அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025

“மேரி ஒரு நிமிடம் நில்லு”, அண்ணன் அலெக்ஸ் தங்கையை அழைத்தான்.கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவள், அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.
“அந்த ஹரியோட ரொம்பப் பழகறீயாமே? அதெல்லாம் வேண்டாம்.நல்லதுக்கில்லே.அவன் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் இல்லை.”
“அதை நீ_ ரொம்ப ரொம்ப நல்லவன் சொல்றியா? நீயே ஒரு குடிகாரன்” உடைந்த ஆங்கிலத்தில் கூச்சலாய் பதில் தந்தாள் மேரி.
“ஏய் மேரி! அவன் உன் அண்ணன்.அவனை insult பண்ணாதே”_ அம்மா மார்கரெட் கிரீச்சிட்டாள்.
“அவனை முதலில் உனக்கும் ,அப்பாவுக்கும் மரியாதை தரச் சொல்லு.உங்க ரெண்டு பேர் முன்னாடியே வீட்டிலேயே தம் அடிக்கிறான்.ஏதாவது மதிக்கிறானா?”_ இது மேரி.
“சரி சரி இரண்டு பேரும் சண்டை போட்டுக்காமல் வேலையைப் பாருங்கள்”_ அப்போதுதான் எழுந்து வந்த அப்பா ஆண்ட்ரூ அந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தின் தலைவர் , சண்டை உச்சமடையாமல் தடுத்தார்.
கல்லூரிக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்த மேரி, சே ஏன்தான் இந்தக் குடும்பத்தில் பிறந்தோமோ? என்று நினைத்துக் கொண்டாள்.எதிர்வீட்டு ஹரியின் குடும்பத்தில் இது போன்ற கூச்சலோ, கூக்குரலோ , சண்டையோ வருவது அரிது.எப்போதும் ஹரியின் அப்பா, ரெங்கநாதன், நெற்றியில் திருமண் இட்டு, பூஜை செய்யும் போது சொல்லும் ஸ்லோகம் ஒலிக்கும்.ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிப் புகை சூழலைத் தெய்வீகமாக்கும்.
ஹரியின் அம்மா, லஷ்மி சாட்சாத் மகாலக்ஷ்மி போலவே , காலையிலேயே குளித்து , பட்டுச் சேலை அணிந்து,தலையிலே பூச்சரம் சூடி கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றப் பொலிவுடன் காட்சி தருவாள்.இவள் அம்மா மாதிரி மேக்ஸி அணிந்து, சமைத்து முடித்து,குழந்தைகள் பள்ளி சென்றதும் பல் தேய்க்கும் பழக்கம் கொண்டவளில்லை.
வெளியில்தான் வெள்ளைத் தோலுடன் ,சிவந்த உதடுடன், நுனி நாக்கில் ஆங்கிலம் !
வீட்டில் எப்போதும் சண்டை ! அப்பாவுக்கு வருமானம் போதாது.இதில் குடி வேறு.நிறையக் குழந்தைகள் ! அம்மா பாவம் ! அண்ணனோ படிப்பை அரைகுறையாக முடித்து விட்டு,ஊர் சுற்றி வருகிறான்.
எதிர் வீட்டின் செல்ல மகள் கோமளாவும்,அவள் அண்ணன் ஹரியும் இவள் கல்லூரியில் தான் படிக்கிறார்கள்.கோமளா இவள் வகுப்புத் தோழி.அந்தப் பழக்கத்தில் ஹரியிடமும் பேசுவாள் மேரி.
நல்ல பொன் கோதுமை நிறம்.நடிகர் அரவிந்த் சாமியை நினைவுபடுத்தும் தோற்றப் பொலிவுடன் சாயலில் அம்மா லஷ்மியைக் கொண்டதால்,பேரழகனாக விளங்கினான் ஹரி.தன் வீட்டின் இட நெருக்கடி, சதா சண்டையுடனான சூழல், வறுமை இதையெல்லாம் வெறுத்த மேரிக்குப் பண்பாடு நிறைந்த எதிர் வீடு சொர்க்கமாகத் தெரிந்தது.லஷ்மி , துளசி மாடத்தைச் சுற்றும் போதெல்லாம், தானும் புடவை கட்டி, அவளுடன் சுற்றுவதாக மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தாள் மேரி.ஆம். அந்தக் குடும்பத்தின் மீதிருந்த ஈர்ப்பு, ஹரியிடம் காதலாக மாறி நின்றது.
தன் விருப்பத்தை எல்லாம் ஒரு தாளில் எழுதி, ஹரியிடம் சேர்த்து விட்டாள். வண்ண வண்ணமாய்க் கனவுகளில் மிதந்தாள். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வருவது போல் இவள் ஒன்பது கஜப் புடவை உடுத்தி , அவன் பஞ்சகச்சம் கட்டி பூணூல் தவழும் மார்புடன் சுந்தரி நீயும் சுந்தரன் யானும் என்று பாடுவது போலக் கற்பனை செய்தாள் . இவள் அதில் வரும் ஊர்வசி போல தலை நிறைய மலர் சூடி , நகைகள் அணிந்து , அலங்காரம் செய்து, நீண்ட பின்னலுடன் அவன் கரம் பற்றுவதாய் நினைத்துக் கொண்டாள் . வெட்கத்தில் முகம் அந்தி வானமாய்க் குங்குமமாய்ச் சிவந்து போனது.மீண்டும் அதையே நினைத்து மகிழ்ந்தாள் . அவனின் வேட்டியுடன் இவள் புடவை முடிச்சிடப் படுமா ? ஐயோ ! நாத்தனார் கோமளா தாலி முடிவாளோ அவர்கள் வழக்கப்படி?
அவனோடு ஊஞ்சலாடி , அவனோடு கரம் இணைத்து ! ஐயோ ! நினைக்கவே இனிப்பாக உள்ளதே ! நடந்தால் ? மனம் மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டது.அவனுக்கு என்னைப் பிடிக்குமா ? என் கடிதம் கண்டு என்ன நினைத்திருப்பான் ? அவன் தன் குறும்பு கொப்புளிக்கும் விழிகளில் இவளை விழுங்குவது போல் பார்க்கிறானே ! காதல் இல்லாமலா இருக்கும் ? பலவாறு எண்ணமிட்டது மனம்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள் . என்ன குறை!
வாளிப்பான உடல். பளிங்கு முகம். ரோஜா வண்ண இதழ்கள் ! கரு வண்டாக ஒளிரும் திராட்சைப் பழ விழிகள்!
எந்த வாலிபனும் ஒரு முறைக்கு இரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம் ! அடிக்கடி கண்ணாடி பார்த்து , தனக்குள் சிரிக்கும் இவளை அம்மா அதிசயமாகப் பார்த்தாள் .
இவளை அதிகம் சோதிக்காமல் அவன் பதில் உடனே வந்தது.
மறுநாள் மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வரச்சொல்லி ஹரி இவளுக்குக் கடிதம் எழுதி இவளுடைய மற்றொரு தோழியிடம் கொடுத்து அனுப்பியிருந்தான்.
வீட்டில் அம்மா, அப்பா மற்றும் தங்கை எல்லோரும் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தனர்.
தனிமையில், கோயிலாக விளங்கும் தனது வீட்டில் தன் காதலை அவளிடம் சொல்வானோ ஹரி? தனக்குள் பலவிதமான கற்பனைகளுடன் அந்த நாளை இனிமையாகத் தொடங்கினாள் மேரி.
அன்று மாலை அவன் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஆறு மணியளவில் அவன் வீட்டுக்கு வந்தாள்.வீட்டில் யாருமில்லை.பக்கவாட்டு அறையில் ஹரி சத்தமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.
அலை பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
” டேய் ஏழு மணிக்கு வந்திருடா.சரக்கையெல்லாம் ரெடியா வாங்கி வெச்சிருக்கேன்.எங்க வீட்டுக் கிழங்கள் , என் தொல்லை பிடிச்ச தங்கச்சி யாருமில்லை வீட்டில்.
இன்னொரு சர்ப்பிரைஸ்.ஃபிரஷ்ஷா ஒரு வெள்ளைக்கிளி (அச்சிலேற்ற முடியாத வர்ணனை) என் கைக்குத் தானா வந்து சேர்ந்துடுச்சு.கூப்பிட்ட உடனே வர்ரேன்னுட்டா! கம்.கம்.லெட் அஸ் என்ஜாய் “, ஓங்கரித்துப் பேசிய அவன் முன்னே மேசையில் மது வகையறாக்கள்.கையில் புகையும் சிகரெட். ” நீயும் ஒரு மனுஷனா? உன்னை நல்லவன்னு நினைக்கிற அம்மா அப்பாவை ஏமாத்தி, உன்னை உண்மையாகக் காதலிச்ச என்னையும் எவ்வளவு சீப்பா நினைச்சிட்ட.சீ”, அழுகையுடன் கூறி விட்டு, விடுவிடுவென்று கால் போன போக்கில் நடந்து போய் அருகிலிலுள்ள பூங்காவிற்குச் சென்று வெகு நேரம் அழுது விட்டுத் தன் வீட்டுக்கு வந்தாள் வெளியே மழை பெய்ய ஆரம்பிக்கவே.
தன்னை அவன் எவ்வளவு மலிவாக எடை போட்டு விட்டான்.அவள் உடை அணிவதில் நாகரிகம் இருக்கலாம். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசலாம் . ஆனால் அவள் மனம் விழைவது அவன் குடும்பப் பண்பாட்டை அல்லவா? குத்து விளக்காய் அவன் வீட்டில் ஒளிர ஆசைப் பட்டவள் அவள். ஆனால் அவனோ அவளை ஒரு கேவலமான சிவப்பு விளக்குப் பெண்ணாக நினைத்து விட்டானோ ? மனம் சமாதானம் அடைய மறுத்தது .
தன்னைப் பற்றி அவன் நண்பனிடம் கூறிய மலிவான வர்ணனை நினைவுக்கு வந்தது.அவளால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. சாக்கடை புழுவாகத் தன்னை நினைத்து விட்டான்.
எவ்வளவு நல்ல பெற்றோர் ?
அவர்கள் இந்தப்பிள்ளையைப் பற்றிய உண்மையை அறிந்தால் என்ன ஆகும்?கோமளாவுக்கு அவளது அண்ணனைப் பற்றித் தெரியுமா ?
இருக்காது. அவன் மேல் உயர்ந்த அபிப்ராயம் வைத்தவள் அவள்!
அவன் அம்மா?
லக்ஷ்மிகரமாக விளங்கும் அந்த மகராசி வயிற்றில் பிறந்த இந்த நாய் மது, மாது என அலைகிறது !
அவர்களையும் ஏமாற்றி , உண்மைக்காதல் என்று நம்பி வந்த தன்னையும் ஏமாற்றி ! சே.
இரண்டு நாள் முன்பு அண்ணன் அலெக்ஸ் அவனைப் பற்றிக் கூறியதும், தான் அவனை ஏசியதும் நினைவுக்கு வந்து மீண்டும் ஏனோ கண்ணீர் வந்தது.அந்தச் சிறிய படுக்கையறையில் வேலைக்குப் போய் விட்டு வந்து அப்பா அலுப்புடன் படித்திருக்க தம்பி தங்கைகள், எல்லோரும் ஒட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தனர்.
அம்மா மட்டும்,”எங்கே போனாய்? உன்னைத் தேடி அலெக்ஸ் மழையில் பாவம் வெளியே போயிருக்கான்.வா வந்து சாப்பிடு”, என்றாள்.
அண்ணா பாவம் ! இந்தப் பாவியைக் காதலனாக எண்ணினேன். இழிவு செய்து விட்டான். எனக்காக அண்ணன் கொட்டும் மழையில் எங்கு சென்றுள்ளானோ ? விழிகளில் வெள்ளம் பெருகி வழிந்தது.
சாப்பிடப் பிடிக்காமல் அந்த ஓட்டைக் கட்டிலில் உறங்கும் அவர்களை ஓட்டை ஓட்டின் வழியே வரும் மழைச் சாரலிலிருந்து பாதுகாக்க, குடையைப் பிடித்தவாறே
“ஐ வோன்ட் மிஸ் யூ கைஸ்”, என்று சொல்லி நிற்கும் அவளை வித்தியாசமாகப் பார்த்தாள் அம்மா.
ஆசிரியர் குறிப்பு :
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி சென்னையில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். .சிறு வயதிலிருந்தே கதை, கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதி வருகிறார். இதுவரை பதின்மூன்று அச்சேறிய நூல்களையும், பதினெட்டு மின்நூல் களையும் எழுதி வெளியிட்டுருகிறார் .திருநங்கையர்/ திருநம்பியர் ஆவண மையம் நடத்திய சு.சமுத்திரம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவர் சிறுகதை முதல் பரிசு பெற்றுள்ளது . உத்திராடம் சிறுகதைப் போட்டியில் ஞானசரஸ்வதி விருதும் பெற்றுள்ளார். இலக்கியப் பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். .

அருமையான கதை. 👏👏👏
கதை மிகவும் அருமை எதார்த்தமான நடை அப்படியே வீட்டில் நடப்பதை பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வு அது ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்