஒரே ஒரு நரகாசுரனை மட்டும்தானே கொன்னே?” என்று நான் எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். வண்டி போகும் போக்கில் போய்க் கொண்டிருந்தது. நானும் போய்க் கொண்டிருந்தேன்.
ஆசிரியர் குறிப்பு
வயது 53. பெயர். ப.தாணப்பன் . முகநூலில் தாணப்பன் கதிர். தற்போது தமிழில் முனைவர் பட்ட. ஆராய்ச்சி மாணவர்
தனியார் தொழிற்சாலை முதுநிலைப் பொறியாளர். ‘சுற்றந்தழால்’ என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பு.
புத்கக வாசிப்பு, புத்தக அறிமுகம் செய்தல், கவியரங்கங்களில் பங்கேற்றல், புத்தகம் பற்றி சிற்றுரை நிகழ்த்துதல் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம்.
சுற்றந்தழால் நூலுக்கு சௌமா விருது கிடைத்திருக்கிறது.
G. சியாமளா கோபு /சில சுக்கான்களும் பல கப்பல்களும் – விருட்சம் நாளிதழ்

மிக அருமை. வட்டார வழக்கு களத்தின் கனத்தினூடே இனித்தது அண்ணா..!
தொழிலாளர்களின் அவட நடிகை தங்கத் தெளிவாக வட்டாரப்படுத்தி எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியருக்கு பாராட்டுகள்
மன்னிக்கவும்.autocorrection ஆல் தவறாக பதிவிடப்பட்டுள்ளது. அதன் திருத்தம் இதோ.
தொழிலாளர்களின் அவல நிலையை தெள்ளத் தெளிவாக வட்டார வழக்கில் எடுத்துக் காட்டியுள்ளார்
ஆசிரியருக்கு பாராட்டுகள்!
கண்ணீரில் கரையும் வாழ்க்கை உளவியல் களத்தில் இருந்து எழுதிய வரிகளை உணர முடிந்தது.
இடியாப்பச் சிக்கல் போலவே வாழ்க்கை.
அன்று எந்தப் பண்டிகை வந்தாலும் ஏதொரு கவலையும் இல்லாமல் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று ஏன் தான் பண்டிகைகள் வருகின்றன எனும் தாக்கமும் ஏக்கமும் மனிதனைப் பாடாய்ப் படுத்தும் பாட்டை தாணப்பன் உணர்ந்து உணரச் செய்துள்ளார்.
நாளும் கிழமையும் பார்த்தல் நடுத்தர குடும்பத்தில் ஏதும் செய்ய முடியாது என்ற சிந்தனைத்துளிகள் என்பதையும் சிந்திக்க வைத்துள்ளார்.
இன்பமும் துன்பமும் மாறி,மாறி வரும் தான். அடுக்கடுக்காக வரும் துன்பத்தை எப்படியாவது சமாளிக்க வேண்டும். ஆனால்….!
ஆவினம் ஈன மழை பொழிய! இல்லம் வீழ!அகத்தடியாள் மெய் நோக! மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட! வழியிலே கடன்காரன் மறித்துக் கொல்ல! கோவேந்தன் உழுதுண்ட கடமை கேட்க! குருக்கள் வந்து தட்சிணை க்குக் குறுக்கே நிற்க!
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவி மனம் படும் துயரம்…..!
சீவகசிந்தாமணி பாடலை நினைவூட்டுகிறது எழுத்தாளர் தாணப்பன் உணர்ந்து எழுதிய வரிகள்.
மேலும் பல கதைகளை அநுபவம் கலந்து எழுத முடியும் எனும் அளவில் கதை நகர்கிறது. சிக்கலான வாழ்க்கையில் ஒரு மனிதன் படும் பாட்டை யும் அதே சமயம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் போது தன்னுடன் இணைந்து இருக்கும் அனைவரையும் மனம் நோகாமல் வாழ வைக்கும் போது உருவாகும் சேர்மச்சிக்கல்களை நீர்த்துப் போகச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை இக்கதையில் உணர முடிந்தது.
கி.இளம்பிறை.
.
ஒரு நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையை ,வலி கொண்ட இருப்பை மிக எதார்த்தமாக வாழ்க்கை பின்புலத்தோடு இணைத்து சொல்லப்பட்டு இருக்கிற இக்கதை சிறப்பாக உள்ளது. கதை சொல்லி என்கிற பாதையில் வழக்காற்று நடையோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கதை சொல்லிக்கு தேவையான காட்சி மூலங்கள் சரியாக பொருத்தி, நினைவெளி யுக்தியோடு கதையை கோர்த்து நம் கைக்கு கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்…
நல்ல கதை. நம்மில் பலரும் அனுபவித்த கதை என்பதால் ஒரு ஒட்டுதல் ஏற்படுகிறது.
கதை வட்டார மொழிநடையில் நன்றாக இருக்கிறது. நிகழ்வுகள் தாவித் தாவிச் செல்லும் நடையில் அமைகின்றன. உணர்வுப்பூர்வமான கதை. வாழ்த்துக்கள் சார்👏👏