பத்மா அர்விந்த்/நான் என்பது நானல்ல

நியுஜெர்சி செல்லும் புகைவண்டி டிராக் 3ல் புறப்படத் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், உடனே தேனீக்கூட்டம் கலைந்தது போல ஆயிரக்கணக்கானோர் வெகு வேகமாக-நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள் போல-செல்லலானார்கள்.
மாலை பீக் ஹவர் புகைவண்டி. நியூயார்க்கில் இருந்து நியுஜெர்சி செல்லும் புகைவண்டி. வேலைக்காக நியுஜெர்சியில் இருந்து நியுயார்க் கார், புகைவண்டி, படகு, பேருந்து என பலவழிகளில் தினமும் பல இலட்சக்காணகானோர் வந்து செல்கிறார்கள். நியூயார்க்கிலேயே தங்க மனம் ஆசைப்பட்டாலும் பொருளாதாரம் “நீ என்ன பில்கேட்ஸா? மிஞ்சி போயிடுவியோ?” என்று கேட்பது போல இடம் கொடுக்காது. நியுஜெர்சியில் நான் வசிக்கும் இடத்தில் இருந்து 45 நிமிடம்தான். எப்போதாவது ஒரு முறை இப்படி வாடிக்கையாளர்களைச் சந்திக்கத்தான் வருவேன். மற்றவர்கள்தான் தினமும் நியூயார்க் என்ற மாயாஜாலத்திற்குள் வருகிறவர்கள் போல. மனம் எங்கோ இருக்கக் கால்கள் பயணப்பட்ட வழியில் செல்லும் நன்கு பயிற்சிபெற்ற நடன மேடை செல்லும் காலணிகள் போலத் தாமாகவே சென்று வண்டியில் ஏறி இடம் பிடித்தன.
“நான் இங்கே உட்காரலாமா?” என்ற குரல் கவனத்தைக் கலைக்க, ஆழ்ந்து செல்போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தவள் சற்றே தலையைத் தூக்கி, அரை மனதுடன் நகர்ந்து இடம் கொடுத்தேன். “இன்றைய உலகில் முகம் பார்ப்பவர் யார்?” என்று எண்ணிக்கொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த புகைவண்டியில் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது.
விளம்பரத்தில் காணும் வருத்தமற்ற தலைமுடியைப் போல ஒவ்வொருவராக இணைந்து கொண்டனர். அவரவர் கையில் மாலை நேரப் பசிக்குக் கொறிக்கக் கொஞ்சம் தீனி அல்லது குடிக்க காஃபி என—ஒலிம்பிக் வீரர்களின் தங்கப் பதக்கங்கள்
போல—கொண்டுவந்திருந்தார்கள். சிலர் ஓடிவந்த களைப்பு நீங்க
ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இன்னும் 45 நிமிடம் இருக்கிறது நான் வசிக்கும் ஊர் போய்ச் சேர. அதுவரை கண் மூடி இளைப்பாற நினைத்தேன்—பெரும்பாலான நேரம் எனக்கு இந்த இடைவெளி கூகிள் மேப்ஸ் திரையில் காணும் சிவப்பு நிற நெரிசல் போலத் தோன்றும்.
இந்த கூட்டத்தில் பெரும்பாலும் பயணிப்பவர்கள் மாதாந்திர பாஸ் வைத்திருப்பதால்
பரிசோதகர் வருவதில்லை. டிக்கெட் வாங்கியிருப்போர் முன்னால் உள்ள சின்ன கம்பிக்கு இடையில் வைத்து விடுவார்கள், மாலை என்ற முறையற்ற சேகரிப்பு போல. பரிசோதகர் வந்து சீட் செக் வைத்துச் சென்றுவிடுவார். என் டிக்கெட்டை போனில் வாங்கியிருந்தேன். வந்தால் காட்டிவிடலாம் என்று போனைக் கையில் வைத்திருந்தேன்—இப்போது போன் என் அடையாள அட்டை, என் வங்கி, என் டிக்கெட், என் ஷாப்பிங் கட்டடம், என் எல்லாமே!
பள்ளிக்காலத்தில் தினம் ஆடுதுறையில் இருந்து கும்பகோணம் சென்று படித்த காலம்
ஒன்றுண்டு—நினைவிருக்கிறது, அப்போது சினேகிதர்களுடன் சிரித்துப் பேசும் நேரம்
இரும்புக்கு குமிழி போல என்றும் உடையாது நிற்கும் என்று நம்பினேன். அதிலும் கூட்டம்
நிறைய இருக்கும். ஆனால் இப்படி அமைதியாக அவரவர் செய்தித்தாளிலோ நூலிலோ
மூழ்கி இருக்க மாட்டார்கள். எந்த ஊரில் யார் ஏறிவருகிறார்கள் என தெரியும், ரகசிய
புலனாய்வு அமைப்பை மிஞ்சும் தகவல் சேகரிப்பு! பாட்டும் ஆட்டமுமாக அதிரும்.
மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கிப் பெருகும்—குழந்தைகளின் பிறந்தநாள் விழாவில்
உடையும் பலன்கள் போல!
அதிலும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் ஊர் பெண்கள் யார் யார் பள்ளிக்
குழந்தைகள் யார் எல்லா விவரங்களும்—அப்போது நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு
சினிமா கதை போல நினைவில் இருக்கிறது. மாலையில் அத்தனை பேரும் ஏறாவிடில்
புகைவண்டி கிளம்பாது.
ஸ்டேஷனை விட்டுக் கிளம்பி அவுட்டர் அருகே வரும் பொழுது பெண்கள் கல்லூரி
அருகே யாராவது ஓடிவருவது கண்டால் செயினைப் பிடித்திழுத்து நிறுத்திவிடுவார்கள்.
அந்தப் பெண் ஏறும் வரை கிளம்பாது. காலையும் மாலையும் செல்லும் இந்த மாணவர்கள் புகைவண்டி உல்லாச புகைவண்டிதான். ஆண்டுக்கொரு முறை புகைவண்டி தினம் அன்று
புகைவண்டியில் வேலை செய்யும் எல்லாருக்கும் புது ஆடைகள் முதல் வாங்கித் தருவோம்.
அதற்காக காசு வசூல் எல்லாம் உண்டு. மொத்த புகைவண்டியும் கழுவி, முகப்பு என்ஜின்
மாலை எல்லாம் அணிந்து அலங்கரிக்கப்பட்ட கல்யாண வீடு போல—கனஜோராக வரும்.
ஆனால் அமெரிக்காவில் புகைவண்டிகள் அப்படி இல்லை. தெரியாமல் கண்கள்
சந்தித்து கொண்டால் கூட உடனே ஒரு மன்னிப்புக் கேட்கும் பாவனையில்
புன்னகையும் என்ன வெயில், இல்லை அமோகமான வசந்தம் எனப் போலியான ஓரிரு
வார்த்தைகள். தினமுமே கூடச் சென்றாலும் பழகிய முகம் என்றாலும் பெயர் தெரியாது.
நட்பும் இல்லை. சன்னல் கதவுகள் மூடித்தான் இருக்கும். கதவுகள் மூடாவிடில்
புகைவண்டிகள் கிளம்பாது—அப்படியே வெளியில் குதித்து விட்டால் என்று பயந்தது
போல! பாதுகாப்புக்காக மூடியது டிரெயினின் கதவுகள் மட்டும் இல்லை, அங்கே இருந்த
பயணிகள் ஓவ்வொருவருமே கூட சுற்றி ஒரு கூடாரம் அமைத்து உட்கார்ந்திருந்தது
போலத்தான் இருந்தது—ஒருவரை ஒருவர் தொடாமல், பேசாமல்
“நான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை, யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று சொல்வது போல.”எடிசன் பயணிகள் முதல் இரண்டு பெட்டியில் இருந்தால் பின்னோக்கிச் செல்லலாம்” என்ற அழைப்பைக் கேட்டு எழுந்து கொண்டேன். எடிசன் புகைவண்டி நிலையம் வந்துவிட்டது! இனி இறங்கி பார்க்கிங் இடத்தில் இருந்து காரை எடுத்துக்கொண்டு பிள்ளையை அழைத்துக் கொண்டு போக வேண்டும். சமைக்க வேண்டுமா இல்லை ஶ்ரீதர் வந்திருப்பானா தெரியவில்லை.
யோசித்தவாறே காரில் ஏறி குழந்தையின் டேகேர் நோக்கி காரைச் செலுத்தினேன்.
அலுப்பாக இருந்தது—புகைவண்டியில் உட்கார்ந்தே அரை மணி நேரம் கண்களை மூடி
இருந்ததால், நான்கு மணி நேரம் ஓய்வெடுத்த உணர்வு!
பின்னால் வந்த போலீஸ் காரின் சைரன் என்னை நிற்கச் சொல்லி சைகை காட்டியது
கண்டு சற்றே அதிர்ந்து வலப்பக்கமாகக் காரை ஓரம் கட்டி நிறுத்தினேன். அப்படி ஒன்றும் வேகமாக சென்றிருக்கவில்லை என்று நினைத்தேன்—குறைந்தது பத்து காரையாவது முந்தியிருக்க வேண்டும், அப்படியே வேகமாகச் சென்றிருந்தாலும்!
“லைசென்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ் பிளீஸ்” என்ற காவல் அதிகாரியின் குரல்
கேட்டு, பையில் கைவிட்டு பர்ஸ் எடுக்கப் போனபோதுதான் பர்ஸ் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்—இருதயம் அடித்துக்கொண்டு மார்பை உடைத்துக்கொண்டு வெளியே வருவது போல இருந்தது! எல்லாமே போனில் என்றான பின் பர்ஸ் எடுத்துச்
செல்வதையே மறந்து போகிறோம் போல. இல்லை எங்கேயாவது மறந்து
வைத்துவிட்டேனா? சில சமயம் நம்மை அறியாமலே பல செயல்களைச்
செய்துவிடுகிறோம்.
மதியம் உணவுக்குப் பணம் எப்படிக்கொடுத்தேன், போனில் இருந்த ஆப்பிள் பேயாலா?
சப்வே டோக்கன் அதுவும் போன் வழியாகத்தான், மொத்தத்தில் பரசை எடுத்த நினைவே இல்லை—இல்லை இல்லை, கட்டத்தினுள் நுழையும் முன் ஐடெண்டி காட்டி
எல்லாவற்றையும் சோதிக்கப் போட்டு பின் பேசிக்கொண்டே எடுக்கும் போது பரசை
எடுக்க தவறவிட்டிருக்கிறேன். இப்போது என்ன செய்வது!
“ஓ மை காட்! I forgot to take my purse at the security!!!” என்று கதறியவள்
முகத்தில்—ஏழாம் வகுப்பில் வகுப்பாசிரியரிடம் பிடிபட்ட மாணவியைப்
போல—அதிர்ச்சியும் அவமானமும் தெரிந்தது. நான் போனில் காட்டிய மற்ற படிவங்களும் என் மாநில அடையாள அட்டையும் சரியாக இருந்தது.
நீல நிற யூனிபார்இல் பளபளக்கும் நட்சத்திரங்களுடன் மிடுக்காக வந்த அதிகாரிக்கு என் பதற்றத்தை கண்டு சிரிப்புதான் வந்தது. பணிவாக, “கவனமாக ஓட்டிச் செல்லுங்கள் மேடம். நள்ளிரவு” என்று சொல்லிச் சென்றார். “காரின் விளக்கை ஆன் செய்ய மறந்துவிட்டீர்கள் அதற்காக நிறுத்தினேன். கவனம்!” நல்லவேளை அபராதம் இல்லை என்று மெதுவாக மீண்டும் சாலையில் ஐக்கியமானேன்.
பர்ஸ் செக்யூரிட்டியில் இருந்தால் மறுநாள் போனால் திரும்பப் பெற்றுக்கொண்டுவிடலாம்.
ஆனால் அதற்காக இன்னொருநாள் நியூயார்க் செல்ல வேண்டும் இல்லை என்றால்,
இன்னொரு ஓட்டுநர் உரிமை பெற அலைவதே பெரும்பாடு! கிரெடிட் கார்ட், இன்சுரன்ஸ்
எல்லாம் திரும்ப மாற்று அட்டைகள் பெற்றுவிடலாம். யாரும் பயன் படுத்த கூட முடியாது,
தன் போனில் வரும் கோட வேண்டும், எல்லாவற்றிற்கும் ஆப்பிள் பே என்பதால் அதிக
பணம் கூட இல்லை ஆனால் ஓட்டுநர் உரிமம்! அது இல்லாமல் முடியாது!
திரும்ப டிரைவிங் டெஸ்ட் வேண்டுமா தெரியவில்லை—நாற்பது வயதில் பதினாறு வயது பையன் போலத் திரும்ப டெஸ்ட் எடுக்க வேண்டுமா! ஒரு நாள் விடுப்பு வேண்டுமா?!
வேலை வேறு நிறைய இருந்தது. தேர்தல் நேரம் வேறு! நாளை மீட்டிங் எல்லாம்
மாற்றனும் என்றால் கவர்னர் அலுவலகத்தில் வேறு படுத்துவார்கள்!
ஒரு முறை பாரலல் பார்க்கிங் பயிற்சி செய்ய வேண்டுமா தெரியவில்லை. நியுஜெர்சியில் அதுக்கு அவசியமே இல்லை. ஆனாலும் தெரியனும். ஆண்டவா, ரோட் டெஸ்ட் வேண்டாம் ரினியவல் பண்ணலாம் என்று சொன்னால் நல்லா இருக்கும்! அதற்கு எப்படியும் அரை நாள் வேணுமே— உடனே அப்பாயின்மெண்ட் கிடைக்குமா?
இல்லாவிட்டால் என்ன செய்ய?
நல்ல வேளை வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம் ஆனால் ஐடி இது
ஒன்றுதானே—பலவேறு சிந்தனைகளில் பிள்ளையின் டே கேர் செல்லும் வழியைக்
கோட்டைவிட்டேன். கடவுளே! போலீஸீடம் சிக்கி நேரம் வேறு ஆகியிருந்தது. மீண்டும்
ஜிபிஎஸ் போடுமென்றால், கார் ஓட்டும் போது ஜிபிஎஸ் முகவரி இட முடியாது—ஆம்,
இது அமெரிக்கா, இதில் எல்லாமே சட்டத்திற்குப் புறம்பானது தான்! போனில் கூகிளிடம்
வழி கேட்டுப் போய்ச் சேர்ந்தேன். பிள்ளையை அழைத்துக்கொண்டு…
யோசித்தவாறே வீடு வந்து காரை நிறுத்திவிட்டு, நாளைய மீட்டிங் எல்லாம் கேன்சல்
செய்துவிட்டு டிஎம்வி போக வேண்டும் என்று காரியதரிசியை அழைக்க போனை
எடுத்தவள் கையில் பின்னால் போனில் ஒட்டியிருந்த பவுச் தட்டுப்பட அதில் இருந்தது
என் லைசென்சும் கிரெடிட் கார்டும். பர்ஸ் யாருக்கு வேனும்?! நிதானமாக செக்யூரிட்டிக்கு போன் செய்து பர்ஸை அனுப்பச் சொல்லி தபால் செலவைக் கொடுத்துவிடலாம் என்று முகம் முழுக்க பூரிப்போடு உள்ளே வந்தேன்.
சட்டென்று மகிழ்ச்சியில் பிள்ளையைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்த போது சொன்னேன், மனமும் நினைவும் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று.
“ஆமாம் அம்மா நீ கூட நான் சொல்லிக்கொண்டு வந்ததை எல்லாம் கவனித்துக்கொண்டு வந்திருப்பாய்” என்றவன் நான் எட்டிப்பிடிப்பதற்குள் ஓடியே போனான்.

சந்தியா ஷங்கர்/டெமன்ஷியா – விருட்சம் நாளிதழ்

One Comment on “பத்மா அர்விந்த்/நான் என்பது நானல்ல”

Comments are closed.