
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 9
மதுரையைச் சேர்ந்த ராம சுப்புக்கு தான தர்மத்தில் மிகுந்தளவு ஈடுபாடு உண்டு!
ஆனால் அவருக்கு பெரியளவு வசதிகள் இல்லை. இருந்தாலும் ஆதரவற்ற
அனாதை முதியவர்கள் பத்துப் பேர்களை வைத்து, அவர்களுக்காக ஒரு சிறிய
ஆசிரமத்தை நடத்தி வந்தார்.
வரவர விஷம் போல் ஏறும் விலைவாசி ஏற்றத்தால், ராம சுப்பு அந்த
விடுதியை நடத்த மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார்!
தன்னை நம்பியிருக்கும் அந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு தனக்கு ஒரளவு
நட மாட்டம் இருக்கும் பொழுதே, தொடர்ந்து அவர்களை காப்பாற்ற ஒரு சரியான
ஏற்பாடு செய்து கொடுத்து விட வேண்டுமென்று ஆசைப் பட்டு, அப்படி தனக்கு
உதவி செய்யக் கூடியவர் தமிழ் நாட்டில் யார் இருக்கிறார் என்று அலசிக்
கொண்டிருந்தார்.
வாழ் நாள் முழுவதும் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருந்த கோவை
தொழிலதிபர்களில் கோபால்சாமி நாயுடு அவர்கள், கொஞ்சம் வித்தியாசமானவர்.
கோவை அவிநாசி சாலையில் சின்னியம் பாளையத்திலிருந்து லக்ஷ்மி மில்
சிக்னல் வரை உள்ள தொழிற்சாலைகளில் பாதிக்கு மேல் கோவை தொழிலதிபர்
கோபால்சாமி நாயுடுவுக்குச் சொந்தம்!
அறுபத்தி ஐந்து வயசுக்குப் பிறகு வெறும் சொத்து, பணத்தால் மட்டும் ஒரு
மனிதனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படாது என்று புரிந்து கொண்டு, தான
தர்ம காரியங்களில் அவர் ஈடுபட்டு வந்தார். நியாயமான கோரிக்கைகளோடு யார்
போனாலும் அவர் தாராளமாக உதவுவதாகச் சொன்னார்கள்!
அவர் ஒரு முறை கோவிலுக்குப் போயிருந்த பொழுது, படிக்க வேண்டிய சின்ன
வயசில் ஆதரவற்ற அனாதைச் சிறுவன் ஒருவன் கையேந்தி, பிச்சை எடுத்துக்
கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்து போனார்
அப்படிப் பட்ட அனாதைச் சிறுவர்களின் எதிர் காலத்திற்கு வழி காட்ட வேண்டும்
என்று நினைத்து, அதற்காக அந்தக் குழந்தைகள் தங்கிப் படிக்க ஒரு பெரிய
தங்கும் விடுதியோடு ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தி, கோவை மாவட்டதில்
இருந்த சுமார் நூறு ஆதரவற்ற அனாதைச் சிறுவர்களைக் கொண்டு வந்து அங்கு
சேர்த்து, அவர்களுக்கு நல்ல உணவு சாப்பிட கொடுத்து, தினசரி பள்ளிக்குச்
செல்ல ஏற்பாடு செய்து விட்டார்!
இதை எல்லாம் தெரிந்து கொண்ட ராமசுப்பு அவர் தனக்கு உதவி செய்யலாம்
என்ற நம்பிக்கையோடு திரு கோபால்சாமி நாயுடு அவர்களுக்கு இப்படி ஒரு
கடிதம் எழுதினார்.
மதுரை
10-3-2025
பெரும் மதிப்பிற்குரிய கொடை வள்ளல் திரு கோபால்சாமி நாயுடு அவர்களுக்கு
மதுரை ராமசுப்பு எழுதிக் கொண்ட மடல்!
நான் தங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். பல பணக்காரர்கள்
தாங்கள் சாகும் வரை பணத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கும் பொழுது, நீங்கள்
நாற்பது ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை பல தான தர்ம
காரியங்களுக்கு செலவு செய்து, நிறைய புண்ணியத்தை தேடிக்
கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்!
கோவையில் படிக்க வேண்டிய வயசில் பிச்சை எடுக்கும் ஆதரவற்ற
அனாதைச் சிறுவர்களை தங்க வசதியுடன் சாப்பிட வசதியும் செய்து கொடுத்து,
படிக்க வைக்கும் தங்கள் அரிய பணியைக் கேள்விப் பட்டு மிகவும்
மகிழ்ச்சியடைந்தேன்.
எனக்கும் உங்களைப் போல சேவை செய்ய வேண்டும் என்று தான் ஆசை!
ஆனால் எனக்கு அவ்வளவு பொருளாதார வசதி இல்லை! எனக்கு இருக்கும்
வசதியிலேயே வாழ்க்கையில் தங்களுக்கு வேண்டியவர்களாலேயே முடமாக்கி
தெருவில் அனாதை குழந்தைகளாக விட்டு விட்ட ஆதரவற்ற பத்து
குழந்தைகளை ஆதரித்து வருகிறேன்.
பொருளாதார வசதிகள் இல்லாத நான் முதுமையில் தொடர்ந்து அவர்களை
வைத்து ஆதரவு தருவது மிக கஷ்டம் என்று உணருகிறேன்!
நீங்கள் அவர்களை உங்கள் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டால் அது எனக்கு
பேருதவியாக இருக்கும்! இது பற்றி தங்கள் அன்பான கருத்து அறிய ஆசை!
தங்கள் உண்மையுள்ள
ராம சுப்பு
கடிதம் போன மறு நாளே தொலைபேசியில ராமசுப்புவை அழைத்தார் கோபால்
சாமி நாயுடு!
“ராம சுப்பு! உங்கள் கடிதம் கிடைத்தது. நாளையே அந்த அனாதைகளை ஒரு
வேனில் அழைத்துக் கொண்டு, கோவைக்கு வாருங்கள்! மற்ற விபரங்களை நேரில்
பேசிக் கொள்ளலாம்! ..” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
அதனால் ராமசுப்புக்கு அவரிடம் சொல்ல வேண்டிய பல விஷயங்களை
அவரால் சொல்ல முடியாமல் போய் விட்டது!
சரி, ஆண்டவன் விட்ட வழி என்று மறு நாள் அதிகாலையிலேயே ஒரு வேனில்
அந்த பத்து முதியவர்களையும் அழைத்துக் கொண்டு கோவைக்குப் புறப்பட்டுப்
போனார். கோவையில் இருக்கும் கோபால்சாமியின் அனாதை சிறுவர்
ஆசிரமத்திற்கு முன் வேனைக் கொண்டு போய் நிறுத்தினார்.
வேன் சத்தம் கேட்டு விடுதியில் இருந்து வெளியில் வந்த கோபால்சாமி
நாயுடு வேனில் இருந்து வயசான பத்து முதியவர்கள் தட்டுத் தடுமாறி
இறங்குவதை பார்த்து திடுக்கிட்டுப் போனார்!
“என்ன ராம சுப்பு! தங்கள் கடிதத்தில் ஆதரவற்ற பத்து அனாதை குழந்தைகள்
இருப்பதாகத்தானே சொன்னீர்கள்!. ஆனால் இப்பொழுது வயசான பத்து
முதியவர்களை அல்லவா இங்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கிறீங்க?…” என்று
கேட்டார்!
“ஆம் ஐயா! நான் விபரம் சொல்வதற்குள் நீங்க போனை வைத்து விட்டீர்கள்!..”
. “ அப்படியா! சரி ராம சுப்பு எதுவாக இருந்தாலும் ஆபிஸ் ரூமில் போய் பேசிக்
கொள்ளலாம் வாங்க!…” என்று ராம சுப்புவிடம் சொல்லி விட்டு, அந்த விடுதி
மேனேஜரிடம் அந்த முதியவர்களை கேண்டீனுக்கு அழைத்து போய் நல்ல
சிற்றுண்டி கொடுத்து அவர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யுங்கள்!.” என்று
உத்திரவு போட்டு விட்டு ராம சுப்புவை உள்ளே ஆபிஸ் ரூமிற்கு அழைத்துப்
போய் உட்கார வைத்தார்!
“ராம சுப்பு!… நீங்க என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீங்க?….” என்று
கோபால்சாமி நாயுடு கேட்டார்.
“ஐயா!… இங்கு விடுதியில் வேன் நுழைந்த பொழுதே நான் கவனித்தேன்…பல
இடங்களில் ஸ்கூல் விட்டு திரும்பிய சிறுவர்கள் ஆனந்தமாக எந்த கவலையும்
இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள் எல்லாம் கை, கால் மனசு எல்லாம் நல்ல நிலையில் இருக்கும்
சிறுவர்கள்!
நான் அழைத்து வந்த பத்து முதியவர்கள் எல்லோருமே அவர்கள் வேலை
செய்த தொழிற்சாலை முதலாளிகளாலும், அவர்கள் பெற்று வளர்த்து உருவாக்கிய
குழந்தைகளாலும் கை, கால், மனசு எல்லாம் முடமாக்கப் பட்டு அனாதைகளாக
தெருவில் விடப்பட்டவர்கள்!
முதுமையில் குழந்தைகளாக மாறிய இவர்கள் ஒவ்வொருவரும் தன் வாழ்
நாள் முழுவதும் யாருக்காவது பாடு பட்டார்களோ அவர்களால் புறக்கணிப்பு
செய்யப்பட்டு, தங்களால் இனி உழைத்துச் சாப்பிடமுடியாத முதுமையில்
புத்தி பேதலித்து தெருவில் நின்ற இவர்கள் என்னைப் பொறுத்த வரை
ஆதரவற்ற முடமான குழந்தைகள் தான்!
இவர்களைப் போன்று முதுமைப் பருவத்தில் தங்கள் சொந்த குழந்தைகளாலேயே
புறக்கணிக்கப் படுகிறவர்களுக்கு தங்களை போன்ற தயாள சிந்தை உள்ளவர்கள்
ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான், அவர்களை இன்று
கோவைக்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.
இது போன்ற என் கருத்துகளை சொல்லும் முன்பே,நீங்கள் அந்த ஆதரவற்ற
அனாதைக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு நேரில் வரச் சொல்லி விட்டு,
போனை வைத்து விட்டீர்கள்! என்னால் அந்த விபரம் சொல்ல முடியாமல் போய்
விட்டது!
நானும் யோசித்து தான் அவர்களையும் இன்று என் கூட இங்கு அழைத்து
வந்தேன். அவர்களை தங்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா
விட்டால், அந்த முதியவர்களுக்கு ஒரு மாறுதல் கொடுக்க வேண்டி,
கோவையில் இருக்கும் மருதமலை, கோவை குற்றாலம் போன்ற இடங்களுக்கு
அழைத்துப் போய் சந்தோஷமாக காட்டி விட்டு மீண்டும் மதுரை திரும்பி
விடலாம் என்ற முடிவோடு தான் அவர்களையும் கையோடு அழைத்து வந்தேன்!”
என்றார்.
கோபால்சாமி நாயுடு வாய் விட்டுச் சிரித்தார்!
“ஆம், ராமசுப்பு! நீங்கள் சொல்வது சரி தான்! இவர்கள் எல்லோருமே முடமாக்கப்
பட்ட ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் தான்!
நம்ம சமுதாயத்தில் இப்படி பெற்ற குழந்தைகளால் கவனிக்கப் படாத
உழைத்து உருக் குலைந்து போன மனிதர்கள் முதுமையில் வேதனைப் படுவது
போன்ற பெரிய கொடுமை இந்த நாட்டில் வேறு எதுவும் இல்லை!
..இவர்களைப் போன்றவர்களைத்தான் நாம் முதலில் கவனித்து ஆதரவு
கொடுக்க வேண்டும்!
ஆதரவற்ற அனாதைச் சிறுவர்களுக்கு ஒரு விடுதியை ஏற்படுத்தியதைப்
போல், வாழ் நாள் எல்லாம் உழைத்து முதிய பருவத்தில் யாருக்காக
உழைத்தார்களோ அவர்களால் புறக்கணிக்கப் பட்டு தனித்து விடப் பட்ட இந்த
முதியவர்களுக்காக ஒரு பெரிய காப்பகம் ஏற்படுத்தி செயல் படுத்தலாம் என்று
முடிவு செய்து விட்டேன்.
நீங்களே இங்கு வந்து அதற்கு மேனேஜராக இருந்து கவனித்துக் கொண்டால்
உங்க உழைப்பால் அது மிக சிறப்பாக செயல் படும் என்றும் நம்புகிறேன்.
நீங்கள் யோசித்து ஒரு முடிவு சொல்லுங்கள். அதற்காக நான் ஐந்து கோடி
ரூபாய் நிதி ஒதுக்கித் தருகிறேன்!.. அந்த நல்ல காரியத்தை வருகிற தமிழ்
புத்தாண்டிலேயே தொடங்கி விடலாம் என்றார் அந்த வள்ளல் கோபால்சாமி
நாயுடு!
இன்று கோவையில் பெற்ற குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்ட
முதியவர்களுக்காகவே சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற மாயமான் காப்பகம்
உருவானது இப்படித் தான்!
ஆசிரியர் குறிப்பு
85 வயசு அகவை முதிர்ந்த தமிழறிஞர்.
65 வருடங்களாக தமிழ் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்
அவர் எழுதிய10 புத்தகங்கள் சிறந்தவைகளாக பரிசு வாங்கியுள்ளன.

2 Comments on “துடுப்பதி ரகுநாதன்/மாயமான் காப்பகம்!”
Comments are closed.