தீபன் ராஜ் தே /வேகம்

புயல் வேகத்தில் ஒரு சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.
அது மட்டுமல்ல அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.
“எப்படி போறான் பாரு, இவனுங்க எல்லாம் எங்க உருப்பட போறானுங்க” என மாரிமுத்து, வாகனத்திலிருந்த தன் மனைவி இராக்கம்மாவிடம் சொல்லிக் கொண்டுவந்தார்.
அதற்கு ராக்கம்மா “உங்க மைனர் மட்டும் மெதுவாவ போவான். அவனும் இவனுங்கள மாதிரி தான், ஏதோபிளேன் ஓட்றதா நெனப்பு”என்று முகத்தினை சுளித்தாள்.
“எங்கம்மா… இந்த காலத்துப் பிள்ளைங்க கிட்ட சொன்னா புரியவா போகுது” என்று கவலையுடன் கூறினார் மாரிமுத்து.
இவ்வாறு பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் போய்க் கொண்டிருந்த வழியில் ஒரேகசகசாவெனச் சத்தம். அவர்கள் போய்க் கொண்டிருந்த அந்த ரோட்டின் ஒரு பகுதியில் ஒரு நூறு, இருநூறு பேர் கூடியிருந்திருப்பார்கள். அந்த கூட்டத்தை பார்த்து மாரிமுத்துவும் அவரது மனைவியும் குழம்பு போய் நின்றனர்.
“எதுக்குங்க அங்க அவ்வளவு கூட்டமா இருக்கு?” என ஆச்சரியமாக மாரிமுத்து விடம் கேட்டாள் ராக்கம்மாள்.
“எனக்கு மட்டும் என்ன தெரியும் நானும் உன்னோட தான் இருக்கேன்” என்று முகத்தினை சுளித்தார் மாரிமுத்து.
பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்து வெளிவந்த, ஒரு 30 வயது மதிக்கத்தக்க
ஆணிடம் விசாரித்தார் மாரிமுத்து “என்ன அண்ணே இங்க ஒரேகூட்டமா இருக்கு, ஏதாவது போராட்டம் கீராட்டம் நடக்குதா?”
அதற்கு அந்த ஆள் “ஏம்பா நீ வேற! ஏதோமூன்று பசங்க குடிச்சு புட்டு வண்டியை வேகமா ஓட்டிட்டு வந்திருப்பாங்க போல, அதான் போய் லாரியில் விட்டானுங்க இப்பதான் ஆம்புலன்ஸ்க்கும் போலீசுக்கும் போன் பண்ணி இருக்கோம் இன்னும் யாரையும் காணோம்”.
“கோட்டுக்கோடி, உங்க மைனர் கிட்டச் சொல்லி வைடி, வண்டிய ஒழுங்கா ஓட்டணும்னு… இல்லாட்டி அப்புறம் இப்படித்தான்…” என்று தன் மனைவியிடம் கூறினார் மாரிமுத்து.
இதைக் கேட்ட ராக்கம்மாள் சற்று நேரம் மௌனமாக இருந்தால் பின்னர் ” நீங்க வண்டியை எடுங்க போலாம்” என்று அவரின் பேச்சை திசைதிருப்பினாள்.
மாரிமுத்தும் அமைதியாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார் .இருவரும் எதுவும் பேசாமல் வண்டியில் அமர்ந்து கொண்டு, வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், ராக்கம்மாள் மன ஓட்டம் எல்லாம் இந்த ரோட்டில் நடந்த விபத்தின் மீதுதான் இருந்தது. தன்னைஅறியாமலேஅவளின் கண்களில் நீர் கசிந்து கொண்டிருந்தது.
எந்தப் பிள்ளையாக இருந்தால் என்ன, தாயின் மனம் கலங்க தானே செய்யும். அது போலத் தான் ராக்கம்மாவுக்கு “இந்த பையன் கிட்ட சொன்னா புரியவேமாட்டேங்குது. வண்டியை வேகமா ஓட்டாதா னா, நாம சொல்றதை எங்கிட்டு கேட்க போறேன்”என்னவெல்லாம் தன் மனதிற்குள் புலம்பிக்கொண்டே வந்த ராக்கம்மாள்.
“அடியே, இறங்குடி வீடு வந்துருச்சு. பகல் கனவு எதாவது காண்ரியாடி”என்று கிண்டல் செய்தார் மாரிமுத்து.
பின்னர், ராக்கம்மா தன் முகத்தை எதுவும் தெரியாதது போல் வைத்துக்கொண்டு, வண்டியைவிட்டு கீழே இறங்கி வேக வேகமாக வீட்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
மாதவி அவர்களின் இளைய மகள்.கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதம் படிக்கிறாள். அன்று, சனிக்கிழமையென்பதால் வீட்டிலிருந்தாள் மாதவி மிகவும் அமைதியானவள். தோற்றத்தாலும் உள்ளத்தாலும் அழகானவளும் கூட, பெற்றோரின் பேச்சிற்கு மறுபேச்சு பேசமாட்டாள்.
அந்த வாசலில் நின்றிருந்த மாதவியை பார்த்து “உள்ளே போய் ரெண்டு செம்பு தண்ணி எடுத்துட்டு வாடி” என்று கூறினாள்.
மாதவி, உடனே வீட்டுக்குள் சென்று செம்பில் தண்ணீர் தழும்பத் தழும்ப எடுத்து வந்தாள். அவளின் இரு கைகளிலும் ஒவ்வொரு செம்புகளை கொண்டு வந்தாள். அதில் ஒன்றைமாரிமுத்துவிடமும் மற்றொன்று ராக்கம்மாளிடமும் தந்தாள்.
ராக்கம்மாள் அந்த செம்பைவாங்கி, அதில் உள்ள தண்ணீரில் பாதியைகீழேஊற்றிவிட்டு மீதியை குடித்தாள்.
தண்ணீர் முழுவதையும் குடித்துவிட்டு, செம்பை மாதவியிடம் கொடுத்தாள். ராக்கம்மா பின்னர் அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தாள். அவள் யாரையோ தேடுவது போல் தெரிகிறது. ஏதோ, ஒரு கவலையுடன் அவள் மனம் மௌனமாகத் துவங்கியது. தண்ணீர் இப்பொழுதுதான் குடித்து இருந்தாலும், மீண்டும் அவள் தொண்டைவறண்டது.
மாரிமுத்து அந்த செம்பிலிருந்த தண்ணீரில், பாதியை தன் பின்னங்கால்களில் ஊற்றி செருப்புகளை நனைத்தார். கால்களின் ஈரம் சொட்ட சொட்ட செருப்பை கழட்டி, படிகளில் ஏறி உள்ளேசென்றார். பின்னர், மீதமுள்ள தண்ணீரைமடக் மடக்கென குடித்தார்.
இந்தப் பக்கம் பார்த்தாள் ராக்கம்மாள் ஏதோ, ஒரு குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. “உங்க அண்ணன் காரன் எங்கடி” என்று மாதவி இடம் கேட்டால் ராக்கம்மாள்.
“காலைல போனவன் இன்னும் வீட்டுப் பக்கம் வரல”என்று பதிலளித்தாள் மாதவி.
ராக்கம்மாள் பதட்டமாக ஆரம்பித்தால்.அவளுக்கு திடீரென வேர்வை ஊற்ற ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியாத ஒரு பிரச்சனைக்குள் மாட்டியது போல் இருந்தது அவளுக்கு. உடனே அவள் மாதவியிடம் “அவனுக்கு போன் பண்ணி எங்க இருக்கான்னு கேளு டி” என்று பதட்டத்துடன் கூறினாள்.
அப்பொழுது ஒரு இருசக்கர வாகனம் வருவது போல் சத்தம் கேட்டது. ராக்கம்மாள் உடனேவெளியேஓடி வந்து பார்த்தாள். அப்பொழுது தான், அவளுக்கு மூச்சே வந்தது போல இருந்தது.
அந்த இரு சக்கர வாகனத்திலிருந்து, ஒருவன் கீழே இறங்கி வீட்டிற்குள் சென்றான். அப்பொழுது ராக்கம்மாள் “எங்கடா போய் ஊரைசுத்திட்டு வர, நீ எல்லாம் வண்டியை வேகமா ஓட்டாத னா கேக்குறியா….. இன்னைக்கு அப்படித்தான், ஒரு மூணு பேரு லாரில போய் விட்டுட்டானுங்க”என்றாள். அதற்கு, அந்த பையன் சிரித்துக்கொண்டே கூறினான் “அம்மா அவங்க இப்பாதான் பைக் ஓட்டி பழகி இருப்பாங்கமா”
“உனக்கு சொன்னா புரியாதுடா ஏன்னா உன்னோட வயசு அப்படி” என்று கோபமாக கூறினார் மாரிமுத்து.
மாரிமுத்து சொல்வதைப் போல, அந்த வயதில் யார் எதைச்சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். முகிலனும் அதுபோல்தான்,
பெற்றோர் சொன்ன சொல்லை காதில் வாங்கிக் கொள்ளாமல் “அம்மா பசிக்கிறது மா வந்து சாப்பாடு போடுங்க” என்று அவர்களை திசைதிருப்பினான்.
அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை.
முகிலன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு சத்தம்.அதைக்கேட்டதும் அவன் முழித்துப் பார்த்தான். பார்த்தால் அந்த சத்தம் அவனுடைய அலைபேசியில் இருந்து தான் வந்தது. அரைத்தூக்கத்தில் அதை எடுத்து அவன் காதில் வைத்தான்.
“மச்சான் வாடா வெளிய போகலாம்” என்று அந்த அலைபேசியிலிருந்து ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டவுடன் அவன் விறுவிறு என்று எழுந்து, ஒரு சிகப்பு நிற சட்டையையடுத்து மாட்டினார். தனது கால் சட்டைகூட மாட்டாமல் கட்டிய கைலியுடன் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். வண்டியின் வேகம் நூரைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
இவ்வளவு வேகமாக எங்கு தான் போகிறான், எனப் பார்த்தால் வண்டி அரசு மதுபான கடையில் போய் நின்றது.
அந்த இரு சக்கர வாகனத்திலிருந்து அவன் கீழே இறங்கினான். அப்பொழுது, அவனின் அலைபேசி மீண்டும் சத்தம் போட ஆரம்பித்தது.
அவனது அலைபேசியைமேல்பாக்கெட்டில் வைக்கவில்லை. மாறாக, அவன் கட்டியிருந்த கைலியின் உள்ளே அணிந்திருந்த அரைக்கால் சட்டையில் வைத்திருந்தான். அவனது அலைபேசியை எடுப்பதற்குள் அந்த சத்தம் நின்று விட்டது.
அவன், அந்த அலைபேசியை, கடவு சொல் (password) பயன்படுத்தி, திறந்ததும் மீண்டும் அவனுக்கு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பாளர் எண் புதிதாக இருந்தது.
“யாருடா இவன், நல்ல நேரத்தில் கால் பண்ணிக் கடுப்பு ஏத்துறான்”என்று கூறிக் கொண்டே அந்த அழைப்புக்குப் பதில் அளிக்க, பச்சைபொத்தானை அழுத்தினான்.
அலைபேசியில் பேசிய குரல் ஏதோபதட்டத்தில் இருப்பது போல் தெரிந்தது “ஹலோ… தம்பி, காபி கலரு எக்ஸெல் வண்டியில் வந்தவங்க யாருன்னு உனக்கு தெரியுமாப்பா” என்றது அந்த குறள்.
“யோ… யார் நீ மாத்தி கீத்தி கூப்பிட்டியா? எக்ஸ்செல்ன்ற, காப்பின்றி” என விளையாட்டுத்தனமாகப் பேசினால் முகிலன்.
“இல்லப்பா, இங்க ரெண்டு பேரு உசுரு சாகப் பிழைக்க கடக்குது. அவரோடா பாக்கெட்ல உன்னோட கார்டு இருந்துச்சு பா…அதான், உனக்கு கூப்டேன். அவங்க யாருன்னு உனக்குத் தெரியாத பா? ” என தன் மனதில் உள்ள துக்கத்தைவெளிப்படுத்த முயற்சித்தது அந்த குரல்.
“என்ன சொல்றீங்க… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… அவங்களுக்கு எத்தனைவயசு இருக்கும்” என்று விளையாட்டு புத்தியை மாற்றிவிட்டு, அந்த குரலுக்குக் கவனம் தர ஆரம்பித்தான் முகிலன்.
“தம்பி வண்டியை லாரியில் விட்டுட்டாங்கப்பா… ஒரு ஆம்பளையாளும் ஒரு பொம்பளையும் இப்ப சாகப் பொழக்க கிடக்கிறாங்க, ஆள பாத்தா கொஞ்சம் வயசானவங்க மாதிரி தான் தெரியுது.ஆ… இருங்க தம்பி
வண்டி நம்பர் கூட டிஎன் 57 ஏ யூ 782″ என்றது அந்த குரல்.
இதைக்கேட்டதும் முகிலனுக்குக் கண்கள் கலங்கத் தொடங்கியது அவன் கைகால்கள் மரத்துப் போகத் துவங்கியது
“அம்மா……. அப்பா……” என்ன சத்தமாகக் கத்தினான் அவன். “அண்ணா அண்ணா எந்த இடம்னு மட்டும் சொல்லுங்க” என்று தனது இருசக்கர வாகனத்தின் ஏறி அமர்ந்தான். அவன் கண்களில் தண்ணீர் வடிந்து வடிந்து சிவக்க ஆரம்பித்தது.
அப்பொழுது அலைபேசியில் பேசிய அந்த குரல் கூறியது “பழனி பைபாஸ் தான் பா… அவங்க சரியா தான் போய்கிட்டு இருந்தாங்கப்பா… ஆவங்களுக்குப் பின்னாடி, சிகப்பு கலர் சட்ட போட்டுட்டு ஓட்டி வந்த அந்த நாயி தான்பா இதுக்கெல்லாம் காரணம். அந்தப் பையன் வேகமா இவங்க மேல மோதிர மாதிரி வந்து, இவகள முந்திட்டு போயிட்டா… ஆனா, அந்த பையனாலா இவங்க ரெண்டு பேரும் லாரியில் விட்டுட்டாங்க. அவன்லா நான் நல்லாவேஇருக்க மாட்டான்” என்று என் ஆதங்கத்தை கொட்டியது அந்த குரல்.
இதைக் கேட்டதும் முகிலனுக்கு ஒரு நிமிடம் உலகம் சுற்றுவதே நின்று விட்டது போல் இருந்தது. மேலும், அவன் கண்களில் தண்ணீர் தாரை தாரையாகக் கொட்ட “ஓ…………….” என்று கதறி அழ ஆரம்பித்தான்.

ஆசிரியர் குறிப்பு

ஓவியத்தில் மட்டும் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பின் தமிழின் மீது ஆர்வம். . தமிழில் கவிதை எழுத ஆரம்பித்தார். மாவட்ட அளவில் கவிதையில் முதலிடம் பெற்றார். இவ்வாறாக கவிதை, ஓவியம், பேச்சு என்று அவருடைய பயணம் சென்று கொண்டிருந்தது.
கல்லூரி படிக்கும் போதுதான் கதை எழுத ஆரம்பித்தார். எழுதிய முதல் கதை *வேகம்.

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /மாற்றியவர் யாரோ? – விருட்சம் நாளிதழ்

4 Comments on “தீபன் ராஜ் தே /வேகம்”

  1. எழுத்தின் வேகம் கீழே வைக்க விடாமல் கதையை முழுமையாக படிக்க தூண்டியது.
    கதையின் ஊடே சொல்லப்பட்ட கருத்து மனதிற்குள் ஆழமாக பதிகிறது .
    இளம் கதாசிரியருக்கு வாழ்த்துகள்

    நல்ல முயற்சி.

    1. சிறுகதை மிகவும் அருமையாக இருந்தது சிறுகதையினுடைய தொடர்ச்சி தமிழ் உச்சரிப்பு இது எல்லாம் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது ஆனால் கதாபாத்திரத்தின் உரையாடல் அவமரியாதையாக அமைந்திருந்தது போல் தோன்றுகிறது, நல்ல முயற்சி நல்ல சிறுகதை

  2. மது குடித்து வண்டியை ஓட்டினால் என்ன நடக்கும் என்பதை தெளிவாக இந்த கதையை கூறியுள்ளது… இது இளம் வயதினர் படிப்பதற்கு தேவையான கதையே… கதையின் ஓட்டம் மிகவும் நன்றாக உள்ளது…. மேலும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்…. 🎊

Comments are closed.