
170. மஜீத்
நிழலோடு வருதல்
அதுவரும்
எல்லோருக்கும் வரும்
அதிசுகத்தோடு
எரிவேதனையோடு
ஆத்மாவில் உள்ளிருந்தும்
அதுவரும்
தாயின் கருப்பையிலிருந்தும்
துப்பாக்கியின்
குழாயிலிருந்தும்
நண்பனின் சிரிப்பிலிருந்தும்
அதுவரும்
இயற்கையின் ஏக்கத்தோடு
பெருமிடியின் சினத்தோடு
புயலின் பெருமூச்சோடு
மேகத்தின் கண்ணீரோடு
சிற்றருவியின் ஓசையோடு
வைகறையின் பிறப்போடு
கடலலையின் அழுகையோடும்
அதுவரும்
எனது கடைசி நிழலையும்
பறித்துப் போக
இன்னமும் வருமது
மூங்கில் காட்டின் ராகத்தோடும்
சிட்டுக்குருவியின்
பாடலோடும்
இரவின் மௌனத்தோடும்
நிலவின் அழகோடும்
என்னிடம் வரவேண்டுமது
கடைசியாக
எனது கடைசி நிழலையும்
பறித்துப் போக வரட்டும்
அது .
வாழ்வின் மீதான எளிய பாடல்கள் – மஜீத் – பக்.54 – விலை : ₹ 25. விடியல் பதிப்பகம்.
