குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை

அங்கே எனது பண்ணையில் நிகழ்ந்துவிட்ட துயர சம்பவத்திற்கு நானே முழுப் பொறுப்பாக இருந்தேன். அன்றாட தொழுவப் பணிகளின் மேலே மேலே கொட்டப்படும்
சாணம் எருவாக மக்குவதுபோல அத்துயரமும் மக்கி மண்ணோடும் காற்றோடும் ஒருநாள் கலந்துவிடும்தான். எனினும் எனது பண்ணைக்கு நான் வருகை புரிவது தினமும் அல்ல. ஆகையால் என்னை விடாமல் துரத்தும் துயர நினைவாக பண்ணை மாறி விடுவதை நான். விரும்பவில்லை. நான் இங்கு வருவது எனக்களிக்கப்படும் அலுவலக நிமித்த மரியாதை லட்ஜைகளிலிருந்து விடுபட்டு தூர விலகி வந்து பார்த்துக் கொண்டிருப்பதின் ஒருவகை ஆனந்தத் திற்காகவே. ஆடுகள், மாடுகள், நாய்கள், பூனைகள் வளர்த்தேன். சில தானாகவே வளர்ந்தன. இவைகளின் அருகில் இருப்பதே ஒருவகை அமைதி. மான்கூட வளர்க்கலாம் என நினைத்தேன். அது புதர் மறைவில் தோன்றி மறைவது தான் அழகு என விட்டுவிட்டேன்.
இன்னும் என்னிடம் வளரும் பிற பறவைகள் மிருகங்களின் பெயர்களைச் சொன்னால் எனக்கும் அவைகளுக்கும் தேவையற்ற தொல்லைகள் நீளும். பண்ணையைச் சுற்றி வேலியாக உயிர்க் கற்றாழையையும் மூங்கில் புதர்களையும் வேலியாக அடுக்காக அமைத்திருக்கிறேன். பாம்புகளுக்கு பெரும் அடைக்கலம் என்பதாலும் பண்ணையை அரவக்காடு என்றும் சிலர் ஐயா பண்ணையென்றும் அழைத்தனர்.
நான் புதுப் பணக்காரனோ மோஸ்தர்களை விரும்புகிறவனோ அல்ல. மிருகங்களின் பறவைகளின் அசைவிலும் இயல்பான குரலிலும் காலமெல்லாம் லயித்து வருபவன். மனிதர்களால் இனக் கலப்பிற்கு பலியாகிவிட்ட புஸ்ஸி நாய். அது ஒரு நாயே அல்ல. டாபர் மேன் அது ஒரு நாயுமல்ல. ஆடுமல்ல. மோஸ்தர் பிராணிகளுக்கும் வெள்ளை மயில்களுக்கும் அரவக்காட்டில் இடமில்லை. கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாட்டு நாய்களையும் பறத்தலில் விசையும் அழகும் மிகுந்த மணிப்புறாக்களையும் வளர்த்தேன். ராஜபாளையம் பொதுவாக காணக்கிடைப்பதால் என்னிடம் இல்லை. எனக்கு விருப்பமில்லையெனினும் பால் பொருட்களுக்காக மைசூர் மாடுகள் பெரும்பாலும் நிறைத்திருந்தன பண்ணையை. என்னிடம் வருகை தந்த நண்பனொருவன் ஜெர்ஸியோ, மைசூர் மாடுகளோ இதர வகையோ “அம்மா” என்று ஸ்ருதி சுத்தமாக கத்தாது. நாட்டு மாடு மட்டும்தான் அட்சரம் பிசகாமல் “அம்மா” என்று அழைக்கும் என்றான். நாட்டு மாடுகளே அற்று வரும் நிலையில் பல திசையில் தேடி, சொல்லி, கேட்டு, சினையாகத்தான் மங்காவை வாங்கி வந்தோம். அதன் திடத்திலும் குட்டையான அழகிய வனப்பிலும் என் ப்ரியத்தை வைத்தேன். அது கன்றை ஈன்றபோது இரண்ய நேரம். இருந்தாலும் கவலையில்லை. சற்றே தூர நகரிலிருந்து விரைந்து சென்று தாயையும் கன்றையும் கொஞ்சி மகிழ்ந்தேன். கொஞ்சமே பால் சுறப்பினும் கன்றுக்குப் போக மீதி சில பிள்ளைகளுக்கு மீறும். எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் இருப்பதைப் போல கன்றுக்கு டிங்கோ என பேர் சூட்டினோம். இங்கே நாய்களுக்கும் பெயருண்டு. அதில் கோம்பை இனத்தைச் சேர்ந்த பெட்டை நாய் ரம்போ வாளிப்பும் வசீகரமும் கொண்டவள். முற்கால கிரேக்க அழகிகளை நினைவு படுத்துபவள். அவள் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் சத்தியமாக அவளுடன்தான் வாழ்வேன் என ஒவ்வொரு ஆண்மகனும் அடம் பிடிப்பான். பிறந்து இங்கே வந்து ஒரு வருடம் கழித்து இப்போதவள் ருதுவாகியிருக்கிறாள். அரவக் காட்டிலிருந்து கிளம்புமுன் வேலையாளை அழைத்து ரம்போ ருதுவாகிவிட்டதை விளக்கி அவளின் ருதுவாசம் காற்றில் பரவி அண்டை அயலில் உள்ள நாய்களை உசுப்பிவிடும். ஜாக்கிரதையாக கண்காணிக்கச் சொல்லி சென்றேன்.
கோம்பை கிடாவை ஜோடி சேர்த்து காலை மொய்க்கும் வலிமையான குட்டிகளைப் பெற வேண்டும் என்பதன் விருப்பம். ஆனால் நடந்திருந்ததெல்லாம் வேறு. மங்கா மற்றும் டிங்கோவின் பொருட்டு காட்டிற்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்தேன். வேலைகள் முழுமையடைந்துவிட்ட ஒரு காலை வேளையில் மங்காவின் உணிகள் மேலிருந்த மாட்டு உணிகளை சிரத்தையுடன் பிடுங்கி பக்கத்தில் வைத்திருந்த சட்டி நெருப்பில் டப்பென்று அவை வெடித்து சாகும் சத்தத்தில் லயித்திருந்தேன். நாய்க்கோ, மாடுகளுக்கோ உணி பிடுங்கும் செயல் என்பது யாவரையும் ஆழ்ந்த மனோநிலைக்கும், அமைதிக்கும் அழைத்துச் செல்லக்கூடியது. என்னருகே தயங்கித் தயங்கி அவ்வேளையில் நின்றான் இந்தக் கிழவன். ஏதேனும் தவறிழைத்தால் மட்டுமே இவ்வாறு குழி எலியைப் போல பம்முவான். புருவத்தை உயர்த்தி சைகையிலேயே என்ன என வினவினேன்.
கேளுங்க, என்னையோர் குட்டை நாய் கடிச்சிடுச்சி. காயத்தப் பாருங்க இன்னும் மூடாம பச்சையா இருக்கு. மூனு நாளா பச்சிலை மருந்து சாப்பிடறேன். முதல்ல குட்டை நாய் வேலிக்கு வெளியே சுற்றி வந்துகொண்டிருந்துச்சி. நான் கவனிக்காதபோது ஓட்டையில பொறந்த நாய் வேலியில ஓட்டை போட்டுக்கிட்டு வேலிய ஒட்டி வட்டம் போட்டு சுத்திக்கிட்டு ஆங்காங்கே மூத்திரம் பெய்துகிட்டிருந்துச்சி. ” மெதுமெதுவா அது வட்டத்த சுருக்கும்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. கல்லாலும் கழியாலும் நையப் புடைச்சேன். உடனே வட்டத்த பெரிசாக்கிட்டே தூரப் போயிட்டது. நான் நம்ம ரம்போ மேல இருந்த நம்பிக்கையில வேலையாய் இருந்திட்டேன். ரம்போ என்னா உயரம் ஏணி போட்டாக்கூட குட்டை நாய்க்கு அது எட்டாது. ஆனா நாம் கொட்டி வைச்சிருக்கிற தேங்காய் பஞ்சை ரெண்டும் பயன்படுத்திகிட்டதுங்க. அதுங்க இடையில பிரிக்க பூந்த என்னை குட்டை நாய் கடிச்சிடுச்சி. நம்ம ரம்போ என்னைப் பார்த்து உருமிகிட்டே தான் இருந்திச்சி. நிசத்தில் அதுங்கள யாராலயும் பிரிக்க முடியும்ன்ற நம்பிக்கையே இல்ல. கடவுளே அதுங்கள பிரிக்க நெனச்சி தோத்துப் போன கோபத்தில் பினைஞ்ச கொண்டி களுக்கு இடையில் இடிய அனுப்பி இருந்தாக்கூட இடியே ஒடுங்கி வெட்கி கூனி குறுகிப் போயி பாழுங்காட்டில் செத்து விழுந்து கறுத்துப் போயிருக்கும். அந்த நாய் கடிச்சது இப்ப பெரிசா வலிக்கலய்யா, நம்ம ரம்போ அது உயரத்தை மடக்கி கொஞ்சம் கூட மான ஈனமில்லாம குட்டை நாய்கிட்ட பயிராயிடுச்சி. அத நெனச்சாதான் வலியா இருக்கு. என்னால எதுவும் பண்ண முடியலய்யா என்றான். நான் அவனை எச்சரித்திருந்தும் தெரு நாயிடம் கோட்டை விட்டு விட்டு, அவன் தப்பை ரம்போ மீது திருப்புகிறான் கிழவன். அதுவும் நேரம் பார்த்து இத்தனை நாள் கழித்து கூறுகிறான். அவன்மீது கோபப்படாமல்
இருப்பது. அவன் மகள் மீதுள்ள ஆசையினால் அல்ல; இப்போ திருக்கும் மனநிலையால்தான். இச்செய்தியால் மனநிலை குலையாமல் இருக்க மங்காவை நீவிக்கொண்டிருந்தேன். பின் நீண்டு வரும் குழாயின் வால்வுகளை திறந்து மங்காவை நன்றாக நீராட்டினேன். சூரிய ஒளியில் இமைப்பொழுது வண்ணமாக தெறிக்கும் நீர் தெறிப்பைச் சுற்றி டிங்கோ துள்ளிக்கொண்டிருந்தது. உணி பிடுங்குவதும், ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக்கொள்வதும் தான் இழந்த அன்பின் அடையாளமாகவும், உறக்கத்தின் திறவு கோலாகவும் இருக்கிறது. எனக்கொருமுறை குரங்குகளிடம் பேன் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற இரகசிய விருப்பமுண்டு. குரங்குகள் பேன் பார்க்கும் போது அசைந்து விட்டால் ஒருவகை ஆன்மீக அனுபூதி நிலை கலைந்த கோபத்தில் கடித்துவிடும் என அறிந்ததால் பயமுமுண்டு.
சில நாட்களிலேயே மங்காவுக்கு ஜன்னி வைத்து விட்ட தாகவும், மாடு மாடாக சென்று ஊசி போடும் கால்நடை வைத்தியன் ஊசிபோட்டும், பன்றி நெய் பத்தியம் கொடுத்தும் ஜன்னி அடங்காமல், டிங்கோ மங்கா மடியில் முட்டி பால் குடித்தபோது கீழே விழுந்து இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. எனக்கு வந்த கோபத்திலும் துக்கத்திலும் சீவிய மூங்கில் குச்சியால் ஆட்களை மங்காவுக்காகவும், ரம்போவின் நயமற்ற போக்கிற்காகவும் விளார் வி விளாராக அடித்தேன். என் கோபத்தை தணிப்பதற்காக ஆட்கள் வைத்தியனை வரவழைத்து நெடுநேரம் தண்ணீரில் நனைந்ததால்தான் மங்கா இறந்ததாக மரண சர்டிபிகேட் தர வைத்தனர். நிஜத்தில் சினம் தணிய பார்த்தால் மங்காவின் இறப்பிற்கு நான்தான் காரணமென்பதை மெதுவாக என் மனம் ஒப்புக் கொண்டது. ஜன்னியில் நாக்கு உள்ளிழுத்துக் கொண்டு மரணத்திற்கென ஒரு முகமற்ற சாம்பல்பூ கோனி திறந்த வாயில் பூத்திருந்தது. அப்பூ உதிராமல் பற்கள் தடுக்க மங்காவின் மரணம் திறந்த வாய்க்குள்ளேயே நிறைந்திருந்தது.
சிற்பங்களிலும் பெண்களிலும் ஆர்வம்கொண்ட உடன் வந்த நண்பன், நம்நாட்டு கோயில் சிற்பங்களில் காணக்கிடைக்கும் மாடுகளும் நந்திகளும் ஓங்கோல் மாடும் கச்சிதமும் வாத்ஸல்யமும் பொருந்திய நாட்டு மாடுகளே. இன்னும் காலங்கள் உருண்டு செல்ல இவைகளை கோவில் சிற்பங்களிலும் காணக் கிடைக்காததற்கான துர்குறியாகத்தான் இம்மரணம் தோன்றுகிறது. இருப்பினும் பின் வந்தவர்களான நாய்க்கர் சிற்பங்களில் இடம் பிடித்த பெருத்த மாடுகளான மைசூர் மாடுகள் உன்னிடம் இருந்தாலும் மங்காவிற்கு ஈடுஈணை ஏதுமில்லை. இருந்தாலும் பரவாயில்லை மங்கா மரித்தாலும் அது டிங்கோவை உன்னிடம் விட்டுச் சென்றிருக்கிறது. அது கலப்பில்லாத அற்புதப் படைப்பு. நண்பா மாண்டது ஏதுவும் இவ்வுலகில் மீண்டது இல்லை. ஆகவே இனி ஆகவேண்டியதை பார்ப்போம் என்றான்.
என் நண்பனின் இரங்கலுரையைவிட, பிறந்து சில தினங்களிலேயே தாயை இழந்த டிங்கோவின் நிலைதான் என்னை கவலையில் ஆழ்த்தியது. தாயை இழந்த துயர் அறியாமல் துள்ளிக்குதித்துக் கொண்டும் மங்காவை நக்கிக்கொண்டுமிருந்த டிங்கோ இல்லை யென்றால் நினைவுகள் எங்கே போய் மறைகிறதோ அங்கே போய் மங்காவின் அகால மரணமும் கரைந்துவிடும். ஆனால் டிங்கோ தன் இனத்தின் அடையாளமாக தானே இருப்பதுடன் கரைந்து விடாத வாழ்வின் துயர நீட்சியின் சாட்சியாகவும் இருக்கிறது. அதற்குள் மாடிறந்த வாசத்தை காற்றில் உணர்ந்ததா? தெரியவில்லை. கானான் தோட்டி தன் கூட்டாளிகளுடன் செத்த மாட்டைத் தூக்கிச் செல்ல வந்துவிட்டான். என் அனுமதியுடன். எனக்கு வேறொரு யோசனை இருந்தது. மங்காவின் வயிற்றைக் கிழித்து அழுகும் அதன் உடற்பாகங்களை கழித்துவிட்டு மங்காவை பாடம் செய்து வைத்து வைக்கோல் பசுவைக் காட்டியே டிங்கோவை வளர்த்துவிடலாம் என்பதே அது. தோட்டியைப் பார்த்து எதற்கு ஆட்களுடன் இங்கு வந்திருக்கிறாய் என்றேன். எல்லாமும் படிச்சி அறிஞ்ச உங்களுக்கு நாங்க எதுக்கு வந்திருக்கிறோம் இன்றது மட்டும் தெரியாதா என்றான். கோணிப் பைகளால் போர்த்தி வைத்திருந்த மங்காவைக் காட்டி அதை நான் யாருக்கும் தரப்போவதில்லை. அந்த உசனே கேட்டால் கூட எனக்கூறி என் யோசனையை அவர்களிடம் சொல்லி, நீயும் உன் ஆட்களும் மாட்டுப்பாடம் செய்து தாருங்கள் என்றேன். படிச்சப் புத்தி போற போக்கைப் பார் என்று அவன் எண்ணியிருப்பான். இருந்தும், கன்னுக்குட்டி படத்தைக் காட்டி தாயைக் கறக்கலாம், மாட்டுப் படத்தை வச்சி கன்றை வளர்க்க முடியாது. பசுவை ஏமாத்தலாம் கன்றை ஏமாத்த முடியாது. தாய்தான் பால் சுரக்கும், பொம்மை பால் கொடுக்காது என்றான். அவன் பேசியதை என் நண்பனும் ஆட்களும் ஆமோதித்தனர். அவன் மங்காவை தூக்கிச் செல்வதிலேயே குறியாக இருக்கிறான் என்றெண்ணி, தோட்டத்து மூலையிலேயே அதை புதைத்து அதன் மீதொரு மங்காவின் ஞாபகார்த்த மரமொன்று வளர்க்கப் போகிறேன். நீ உன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அதற்கொரு குழி வெட்டு என்று இடத்தைக் காட்டினேன். மாட்டுக்கு குழி வெட்ற தோட்டி இனிமே தான் பொறந்து வரனும், அதுவும் கடப்பாறை மம்முட்டியோடு. ஏன்னா மாட்டுக்கு குழி வெட்ன மம்முட்டி கடப்பாரைய தலைமுறை தலைமுறையா மனித சவத்துக்கு குழிவெட்ற நான் பார்த்ததில்லை. நீங்க மாட்ட எங்களுக்கு கொடுக்கலன்னா நீ செத்தா உனக்கும் குழிவெட்ட மாட்டேன் என்றான் கானான் தோட்டி. அவனது துடுக்கான பேச்சைக் கண்டிக்கும் விதமாக ஆட்கள் அவனை முறைத்தார்கள். அவன் பேச்சின் தாத்பர்யம் எனக்குப் பிடித்திருந்ததால், நான் செத்தால் எனக்கு நானே குழிவெட்டிக்கொள்கிறேன் நீ போ
என்றேன். செத்த மாட்டை வைத்துக்கொண்டு நாங்கள் ஈடுபட்டிருந்த சச்சரவினூடே கிழவன் டிங்கோவை ஜெர்ஸிகளிடமும் மைசூர் மாடுகளிடமும் பால் குடிக்க வைக்க முயற்சித்துக்கொண்டிருந்தான். மைசூரும் ஜெர்ஸிகளும் அதை அண்ட விடாமல் புஸ் புஸ் என கொம்பை ஆட்டி விரட்டிக்கொண்டிருந்தன. எந்த மாடும் டிங்கோவை அருகில் சேர்க்கவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என்னை இன்னும் கிளம்பாமல் கவனித்துக் கொண்டிருந்த கானான் தோட்டி என்னை தேற்றும்விதமாக செத்த மாட்ட பொதச்சி அதுக்கு மேல பூஞ்செடி நட்டுக்கோ இந்த கன்னுக்கு மட்டும் நான் வழி சொல்றேன். தாய் போன கன்று நம்மகிட்ட இருக்கு. கன்று செத்த தாய் எங்கேயாவது இருந்தா தேடி இதுகூட சேர்த்து விடு. இது பொழச்சிக்கும் என்றான். இந்த அருமையான யோசனையால் மனம் நெகிழ்ந்து ஒரு கணம் மங்காவை அவனிடம் கொடுத்து விடலாமா என்றுகூட எண்ணினேன். அவனுக்கு நான் பணிந்து விட்டதாக இவர்கள் முன் காட்டிக்கொள்ள விருப்பமின்றி, அவனுக்கும் கூட்டாளி களுக்கும் இறைச்சிக்கும் சாராயத்திற்கும் நிரம்ப பணம் கொடுத்து கன்றை இழந்த தாயைத் தேடிக்கொண்டு வருமாறு பணித்து அனுப்பினேன்.
பின்பு கிணற்றின் கிழக்கே பள்ளம் தோண்டி மங்காவைப் புதைத்த மேட்டில் பவளமல்லிச் செடியை நட்ட கையோடு ஆட்களிடம் கிராமங்களிலும் சந்தையிலும் தரகர்களிடமும் விசாரித்து கன்றிழந்த பசுவை என்ன விலை கொடுத்தேனும் கொண்டு வரும்படி ஏவிவிட்டு, கிழவனின் மகளிடம் பச்சை பில், புட்டி பால் கொடுத்து டிங்கோவை கவனமாக பார்த்துக்கொள்; உன் தகப்பன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என கூறிவிட்டு ரம்போவின் கர்ப்பத்திற்கு ஒரு வழிகாணவும், கன்றிழந்த தாய்ப்பசு டிங்கோவை ஏற்றுக்கொள்ள வில்லையென்றால் என்ன செய்வது என்ற என் குறுக்கெண்ணங்களால் சூழப்பட்டு நகரத்தில் வசிக்கும் கால்நடை மருத்துவனிடம் ஆலோசனைக்குச் சென்றேன்.
இங்கே மூன்று நாட்களாக கருத்தும் கண்ணுமாக கன்றைப் பெற்ற தாயைப் போல பார்த்துக்கொள்கிறேன். தாயை இழந்த சோகத்தை இன்னும் அது உணரவில்லை. பசு எது பன்றியெது என இன்னும் அறியாப் பருவத்தில்தான் இருக்கிறது. என் அப்பன் ஒரு மடையன். எனக்கொசரம்தான் இவரை பொறுத்துக் கொண்டிருக்கிறார் அவர். இந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் நான். இந்தக் காட்டிலுள்ள ஆட்களையும், பெண்களையும் அத்தனை விஷயங் களையும் தாண்டி என்னை அவர் கண்டு கொண்டது என்னுடைய அதிர்ஷ்டமென்றே நினைத்து இங்கே சுற்றியுள்ளவர்கள் என்மீது பொறாமை கொள்கிறார்கள். அதிர்ஷ்டமா, சந்தோஷமா, துயரமா
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இக்காட்டைத் தாண்டி பிறிதொன்றும் அறிந்தவளில்லை. என்னை இச்சையோடு அணுகி என்மீது ஏறும்போது அவர் செய்கைகள் அதைத்தாண்டி வேறெதையோ என்னை யோசிக்கத் தூண்டுகின்றன. அவர் அதை பிடிக்கும் விதமும் வேகமும் காஞ்ச மாடு கம்மங்கொல்லையில் பூந்த மாதிரிதான். ஒரே வேகமும் கிடையாது. இடையிடையே ஏதேதோ பேசுவார். கொஞ்சுவார். ஊரார் நெனக்கிறாங்க பிள்ளை யில்லா பாசத்தைதான் அவர் பிராணிகள் மேல் வைக்கிறார்ன்னு. பிராணிகள் மீது பாசமா என்மீது மோகமா என சீர் தூக்கினால் குரங்கு அப்பம் பிட்ட கதை போலத்தான் முடியும். என் மீதிருந்து கொண்டே வேறெங்கோ அவர் நிலைத்துவிடுவதுதான் என்னைக் கவலையிலும், குழப்பத்திலும் ஆழ்த்திவிடுகிறது. பண்ணிக்கிட்டே இருந்து திடீரென நிறுத்தி கண்ணை மூடி மெய் மறந்திருப்பார். சீக்கீரம் வராம இருக்க அப்படி பண்றாரா இல்ல, கோட்டை மாரியாத்தா கோயில் பூசாரி அருள்வர்றதுக்கு முன்னாடி வேறெங்கேயோ வெறிச்சிருப்பார் அது மாதிரியா இதுவும். எப்படியோ கோட்டை மாரியாத்தா என் வயித்துல ஒரு சிசுவை தரிக்கச் செய்தா எல்லாம் சரி. கரு தெறிச்ச அடுத்த நாளே தாலி கட்டி டவுன் வீட்டுக்குக் கூட்டிப் போறென்னு சொல்றார். எனக்கு அந்த அக்கா மேல பாவமா இருக்கு. பிள்ளை இல்லாதவ வயிற்றெரிச்சல் என்னை சும்மா விடுமா. சக்களத்தி சண்டையே வேண்டாய்யான்னு இந்தக் காட்டிலேயே இருந்திடனும். ஐயா எதையுமே சோதிச்சு பார்த்துதான் ஏத்துக்குவாரு. எனக்கு இது ஒரு சோதனைதான். என் கர்ப்பத்துல அவர் கருவ தாங்கிட்ட நான் இல்லத்தி இல்லன்னா அவர்க்கு ஊர்ற விந்து வத்தற வரைக்கும் முடிவற்ற சோதனைதான். நேரம் காலம் பாக்காம என்ட்ட வர்றவரு இந்த மாடு செத்ததிலேர்ந்து வர்றதே இல்ல. சில்லுன்னு இந்த விடிகாலையில வெள்ளி முளைச்சிருக்கு. இப்ப எனக்கு வேணும்; நான் எங்க போவ. அடிக்கடி வந்தாதானே புள்ள நிக்கும். அதவிட நான் நெனைக்கும் போதில்ல வரணும். இந்த மாடு செத்ததுக்கே இத்தனை நேரம் வரல்ல. இவங்க கூட்டியார மாடு கன்னுக்குட்டிய ஏத்துக்கிட்டாலும் கன்னு தாயா அத ஏத்துக்குமா, ச்சே நானே தானே சொன்னேன்; பசு எது பன்னியெதுன்னு அறியாமத்தான் கன்று இருக்குன்னு. சீக்கிரமா இது ஒரு முடிவுக்கு வரணும். பட்டுனு இப்பத்தான் ஒரு விஷயம் உறைக்குது. இந்தக் கன்னுகுட்டி முட்டி முட்டி மடியில மோதுறபோலதான் என் மார்ல முகத்தை வச்சி முட்டிக்கிட்டே பால் ஏன் வர்லன்பாரு. நான் சிரிச்சி கூசிக்கிட்டே கன்னு போட்டாத்தான் பால் விடும்பேன். அங்க முட்றத பார்த்துட்டு இங்க வந்து முட்றாரு.. இப்பத்தான் புரியிது. எம்மேல் இருந்துகிட்டே வேறெங்கேயோ யோசனை வைக்கிறது எதை
எதையோ பார்த்துட்டுதான் வேற வேறயா பண்ணிக்கிட்டு இருக்காருன்னு புரியுது. குரங்கு மாதிரி இருக்கறது அவருக்கு ரொம்ப இஷ்டம். குனிஞ்சி கீழ இருக்குற எனக்கு தான் கஷ்டம். கரு நின்னுச்சின்னா அந்த வெத்தலை பொண்ணு வீட்டுக்காரன் அப்படி பண்ணித்தான் கலைப்பானாம். குரங்கு மாதிரி இனிமே ஒத்துக்கக்கூடாது. புடிச்சப் புடியா நிக்க மாட்டாரு. அவுரு குணம் தங்கம். அவரு செத்தா தோட்டி குழி வெட்ட மாட்டானா? செத்து புதைக்க முடியாம புழு வச்சி அழுவுறத என்னால பாக்க முடியாது. அந்த காளான் தோட்டி வரட்டும். வந்தா முறத்தாலே அடிச்சி தொறத்தனும். ம் இந்த சில்லுனு இருக்கிற வெள்ளிய பார்த்தா ஏதோ தோணுது. போனவங்க மாட்டோட வருவாங்கன்னுதான் தோணுது. வருவாங்க. விடி வெள்ளியோட மினுக்கத்த பார்த்துக்கிட்டே முத மூத்திரத்த கையில புடிச்சா? அப்படிதானே பொறந்ததிலேர்ந்தே பிடிக்கிறேன். அந்த வெது வெதுப்புல தூக்கமும் சோம்பலும் எங்கே போவுதுன்னு யாருக்குத் தெரியும். ஆனா இந்த மூத்திரத்துல வெதுவெதுப்பை விட வழவழப்பு இருக்கு. விரல்களில் தேய்த்து முகர்ந்து பார்க்கிறேன். கரு கண்ட இனிப்பு வாசனை அதுல நிறைஞ்சிருக்கு.
எங்கோ விடைத்த மூக்கு, உடல் முழுக்க அரை வெள்ளையில் கருத்த மேகத் திட்டுகளை ஒத்த அகல அகலமாகப் பரவிய கருப்பு புட்டா நிறம். நரம்போடிய அகன்ற விழிகள். அதன் மடியில் சுரக்கும் பாலில் சீம்பாலின் திடம். மூக்கணாங் கயிற்றில் கைக் கயிற்றை இணைத்து பிடித்து மெதுவாக நடத்தியே அழைத்து வந்தார்கள். சீமைப் பசுவை. கன்றை இழந்த சோகம், நடையின் தயக்கத்திலும் மருண்ட கண்களிலும் தெரிகிறது. கன்றை ஈன்று இழந்த தளர்ச்சி உட லை பூமியின் ஆழத்தை நோக்கி குஞ்ச வைத்திருக்கிறது. கால்நடை மருத்துவனிடம் வாங்கி வந்த மட்டியான வண்ணங்களில் தோய்ந்த மாத்திரைகளை காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்குத் தொடர்ந்து ரம்போவிற்கு கொடுக்கச் சொல்லி ரம்போவின் முகவாயைப் பிடித்துத் தொண்டைக்குள் மாத்திரைகளை முழுங்க வைத்துக் காட்டினேன். பிடிக்க முடியா பறவைகளை ஓடி ஓடி துரத்திக்கொண்டு காலை சுற்றிச் சுற்றி வந்து எக்கி முகத்தை நக்கும் ரம்போவுக்கு என்ன தெரியும். இந்த மாடு மங்காவைப் போல் இல்லைதான். எனினும் கன்றை இழந்த அதன் சோகம் என்னைப் பரிவுகொள்ளத் தூண்டுகிறது. மருத்துவன் என்னிடம் கூறியதை ஆட்களிடம் விளக்கி விட்டேன். அவர்கள் செய்யும்போது அதை நான் காணக்கூடாது. பதட்டம் என்னை ஆட்கொள்ள அங்கிருந்து விலகுகிறேன். நினைக்க முடியா காலிப் பானையை யாரோ உட்புறமாக வயிற்றுக்குள் வைத்துவிட்டது போன்ற அபாண்ட உணர்வு. எதிரே எத்தனை சுருக்காக சொன்ன மாயம் தெரியவில்லை.
அதற்குள் வெள்ளை நிறத் தண்ணீரைப் போல் நிறமற்ற சாராயம் வாங்கி வருகிறானொருவன். இதே சுறுசுறுப்பை எல்லா வேளைகளிலும் பிறர் எதிர்பார்ப்பதைப் போல் நான் ஏதிர்பார்ப்ப தில்லை. இரண்டு பக்கமும் ஆட்கள் கயிற்றை நெருக்கி மாட்டைப் பிடித்துக்கொள்ள, மூங்கில் கொட்டத்தில் சாராயத்தை நிறைத்து வாயை வலுக்கட்டாயத்தில் திறந்து தொண்டைக்குள் மெதுவாக ஊற்றுவார்கள். முதலில் எதிர்ப்பையும் ஒவ்வாமையும் காட்டி முரளும். பின் மெதுவாகக் குடிக்கும். குடிக்க வைக்கும் முன்பாக அதன் கண்ணில் படாமல் டிங்கோவை மறைத்து வைக்கச் சொல்லிவிட்டேன். கன்றை இச்சீமை ஏற்றுக்கொள்ள நாம் அதற்கொரு அனுபவத்தை வழங்க வேண்டும். முதுமையடைந்த நாயால் இழுத்துச் செல்ல முடியா கோடைக்கால பகலாகவும் புழுக்கத்தில் நெரிக்கும் அரைமயக்க கனவுகளாகவும் நீள வேண்டும். வலி இல்லாமல் வலியைப் பற்றிய நினைவை அப்பகல் போதையில் நீட்டித்துக்கொண்டிருக்கும்படி தொடர்ச்சியாக சாராயத்தை மிதமாகப் புகட்ட வேண்டும். முகத்தையும் உடலையும் ஒருவன் நீவிக்கொண்டே ஈரக்கயிற்றால் மடிக்காம்புகளை சேர்த்துக்கட்ட பால் மடி நிறையும் கணத்தால் மெல்லிய வலி வேண்டும். சாராயத்தைப் புகட்டிய படியே அவ்வப் போது அதன் உறுப்பை உள்ளிருந்து திறந்து திறந்து மூடச் செய்ய ஈணுவதற்கான அவஸ்தையை உணர்ந்து தயாராக வேண்டும் மெய்மையற்ற அனுபவத்திற்கு. வலி இல்லாமல் இந்நிழலனுபவத்தை வெட்டியெடுத்து முந்தைய ஈணுதலின் நினைவோடு சூர்யனின் கண்ணை மறைத்து நிழலையும் ஒளியையும் மெழுக வேண்டும். இனி ஏறவோ இறங்கவோ வழி இல்லாமல் தவிக்கும் போதையை எட்டியவுடன் கர்ப்ப வாயிலுக்குள் கையை நுழைத்து ஜீவக் கொடிகளில் தலை திருப்பி சிக்கிக்கொண்ட கர்ப்பத்திற்குள் இல்லாத கன்றை கொடிகளிலிருந்து உடலை விடுவித்து ஈணுவதற்குத் தோதாக வாயிலை நோக்கி தலையைத் திருப்பி வைத்து கர்ப்ப வாடையை கைகளில் அள்ளி எடுக்க வேண்டும். விலகிச் செல்லும் பூமியில் கால்களை அழுத்திக்கொண்டு ஈணுவதற்கு மருளும் வலியில் பிரபஞ்சமே பானைக்குள் சிக்கிக்கொண்டு புரள்கிறது. அந்தக் கரும் பானையின் சிறு துளைகளில் இன்னொரு பிரபஞ்சத்தின் ஒளியும் தூசியும் நுழைகிறது. தொண்டை கமறுகிறது. யாரோ இறுக்கியதுபோல, என்றும் மாறாது நிலைபெற்று விட்ட நட்சத்திரங்கள் அப்பானைக்குள் கண்ணிழந்து அல்லாடுகின்றன. அதன் கர்ப்பக் குளத்திலிருந்து அள்ளி வந்த இரத்தத்தையும் கர்ப்ப நீரையும் பின்பக்கமாக மறைத்து மேலிருந்து மெதுவாக சப்தமெழும்படி தள்ளப்பட்ட டிங்கோவின் மேல் முழுக்கப் பூசி அக் கணத்திலேயே ஈரக்கயிற்றால் சேர்த்துக் கட்டப்பட்ட காம்புகளை அவிழ்த்து மடியின் அடியில் விட
வேண்டும் டிங்கோவை. வலியிலிருந்து வலி தானாகவே விலகிச் செல்ல, கூடி நிற்போர் நல் வார்த்தை நிறைய சொல்ல, வலியின் திரையாக கன்றின் மீது காய்ந்த குளத்தின் பாசியாக போர்த்தப் பட்டிருக்கும் கர்ப்ப நீரையும் வாடைமிகு குருதியையும் மரத்த நாவால் நக்கிக் கிழிக்க அன்றிரவு கொட்டிலில் அடைக்கப்பட்ட சூர்யன் தன்னைத் தானே விடுவித்துக்கொண்டு வருமுன் வைக்கோல் மெத்தையில் பிணைத்து வைக்கப்பட்ட தாயும் சேயுமாக இணைந்து வரும் கன்றுக்கும், பசுவுக்கும் பத்தியங்களை நாம் செய்து விடலாம். துயரத்தைக் கடப்பதற்கு இன்னொரு துயரத்தின் வலிதான் வழியா? வேறு வழியில்லைதான் போலிருக்கிறது. பிரசவத்தின் அத்தனை வாதைகளையும் என் அறையில் இருந்தபடியே இதோ உங்கள் முன் அனுபவித்துவிட்டேன். என் குறுக்கெண்ணங்களே எப்போதும்போல் என்னை வழிநடத்துகின்றன. சிலர் அதை சமயோசிதம் என்கின்றனர். இன்னும் துவங்காத பகல் ஒளியில் உணர்வுகளிலேயே ஒன்றை வலியுடனோ இன்பமுடனோ அனுபவித்தபிறகு நிஜத்தில் அது கை கூடாதென்று நானே எனக்கு இயற்றிக்கொண்ட மனோதத்துவ விதியால் உந்தப் பெற்று ஓடினேன் திரும்ப. பாதி சாராயத்தை என் ஆட்கள் அதற்குள் பருகி விட்டிருக்கிறார்கள். சாராயத்தைப் புகட்ட கொட்டத்தை நிற்கிறார்கள். நிறுத்துங்களென்றேன். நிறுத்தினார்கள். பொட்டுத் தண்ணியும் புண்ணாக்கும் காட்டி வைக்கோல் விசிரினேன். கொஞ்சும் வார்த்தையால் அதைத் தேய்த்து ஈரக்கயிற்றால் இறுக்கி இருந்த மடியை அவிழ்த்து டிங்கோவை அழைத்துச் சென்று அதனருகில் விட்டேன். நரம்போடிய விழிகளால் சுற்றிலும் உருட்டிப் பார்த்து விட்டு தலையை ஆட்டி அதன் மடியில் பாலருந்த அனுமதித்து டிங்கோவை ஏற்றுக்கொண்டது இந்த நல்பசு. ஆட்களின் ஏறிய போதை குழம்பிவிட்டது. அப்படியே மீந்துவிட்ட மேலும் வரவழைக்கப்பட்ட சாராயம் அரவக் காட்டில் புரண்டோடியது. என் மகிழ்ச்சியே இவர்களின் சந்தோஷம். கடவுளின் கர்ப்ப குடுவைக்கெதிரான சதி அவரது தோட்டத்திலேயே தீட்டப்பட்டது. நான் ராஜ்ஜியத்தில் இல்லை. தோட்டத்தி லிருக்கிறேன். ஒன்றை ஒன்று மறைத்து விட்ட இம்மகிழ்ச்சியின் நாட்கள் கடந்தே நினைவு வருகிறது யாரும் பார்க்காதபோது தோன்றி மறைந்த வானவில்லைப் போல ரம்போவின் கர்ப்பம் கரைந்து போனது. வண்ணங்கள் நிறைந்த வானவில்லை காண்பதைவிட கரைந்து போன வண்ணங்களே இன்பம்தான்.
ஏந்தி

One Comment on “குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை”

Comments are closed.