ஜி பி சதுர்புஜன்/“தீர்வு”

விளக்கை அணைத்துவிட்டு வனஜாவைத் தாண்டி மெத்தையில் அந்த பக்கம் போய்ப் படுத்துக் கொண்டேன். மணி பத்து ஆனால், எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் டாண் என்று படுக்கைக்குச் சென்றாய் விடும். எங்களுடைய ரிடையர்மென்ட்டுக்கு முன்னாலேயே என்றோ தொடங்கிவிட்ட தூக்க அட்டவணை….. இப்போதோ கேட்கவே வேண்டாம், எந்த ஆத்திர அவசரமும் இல்லை; அதனால் சொல்லி வைத்தாற்போல் தொடர்கிறது…..
கொஞ்ச நேரம் இப்படி அப்படி புரண்டு படுத்தோம். படுப்பது நம் கையில்; தூக்கம் அப்படி இல்லையே !
“ தூங்கிட்டியா வனஜா ?”
“இல்லை….. அவ்வளவு ஈசியா தூக்கம் வந்திடுமா எனக்கு…..?.ஒண்ணரை மணி நேரமாகும்….. நீங்கதான் படுத்த உடனே கொறட்டை விடுவீங்க……எட்டு ஊருக்குக் கேட்கும்….ஏன் தூக்கம் வரலியா இன்னிக்கு உங்களுக்கு ?”
“ஆமாம்…. வரலைதான். ரொம்ப யோசிச்சுக்கிட்டிருந்தேன்….. நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு வருஷம் போனா எழுபது வயதாயிடும்…… ஏற்கனவே எனக்கு எல்லாம் ஓவர்டைமா தெரியுது…. நம்ப ரெண்டு பேரும் ரிடையர் ஆகி, ராகவ் ஆஸ்திரேலியாவுக்கு சங்கீதாவுடன் மைகிரேட் பண்ணி போனபோது ,நமக்கு வயசு அறுபத்தி ஒண்ணு. அதிலிருந்தே ஓல்டான ஃபீலிங் வந்தாச்சு….. இன்னும் ஹெல்த்தியாதான் இருக்கோம் – கைவலியும், கால்வலியும் இருந்தாலும். ஆனா….. இப்ப எழுபது வரப்போகுதுன்னு நினைச்சாலே கொஞ்சம் கிலியாத்தான் இருக்கு….”
“சரி அதுக்கு இப்ப என்ன செய்யறது ? எனக்கும் ஆயாசமாத்தான் வருது….. உங்களை விட எனக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாவே இருக்கு…”
ஆமாம், ஆமாம்… தெரியும், தெரியும். நம்மளோட சர்க்கிள்ல யார் சடனா போனாலும், உடனே உன் மூஞ்சி போற போக்கை நான் பார்த்துக் கிட்டுத்தானே இருக்கேன்…. ஏதோ…. உனக்கே முடிவு வந்துட்ட மாதிரி….”
“கிண்டலா இருக்கா உங்களுக்கு ? எனக்கு நெஜமாவே பயமாயிருக்கு….. என்னிக்கு இருந்தாலும் நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் முதல்ல போகப் போறோம் – அப்படித்தானே ? சினிமாவுலதான் கே ஆர் விஜயா முத்துராமன் மேலயும், சிவாஜி மேலேயே சரோஜாதேவியும் உடனே விழுந்து சாவாங்க”
நீ முதல்ல போயிட்டேன்னா…. என்னோட லைஃப்ல வேற எந்த சேஞ்சும் இருக்காது…. அஃப் கோர்ஸ், உன்னை நிச்சயம் மிஸ் பண்ணுவேன். கஷ்டமாத்தான் இருக்கும்…. ஆனா, லைஃப் ஹேஸ் டு கோ ஆன் ! ஆனா, இதே வெஸ்ட் மாம்பலம் ஃப்ளாட்டில, இதே மாதிரி கன்டின்யூ பண்ணுவேன்…. இவ்வளவு நாளாகியும், சமையல் எல்லாம் உன்கிட்டேயிருந்து கத்துக்கல…. உன்னைச் சார்ந்தே இருந்துட்டேன்…. யாரோ மாமி, ஏதாவது ஒரு மெஸ்ஸுன்னு வாங்கி சாப்பிட்டுப்பேன். முடிஞ்சா ஏதாவது அப்பப்போ சமைச்சுப்பேன்…. பட் லைஃப் இங்கேயேதான்; அதுல நோ சேன்ஜ் !”
“நீங்க ஈசியா சொல்லிட்டீங்க…. நீங்க போயிட்டீங்கன்னா, என்னால இந்த வீட்டுல தனியா இருக்க முடியாதுப்பா…. தனியா இந்த இடத்துல எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் ! எனக்கு ரொம்ப பயமாவும் இருக்கு…. ஒன்னு ரெண்டு நாள் நீங்க வெளியூர் போயிருக்கச்சயே எனக்கு நைட் தனியா படுக்கும்போது ஒரே பயம்தான்…. தூக்கமே சுத்தமா வராது….. நீங்க போயிட்டா, சொல்லவே வேணாம்…!”
“சரி, சரி ! நீ இந்த மாதிரி எத்தனையோ தடவை என்கிட்ட சொல்லிட்டே ! என்ன பேசினாலும் கடைசியில நாம இங்கதான் வந்து முடிக்கிறோம்…!. டிரை டு ஸ்லீப் ! யோசிப்போம் என்ன செய்யறதுன்னு !”
எங்களுடைய சாவுப் பேச்சு இதோடு முடிந்ததாகத்தான் ஞாபகம்…. அப்புறம் வனஜா சொல்வது போல் பேய்க் குறட்டை விட்டுத் தூங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.
அடுத்த சில நாட்களில் என் எண்ணமெல்லாம் இந்த நினைவுகளை சுற்றியே வட்டமிட்டது. என்னுடைய காலத்துக்குப் பிறகு வனஜா இந்த ஃப்ளாட்டில் தனியாளாகத் திண்டாடக் கூடாதே என்ற கவலையே என்னை வாட்டியது. ஒவ்வொரு பருவத்திலும் மனிதனுக்கு ஒரு பெரும் கவலையோ, தேவையோ, ஆசையோ மலைபோல் திரண்டு எழுந்து விடுகிறது. தீராத சிந்தனை ஒரு புதிய முடிவுக்கு இட்டுச்சென்று ஏதாவது ஒரு செயலில் இறங்க வைக்கிறது.
இப்போதும் அப்படித்தான். அடுத்த சில நாட்களிலேயே ரிடையர்மென்ட் ஹோம்களுக்கு ஒவ்வொன்றாக நேரில் பார்க்கக் கிளம்பி விட்டோம். என்னதான் டிவி விளம்பரங்களில் அட்ராக்டிவ் ஆக ஆயிரம் சொன்னாலும், நேரில் போய்ப் பார்த்தால்தான் அதனுடைய நிறை குறைகளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது. இது தவிர, இது ஒரு பர்சனல் டெசிஷன் வேறு. ஒருவருக்கு சரி என்று தோன்றுவது, எல்லோருக்கும் சரியாக இருக்க வேண்டியது இல்லை. நமக்கு சரியாக வருமா என்பதை நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே கோவையில் உள்ள பிரபலமான ரிடையர்மென்ட் ஹோம்ஸ் ஒன்றிரண்டு பற்றி வேறு தெரிந்தவர்களைப் பார்க்கப் போனபோது ஒரு ஐடியா கிடைத்திருந்தது. சென்னை பக்கத்திலேயே இருப்பதால், மகாபலிபுரம் அருகே உள்ள ரிடையர்மென்ட் ஹோம்ஸ் வரை போய் வந்தோம். அங்கே என்னுடைய மாமா பெண் சமீபத்தில் குடியேறி இருந்ததால் அவளுடைய கருத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. எல்லாம் வசதியாக இருந்தது அங்கே. சுவிம்மிங் பூல் என்ன, ஜிம் என்ன, மெடிகல் ஹெல்ப் என்ன என்று எந்த குறையுமில்லை. சாப்பாடும் நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும், அந்தச் சூழலில் தனிமையை சற்று கூடுதலாக உணர முடிந்தது. அது மனதில் குத்திக் கொண்டே இருந்தது.
நண்பன் ஹரிஹரனை சந்தித்தபோது, அவன் “கும்பகோணம் போ, அங்கே ஒரு நல்ல ரிடையர்மென்ட் ஹோம் இருக்கிறது, அதையும் போய்ப் பார் !” என்றான். இந்த இடத்தைப் பற்றி ஏற்கனவே பலரும் நல்ல அபிப்ராயங்களை சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. சரி என்று வனஜாவோடு கிளம்பி கும்பகோணத்தில் உள்ள “சில்வர் இயர்ஸ்” ரிடையர்மென்ட் ஹோம்சிற்கு போய் சேர்ந்தோம். அங்கே அவர்களுடைய குடியிருப்புக்கு உள்ளேயே ஒரு நல்ல ஹோட்டல் வைத்திருந்தார்கள். அறைகள் நல்ல வசதியுடன் அமைந்திருந்தன. இரண்டு நாள் அங்கேயே தங்கியிருந்து அனைத்தையும் நேரடியாக அனுபவித்து புரிந்து கொண்டோம்.
அங்கே இருந்தவர்களைப் பேட்டி கண்டபோது, ஒருவர் விடாமல் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தது கண்கூடாகத் தெரிந்தது.
“சார்….. நீங்களே சாப்பாடெல்லாம் சாப்டீங்களே… எப்படி இருந்தது ? வீட்ல கூட இப்படி வேளா வேளைக்கு ருசியா சாப்பாடு கிடைக்காது சார் !”
“சரி வீட்டிலேயே இருந்தாலும், யாருக்கு சார் நம்மளை கவனிக்க முடியுது ? நமக்கும் வயசாறது – உடம்பு முடியல ! முன்ன மாதிரி இல்லையே !”
“சார் ! இங்க இருக்கிறவங்களோட பசங்க எல்லாருமே அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போய் செட்டில் ஆகிட்டாங்க….. எல்லாரும் அங்கேயும் போயிட்டு போயிட்டு வந்தவங்கதான். ஆனா, ஒரு ஸ்டேஜ்ல, இப்படி எங்கேயாவது செட்டிலானாத்தான் சரியா வரும். அதுக்கு இந்த இடம் பெஸ்ட் சார் !”
“இந்த கேம்பஸ்ல ரெண்டு கோவில் இருக்கு. பக்கத்துல ரெண்டு மைல் தூரத்துக்குள்ள எத்தனையோ பெரிய பெரிய கோவில்கள்….. வேணும்னா போயிட்டு வரலாம். இந்த வயசுல நமக்கு வேற என்ன சார் வேணும் ?”
“முக்கியமா பேச்சுத் துணைக்கு நாமெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் இருக்கோம். சிட்டில தனியா உட்கார்ந்துக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கிற துக்கு, இது எவ்வளவோ பெட்டர் சார் ! ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் இங்கே இத்தனை பேர் சேர்ந்து இருக்கோம் !”
வனஜாவைப் பார்த்தேன். அவள் முகம் மலர்ந்திருந்தது. அங்கிருந்த மாமிகளிடம் அவர்களுடைய புடவைகளைப்பற்றி குஷியாக பேச ஆரம்பித்திருந்தாள். பயம் எல்லாம் பறந்து போய் புதிய நம்பிக்கை படர்ந்திருந்தது.
ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.
*

2 Comments on “ஜி பி சதுர்புஜன்/“தீர்வு””

  1. சமீப காலமாக அய்யர் முதியோர் மன நிலையில் இருக்கிறார். மாற்றி யோசிக்கலாம்.
    சிறகு இரவி

Comments are closed.