குமார் அம்பாயிரம்/ஈட்டி

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான ஜேபிகளிலிருந்த இம்மலை படுகையில் பயனற்றுவிட்ட ரூபாய்த் தாள்கள், நாணயங்கள் சிலவற்றை மரத்தின் காலடியில் எறிந்தேன். மலைகளைப்பற்றி எப்போதும் நான் கூம்பு வடிவத்தில் மட்டுமே சிந்தித் திருக்கிறேன். பல மலை உச்சிகளையும் அப்படித்தான் நானும் என் நண்பனும் அடைந்திருந்தோம். மல்லாந்த பன்றியின் அடிவயிற்றைப் போல் புடைத்தும் நீண்டும் ஒன்றுக்கொன்று தொட்டுக் கொள்ளாமல் விழுந்து கிடக்கும் பாசி நிறமும் மிருகங்களின் உறைந்த மூத்திரம்போல் மஞ்சள் நிறமும் படிந்த பாறைக் கூட்டங் களால் ஈர்க்கப்பட்டு இம்மலைத் தொடரில் பயணிக்க வந்தோம்.
இம்மலைத் தொடரின் மேல் பகுதியை யாரேனும் அடைய வேண்டுமென்றால் தாவி தாவித்தான் ஏற வேண்டும். எப்போதும் உச்சியைக் குறிவைத்து மலை ஏற்றங்களைத் தொடங்கும் நான், இங்கே உச்சியையோ சிகரத்தையோ அடையவில்லை. மாறாக, அடிவாரத்திலிருந்து தொடங்கி செங்குத்தான பாறைகளையும் முகடுகளையும் ஏறிக் கடந்ததும் அங்கே இன்னொரு பூமியைக் கண்டோம். காற்று உதறிச்செல்லும் கம்பளத்தைப் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் பரந்து விரிந்த பிரதேசம் எங்கள் முன் இருந்தது. அருகில் இருந்த சிறுகுன் றொன்றின் மீதேறி ரொட்டித் துண்டுகளை தின்று தண்ணீரையும் தீர்த்தோம். ஏற்கனவே இருள் துவங்கிவிட்டது. நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப் போல் நட்சத்திரங்கள் முளைவிடத் துவங்கின. காற்றும் கதிரியக்கமும் உள் நுழைய முடியாத எங்கள் கையடக்க படுக்கையினுள் நுழையும்போது தூரதூரங்களில் பெரிய வட்டங்களாக எரியும் நெருப்பு வளையங்களைக் கண்டோம். அந்நெருப்பு வளையத்தினுள் பதட்டமற்ற மனித உருவங்களையும் குடிசைகளையும் கண்டோம். வளர்ந்த இருளுக்குள் பனிவிழத் தொடங்கியதும் யாரும் வந்தணைக்காமல் ஜுவாலைகள் மறைந்துவிட்டன பூமியினுள். கீழே மின்மினிகள் பறக்கத் துவங்கியபோது நாங்கள் உறங்கி விட்டோம் என நினைக்கிறேன்.
கண் விழித்தவுடன் காலையில் தீ வளையங்கள் தோன்றிய திசையை நோக்கினோம். சாம்பலின் சுவடுகூட கண்களுக்கு அகப்பட வில்லை. தடையின்றி வீசும் காற்றில் மலைவெளியில் நாங்கள் நடக்கத் துவங்கினோம். ஆமைகளின் முதுகைப்போல் முகடுகளும் அகடுகளும் அதன் எல்லை எதுவென அறிய முடியாதபடி முடிவற்று வந்து கொண்டு இருக்கின்றன. ஓவென்று அலறினால் எங்கோ போய்ச் சேர்கிறது. ஹேய்… என கூக்குரலிட்டால் எங்களழைப்பு எதிரொலியின்றி மடிகிறது. இரவை ஒரு நாளும் பார்த்திராத சூரியன் உயரங்களின் மீதாக தன் தனிமையை அதிகமுணர்ந்து தன்னைத் தானே மெதுவாக நகர்த்திக் கொள்கிறான். உச்சிப் பொழுதுகளிலோ அவன் அசைவதே இல்லை. சூரியன் அசையாது நிலைக்கும் கணங்களில் நடையை நிறுத்தி நாங்களும் மரங்களினடியில் கனிந்திருந்த நிழல்களில் ஒதுங்கினோம்.
சில அடர்ந்த காடுகளுக்குள் நானும் என் நண்பனும் பயணித் திருக்கிறோம். பெருத்த நெருக்கமான மரங்களும் காட்டுக் கொடிகளால் வளைக்கப்பட்ட ஆகாயத்தின் கீழே, புல்களின் அசைவுகளில் எங்களை இழந்திருக்கிறோம். இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுக்கொள்ள முடியாத இடைவெளியில் நிற்கும் மரங்கள், எழுந்து நடக்கத் துவங்கி எதையோ கண்டு நின்றுவிட்ட குழந்தை களைப்போல் வெட்ட வெளியில் எதிர்கொண்டு நின்றன. மரங்களின்
கீழ் அசைந்திருக்கும் சாமைக்கதிர்களூடே நடக்கிறான் என் நண்பன். அவன் எதற்கும் அஞ்சி உணர்ச்சிகளை உடனே வெளிக்காட்டாதவன். மிகக் கொடூரமாக அவனுக்குப் பசித்தால் பிடித்த பாடலை சீட்டி அடித்தபடி குறுக்கும்நெடுக்கும் நடப்பான். மற்றபடி, பயணம் என்று புறப்பட்டால் சாகும்வரை கூட நடந்துகொண்டே இருப்பான்.
கால்கள் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்க மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓர் முகடைச் சுற்றிச் சென்ற ஒற்றை யடிப் பாதையில் நடந்தோம். தான்தோன்றித்தனமாக கற்கள் கொண்டமைக்கப்பட்ட படிகள் பள்ளத்திலிருந்து மேலேறியது. படிகளின் துவக்கத்தில் மலைக் கிராமமொன்று நாங்கள் மேலேற மேலேற கூரையிலிருந்து அடித்தளம் வரை வீடுகளில் கூரைகள் மஞ்சம் புற்களால் வேயப்பட்டிருந்தன. மேல்காற்றால் நிச்சயம் இந்தக் கூரைகளை அசைக்கமுடியாது. தோற்றத்தில் நம்மைப் போலவே மனிதர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் எங்களை அரசனைப் போல் வரவேற்கவுமில்லை, அடிமைகளைப் போல் புறக்கணிக்கவுமில்லை. வயலுக்குப் போய் திரும்பிவரும் தம் குடிகளைப் போன்றே குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் தலை உயர்த்திப் பார்த்தார்கள் எங்களை.
அந்தி இரவாக மாறும் வேளையில் இளைஞர்கள் உறுமும் விலங்குகளிடமிருந்தும் ஊறும் பூச்சிகளிடமிருந்தும் குடிகாக்க எந்நாளும் நெருப்பு வேலி போடக் கிளம்பினார்கள். ஓணான் கொடிகளால் முடைந்த கூடையில் சருகுகளையும் காய்ந்த சுள்ளி களையும் கொண்டு கிராமத்தைச் சுற்றி ஒரு வட்டம் போட்டனர். காய்ந்த மூங்கில் கணுக்களை உரசி வெளியிட்ட தீயை இலைகளில் புகைய விட்டனர். இரண்டு திசையில் கிளம்பிச் சென்ற தீ ஒன்றை யொன்று எதிர் வந்து தழுவிக்கொள்ள உருவாகும் தீ வளையத்தின் வெளியே நேற்றிருந்தோம். இன்றோ அதனுள்ளே இருந்தபடி தூரத்தில் மேலும் பல வளையங்கள் உயர்வதைக் காண்கிறோம்.
பசிய சாணமும் மலை மண்ணும் பிசைந்து பூசப்பட்ட திண்ணை களில் கூடியமர்ந்து கதைகள் கூறிக்கொண்டோம். அவர்கள் சொன்ன கதையில் ஒரு குதிரை வந்தது. நாங்கள் சொன்ன கதையிலும் ஒரு குதிரை வந்தது. அவர்கள் குதிரைக்கும் எங்கள் குதிரைக்கும் கண்முடி அளவே வேறுபாடு இருந்தது. எங்கள் கதையில் வந்த குதிரையை நாங்கள் குதிரை என்றோம். அவர்கள் கதையில் வந்த குதிரையை ‘குர்தை’ என்றார்கள்.
இடையிடையே ‘ஓ…’ என்றும் ‘ஹேய்…’ என்றும் அழைக்கும் ஓசை கேட்கிறதே என்றோம். அது காலையில் யாரோ அழைத்த ஒலி என்றார்கள்.
நாங்கள் அவர்களோடு கூடி இதர மலை கிராமங்களையும்
சுற்றினோம். பன்னூறு மைல்களாக பரந்துகிடக்கும் சமனற்றப் பரப்பில் எங்கெங்கே சென்றாலும் நடந்தே சென்றார்கள். உட்கார்ந்தபடியே பயணிக்கும் ஓர் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் நாங்களும் நடந்தே சுற்றினோம். கிராமங்களின் வீதிகள் ஆநிரைகளின் சாணத்தால் தூய்மையாக மெழுகப்பட்டிருந்தது. கோடுகளும் கானக ரூபங்களும் கலந்து வீடுகளின் இடுப்புயரத்தில் வரையப்பட்ட ஒரு கோலம் தொடக்கமோ முடிவோ அற்று எல்லா வீடுகளையும் இணைத்து கிராமத்தையே ஒரே வீடாக மாற்றுகிறது. எல்லா வீடுகளிலும் பரண்கள் இருந்தன. கடுங்குளிர் பருவத்தில் பரண் ஏறி உறங்க இரட்டை ஏணி குழிகள் இருக்கின்றன. காட்சி மாடத்திலிருந்த வெண்கலச் சொம்பும் வெண்கல கிண்ணிகளும் மலை புளியில் தேய்க்கப்பட்டு வெண்கல காலத்தைப் பிரதிபலிக் கின்றன.
இரண்டுமேடுகள் சரியுமிடத்தில் தோன்றி பெருகும் ஓடையை மிக அகலப்படுத்தி நெல் பயிரிட்டார்கள். தண்ணீர் வயலாக மாறிவிட்ட ஓடையில் குழம்பி நெற்பயிரின் கணுக்கால்களை நனைத்து சாந்தமுற்று வழிந்து வெளியேறுகின்றன.
குன்றுகளில் சரிவிலும் பாறைகளின் இடுக்கிலும் சாமையும் வரகும் உடல்வளைந்து நின்றன. வரகின் கதிர்களை நெருப்பில் வாட்டிக் கொறித்தோம். பச்சை வரகின் பால் சுவையும் வாட்டிய சுவையும் பற்களுக்கிடையே பிழியப்பட்டு அந்த வாழ்வின் சுவையாக இருந்தது. விதைப்பில் உடனிருந்தோம். அறுவடையில் பங்கெடுத்தோம். கரிவேப்பிலை குச்சிகளில் பல் துலக்கினோம். தேனும் தினைமாவும் தின்ற நாட்கள் மாயமாக இங்கே குன்றுகளில் காற்று மோதுவதை கேட்டபடியே கரைகின்றன. இரவோ நட்சத்திரங்களை எண்ணுவதற்குள் விடிந்து விடுகிறது.
என் நண்பன் சொன்னான், ‘இங்கே காலம் என்பதே இல்லை; பருவங்கள் மட்டுமே இருக்கின்றன.’
மூதாட்டிகளைத் ‘தாயாரு’ என்றும் வயோதிக ஆண்களை ‘மூப்பன்’ எனவும் அழைத்தார்கள். நட்சத்திரங்கள் தங்களுக்குள்ளே எரிந்து ஒளிர்வதைப் போல, ஒற்றைக் குடியாக அவர்களது குருதி அவர்களுக் குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது.
மேல்காற்று வீசும்போது இலைகள் உதிர்கின்றன. கீழ்காற்று வீசும்போதோ பூச்சிகள் சில்லென்ற இரவுகளை உதிர்க்கின்றன. இங்கே இறந்துவிடுபவர்களின் உடலை நான்காகப் பிளக்கப்பட்ட மூங்கில் தப்பைகளால் சுற்றிலும் வைத்து கட்டி கற்றாழை கயிறுகொண்டு ஓங்கி வளர்ந்த கல்லாத்தி மரங்களில் தொங்கவிட்டனர். கடந்து போன குளிர்பருவமும் கோடைக் கடுங்காற்றும் எங்கிருந்து வருகிறதோ
எங்கு போய் மறைகிறதோ அங்கே பருவங்கள் போன இடத்திற்கே உடலும் போனது. உடல் மறைந்ததும் கட்டுகள் கலைந்து உதிர்ந்து விடும். தப்பைகளை எரித்து சில்லென்ற இரவுகளுக்கு அனல் காட்டிய தீயின் முன் என் நண்பனை இப்போதே புதிதாகச் சந்திப்பவனைப் போல் பார்த்தேன். அவன் சிறிது அவர்களாகவே மாறியிருந்தான்.
நான் இன்னமும் குதிரையை ‘குதிரை’ என்றே எனக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேன். அவனோ குதிரையை ‘குரதை’ என வாய் குழறினான். ஆரம்ப நாட்களில் மட்டுமே அவள் என்னோடு உறங்கினான். நாட்கள் செல்ல அவன் யாரோடு எங்கே உறங்கினான் என்பதை அறியேன். நானெப்போதும் உறுதியா யிருந்தேன், ஒரு பயணத்தின் இடையில் இருக்கிறேனென்பதை உறுதிகொள்ளக் குதிரையைவிடாமல் பற்றிக் கொண்டேன்.
மெலிந்த திடமான கருப்பு உடலோடும் இருண்ட சுருள் கேசத்தோடும் பக்குவமாக வேக வைக்கப்பட்ட செங்கற்களைப் போல் இருந்தவர்களின் புட்டத்து மேலேயும் முதுகு வளையு மிடத்திலும் இரண்டு சிறுகுழிகள் மூடிய கண்களாக இருக்கிறதே அது என்ன என்று தாயாரிடம் கேட்டேன்.
‘அதுவே எங்கள் மூதாதைகளின் ஆசிர்வாதங்கள்’ என்றாள், ‘இவ்வுலகினுள் நாங்கள் யோனி வாயில் நசுங்கித்தான் பிறக்கிறோம். கர்ப்பிணியின் உள்ளேயிருந்த எங்கள் மூதாதைகள் தம் கவைக் கோலால் கர்ப்பிணியின் வாதையைக் குறைக்கும்படியும், யோனி சுருக்கத்தில் சிசுக்கள் சிக்கிக் கொள்ளாமலும் உள்ளேயிருந்து தம் கவைக் கோல் பதித்துத் தள்ளும் அடையாளமே அது. அக்குழிகள் இல்லாது பிறக்கும் சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து பிறக்கும், தப்பினால் கழுதை குறத்தி தூக்கிச் செல்லும்’ என உரைத்தாள்.
விலா எலும்புகளின் பக்கத்திலும் தொப்புளைச் சுற்றிலும் சூட்டுக் கோலால் சில தீற்றல்களை வரைந்தார்கள் அது அவர்களை அற்ப நோய்கள் அண்டாமல் காத்து இள மரணங்களை விரட்டி வந்தன. தோன்றிய பருவங்கள் விளைச்சலை கொடுத்தே முற்றி மறைகின்றன.
நான் இங்கேயே ஜனித்திருந்தால் கல்லாத்தி மரத்தில் தூக்கி கட்டப்படும் என உடல் மாயமாய் மறையும். ஆனால் நான் மரித்ததும் கோடையின் நீளமான பகலைப் போல எனது எலும்புகள் இங்கே உளுத்துக் கொண்டிருக்கும். அல்லது இம்மலை மீது முதன்முறையாக ஒரு கல்லறை எழக்கூடும். மூடிய விரல்களோடு பிறந்து பரிசுகள் ஏதும் ஏந்திச் செல்லாத திறந்த கையோடு மரித்து இங்கே ஒரு கல்லறையை விட்டுச் செல்ல விரும்பவில்லை நான். என் நண்பனோ அவன் சந்ததிகளை விட்டுச் செல்லலாம். பயணத்திற்கிடையே ரத்த
கலப்பென்பது திரும்ப முடியாதபடி அங்கேயே தங்கி வாழவைத்து விடும் என்பதை நானறிவேன். பாதியிலேயே கைவிடப்பட்ட பயணங்களின் கதை அதுவாகத்தானிருக்கும். பயணங்களே ஒருவேளை பால் இணை தேடி தானோ? என் நண்பனைப் பார்த்தால் இங்கிருந்து கிளம்புவான் போல் தோன்றவில்லை.
வெப்பக் காற்றில் பிறப்பெடுக்கும் வைசூரிகளும் முளைவிடும் சீழ்கட்டிகளும் வாடைக்காற்றில் ஊடுருவி வரும் துர்ச்சிந்தை மற்றும் தீயக் கனவுகளில் விளைவென்றார்கள் அவர்கள். மனிதர்களை அண்டிப்பிழைக்க முடியாத பருவத்தில் துர்சிந்தையும் தீய கனவுகளும் எட்டிமரத்தில் போய் வசீகரமான கனிகளாக வாழ்கின்றன. நாங்கள் இங்கே வந்த நாட்களுக்கு பிறகு ஒருவன் மெதுவாக நொண்டத் தொடங்கி இப்போது படுக்கையாகிவிட்டவனின் உடலில் புகுந்திருக்கும் தீயக் கனவை விரட்டும் சடங்கு உற்றார் சூழ, வளர்பிறையின் மூன்றாம் நாளில் நடக்க இருப்பதாக அறிந்தேன்.
நான் இங்கிருந்து புறப்படும் ஆயத்தங்களில் என்னைத் தயார் செய்துகொண்டிருந்தேன். என் நண்பனை அழைத்து ‘நாம் எப்போது புறப்படுவோம்’; இதற்குப் பிறகு ஒரு பயணமோ அல்லது இங்கிருந்து திரும்புவதோ என்னால் முடியாது; என் இதயம் இந்த *பூமியில் சாந்தமடைந்து விட்டது’ என்றான். நான் கோபப்படவே இல்லை. ‘எங்கே என்னைப் பார்த்து குதிரை என்று சொல்’ என்றேன். அவன் மேலோட்டமாக குர்தை என்றான். நான் மீண்டும் கேட்டேன். அவன் குர்தை என்றான் தயக்கமில்லாமல். ‘நீ இங்கே தந்தையாகி மூப்பனாகவும் ஆவாய்’ என்றேன். அவன் முகத்தில் புன்னகையும் கண்களில் மகிழ்ச்சியின் ஒளியும் நிலைத்திருந்தது.
நாங்கள் இங்கே வந்து எத்தனை மாதங்கள் சென்றதெனத் தெரியவில்லை. பருவங்கள் காலத்தை குழப்பி இருந்தன. வளர்பிறையின் ஐந்தாம் நாள் இங்கிருந்து விடைபெறுவதென நான் முடிவெடுத்தேன்.
அன்று வளர்பிறையின் மூன்றாம் நாள். கிராம முற்றத்தில் பறவைகளின் அடி வயிற்று மென் இறகுகளால் படுக்கை உண்டாக்கி அதன் மீது அகன்ற இலைகளைப் பரப்பினார்கள். நள்ளிரவு கடந்து சுணங்கும் தீக்கு காய்ந்த மரங்களை இளைஞர்கள் அடுக்கினர். ஒரு சடங்கிற்கான எளிய ஏற்பாடாக அது தோன்றியது. மேற்கில் பிறை சுடர்விட்டதும் அனைவரும் கிராம முற்றத்தே குழுமினர். கிராமத்திற்கு வெளியே செம்படவர்களின் தொப்பியைப் போன்ற தான்ய குதிர்கள் வீடுகளைவிட அதிகமாக இருந்தன. குதிரிலிருந்து அள்ளப்பட்ட அரிசியும் சாமையும் பொது விருந்துக்கென உலைகளில் கொதித்துக் கொண்டிருந்தன. தாயாருகளும் மூப்பர்களும் பிற கிராமங்களி லிருந்தும் வந்திருந்தனர். வந்து களைப்பாற வெல்லப் பானகம் வழங்கப்பட்டம் ஒருவருக்கொருவர் நலன் அறிந்த பின் நோயுற்ற மனிதனைத் தூக்கி வந்து இறகுப் படுக்கையில் படுக்க வைத்தார்கள், நிர்வாணமாக. தான்யங்களையும் விதைகளையும் ஆபரணமாக அணிந்த பெண்களின் திறந்த மார்பகத்தின் முலைக்காம்புகளில் பாலருந்தி வெயிலைத் தணித்துச் செல்லும் கோடையின் வடுக்களமைந்த பெண்கள் வந்து கூட, மூப்பர்களும் தாயாருகளும் அம்மனிதனைச் சூழ்ந்திருக்க அவர்களை வெளியே சூழ்ந்து ஆண்களும் பெண்களும் நடனத்தைவிட மெதுவாக நடையைவிடத் துரிதமாக அடிவயிற்றிலிருந்தும் உடல் அசைவாலும் ஒலியெழுப்பியபடி ஆடி வலம் வந்தனர். மூப்பர்களும் தாயாருகளும் இறகுகளால் நீவி தழை சருகுகளால் நிர்வாண உடலை ஆராதித்தார்கள். உருட்டப் பட்ட இலைகளை காதுகளுக்குள் செருகி இதுவரை நான் கேட்டிராத வார்த்தைகளை ஓதினார்கள். மூத்த தாயார் பிதற்றத் தொடங்கி இருக்கும் பிரக்ஞையற்ற உடலருகே நெருங்கி கண்களை மூடியபடி ஒவ்வொரு எலும்பினூடாகவும் சதையின் இடுக்குகளிலும் விரல் நுழைத்து அவனுள் புகுந்திருக்கும் தீய கனவினைத் தேடினாள். கண்களை மூடியபடி இடது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையிலே அவள் விரல்கள் சிறிது நின்றது. அங்கே எந்த காய வடுவும் நோயின் மூலக்குறியும் தென்படவில்லை. தாயாரு மெதுவாக எழுந்து நின்றாள். மூண்ட தீயின் பிரகாசம் அவள் முகத்தைத் தீவிரமாக்கியது. அவள் அறிவித்தாள். இந்த உடலுக்குள் உடையாத ஈட்டியின் முனை இருக்கிறது. உண்மையில் அவர்களிடம் ஈட்டி இருந்தது; ஆனால் அது போர் புரிந்ததே இல்லை. எவற்றின் மீது தைத்ததும் இல்லை. நீண்ட கம்பின் முனையில் நடு விரலளவு நீளமும் இரண்டு விரற்கடை அகலமும் கொண்ட கொல்லனால் கூர் பார்க்கப்பட்ட உலோக முனை நாரால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இங்கே போரோ சச்சரவுகளோ இல்லையாதலால் பயன்படுத்தப் படாமல் பரணில் இருந்தது அவரவரிடமே. பயிர் முற்றிய பருவத்தில் சிலர் ஈட்டியைத் தூக்கிக் கொண்டு பன்றி விரட்டப் போவார்கள். மூப்பன் எழுந்து சப்தமாக “இவனை யார் குத்தியது? குத்தவில்லை யென்றால் யாருடைய ஈட்டி முனை காணாமல் போயுள்ளது? நடுவே வாருங்கள்” என்றான். நான் இங்கிருந்த நாட்கள் வரை யாரும் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்த்ததில்லை. கனவில் யாரையாவது அவமதித்திருந்தாலும் எண்ணங்களின் காட்சிகள் வந்திருந்தாலும் காலையில் கனவில் தான் அவமதித்த மனிதனை அழைத்து வந்து தாயார் முன்கண்ட கனவைக் கூறி மன்னிப்புக் கேட்டு துர்கன விலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள். நான் நன்கு அறிந்த இளைஞன் வட்டத்திற்கு உள்ளே வந்து வணங்கி “தொலைந்து போனது எனது ஈட்டி முனைதான், அது தொலைந்தது நிஜத்தில் அல்ல, நான் கண்ட கனவில்” என அனைவரும் கேட்கும்படி தான் கண்ட கனவினைக் கூறத் தொடங்கினான்.
“இன்னும் பிடுங்காத முற்றிய ஆலிவல்லிக்கிழங்கால் பூமி வெதுவெதுப்படைந்திருந்த இரவில் நான், மூக்கன், பொதுக்கன் மூவரும் ஈட்டிகளைத் தூக்கிக்கொண்டு பன்றிகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். நிலா மேகத்தில் தங்கியும் விடுபட்டும் எங்களைத் தொடர்ந்து வந்தது. நாய்கள் மயில் மேட்டருகே பன்றிகளை நெருங்கினோம். அப்போது மாசி நிலவை மூடியது. அலைபோல் வந்து அலையாய் மறையும் பன்றிகளின் பின்னே நாங்கள் ஈட்டியைக் குத்து வாட்டத்தில் பிடித்து மிகவும் நெருங்கியபடியே ஓடிக்கொண்டிருந் தோம். புதர்வளைவில் பன்றிகள் திரும்பும்போது என் விசையோடு முன்னே பாய்ந்தது. அந்நேரம் மேகத்தை உடைத்தது நிலா. பன்றிகள் ஓடி மறைந்துவிட்டன. நிலவின் வெட்ட வெளிச்சத்தில் என்னைச் சுற்றி யாருமில்லாத கனவில் ஈட்டி மட்டும் முனை காணாமல் போயிருக்க கம்புடன் தனியே நின்றிருந்தேன். காலையில் பரணில் வைத்து எப்போதோ நான் மறந்துவிட்ட ஈட்டியை எடுத்துப் பார்த்தேன். அதன் உலோக முனையை மட்டும் காணவில்லை. மயில் மேடருகே சென்று தீயவனைப் போல் இரகசியமாக அதை தேடிக் கொண்டிருந்தேன். எனது ஈட்டி முனையில் ஒற்றை கண் துவாரம் இருக்கும்” எனக் கூறி அனைவரின் முன்பும் பணிந்தான்.
இன்னும் நெருங்கி நோயாளியின் அருகே சென்று நின்றேன். அவன் பிறந்தபோது தீற்றிய தீச் சூடுகளைத் தவிர வேறெந்த தழும்பும் இல்லாத உடலை பசிய இலைச் சாறுகளால் மெழுகி உடல் சிட்சை அளிக்கும் வார்த்தையைத் தாங்கும்படி பக்குவப்படுத்தினார்கள். நிறுத்தப்பட்டிருந்த நடனமும் ஒலியும் தொடங்கியது. மூதாட்டி ஒருத்தி அவன் தலையை மடியிலேந்தி தொடர்ந்து நன்னீர் புகட்டியபடியே இருந்தாள். அவன் பிதற்றல் தொடர்ந்தது. சுரை குடுவையில் சேமித்த பன்றி நெய் எடுத்துப் பூசினர். பசிய இலை பூசப்பட்ட உடலில் தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையில் மூப்பன் கூர்மையான வளைந்த சொற்களால் கீறினான் சதையை. கண்களை மூடியபடியே இருந்த தாயாரு கிழிக்கப்பட்ட சதையினூடே விரல் நுழைத்தாள். மெதுவான நடனம் வேகமெடுத்தது. குருதிப் பெருக்கெடுத்த சதைப் பிளவிலிருந்து நடுவிரல் அளவு நீளம் இரண்டு விற்கடை அகலமும் கொண்ட ஈட்டி முனையை உருவி எடுத்து தாயாரு யாவர் முன்பும் வாழை இலையில் வைத்தாள். கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கற்களாலும் சொற்களாலும் முச்சந்தியில் அவமானப்படுத்தப்பட்ட பெண்ணைப் போல் இலையில் வைக்கப்பட்ட ஈட்டிமுனை இருந்தது. அதன் ஒற்றைக் கண் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.
போனது எனது ஈட்டி முனைதான், அது தொலைந்தது நிஜத்தில் அல்ல, நான் கண்ட கனவில்” என அனைவரும் கேட்கும்படி தான் கண்ட கனவினைக் கூறத் தொடங்கினான்.
“இன்னும் பிடுங்காத முற்றிய ஆலிவல்லிக்கிழங்கால் பூமி வெதுவெதுப்படைந்திருந்த இரவில் நான், மூக்கன், பொதுக்கன் மூவரும் ஈட்டிகளைத் தூக்கிக்கொண்டு பன்றிகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். நிலா மேகத்தில் தங்கியும் விடுபட்டும் எங்களைத் தொடர்ந்து வந்தது. நாய்கள் மயில் மேட்டருகே பன்றிகளை நெருங்கினோம். அப்போது மாசி நிலவை மறையும் பன்றிகளின் பின்னே நாங்கள் ஈட்டியைக் குத்து வாட்டத்தில் பிடித்து மிகவும் நெருங்கியபடியே ஓடிக்கொண்டிருந் தோம். புதர்வளைவில் பன்றிகள் திரும்பும்போது என் கை விசையோடு முன்னே பாய்ந்தது. அந்நேரம் மேகத்தை உடைத்தது நிலா. பன்றிகள் ஓடி மறைந்துவிட்டன. நிலவின் வெட்ட வெளிச்சத்தில் என்னைச் சுற்றி யாருமில்லாத கனவில் ஈட்டி முனை மட்டும் காணாமல் போயிருக்க கம்புடன் தனியே நின்றிருந்தேன். காலையில் பரணில் வைத்து எப்போதோ நான் மறந்துவிட்ட ஈட்டியை எடுத்துப் பார்த்தேன். அதன் உலோக முனையை மட்டும் காணவில்லை. மயில் மேடருகே சென்று தீயவனைப் போல் இரகசியமாக அதை தேடிக் கொண்டிருந்தேன். எனது ஈட்டி முனையில் ஒற்றை கண் துவாரம் இருக்கும்” எனக் கூறி அனைவரின் முன்பும் பணிந்தான்.
இன்னும் நெருங்கி நோயாளியின் அருகே சென்று நின்றேன். அவன் பிறந்தபோது தீற்றிய தீச் சூடுகளைத் தவிர வேறெந்த தழும்பும் இல்லாத உடலை பசிய இலைச் சாறுகளால் மெழுகி உடல் சிட்சை அளிக்கும் வார்த்தையைத் தாங்கும்படி பக்குவப்படுத்தினார்கள். நிறுத்தப்பட்டிருந்த நடனமும் ஒலியும் தொடங்கியது. மூதாட்டி ஒருத்தி அவன் தலையை மடியிலேந்தி தொடர்ந்து நன்னீர் புகட்டியபடியே இருந்தாள். அவன் பிதற்றல் தொடர்ந்தது. சுரை குடுவையில் சேமித்த பன்றி நெய் எடுத்துப் பூசினர். பசிய இலை பூசப்பட்ட உடலில் தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையில் மூப்பன் கூர்மையான வளைந்த சொற்களால் கீறினான் சதையை. கண்களை மூடியபடியே இருந்த தாயாரு கிழிக்கப்பட்ட சதையினூடே விரல் நுழைத்தாள். மெதுவான நடனம் வேகமெடுத்தது. குருதிப் பெருக்கெடுத்த சதைப் பிளவிலிருந்து நடுவிரல் அளவு நீளம் இரண்டு விற்கடை அகலமும் கொண்ட ஈட்டி முனையை உருவி எடுத்து தாயாரு யாவர் முன்பும் வாழை இலையில் வைத்தாள். கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கற்களாலும் சொற்களாலும் முச்சந்தியில் அவமானப்படுத்தப்பட்ட பெண்ணைப் போல் இலையில் வைக்கப்பட்ட ஈட்டிமுனை இருந்தது. அதன் ஒற்றைக் கண் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.
நிர்வாண உடலைப் பணிந்துவிட்டு ஈட்டியைத் தொலைத்தவன் அவனை நீராட்டினான். பின் பிளந்த சதையை சாதுவான சொற் களாலும் கல்லரசன் மரத்தில் கொத்தி மண் கலயத்தில் ஏந்தப்பட்ட பாலாலும் மூடினார்கள். வானத்தின் கீழே கலவி முடிந்து மல்லாந்த உடலைப் போல இலைகளைப் பரப்பி’அதின் அவனைப் படுக்க வைத்தனர்.
பொங்கலிட்ட உணவை உண்டு எல்லோரும் உறைவிடம் புகுந்தனர். ஈட்டியைத் தொலைத்தவன் அவனுக்குக் காவலாக அவனருகிலேயே இரவைக் கழித்தான்.
இதற்கடுத்து வந்த நாளொன்றில் அவர்களிடம் விடைபெற்றேன். முகம் தெளிவடைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நோயாளி யிடம் புன்னகைத்து கையசைத்தேன். பரிசுகளற்ற வெறுங்கையோடு நான் வந்திருந்தாலும் எனக்கு அவர்கள் சுமக்க முடியாதபடி கனி களையும் விதைகளையும் தந்தத்தில் செதுக்கி ஆபரணங்களையும் கொடுத்தார்கள்.
சமவெளியில் நான் பார்க்காத மரங்களின் விதைகளையும் வழிப் பசிக்கு சில கனிகளையும் மட்டும் நான் எடுத்துக்கொண்டேன். அவர்கள் கீழே செல்ல வழி பிரியுமிடம் வரை வந்து நின்றார்கள். என் நண்பன் என் கரங்களோடு அவன் கரங்களைக் கோர்த்து இங்கேயே இருந்துவிடேன் என்பதைப் போல பார்த்தான். என் முகத்தருகே முகம் வைத்து “குர்தை என்று ஒரு முறைசொல் நீ இங்கேயே வாழ்ந்து விடலாம் எங்களோடு” என்றான்.
நான் குதிரை என்றேன் தெளிவாக. மீண்டும் குர்தை என்றான். குதிரை என்றேன். இருவரும் சப்தமாக வெடித்துச் சிரித்து விட்டோம். பின் ஒருவரையொருவர் கட்டி அணைத்து ஆரத்தழுவியபடி ஆனந்தமாகப் பிரிந்தோம்.
விரைவாக கீழ்நோக்கி இறங்கும் சருக்கு வழியில் தனியாக இறங்கி வருகிறேன். எனது நண்பன் பயணத்தின் எல்லையை அடைந்துவிட்டான். இல்லையெனில் இப்பயணத்தின் சாட்சியாக என்னோடு அவன் இருந்திருப்பான். இப்போதோ நான் கண்டவை களின் சாட்சியாக அங்கிருந்து ஒருவம் அறியாமல் எடுத்து வந்துவிட்ட ஈட்டி முனையை எனது பயணத்தின் ஆதாரமாக சாட்சியாக உங்கள் முன் வைக்கிறேன். அதன் ஒற்றைக் கண் என்னையும் உங்களையும் இதோ பார்க்கிறது.
(வெள்ளிமலை சடையன், துறையூர் சரவணன் இருவருக்கும்)

குமார் அம்பாயிரம்/ன்யாக் – விருட்சம் நாளிதழ்

குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை – விருட்சம் நாளிதழ்