கிரிஜா ராகவன்/அப்பா இறந்து ஆறாவது வருடம்

விரைந்து ஓடும் ரயில் பயணத்தில்
பின்னோக்கி விரையும் காட்சிகள் போல்
அப்பாவின் நினைவும் வேகம் அடங்கி
குமுறல் குறைந்து அமைதியாய் நிற்கிறது

அப்பாவைக் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாது
அப்பா சொல்லி விட்டால் அது அரசு ஆணை
அப்பா கிட்ட சொல்லிடுவேன் என்னும் அஸ்திரம்
எப்போது பாயுமோ என்ற பயத்திலே வாழ்க்கை

ஒழுக்கம் அவருக்கு உயிரினும் மேல்
அதுதான் என்றும் எங்கள் பாடம்
நேர்மையும் தூய்மையும் இரு கண் பார்வை
எங்கள் கண்களும் அப்படியே பார்த்தன

அன்னையும் பிதாவும் அவருக்கு தெய்வம்
கடவுள் போல அவரும் அன்னையும்
உழைப்பே என்றும் அப்பாவின் கொள்கை
உழைப்பால் உயர்ந்து இன்று செழிக்கிறோம்

அன்பை சொல்லத் தெரியாத பலாப் பழம்
முட்களை மட்டுமே அதிகம் பார்த்தோம்
பழங்களை அதிகம் தந்து சென்றதால்
இனிப்பை இன்று வாழ்வில் பார்க்கிறோம்

இரும்புப் பிடியாய் கையைப் பிடித்தபடி
கண்ணால் கெஞ்சி விடைபெற்ற அந்த நாள்
கண்முன் நிற்கக் காத்திருக்கிறேன் அப்பா
அங்கே வந்து அந்தக் கையைப் பிடிக்க

2 Comments on “கிரிஜா ராகவன்/அப்பா இறந்து ஆறாவது வருடம்”

Comments are closed.