
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10
எல்லாம் நல்லபடியா நடக்கும் , நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தங்கை
நிவேதிதா சொன்னது கேட்டு ரஞ்சனி மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.
நாளை காலை கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் போது
மனசெல்லாம் ஒரே தவிப்பு. தீர்ப்பு என்னவாகுமோ என்ற கவலை .
திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் . வாழ்வின் இறுதி வரை உடன் இருக்கும்
உறவு என்ற மனநிலையில் வாழும் சாதாரண குடும்பத்தில் பிறந்த ரஞ்சனிக்கு டைவர்ஸ்
கேஸுக்காக கோர்ட் போக வேண்டிய நிர்ப்பந்தம் .
விதி வலியது என்பது இது தானோ? வித்யா, ராகவன் தம்பதியினர் பெற்ற மூத்த
மகள் தான் ரஞ்சனி. இவளின் தங்கை நிவேதிதா என இரு பெண்கள்.
பெற்றோர் இருவரும் பள்ளி ஆசிரியர்கள் என்பதால் நல்ல விஷயங்களை மட்டும்
பேசி, நல்லதையே செய்து என பாசத்துடன் கண்டிப்பும் சேர்ந்த கலவையான பிரியம்
காட்டுவது வித்யா என்றால் அன்போடு வாழும் அறத்தையும் சேர்த்து ஊட்டி வளர்த்தவர்
ராகவன்.
வீட்டில் சமையல் வேலையில், பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சுத்தம் செய்ய என
அனைவரும் சேர்ந்து பங்கு போட்டுக் கொண்டு ஜாலியா அரட்டை அடித்தபடி முடித்து
விடுவார்கள். எந்த வேலையும் குறைவானது இல்லை. எதையும் யாரும் என்னால்
முடியாது, நான் எப்படி செய்வேன் என்று பயமோ, தயக்கமோ இல்லாமல் செய்யணும்னு
பெற்றோர் இருவரிடமும் சொல்வார்கள்.
இரு பெண்களின் ஸ்கூல், காலேஜ் நட்புக்கள் எல்லோரையும் அம்மாவும்
அப்பாவும் அறிவார்கள். எது நடந்தாலும் சிறிதும் பயமின்றி எங்களிடம் பகிரும்
தைரியம் இருக்கணும். அப்படி சொல்ல முடியாது என்றால் அதைச் செய்யவே கூடாது
என்ற உறுதி வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்ட கண்டிப்பான உத்தரவு.
அம்மா கூடாது என்றால் அப்பாவும் அப்படியே அதை ஏற்பார். கேட்டது எல்லாம்
கிடைக்காது என்றாலும் தேவையான எல்லாம் கிடைக்கும். ரஞ்சனியை ரஞ்சி என்றும்
நிவேதிதாவை நிவி என்றும் தான் அழைப்பார்கள் .
இப்படி செல்லச் சண்டைகளோடு சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைந்த அந்த
வீட்டில் ரஞ்சி பி.காம் படிக்க, நிவி டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு
படித்துக் கொண்டு இருந்தாள்.
பி.காம் முடிக்கும் முன்பே கம்பெனி செகரட்டரி பாடம் எடுத்து படித்ததால்
கேம்பஸில் வேலை கிடைத்தது. அங்கே தான் ரஞ்சியின் கணவன் பிரகாஷ் இருக்க
அவன் பிரிவில் தான் முதலில் சேர்ந்து வேலை கற்றாள். ஒரு தப்பான பார்வையோ
பேச்சோ இல்லை. வேலையைத் திறமையாக செய்தான். புரியும் படி அழகா சொல்லியும்
கொடுத்தான்.
ரஞ்சிக்கு அவன் மேல் ஒரு மரியாதையுடன் பார்க்கவும் ஆள் சும்மா ஹீரோ மாதிரி
தோற்றம் என்பதால் அந்த வயதிற்கே உரித்தான ஈடுபாடும் வந்தது. ஆனால் வெளியே
காட்டிக்கலை . ஆபீஸில் வேறு யாருடனும் இதைப் பற்றி பேச தைரியம் வரலை.
ஆறு மாதங்கள் சென்று அவளை வேறு செக்ஸன் போகச் சொல்ல பிரகாஷ்
பட்டென்று திருமண விருப்பத்தை சொன்னான். எங்க வீட்டில் வந்து பேசுங்க என்று
சொல்லி விட்டாள்.
அதிரடியாக மறுநாளே வீடு வந்தான். சிறிய வயதில் தந்தையை இழந்து தாயின்
ஆதரவில் வளர்ந்து படித்து வேலையில் சேர்ந்தது . அம்மாவும் சமீபத்தில் தவறி விட ,
ரஞ்சனியை மணம் செய்து தந்தால் கண் கலங்காமல் நல்லா பார்த்துக்குவேன் என்று
ஒளிக்காமல் உண்மை பேசினான்.
அவனின் மனம் திறந்த பேச்சும் கண்ணியமான நடவடிக்கைகளையும் பார்த்து
அப்பாவும் அம்மாவும் சம்மதிக்க கோலாகலமாக அவளின் திருமணம் நடந்தது. முதல்
இரண்டு மாதங்கள் திகட்டத் திகட்ட வாழ்க்கை இனித்தது .
மூன்றாம் மாதம் இவள் சம்பளத்தில் நிவி கேட்டாள் என்று சில புத்தகங்கள், டிரஸ்
எல்லாம் வாங்கிக் கொடுத்தாள். பிரகாஷ் சம்பளப் பணம் கேட்க உண்மையைச்
சொன்னா. பளீரென மின்னல் பறந்தது கண்ணில். விழுந்த அடியில் சுருண்டு விழுந்தாள்
பேச்சு மூச்சின்றி.
என் பெண்டாட்டி ஆன பிறகு நீ சார்ந்த எல்லாம் எனக்கு மட்டும் சொந்தம்.
ஒழுங்கா சம்பளக் கவரை முழுசா என்கிட்ட கொடுக்கணும். உனக்கு என்ன வேணுமோ
என்னைக் கேளு. நான் வாங்கித் தரேன். நானாக கூட்டிப் போகும்போது மட்டும் பிறந்த
வீடு போகலாம் . புரிந்து நடக்கலைன்னா இப்படி அடி தான் வாங்கணும்.
வாழ்க்கையில் முதன் முதலில் வாங்கிய அடியை அவளால் மறக்கவே முடியலை.
அதை பெற்றவர்களிடம் சொல்லி அவர்களின் மனசு கஷ்டப்படும் னு சொல்லாமல்
விட்டாள்.
எதுவுமே நடக்காதது போல் பிரகாஷ் இருக்க, ரஞ்சிக்கு சகஜமாக இருக்க
முடியலை. மெதுவாக ஒரு வாரம் கழித்து அவனிடம் நான் பணம் உங்களைக் கேட்காமல்
செலவு பண்ணினது பிடிக்கலைன்னா நீங்க அதை சொல்லாமல் ஏனிப்படி அடிக்கணும் ?
என்றாள்.
இப்படி என்னைக் கேள்வி கேட்டாலும் அடிப்பேன். என் முதல் மனைவி
இப்படித்தான் எதிர்த்துப் பேசி அடிச்சதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்டு படுத்த
படுக்கையா இருக்கான்னு மணவாழ்க்கைக்கு லாயக்கில்லை னு சொல்லி டைவர்ஸ்
வாங்கிட்டேன். ஆபீஸில் யாரோடும் எனக்கு நட்பு இல்லை. அதனால் யாருக்கும்
தெரியலை.
நீ வந்து சேர்ந்தப்போ பார்த்தா சாதுவா தெரிஞ்சே . அதனால் தான் சரியா திட்டம்
போட்டு நல்லவன் மாதிரி நடித்தேன். உன்னைக் கல்யாணம் பண்ண முடிவு செய்தேன்.
ஒழுங்கா என் பேச்சு கேட்டு அடங்கி இருக்கலைன்னா டைவர்ஸ் தான் என்றான்.
அந்த வார்த்தை ரஞ்சிக்கு அச்சமூட்ட அவள் பேசாமல் அடங்கிப் போனாள்.
ஆனால் மனசு சமாதானம் அடையலை. எப்படி இப்படி ஏமாந்து போனோம் . அப்பா
அம்மாவும் இவனின் பொய்யான பேச்சை உண்மையென நம்பி ஏமாந்து போனார்கள்.
இதை எப்படி பெற்றவர்களிடம் சொல்வது? ஒரே ஆபீஸ். அதனால் தெரியாமல்
வெளியே எங்கேயும் போக முடியாது. ஒரு வாரமா யோசிச்சு ஆபீஸில் இருந்து போனில்
பேசினால் கண்டு பிடித்து விடுவானா? ஆபீஸில் நுழைந்த உடன் போனை அவன்
எடுத்துப் போனான். மாலை வீடு வரும்போது கொடுத்தான்.
அடுத்த நாள் செக்சன் லேண்ட் லைன் போனில் இருந்து நிவியை அழைத்து நேரில்
பார்க்கணும். எப்படியாவது காலேஜில் பர்மிஷன் போட்டு வா என்றாள்.
ஏய் என்னாச்சு. நீ வா சொல்றேன்.
வந்தவளை முதலில் அவன் பார்த்து விட கூடவே இருந்தான் கிளம்பும் வரை.
எதுவுமே பேச முடியலை.
மறுநாள் அப்பா, அம்மா, நிவி என எல்லோரும் ரஞ்சனியைப் பார்க்க வீட்டுக்கு வந்து
விட்டார்கள். அவர்களைக் கண்ட நொடியில் சூரியனைக் கண்டதும் விலகி ஓடும்
பனித்துளி போல பயம் ஓடி விட ஓவென்று பெருங் குரலெடுத்து அழுதாள்.
மோசம் போயிட்டோம் . இவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து விவாகரத்து
ஆகி இருக்கு. அதைச் சொல்லாமல் மறைச்சு நம்மை ஏமாத்திட்டார் பா.
இங்கிருந்து என்னைக் கூட்டிட்டுப் போங்க. எதையும் கேள்வி கேட்கக் கூடாது
ன்னு கை நீட்டி அடிக்கிறார் பா , அடிமை மாதிரி நடத்தறார். போன் பேசக் கூட
விடலைப்பா. டைவர்ஸ் பண்ணுவேன்னு சொல்லி மிரட்டறார்.
என்ன மாப்பிள்ளை இது?
புருஷன் பொண்டாட்டி சண்டையில் நீங்க ஏன் குறுக்கே வரீங்க. எங்க அம்மா
ஆம்பிளைன்னா பொம்பிளையை அடக்கி வைக்கணும்னு சொல்லி வளர்த்தாங்க. எங்க
அப்பா அப்படித்தான் இருந்தார்.
அதைத் தான் நான் சொல்றேன். இவ எதிர்த்துப் பேசினா. அதான் அடிச்சேன் .
நல்லா அட்வைஸ் பண்ணிட்டுக் கிளம்புங்க.
ஏம்பா இப்படி அடாவடியா பேசறே. இது சரியில்லை. எங்க பெண்ணுக்கு
ஒண்ணுன்னா நாங்க வந்து பேசுவோம். அதை நீ தடுக்க முடியாது. குடும்பம் என்பது
யாரையும் யாரும் அடக்கி ஆள்வது இல்லை. அன்பால் இணைந்து, ஒருவர் மீது ஒருவர்
மரியாதையோடு, விட்டுக் கொடுத்து , மனம் ஒத்துக் கூடி மகிழ்ந்து குழந்தைகள் பெற்று
அதை சேர்ந்து வளர்த்து என இந்த உறவுச் சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கணும்.
நம் தேசத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் இந்தக் குடும்ப அமைப்பு தான். நம்மைப் பார்த்து
மற்ற நாட்டினர் வியந்து பாராட்டுவது இதைத்தான்.
இது புரியாமல் சொன்ன உன் வாக்குறுதியை காப்பாற்றாது மூன்றே மாதத்தில் நீயே
இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போறியே. இப்பவே உன் மேல் குடும்ப
வன்முறைன்னு கேஸ் போட முடியும். ஆனால் நீ திருந்த ஒரு வாய்ப்பு தரணும். உனக்கு
ஒரு மாதம் டைம் தரேன். நீ மாறினா என் பெண் இங்கே வருவா? இல்லைன்னா
குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.
இப்போ சட்டத்தில் குடும்ப வன்முறைக்கு என்ன தண்டனை தெரியுமா?
தெரியலைன்னா வக்கீல் கிட்ட கேளு . வா ரஞ்சி என மகளை வீட்டுக்கு அழைத்து
வந்தார்.
ஆனால் பிரகாஷ் மனம் மாறுவதாக இல்லை. அத்தோடு தவறாக வேறு அவளைப்
பற்றி ஆபீஸில் வதந்திகள் பரப்பினான். கோர்ட்டில் கவுன்சிலிங் நடந்த போதெல்லாம்
என் மனைவியை சேர்த்து வையுங்கள் , அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது
என்று கண் கலங்க கெஞ்சி நடித்தான். அந்த வழக்கில் தான் நாளை தீர்ப்பு வரப்
போகிறது என்று ரஞ்சிக்கு பயம்.
மறுநாள் காலை கோர்ட் வாசலில் வைத்தே பிரகாஷ் கேலியாக இவளிடம் ஜட்ஜ்
விவாகரத்து தர மாட்டார். உன்னை என்னோட சேர்ந்து வாழச் சொல்வாங்க . நீ அங்கே
வந்து என் கூட தான் வாழணும் . அப்போ இருக்குடி உனக்கு நான் தரப்போகும்
தண்டனை என்றான்.
ரஞ்சனியின் நல்ல நேரம் அப்போது தான் காரில் இருந்து இறங்கிய ஜட்ஜ் அவன்
பேசியதைக் கேட்டு விட்டார் . ஏண்டா நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களா,
பெண்கள் என்ன உங்க அடிமைகளா? என சத்தம் போட்டார்.
விவாகரத்து வழங்கி தீர்ப்பு கொடுத்தார். அம்மா அப்பா நிவி மூவரும்
மகிழ்ச்சியோடு ரஞ்சியை அணைத்துக் கொண்டனர்.
பிரகாஷுக்கு ஜெயில் தண்டனையும் அபராதம் கட்டவும் சொன்னார். அவன்
அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்ல,
ரஞ்சனிக்கு அப்பாடா விடுதலை விடுதலை என்று சத்தம் போட்டு பாட வேண்டும்
போல் இருந்தது .
ஆசிரியர் குறிப்பு
கரந்தை இந்து என்னும் பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் இந்துமதி நடராஜன். தஞ்சாவூரின் அருகே உள்ள கரந்தையில் பிறந்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்தவர். டெலிபோன் துறையில் பணியாற்றி 2020ல் விருப்ப ஓய்வு பெற்றவர். வயது 62.
இவரின் சிறுகதை “அக்காவின் எழுபதாம் கல்யாணம் ” அனிச்சம் இணைய இதழிலும் மற்றொரு கதை மலர்வனம் இணைய இதழிலும் வெளிவந்து இருக்கிறது.
பேக்கிடெர்ம் டேல்ஸ் மூலம் வெளியிட்ட சிறுவர்களுக்கான சிறுகதைகள் தசாவதாரம், பாகவதக் கதைகள், நாடோடிக் கதைகள் , காவிய மாந்தர்கள் என்ற நான்கு புத்தகங்களில் இவரின் சிறுகதைகள் இடம் பெற்றது .

கதை நன்றாக இருந்தது. சொல்லவேண்டியதை இயல்பாக சொல்லி இருக்கிறார். சின்ன விஷயம் தான். ஆனால் சொல்லியவிதம் சூப்பர். என் வாழ்த்துக்கள் 👍👍
கதை மிகவும் நன்றாக இருந்தது
ஆரம்பம் முதல் விறுவிறுப்பு குறையாமல் இருந்தது
வாழ்த்துக்கள்