G. சியாமளா கோபு /சில சுக்கான்களும் பல கப்பல்களும்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தாண்டியதும் வளவனூர் சந்திப்பில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. மாணவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
ராதா டீச்சரும் அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தலைமை ஆசிரியை அறையில் கையொப்பமிட்டு விட்டு தன் வகுப்பான பத்தாம் வகுப்பு சி பிரிவிற்கு வந்த போது கரும்பலகையைச் சுத்தம் செய்து விட்டுப் பதிவு வருகை என்று எழுதிக் கொண்டிருந்தாள் மரியா. அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள் வேல் விழி. இவளைக் கண்டதும் குட்மார்னிங் டீச்சர் என்று முகமன் சொன்னார்கள் இருவரும். இன்னும் மற்ற மாணவிகள் வர ஆரம்பிக்கவில்லை.
எனவே இவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள் ராதா டீச்சர். “தினமும் சீக்கிரமே வந்து விடுகிறீர்களே. உங்க ஊருக்குச் சீக்கிரமே பஸ் வந்துடுதா. பரவாயில்லையே”
“எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாதுங்க டீச்சர். நான் ஒரு கிலோமீட்டர் நடந்து வந்து மெயின் ரோடில் பஸ் பிடிக்கணும். அதை விடக் குறுக்காலே நடந்து வந்தால் பள்ளிக்கூடத்துக்கே வந்து விடலாம்” என்றாள் வேல் விழி
“வருகிற வழியில் தான் என் வீடும் இருக்கு. அதனால் ரெண்டு பேரும் சேர்ந்தே வந்துடுவோம்” என்றாள் மரியா.
மதிய உணவின் போது கணக்கு டீச்சர் கல்பனா ராதாவிடம் சொன்னாள். “உன் வகுப்பில் வேல் விழியும் மரியாவும் சரியில்லை” என்று.
திடீரென்று முகத்தில் குத்தப்பட்டதைப் போலத் திகைத்துப் போனவள் “ஏன் என்னாயிற்று?”என்று கேட்டாள் ராதா.
“ரெண்டு பேரும் எப்போது பார்த்தாலும் ஒருத்தர் மேலே ஒருத்தர் சாய்ந்து கொண்டு எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்”;
அதுக்கா இவ்வளவு பில்டப் என்ற மைண்ட் வாய்ஸ்ஐ புறம் தள்ளி “;இடம் மாற்றி உட்கார வைப்பது தானே”என்றாள்.
“அதுக்கும் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்”
“என் வகுப்பிலும் இதே தான். இடித்துக் கொண்டு தான் உட்காருவார்கள். ரெண்டு பேர் தலையும் ஒன்றாகவே தான் இருக்கும்” என்றாள் ஆங்கில ஆசிரியை ரேகா..
“ஆமாம். மதிய உணவு நேரத்திலும் இருவரும் ஒரே டப்பாவில் இருந்து தான் சாப்பிடுவார்கள். அது என்ன கன்றாவியோ! பார்க்கச் சகிக்கவில்லை” தமிழாசிரியை சாரதா டீச்சர். கூடவே சொன்னாள் “ராதா உன்னிடம் ரிபோர்ட் பண்ணியாச்சு. நாளைக்கு ஏதேனும் ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் எங்களைச் சொல்லக் கூடாது”
என்ன ஏடாகூடமாகும் என்று தன் மனதில் தோன்றிய நினைவை ஒதுக்கி விட்டு அவர்கள் இருவரையும் மறுநாள் காலையில் தனிமையில் விசாரித்தாள்.
“டீச்சர், எனக்குக் கணக்கு வராது. வேலு தான் சொல்லித் தருவாள்”
“ஆமாம் டீச்சர், எனக்கு ஆங்கிலம் வராது. மரியா தான் சொல்லித் தருவாள்”
“எதுக்கு நீங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லித் தரனும். டீச்சரிடம் கேட்கலாம்ல்லே. வகுப்பிலே பேசிக் கிட்டே இருந்தா டீச்சருக்கு எரிச்சல் வருமில்லையா?” என்றாள் ராதா டீச்சர் சற்றே கண்டிக்கும் குரலில்.
“அவுங்க உங்களை மாதிரி பொறுமையா சொல்லித் தர மாட்டேங்கறாங்க. ஒரு தடவைக்கு ரெண்டாவது தடவ கேட்டாக்க நீயெல்லாம் ஏன் படிக்க வரேன்னு கோபப்படறாங்க”

2

சக ஆசிரியைகளைப் பற்றிய புகாருக்கு என்னவென்று பதில் சொல்வாள்? “சரி. இனி புரியலைன்னா எங்கிட்ட கேளுங்க. சரியா. வகுப்புல பேசிட்டு இருக்கக்கூடாது” என்றவள் “அது சரி. ஏன் ரெண்டு பேரும் ஒருத்தர் தொடையில ஒருத்தர் தொடையை இடிச்சிக்கிட்டு சாப்பிடனும்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“அது…….” வெட்கப்பட்டாள் மரியா.
ஆனால் தயங்கித் தவித்துத் தொடர்ந்தாள் வேலு. ”டீச்சர். நான் சோறு கொண்டு வர மாட்டேன்”.
“ஏன்.? தூக்கிக் கிட்டு வர கஷ்டமா இருக்கா?”
“இல்லே டீச்சர். எங்க அம்மா காலையிலே கூலி வேலைக்கு போயிடும். அதனால சோறாக்காது. காலைக்குப் பழையதைச் சாப்பிட்டு விடுவேன். மதியத்துக்குச் சோறு கிடையாது”
“எங்க வீட்ல இவளுக்கும் சேர்த்து சோறு கேட்க முடியாது. அதனால எனக்குன்னு கூட கொஞ்சம் கேட்டு எடுத்துக் கிட்டு வருவேன். அதை ரெண்டு பெரும் பகிர்ந்து சாப்பிடுவோம்”
“பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும் போது நான் மரியாவின் வீட்டிற்குப் போய் அவுங்க அம்மா வேலைலேருந்து வர்ற வரை வீட்டுப் பாடத்தை முடிச்சிட்டு தான் எங்க வீட்டுக்குப் போவேன். எங்க வீட்டில் பள்ளீடம் வுட்டுப்
போனதும் ஆட்டை பிடிச்சி கட்டனும். அது இதுன்னு எங்க அம்மா எனக்கு நெறைய வேலை வெச்சிருக்கும்” என்றாள் வேல் விழி.
பெண்பிள்ளைகள் பள்ளிக்கு வருவதே பெரிய சாதனையான குடும்பச் சூழலில் இருவரையும் எங்கே குறை சொல்வது?
ஸ்டடி விடுமுறைக்கு முதல் நாள் வகுப்பில் கையெழுத்து நோட்டைக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் அவரவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
சாரதா டீச்சர் வகுப்பில் நுழைவதைக் கூட கவனிக்கவில்லை யாரும். அப்படியே ஒவ்வொரு நோட்டாக வாங்கி அவர்கள் எழுதியதைப் பார்த்தாள். வேல் விழி நோட்டும் மரியாவின் நோட்டும் அவளுக்குத் திகைப்பைக் கொடுத்து
கோபத்தை அதிகமாக்கியது.
தலைமையாசிரியை இருவரின் நோட்டையும் படித்து எதிரே நிற்கும் அவர்களை முறைத்தவாறே ராதாவிடம் அவர்கள் நோட்டை வீசாத குறையாகக் கொடுத்தார்கள். மற்ற ஆசிரியைகளும் அங்கே தான் இருந்தார்கள்.”இந்தா நீயே படிச்சிப் பாரு உன் பிள்ளைகளோட யோக்கியதையை. கருமம். கருமம். கலிகாலம் முத்திப் போச்சு”
வாங்கிப் பார்த்தாள் ராதா. மரியா எழுதியிருந்தாள்.”அரபிக்கடலை விட அதிக அன்பும் பசிபிக் கடலை விடப் பெரிய பாசமும் கொண்ட என் வேலு. என் உயிர் போனாலும் உன்னை நான் மறக்க மாட்டேன்”
“கண்ணை இமை மறக்கலாம். உன்னை நான் மறப்பேனா? என் நெஞ்சைப் பிளந்து பார். அங்கே நீ தான் இருப்பாய். என்றென்றும் உன் நினைவில் வேலு.”
“ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சினையிருக்கு. பேசிப் பார்க்கலாம்” என்றாள் பரிவுடன் ஆங்கில ஆசிரியை ரேகா.
ஒப்புதலாக தலையை ஆட்டிய ராதா நீயாவது புரிந்து கொண்டாயே என்று அவளை நன்றியுடன் பார்த்தாள்.
“நாளை உங்கள் பெற்றோரை அழைத்து வாருங்கள்” என்றாள் தலைமை ஆசிரியை.
“வேண்டாம் மேடம். எனக்கு இவர்களின் குடும்ப பின்னணி தெரியும். நான் பேசுகிறேன்.” என்றாள் ராதா டீச்சர்.
மரியாவும் வேல் விழியும் வகுப்புக்குப் போனதும் ஆளாளுக்கு என்னென்னவோ பேசினார்கள். ஒன்றும் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. சமீபத்தில் திரைக்கு வந்த படங்களையும் செய்திகளில் வந்தவற்றையும் உதாரணங்களாகச் சொல்லிப் பயமுறுத்தினார்கள். ஏதேனும் நடந்து விட்டால் நாம் தானே பதில் சொல்ல வேண்டும் என்று பயப்படவும் செய்தார்கள். இன்றைக்கு இருக்கும் பள்ளிக்கூடங்கள் ஆசிரிய மாணவ உறவுகளில் எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?.

3

“போன வருஷம் ஒம்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு மாதவிடாய் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போய் டீச்சர் அசிங்கமா ஏதேதோ சொல்லித் தராங்கன்னு பிரச்சினை ஆயிருச்சு” என்று வருத்தப்பட்டாள் ரேகா.
“பாம்புன்னு நெனச்சு தாண்டவும் முடியாது. பழுதுன்னு நெனச்சு பிடிக்கவும் முடியாது. ரெண்டுங்கெட்டான் வயசு” என்றாள் ராதா.
“இவுங்களை மட்டும் சொல்லி பிரயோஜனமில்ல. பெத்தவங்களே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க” என்றாள் ரேகா.
ராதா டீச்சர் வகுப்பிற்கு வந்த போது இருவரும் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. முகம் கன்றிக் கறுத்துப் போயிருந்தது. கன்னங்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததோட அவர்கள் இருவரும் நின்றிருந்த கோலம் பாவமாக இருந்தது.
“டீச்சர், நாங்க ஒருத்தர் மேலே ஒருத்தர் பாசமா இருப்பது தப்பா? எப்போதுமே பிரியாமல் இருக்கணும்னு நெனச்சது
தப்பா? இப்படி அசிங்கமா பேசறாங்களே. செத்துப்போகணும் போல் இருக்கு டீச்சர்”
அழுத இருவரையும் பரிவுடன் பார்த்த ராதா “ரெண்டு பேரும் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று மெல்லச் சொன்னாள்.
“இந்த வயதில் பையன்களுடன் ஒருவித உணர்வு ஏற்படுவது எவ்வளவு இயற்கையோ அதே போல நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் நம் தோழிகளிடமும் உயிரைப் போல ஒரு அன்னியோனியம் உண்டாவது மிகவும் இயல்பானது தான். உங்கள் உணர்வுகளில் திருட்டுத்தனம் இல்லாதவரை உங்கள் எண்ணங்களில் நேர்மை இருக்கும் வரை அது அசிங்கம் கிடையாது. ஆனால் பார்ப்பவர்களின் பார்வைக்கு நம் நடவடிக்கைகள் தப்பாக இருக்கக் கூடாது என்றால் அதற்கு ஏற்றார் போல நாம தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்.”
“அதற்காக இப்படி எல்லாமா பேசுவார்கள்? செத்துப் போயிடலாம்னு இருக்கு”என்றனர் இருவரும் ஒரு சேர. இன்றைய காலகட்டம் அப்படி. செத்துப் போயிட்டால் பிரச்சினை சரியாகி விடுமா? இந்த உலகம் பெரியது. நீங்கள் சந்திக்கப் போகும் பிரச்சினைகளும் அநேகம். எதிர்கொண்டு வாழனும். கோழையாக இருக்க கூடாது”
“அப்படின்னா நாங்க பிரெண்ட்ஸ் ஆ இருக்கக் கூடாதா?”
“யார் சொன்னா? யார் கண்ணையும் உறுத்தாதது போல இருக்க வேண்டும். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?”
“புரிகிறது டீச்சர். நாங்கள் எங்கே தப்பு செய்தோம் என்று நன்றாகவே புரிகிறது.”
“நல்லது. நீங்கள் நன்றாகப் படியுங்கள். பெரிய அந்தஸ்தில் வாருங்கள். அன்று உலகம் உங்களை முன்னுதாரணமாகக் காட்டும். இருந்தால் இவர்களைப் போல பிரெண்ட்ஸ் ஆ இருக்கணும்னு”.என்று ராதா சொல்லி ரேகா உடனிருந்து இவர்கள் படித்து வேலைக்குப் போய் என்று காலம் பறந்தது. இதோ இன்று மரியாவின்திருமணத்திற்கு ராதா காரை விட்டு இறங்கினாள்.
எதிர் கொண்டு வரவேற்றாள் வேல் விழி.”டீச்சர் இவர் என் கணவர். ஏங்க இவங்க தான் எங்கள் ராதா டீச்சர்” என்று அறிமுகப்படுத்தினாள்.
“தெரியுமே. நீயும் மரியாவும் இவர்களைப் பற்றி எவ்வளவு சொல்லியிருக்கீங்க”என்றான் அவள் கணவன் மிகுந்த மரியாதையுடன்.
“ஆமாங்க. இன்றைக்கு நான் ஒரு எஞ்சினியர். மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர். மரியா டென்டிஸ்ட்.
அரசு மருத்துவமனையில் பல்டாக்டராக இருக்கிறாள். இவர்கள் இல்லையென்றால் இது நடந்திருக்காது”

4

“அவ்வளவு ஏன் ரெண்டு பேரும் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டோம்” வேல் விழியை அணைத்துக் கொண்டு ராதா டீச்சரை கும்பிட்டாள் மரியா.
ஒரு பிரச்சினையை மட்டுமே பார்க்காமல் அதற்கான தீர்வை மாற்றி யோசித்த ராதா டீச்சர் போன்ற சுக்கான்களால்
எத்தனை மாணவர்களின் வாழ்க்கை என்னும் கப்பல்கள் நல்ல முன்னேற்றமான பாதையில் திசை திருப்பப்பட்டிருக்கிறது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை தானே.!

ஆசிரியர் குறிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 என “PRESIDENT OF INDIA” SHRI PIRANAAB MUKARJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம்.
அநேக சிறுகதைகள் வல்லினம் திண்ணை பதாகை குட் புக் My vikatan ல்Amazon kindle Pustaka கல்கி இ மேகசின் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கலைமகள் லேடிஸ் ஸ்பெஷல் இதழ்களில் என் சிறுகதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
அது போக பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டுள்ளது.

தீபன் ராஜ் தே /வேகம் – விருட்சம் நாளிதழ்

10 Comments on “G. சியாமளா கோபு /சில சுக்கான்களும் பல கப்பல்களும்”

  1. மிகவும் அருமையான, தற்காலத்திற்குத் தேவையான படைப்பு இது அம்மா. நம் ஒவ்வொருவருக்குமே சுக்கானாக யாயாவது இருப்பார்கள் வாழ்வில். இங்கு ராதா டீச்சர் தேவையான நேரத்தில் தக்க அறிவுரையை உரைத்தினால் இரு இளம் குருத்துகள் வாழ்வில் உயர்ந்தது. மற்றவர்கள் முன்பு நாம் நமது நடவடிக்கைகளில் கவனம் வைப்பது அவசியம் என்றது மிகவும் அருமை. ஏனென்றால் சமுதாயத்தின் பார்வையில் தானே நாம் வளர வேண்டியிருக்கிறது 👌👌👌👌👌

  2. மிகவும் சிறந்த கதை, நல்ல கருத்து, இந்த கால கட்டத்திற்கு பொருத்தமாக இருக்கிறது

Comments are closed.