
கணேஷ் தியேட்டர் முன்புறம் உள்ள சாலையின் ஓரத்தில்
மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ‘அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை
காட்டிக் கொண்டிருக்கிறானா? அரசியல்வாதி யாரும் மனுக்கள் ஏதும்
வாங்கிக்கொண்டு இருக்கிறார்களா? இப்ப நாட்டில் எதற்குதான் கூட்டம்
கூடுகிறது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே?‘ என்று
செந்தில் பலவிதமாக தனக்குள் யோசித்துவன் தான் வந்த
வேலையை அப்போது மறந்தான். அவன் கூட்டத்தை
விலக்கிக்கொண்டு அங்கு என்னதான் நடக்குது என்று ஆர்வமுடன்
முன்னே சென்று பார்த்தான்.
ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் கூட்டத்தின் நடுவே மயங்கிக்
கிடந்தாள். சேலையில் சின்ன சின்ன ஜன்னல்கள்போல் கிழிந்த
சேலை, அங்கங்கு ஒட்டுப்போட்ட ஜாக்கெட், எண்ணெய் பசை காணாத
தலைமுடி. அவளது தோற்றம் அனைத்தும் அவளை ஒரு ஏழைப்பெண்
என்று அங்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. சுற்றிலும் கூடி இருந்த
மக்கள் அவளைக் காட்சிப் பொருளாக எண்ணி வேடிக்கையில்
மூழ்கியிருந்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒருத்தராவது தாங்கள் நின்ற
இடத்தை விட்டு நகரவில்லை. கூட்டத்தில் பெண்களும் சிலர் நின்று
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் ஐயோ பாவம்
என்று கூறிக்கொண்டே சில பெண்கள் கூட்டத்தை விட்டு
வெளியேறினார்கள்.
கூட்டத்தில் இருந்த இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன்
அப்பெண்ணை சுற்றி சுற்றி பல்வேறு கோணங்களில் கைபேசியில்
படம் பிடித்துக்கொண்டு இருந்தான். அவனது நோக்கம் கைபேசியில்
வீடியோ எடுத்து முகநூல், வாட்சப்பில் வெளியிட்டு லைக் பெறுவதில்
இருந்தது. அந்த ஏழை கர்ப்பிணிப்பெண் பற்றி அவனுக்கு
எந்தவிதமான சிந்தனையும் சமூகப் பொறுப்புணர்ச்சியோ இருப்பதாகத்
தெரியவில்லை என்பது அவன் செயல்பாட்டிலிருந்து தெரிந்தது.
“ ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ இப்படி ரோட்டில் விழுந்து
கிடக்குது!“ என்ற அனுதாப வார்த்தைகள் கூட்டத்தில் சிலர்
தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“இப்படி வயித்த தள்ளிக்கிட்டு இந்த குட்டி அவசியம் வெளியே
வரணும்மாடா!” இது சில இளைஞர்களின் அப்பெண்ணைப் பற்றி
விமர்சன வார்த்தைகள். சில இளைஞர்கள் ஒருவருக்கொருவர்
தங்களுக்குள் அப்பெண்ணைப் பற்றி கேவலமாக ஏதோ பேசியும்
சிரித்துக்கொண்டும் கைதட்டி ஜாலியாக இருந்தார்கள்.
“ டேய் மச்சி தியேட்டர் முன்னாடி இந்த குட்டிக்கு இப்ப குழந்தை
பொறந்தா குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்”. கூட்டத்தில் இருந்த
இளைஞன் ஒருவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“தியேட்டரில் சந்திரமுகி படம் ஓடுது. குழந்தைக்கு
சந்திரமுகின்னு பேரே வைத்து விடலாம்டா.” என்று சிரித்துக்கொண்டே
மற்றொரு இளைஞன்.
“டேய் மச்சி ஆண் குழந்தை பொறந்தா குழந்தைக்கு என்ன பேரு
வைப்பது’’. அருகில் இருந்த இளைஞன் ஒருவன் சிரித்துக்கொண்டே
கேட்டான்.
‘’இந்த தியேட்டர் பேரே வச்சிடலாம்டா.” என்று கூட்டத்தில்
இப்படியான இளைஞர்களின் ஏளனப் பேச்சுக்கள் சிரிப்புகள்.
இப்படி ஆள் ஆளாக்கு அனுதாப வார்த்தைகள், இரக்கமற்ற
ஏளனப் பேச்சுக்கள் தவிர, ஒருத்தர் கூட இடத்தை விட்டு
நகரவில்லை. விழுந்த கிடந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்ய
வேண்டும் என்ற எண்ணமும் கூட்டத்தில் ஒருவருக்குக்கூட இல்லை.
அப்போது தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதற்கு ‘டிரிங்’ டிரிங் என
அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டவுடன் கூட்டத்தில் இருந்த பாதிப்பேர்
தியேட்டரை நோக்கி ஓடினார்கள். அந்த இளைஞர் கூட்டமும்
தியேட்டரை நோக்கி ஓடியது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த
செந்திலுக்கு வினாடியில் எல்லாமே கசந்தது “அய்யா நகருங்க அய்யா
நகருங்க கொஞ்சம்” என்று கூறிக்கொண்டும் கூட்டத்தை
விலக்கிக்கொண்டும் கர்ப்பிணிப்பெண் அருகில் சென்றான்.
“யாருப்பா நீ” அவ்வளவு நேரம் வெறுமனே நின்று கூட்டத்தையும்
அந்தப் பெண்ணையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாடி வைத்த
கிழவர் ஒருவர் வாயைத் திறந்தார்.
செந்தில் “இந்தப் பொண்ணு என்னோட தங்கச்சிங்க” என்றான்.
“ஏம்பா! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா. நிறை மாத
தங்கச்சியை இப்படி கூட்டம் போட்டு எல்லாரும் வேடிக்கை
பார்க்கும்படி பொறுப்பில்லாமல் தனியே விட்டு விட்டு எங்கு
போயிட்டு வர்ரே!’’ என்றார் அந்த தாடி வைத்த அறிவுள்ள கிழவர்.
செந்தில் அவர் கூறுவதை எதையும் காதில் வாங்கிக்
கொள்ளாமல், அப்பெண்ணுக்கு மூச்சு வருகிறதா என்று மூக்கின்
அருகில் கைவைத்து பார்த்தான். நல்லவேளை மூச்சுக் காற்று வந்து
கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த வாடகைக்
காரை கைதட்டி வரவழைத்தான்.
அருகே வந்த வாடகைக் கார் ஓட்டுனர் செந்திலை ஏற இறங்கப்
பார்த்தான். அவன் “நூறு ரூபாய் கொடுங்க சார் வரேன்” என்று
செந்திலிடம் பேரம் பேசினான்.
“ சரி! சரி எடுப்பா காரை வேகமாக “ என்றான் செந்தில் .
“ஏன் சார், இந்த அம்மா யாரு, உங்க சம்சாரங்களா?” என்று
சம்பந்தமில்லாமல் ஓட்டுனர் கேட்டவுடன் செந்திலுக்கு இந்த
உலகத்தின் மீதே எரிச்சலும் கோபமும் வந்தது.
செந்தில் “அட நீ வேற எனக்கு கடுப்பக் கிளப்பாதே இந்த
உலகத்தின் மீதே எனக்குக் கோபம் வருது. யாரோ ஒரு
பொம்பளையப்பா, ரோட்டிலே மயக்கமாக விழுந்து கிடந்ததுப்பா.
பிரக்நெட் லேடின்னு கூட பார்க்காம இந்தப் பொண்ணைப் பார்த்து
கூட்டம் வேடிக்கையும், ஏளனப் பேச்சுகளுமே பேசிகிட்டு இருக்காங்க.
யாரும் இப்பெண்ணுக்கு உதவி செய்யணும்னு முன் வரலே. என்னடா
உலகமப்பா! வர வர நம்ம ஜனங்களுக்கு மனிதாபிமானமே வறண்டு
போச்சுப்பா..“ என்று ஆதங்கத்துடன் கூறினான்.
கார் ஓட்டுனர் காரை ஓட்டிக்கொண்டே செந்தில் பேசுவதை
எல்லாம் ஸாரி அவன் புலம்புவதையும் கேட்டுக்கொண்டே வந்தான்..
“வற்றாத ஜீவநதி கங்கையும் காவிரியும் ஓடும் பூமியில் வாழும்
ஜனங்களிடம் உதவி செய்யனும்னு என்ற மனிதநேயமும்கூட வறண்டு
போச்சுப்பா” என்று தன்னோட மனதில் அப்போது தோன்றியதை
எல்லாம் ஆத்திரத்துடன் கொட்டித் தீர்த்தான் செந்தில்.
“ ……………”
கார் அரசு மருத்துவ மனை அருகில் போய் நின்றது. கார்
ஓட்டுனர் செந்திலுடன் சேர்ந்து அப்பெண்ணை கீழே இறக்கி
மருத்துவமனை படுக்கையில் சேர்க்கும்வரை பொறுமையாக அருகில்
இருந்து அனைத்து உதவிகளும் செய்தான்.
செந்தில் தன்னோட சட்டைப் பாக்கெட்டைப் பார்த்தான். ஒரு
நூறு ரூபாய் மட்டும் இருந்தது. அதில் காந்தி சிரித்துக்
கொண்டிருந்தார். அந்த ரூபாயை எடுத்து ஓட்டுனரிடம் செந்தில்
நீட்டினான்.
“ வேண்டாம் சார்! “ என்று கார் ஓட்டுனர் மறுத்தான்.
“ஏம்ப்பா? நான் தர்ற பணம் உனக்கு பத்தாதா?” என்று கேட்டான்
செந்தில்.
“ சார்! முதல்ல நீங்க இருந்த சூழ்நிலையைப் பார்க்காமல்
உங்ககிட்ட பணம் கேட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். யாரோ
அனாதையா ரோட்டிலே மயங்கிக் கிடந்த பொண்ணை, உங்க தங்கை
மாதிரி நினைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பொறுப்பாக
சேர்ந்திருக்கீங்க. இவ்வளவு அக்கறையுடன் பெரிய மனசு பண்ணி
அந்த பொண்ணுக்காக நீங்க செலவு செய்யும்போது, நீங்க தயாராக
இருக்கும்போது.. இந்த நூறு ரூபாயை உங்கக்கிட்டயிருந்து நான்
வேண்டாம்ன்னு விட்டுக் கொடுக்கறதிலே தப்பே இல்லே சார்.
அனாதையான இந்தப் பொண்ணுக்கு உதவி செய்ய உங்களோடு
எனக்கும் நீங்க இப்ப ஒரு வாய்ப்பு கொடுத்தற்கு உங்களுக்கு ரொம்ப
நன்றி சார் நான் வரேன் சார்” என்றான்.
ஓட்டுனர் கூறியதையெல்லாம் கேட்ட செந்தில் தனக்குள்
மகிழ்ந்து கொண்டான். இன்னும் நாட்டில் மனிதநேயம் இங்கு
இருக்குது என தனக்குள் சற்று உரக்கவே தனக்குள் முணங்கினான்.
அவன் முணங்கியதைக் கேட்ட கார் ஓட்டுனர் மருத்துவமனைப்
படியில் இறங்கிக்கொண்டிருந்தவன், மறுபடியும் ஓடி வந்து “ வேற
என்ன சார் இப்ப உதவி உங்களுக்கு வேணும்’’ என்று ஆர்வமுடன்
கேட்டான்.
“ஒன்றுமில்லையப்பா, நீ கூறியதை கேட்டவுடன், கங்கை
இன்னும் இங்கு வற்றிவிடவில்லையப்பா என்று எனக்குள் தோணியது.
அதை யாரிடமாவது கூறணும்போல் எனக்கு இப்ப தோன்றியது.
அதைத்தான் இப்ப எனக்குள் புலம்பிக்கொண்டேன்” என செந்தில்
கூறிக்கொண்டே தன்னோட வழியே நடந்து சென்றான்.
செந்திலும் கார் ஓட்டுனரும் பேசியதையெல்லாம் சற்று தள்ளி
நின்று உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த அரசு மருத்துவமனை நர்ஸ்
‘தனக்குள் இப்படியும் மனிதநேயமுள்ள சில மனிதர்கள் நாட்டில்
இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்’ என்று ஒரு நிமிடம்
நினைத்தவள் செந்தில் வந்து சேர்த்த அந்த ஏழைக் கர்ப்பிணிப்
பெண்ணை அக்கறையுடன் சேவை மனப்பான்மையுடன் கவனிக்க
ஆர்வமுடன் சென்றாள்.
ஆசிரியர் குறிப்பு
வயது 70
கீழராஜகுலராமன் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
தற்போது
வசிக்கும் இடம் : பள்ளிக்கரணை சென்னை
வட்டாட்சியராக பணிநிறைவு பெற்றவர்
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்
கல்கி, தினமலர் – வாரமலர், தினமணிகதிர், ராணி, ராணிமுத்து, வானமே எல்லை போன்ற வார மாத இதழ்களில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
‘’வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள்’’ என்ற சிறுகதைத்தொகுப்பு நூல்மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல் அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் சிறந்த நூல் என்று தேர்ந்து எடுக்கப்பட்டது.
தாணப்பன் கதிர்/கொல்லபட்ட ஒரே ஒரு நரகாசுரன் – விருட்சம் நாளிதழ்

நேரடியான செய்தி. நறுவிசான நடை👍சமூக அவலமும் மனித நேயமும் பிணைந்து காணப்படுவது தான் வாழ்க்கை என்னும் நதி.
மிக்க நன்றி