
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வந்த நாள் அன்றுதான் அது நிகழ்ந்தது. சுமை தாங்கி கற்கள் நகருக்குள் நகர்ந்து வருவதை சிறுவர்களே காண்பித்து சொன்னதைப் போல முப்பது நாட்களுக்கு முன்பே மரணக் கொட்டடியில் சுற்றப்பட்ட பேண்டேஜ் காடா துணியோடு சவப் பெட்டியில் வைத்து கல் உப்பு தூவி அண்டையில் புதினா இலைகள் வைத்து புதைக்கப் பட்ட பிரேதம் மெல்ல மேலெழுந்து மிதப்பதை நகர் தாண்டிய மயான மேடுகளில் தாள் பொறுக்கித் திரியும் சிறுவர்களே வந்து சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நம்பாமல் இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையால் உப்பி பெட்டியோடு மேலே வந்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு மண் வெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு மயானத்திற்கு சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்றோம்.
வியப்படைந்த விழிகளோடு எங்களுக்கு முன்னே ஓடிச்சென்று தாங்கள் கண்ட அதிசயம் காணாமல் போய்விடக்கூடாதென்ற கவலையிலும் ஆர்வத்திலும் தூரத்திலேயே காண்பித்தனர். குழிக்கு நேர்மேலே கைக்கெட்டாத கொஞ்ச உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது காடா துணி சுற்றப்பட்ட வெண்ணிறப் பிணம். இடி விழுந்த பள்ளம் போன்ற இதயத்தோடு கால்கள் பின்னித் தயங்க குழியை நெருங்கினோம். குழி விகாரமாக திறந்து கிடந்தது. சவப்பெட்டி புரட்டப்பட்டு ஒருமுறை மட்டுமே ஆணிகளால் பூட்டப்பட்டும் சவப்பெட்டியின் கதவு இரண்டாக பிளந்து தூவியிருந்த உப்பு சிதறிப் புதினா இலைகள் கருகிக் கிடந்தன. அந்தரத்தில் தொங்கவிடப்படும் பலூன் விளக்கைப் போல் லேசாக காற்றில் அசைந்தபடி மிதந்து நின்றது. பிரேதத்தை அந்தரத்தில் நிறுத்தியிருந்த எங்கள் கண்களுக்கு புலப்படாத நூல் கயிற்றை விளங்க இயலா ஆச்சரியத்திலிருந்தும் விளங்க பீதியிலிருந்தும் மீண்டபோது துழாவினோம். இன்னாடா பொதச்ச எனக் கேட்டு இழுத்துவரப்பட்ட தோட்டி, இது அரை நாள் ஆறப்போட் குழி. கெட்ட காத்து ஏதாவது அடஞ்சிருக்கும். அது வெடிச்சதினால் பிளந்திருக்கும். மீண்டும் புதைச்சிடலாம். இந்த பூமி இதுவரை யாரையும் வெளியே துப்பியது இல்லை என்றான். குழிக்கு நேர் மேலே மிதந்ததால் எக்கிப் பிடிக்க தாவியோர் குழிக்குள் விழுந்தனர் தவறி விழுந்து அலறியபடியே மேலேறியோர் கை கால்களை உதறிக்கொண்டு அப்பால் ஓடி நின்றனர். மதிய வெயிலில் கல் உப்பு பிரேதத்தின் மீது மின்னியது. கூசிய கண்களுக்கு மேலே கைகளை வைத்து நிழல் காப்பு செய்து சூர்யனை மறைத்துப் பார்த்தோம். சிலர் இடுகாட்டிற்கு எப்படியோ அநாதையாக வந்திருந்த உருண்டையான கற்களை குழிக்குள் நிரப்பி எம்பிப் பிடிக்க முனைந்தனர். அவர்கள் பிடிக்கு எட்டாமல் கொஞ்சம் மேலே உயர்ந்து செல்வதுபோல் தோன்றியது. என்னமோ ஏதோ என நின்று கூடிய சிலர் பெரிய கயிற்றைச் கொண்டு வந்து குறுக்கே விசி கறந்து கீழே இறக்கிவிடலாம் என கயிறை கொண்டுவர ஏவினர் சிலரை. இச்செய்தி அதிகம் வெளியில் பரவாமல் இக்கட்டான மனநிலையில் மீண்டும் எப்படியாவது புதைத்துவிடவே எண்ணினோம். குதித்து குதித்து சோர்வுற்ற நாங்கள் கயிறு வருவதற்காக சமாதிகளின் நிழலில் காத்திருந்தோம். இன்னும் சிலரோடு சற்றே நேரம் குன்றி கயிற்றோடு வந்தவர்கள், கயிற்றின் முனையில் ஓர் கல்லைக் கட்டி குறுக்கே அந்தப் பக்கமாக வீசிக்கொண்டிருந்தனர். நாங்களும் சப்தமெழுப்பாமல் சுற்றி நின்று முயற்சித்துக் கொண்டிருந்தோம். ஓர் சரியான உயர எறிதலில் கல்கட்டிய கயிறு வயிற்றுப் பகுதியின் குறுக்கே விழ பிரேதத்தைக் கறந்து பூமிக்கு இழுத்துவிட இருபக்கமும் கயிற்றைப் பிடித்து குஞ்சினோம். என்ன ஒரு பிடிவாதமான சக்தியோடு அந்தரத்தி
லிருந்து கீழே இறங்காமல் இரட்டை ராட்டினம் போல சற்றே முன்னோக்கி கவிழ்ந்து கயிற்றின் பிடியிலிருந்து நழுவிக்கொண்டு அந்தி சாயும் சூர்யனின் குறுக்கே நகரத் துவங்கி இன்னும் மேலே இன்னும் என கைகளுக்கோ கயிற்றுக்கோ எட்டாத உயரத்தில் உயர்ந்து அப்படியே படுக்கை வாட்டத்தில் நகர்ந்தது. பின்னாலேயே தொடர்ந்து சென்ற நாங்கள் இனிமேல் சொல்லமுடியாதென தடுத்து நின்ற சூரை முட்களுக்கும் சுள்ளிச் செடிகளுக்கும் முன்னால் திகைத்து நின்றோம். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறைந்துவிடும் சூர்யனைப் போல் மிதந்து கொண்டிருந்த வெண்ணிறப் பிரேதம் தூரத்து வானில் மறைந்துபோனது.
அவனது சுற்றமும் நட்பும் எட்டாந்துக்கம் கழித்து கசப்பு தழையில் கறிச்சோறு தின்று கண்ணீர் துக்கமாக உறைந்துவிட்ட இந்நாளில், அவன் பிணம் எழுந்தலைவது கேட்டு துக்கம் கண்ணீராக கடைந்து ஒப்பாரியாக தெருவெங்கும் பெருக்கெடுத்தது. புலம்பிக்கொண்டு ஓடும் அவன் குடும்பத்தாரின் சின்னது பெரிசுகளை இழுத்துப் பிடித்து நிறுத்தவே ஓர் இரவு போதவில்லை. மலையிலிருந்து உருண்டு விழுந்து உடைந்து சிதறிய மஞ்சள் நிற கல்லைப் போன்ற உள்ளடங்கிய இச்சிறு நகரத்தில், அவ்வப்போது வானத்தை அண்ணாந்து பார்த்தபடி யாவரும் நடந்தனர். சிலசமயம் தாழ்வாகவும் சிலபோது ஏதோ கோபம் கொண்டதுபோல் யாருடைய விருப்பிற்கோ வெறுப்பிற்கோ இல்லாமல் தங்களை தாங்களே உருமாற்றிக் கொண்டே போகும் மேகக் கூட்டங்களின் தூரத்தில் மிதந்தலைந்தது மிதந்தலையும் பிணத்தைப் பார்த்தவர் களும், பார்க்காதவர்களும் நிமிரமுடியா கூனர்களும் தலைமேல் கல்வைத்த சுமையாய் அழுத்துவதாக உணர்ந்தனர். நீ பார்த்தாயா, நீ பார்த்தாயா என புருவங்களால் கேட்டுக் கொண்டனர். உருகாத ஆளுயர பேக்டரி ஐஸ் போல் படுத்தவாக்கில் தூரத்து வானில் பருந்தாகத் தோன்றியும் மறைந்தும் அலைந்து எல்லாத் திசைகளிலும் நகர்ந்த பிரேதம் கண்ணாடிக் கூண்டிற்குள் சிக்கிக்கொண்ட நீர்க்குமிழி போல் உருகிவிடாமலும் உடைந்துபோகாமலும் எங்கேயும் முற்றிலும் மறைந்து சென்றுவிடாமல் நகரின் மீது கவிழ்க்கப்பட்ட கண்ணாடிக் குடுவை போன்ற பிரதிபலிக்கும் வான எல்லைக்குள்ளேயே அலைக்கழிந்தது.
அவர்கள் இவ்வளவு சீக்கிரம் பிணையில் வெளியே வருவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதோடு அவர்கள் கூட்டமாக ஒழிந்தார்கள் என வீரமற்ற ஆதங்கம் மட்டுமே கொண்டிருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தபோது கிள்ளாமல் குறையாமல் வெளியே வந்துவிட்டார்கள். வந்துவிட்டவர்கள் கல்லறை பிளந்தெழுந்து பிரேதம் அலைவது கேட்டு கூடுதலான மதுபானப் புட்டிகளோடு தங்கள்
வழக்கமான குடியிடத்தில் சன்னல்களைச் சாத்தியபடி பதுங்கிக் கொண்டனர்.
நெல் வயல்களுக்கு நடுவே பதுங்கிக்கொண்ட கருங்கல் கட்டடத்தில் இடிபோல் அப்பிணம் போய் இறங்கி அவர்களைக் கொல்லும் என பலரும் எண்ணினர். அதே பயம் கொண் அவர்களின் வீட்டினரும் ஆள் மாற்றி ஆள் உணவு கொண்டுவந்து கொடுத்துச் சென்றவர்களும் எச்சரித்துச் சென்றனர். இவர்கள் போதையில் சொக்கிக்கொண்ட கண்களால் ஜன்னலில் சிக்கிக் கொண்ட வானத்தைத் துழாவினர்.
ஞாபகத்தின் வட்டப் பரப்பில் எந்தப் பக்கத்தில் நின்று பார்த்தாலும் அவர்களுக்கு அக்கொலையை எப்படிச் செய்தோம் என்பது தெளிவாகவில்லை, மிக எளிமையான பொருட்களால் நிகழ்த்தப்பட்டது. அந்தப் பிரச்சினை எப்படி மூண்டது? பீர் சிந்தியதாலா, பிராந்தி கொட்டியதாலா, இல்லை அது ஓர் எல்லை தாண்டிய பயங்கரம். எந்த அரசாங்கமும் பிரித்துக் கொடுக்காத, இவர்களே வகுத்துக் கொண்ட மனக்கோடுகளால் உருவான இரண்டு எல்லைக்கும் நடுவிலிருந்த மதுபான விடுதியில். உடனே நாம் அலங்கார விளக்குகளையும் வட்ட மேசைகளையும் கற்பனித்துக் கொள்ள வேண்டாம், மின் காற்றாடியொன்று கிழட்டு வேகத்தில் எங்கேயும் போகாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு நாங்கள் வரும்வரை, ஆகா.. மிக அழகாகத் தொடங்கியது அதிகாலையிலேயே கூட்டுக்குடி. தான் உதிர்த்த முட்களுக்கு குடைபிடித்து நிற்கும் கருவேலமரத்தடியில் வட்டமாக அமர்ந்து குடித்தும் தேனிமலை அடிவாரத்து நிழலில் நின்று குடித்தும், ஊமையன் பின்புறத்திலும் மைல் கல் மேலும், ஏரிக்கரையிலும் தாமரைக்குள மேட்டிலும் வெட்டுவானத்திலும் வானத்தின் விளிம்பில் நின்றும் அமர்ந்தும் குடித்து, வெயிலில் – சூடேறிய பிராந்தியை வட்டப் பாறையில் குடித்தபோது ஏறிய உச்சபோதையில்தான் இப்படு களத்திற்கு பிற்பகலில் வந்து சேர்ந்தோம். இருவர் முத்தமிட்டால் உலகம் மாறிவிடுகிறது. ஒருவன் ஒரு பெக் அடித்தாலே உலகம் மாறிவிடும் என்ற வரவேற்பு வாசகங்கள். திடீரென உள்ளே புகுந்த மஞ்சள் ஒளி. இனிமேல் குடிக்க மாட்டேன் என்ற சங்கல்பத்துடன் தனியே குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன். வெளியே ‘டப்’பென்று உடைந்துவிட்ட பீர்பாட்டில், திறக்க முடியாத மூடியின் மீது வந்த கோபம், டேபிளின் முனையில் இடித்து சில துளிகள் சிந்தி ஆடி நின்ற கோப்பைகள், இல்லாத ஒருவனைப் பற்றி இருவரின் குரோதப் பேச்சு, மஞ்சள் கருவின் மீது தூவப்பட்ட கார வண்ணம், முட்டி எலும்புகள், சீக்கிரமாக சூடாக இரத்தம் கேட்கும் குரல். நண்பனைப் போகவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இருவர். மலினமான மழுப்பல். ங் கிலும் பூவிலும் ஒளிந்திருக்கும் வண்டைச் சொற்கள். இன்னும் கொஞ்சம் போதையை கெஞ்சிக் கேட்கும் இளகிய மனம். முட்டுக் கொடுக்கப்பட்ட ஊன நாற்காலி. துறுத்தி நிற்கும் கண்கள், பிரவுன் நிறமாக மாறிவிட்ட முகங்கள், ஒப்பனையில் திருத்தமுடியா சிகைகள், பீறிட்டு வரும் பித்தம், ஒழுகை வீசல், எதிலும் கலந்து கொள்ளாமல் மூலையில் அமர்ந்து இருவர் காலியான புட்டியில் தீக்குச்சியைக் கிழித்துப் போட்டு எழும்பும் நீல ஜ்வாலை, நீந்த முடியாமல் சிதறிக்கிடக்கும் மீனின் எலும்புகள். தலைகவிழ்ந்து அமர்ந்திருப்பவனின் முகத்தில் பளிச்சென்று விழுந்த ஓர் அறை, அம்மாவை தெவ்டியா ஆக்கிய ஒரே சொல், திடீரென எழுந்த தள்ளாட்டமான கைகளின் அலை, கண்ணாடிப் புட்டியை உடைத்து அவன் இடது மார்பில் ஆழ்ந்த சொருகல். அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்குமா? எதையும் தடுக்கமுடியா பலவீனமான கைகள். திட்டமிட்ட எங்கள் இதயம், சட்டென்று பீதியாக மாறிவிட்ட போதை, நீண்ட ஒலியோடு எங்கேயோ வளைந்து செல்லும் பேருந்து, யாரிடமிருந்து யாருக்கோ விழுந்து கொண்டிருக்கும் அடியின் பலமான சப்தங்கள், எங்களின் கூட்டுத் தைரியம் சிதைந்துவிட்டது. எங்களுக்கு முன்னே வீதிகள் ஓடிக்கொண்டிருந்த பீதியில் ஓடிக் கொண்டிருந்தோம். முடிவடையாமல் ஓடிக்கொண்டிருந்த சாலைகளிலிருந்து விலகி எங்களது சந்துகளில் நுழைந்தோம். பீதி பயமாக மாறி, பதட்டமான குரலால் கத்தி அழைத்தோம். சமைக்க இருந்த விறகுக் கட்டைகள், கம்பிகள், கத்திகள், மாடுகளின் மண்டையைப் பிளக்கும் கற்கள், கூடிவிட்ட கூட்டத்தில் கிடைத்துவிட்ட தைரியம், தொலைந்து விட்ட எனது இடதுகால் செருப்பு, என்னை விடாமல் எப்போதும் துரத்திக்கொண்டு வரும் அதன் நினைவு. கலைந்து ஓடியதால் கொல்லப்பட்டவனின் மரணம். அவன் ஆன்மா திருப்தியடையும் வகையில் இரண்டு நாள் நிகழ்த்தப்பட்ட கலவரம்.
நகரின் பெரும்பான்மை மக்கள் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டு அலைஅலையாக கத்திக்கொண்டு ஓடும் குரல்களை ஜன்னலை மட்டும் திறந்துவைத்து கேட்டபடியிருந்தனர். ஒருவரையும் கொல்லாமல், உடையும் பொருட்கள் உடைந்தன. எரியும் பொருட்கள் எரிந்தன. இரண்டுநாள் கலவரம் கொலைகாரர்களை உடனே கும்பலாக கைது செய்ய வைத்தது. அதன்பின் சனி, ஞாயிறுக்குப் பிறகான திங்களைப் போல் எல்லாம் வற்றிவிட்டது. ஆனால் அவனது ஆன்மாவோ, உடலோ எனக்குத் தெரியாது. அது மரணத்திற்குப் பின்பான அமைதியை அடையவில்லை என்றே சொல்கிறார்கள். அவனுக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த கல்கோனா, தேன்மிட்டாய், நரிஜாம், மயிர் மிட்டாய், ஆட்டுஈரல், பிராந்தி, நீர் கலப்பில்லாத சுண்டிய சாராயம் இவையெல்லாம் அவன் இறந்த இடத்தில் படைத்தும் திருப்தியுறாமல், வேறெங்கும் மிதந்து செல்லாமலும், பூமிக்கு இறங்கி வந்து தன் குழியில் அடையாமலும், ஜே.எம். 1 நீதிமன்ற நீதியரசரின் வீட்டு முருங்கை மரத்தில் போய் இடித்து சிக்கிக் கொண்டது. நீதியரசர் தன் சொரட்டு கொம்பை வைத்து மரத்திலிருந்து அதை விடுவித்து வான எல்லைக்கே திருப்பி அனுப்பினாலும், தான் அளிக்கும் தீர்ப்பிற்கும் வழங்கும் நீதிக்கும் மௌனமாக தனக்கு அளிக்கப்பட்ட அக நெருக்கடியாகவே அதை உணர்ந்தார். இறந்தவன் ஒருவன். கொன்றது பலர் கரம். தண்டனையை பிரித்தளித்தால் ஒரு நகத்திற்குக் கூட வலிக்காது. என்ன வெய்வது எந்த நகத்திற்கும் வலிக்காது என்பது உடனேயே தெரிந்தால் உண்மையான பழிவாங்குதலிலாவது முடியட்டுமென்று வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி தன் மனசாட்சியின் உறுத்தலிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார். வழக்கை மாற்றியவுடன் ஃபர்கோ லாரி சேசின் மீது கட்டப்பட்ட விரைவு நீதிமன்றம், நிறைய ஊர்களுக்குச் சென்றதால் தளர்ந்து போன உடலோடு தள்ளாடியபடி கிரிச் ஒலிகளோடும் பரிதாபத்திற்குரிய அசங்களோடும் கச்சேரி ஆல மரத்தடியில் வந்து நின்றது. வந்த அன்று நீதிபதியும் ஓட்டுநரும் தட்டச்சு பெண்மணியும் ஓய்வெடுத்துக் கொண்டபின் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையின் நகல் மிக நீளமானதாய் இருந்தது. அதில் பதிமூன்று பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உண்மையில், அவன் சாகும்படியான கடைசி அடியை அடித்தவன் பெயர்தான் குற்றவாளிகளின் பட்டியலில் கடைசியில் இருந்தது. சம்பவ இடத்தில் இல்லாத ஆனால் கூட்டத்தின் தலைவனாக தன்னைப் பாவித்துக் கொண்டிருந்த பிறரும் அப்படித்தான் பாவித்தனர். அவனின் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. கொலை நிகழ்ந்தபோது பாரில் மது அருந்திக் கொண்டிருந்த பெரும்பாலானோர் சாட்சிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர். சச்சரவின் துவக்கத்திலேயோ, முடிவிலேயோ அங்கிருந்து தப்பி ஓடிய அவனைச் சார்ந்தவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்படவில்லை. கொலை நடந்ததிலிருந்து வேறு வேறு பார்களில் இடம் மாறி குடித்துக் கொண்டிருந்த சாட்சிகளை கோர்ட் ஏட்டுக்கள் எப்படியோ உருட்டி மிரட்டி கொத்துக் கொத்தாகப் பிடித்துவந்து விரைவு நீதிமன்ற வாகனத்தின் உள் போகும் பின் வாசல் முன் வரிசையில் நிற்க வைத்தனர். சாட்சிகளின் வாக்கு மூலங்கள் இரையும் டைப்ரைட்டரில் பதிவு செய்யப்பட்டன. அரசு வழக்கறிஞர் சாட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக் விசாரித்தார். எல்லா சாட்சிகளும் ஒன்றைப் போல பதிலளித்தன. உங்க பேரென்ன? சாமுய்யா. சம்பவம் நடந்தப்ப நீங்க அங்கிருந்திங்களா? என்ன சம்பவம் அய்யா? உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? தெரியாது அய்யா. ஒன்றுமே தெரியாது. ஒன்றுமே தெரியாது. ஒன்றுமே தெரியாத
ஒரு ந சாட்சி. உங்க பேரென்ன? தேள் என்கிற செந்தில். சம்பவம் நடந்தப்ப நீங்க எங்க இருந்திங்க? அய்யா நான் எங்கயும் இல்லங்கய்யா. ஆனா நான் நல்ல போதையில இருந்தேன். அதனால நான் எங்க இருந்தேன்னு எனக்கே தெரியாது அய்யா. நீங்க போகலாம். தைர்யமாக நடந்ததை நடந்ததைப் போலவே சொல்வேன் என சாட்சி சொல்லத் தயாராய் இருந்த ஒருவனை சாட்சியாய் கடைசிவரை சேர்க்கவே இல்லை. சீருடைக்கு சலவைக் கூலி பெறுபவர்கள். ஏனெனில் நடந்ததை நடந்ததைப் போலவே சொன்னால் குற்றப்பத்திரிகையில் எழுதப் பட்டிருப்பதற்கும் நிகழ்ந்த சம்பவத்தின் முரணுக்கும் நீதிக் கூண்டில் பதில் கூறமுடியாமல் தாங்கள் அணிந்திருக்கும் நட்சத்திரத்தில் ஒன்றோ இரண்டோ விழுந்துவிடுமென எண்ணி அந்த தைர்யவானை சேர்க்கவில்லைபோல. அடுத்த ரஜாக் என்கிற இளங்கோ. இளங்கோ, நீங்கதான் ரஜாக் என்கிற இளங்கோவா? ஆமாங்கய்யா. சம்பவம் நடந்தப்ப நீங்க அங்க இருந்திங்களா? இருந்தங்கய்யா. என்ன தேதியில் சம்பவம் நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா? தேதி எல்லாம் நான் எப்பவும் ஞாபகம் வச்சிக்கமாட்டேன்யா. சரி, நேரம் ஞாபகம் இருக்கா? இருக்குய்யா. என்ன நேரம்? மதிய நேரம் அய்யா. டைம் சொல்லுங்க? அதான் மதியானம் டைம்ங்க. சரி, என்ன நடந்தது சொல்லுங்க? நான் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சிருந்தய்யா. இன்னும் கொஞ்சம் குடிக்கலாம்னு பாருக்கு பாட்டிலோடு போனன்யா. நான் சூடா இரத்தம் கேட்டன்யா. ஆனா அவங்க கோழிகாலு வருவளுதான் அய்யா குடுத்தாங்க. அதனால? நான் கொஞ்சம் கோபப்பட்டன்யா. இல்ல, உங்களுக்கு கொல்லப்பட்டவர தெரியுமா? தெரியாது அய்யா. சரி, அங்க என்ன நடந்தது? அந்த இடம் சரி இல்ல அய்யா. நான் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சிருந்தேன். அப்புறம் இந்த கோழி காலால நான் கோபத்தில் இருந்தேன். என் மனசு சொல்லிச்சு இங்க ஏதோ சரி இல்லன்னு. அங்க ஏதோ சண்டை வரப்போகுதுன்னு. நான் கோபமா இருந்தாலும், சண்டை ஏதாவது வர்ற மாதிரி இருந்ததாலதான் நான் அந்த இடத்துக்கே வந்தேன், அந்த இடத்தக்கு நான் தெரியாம வந்ததாலதான் நான் இப்ப இந்த இடத்துக்கு வரவேண்டியதாப் போச்சு அய்யா. அப்ப நீங்க சம்பவம் நடக்கும்போது அங்க இல்ல? அதான் அய்யா அங்க ஒரு சண்டை வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே கொண்டாந்தத குடிச்சிட்டு கோழிகால கூட திண்ணாம உடனே அங்கிருந்து வேறொரு இடத்துக்கு போய்டன்யா. நீங்க போகலாம்; ஆனா திரும்பக் கூப்பிடும்போது வரணும். அப்படியே அய்யா. பிராந்தி பாட்லாலும், சல்லி காசுகளாலும் முன்பே மிரட்டலாலும் குலைக்கப்பட்ட புட்டம் பருத்த சீருடைக் காரர்களால் பலவீனமாக நிறுத்தப்பட்ட சாட்சிகளிடம் அரசு வக்கீல் வவ்வால் நிற அங்கி பறக்க கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
கூண்டில் ஏறி நின்றவர்களிடம் மௌனமே மறுமொழியாக இருந்தது. மெளனமற்றுப் பேசியவர்கள், தெரியாது, ஞாபகமில்லை, நினைவில்லை, நான் அங்கில்லை, சப்தம் ஏதோ கேட்டது, நான் சப்தம்தான் கேட்டேன், அது என்ன சப்தம் எனப் பார்க்கவில்லை. போதையில் மட்டுமே பிறழ்ந்து பேசும் மென்மையான மனம் கொண்ட குடிகாரர்கள் தெளிவில் பிறழ்ந்து பேசிய மன சஞ்சலத்தில் மேலும் மீளமுடியா போதையில் தங்களை ஆழ்த்திக் கொண்டார்கள்.
இன்னமும் விசாரிக்கப்பட மீதமிருந்தது இரண்டு சாட்சிகளே. பாரின் உரிமையாளனே முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தான். சம்மனில் அவன் கையெழுத்திட்டிருந்தாலும் தொடர்ந்து டிமிக்கி கொடுத்துக்கொண்டு சாட்சி சொல்ல வராமல் பதுங்கித் திரிந்தான். உண்மையான வியாபாரி இல்லையா அவன் அவனுக்கு எல்லா சமூகங்களும் வேண்டும். வியாபாரத்திற்கு பகை ஆகாது என்று அறிந்தவன். வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடியே அவனை கூண்டோடு விரைவு நீதிமன்றத்துக்கு இழுத்து வந்தார்கள். பிக்கு, பிக்கு… அவன் கூண்டிலேறி நின்றபோது கையில் ஒரு கூண்டு நிறைய ரோஸ் நிறக் கொண்டை கொண்ட வெள்ளை நிறக் கோழிகள் இருந்தன. எல்லோரும் அவனையும் அந்த கூண்டு நிறைய நெருங்கி நின்ற கோழிகளையும் பார்த்தனர். நீதியரசர் அந்த கூண்டுக் கோழிகள் எதற்கு என்றார்? அது இருக்கணும் அய்யா என்றான். நீதியரசர் சாட்சி சொல்ல வராம வாரண்ட் வாங்கி இருக்கிங்க ஏன் என்றார்? அய்யா நேக்கு ஜீவன் பாகு லேது என பரிதாபமாக உரைத்தான். பிக்கு காலையில் பார் திறந்ததும் கடையைப் பெருக்கி, கற்பூரம் ம் ஏற்றி, ஊதுபத்தி கொளுத்தமாட்டான். பதிலாக உதட்டை நன்றாக மூடிக்கொண்டு பல நிமிடங்களுக்கு காற்றை ஊதி கன்னங்களை உப்பிக்கொண்டிருப்பான். கடைசியில் உப்பலில் பிக் என்ற சப்தத்தோடு காற்றை வெளியே விடுவான். இதுவே தன் வியாபாரம் பெருகுவதற்கான அதிர்ஷ்டமுள்ள குறுக்கு வழி என எண்ணி உப்பி உப்பி பிக்கென்பான். அரசு வழக்கறிஞர் நீங்க பிக்கு. ஆமாங்கய்யா. நீங்க எத்தன வருசமா பார் நடத்துறிங்க? நான் பொறந்ததே பார்லதாங்கற அளவுக்கு அய்யா. வருசம் மாசம் சொல்லுங்க? அது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அய்யா. சரி, உங்களுக்குக் கொல்லப்பட்டவரைத் தெரியுமா? தெரியாது அய்யா. உங்களோட பார்லதான கொலை நடந்தது? இல்லங்கய்யா பாருக்கு வெளியிலதான் உடல கைப்பற்றினதா மறுநாள் தினசரிகள்ல பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ சம்பவம் நடந்தப்ப நீங்க அங்க இல்லயா? அன்னிக்கு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. நான் அன்னிக்கு பாரே திறக்கல அய்யா. என் மச்சினிச்சி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போய்ட்டு மதியத்துக்கு மேலதான் நான் என்
வீட்டுக்கே வந்தேன். அவனையே சற்று நேரம் கூர்ந்து நோக்கிய வழக்கறிஞர் மன்ற அனுமதியோடு, இரத்தம் சூடாகக் கேட்டு, கோழிகாலு பெற்ற ரஜாக் என்கிற இளங்கோவை குறுக்கு சாட்சியாக அழைத்தார். நீங்க இவர் கடையிலதான கோழிகாலு ர் வாங்கி அன்னிக்கு பிராந்தி சாப்பிட்டிங்க? அய்யா நான் இரத்தம் கேட்டுப் போனேன் எனக்கு கோழிகாலுதான் கிடைச்சது. அது இவர் கடையிலதானா? ஆமாங்கய்யா. நீங்க இறங்கி நில்லுங்க. பிக்கு, இப்ப நீங்க என்ன சொல்றீங்க? என் இரத்தத்தோட சுவை உலகமே அறிஞ்சதுங்க. அவரு மனசுக்குள்ள இரத்தம் கேட்டு கிளம்பி இருக்காரு. அனா அவருக்கு கோழிகாலு கிடைக்கிற எடத்துக்கு போய்ச் சேர்ந்திருக்காரு.
நான் கோழிகாலு விக்கிறதில்லைங்கிறதையும் உலகமே அறியும். அவரு இரத்தம் கிடைக்கிற இடத்தையும் கோழிகாலு விக்கிற இடத்தையும் குழப்பிட்டாரு. அவரு மனசுல கேட்டது ஒன்று வெளியில அவருக்கு கிடைச்சது வேறொன்னு. இந்த விவாதங்களை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த நீதியரசர் பிக்குவிடம், நீங்க நீதிமன்றத்தில் பொய் பேசி அது நிரூபிக்கப்பட்டா தண்டிக்கப்படுவிங்கன்றது தெரியுமா என எச்சரிக்கும் தொனியில் கேட்டார். குற்றவாளிகளைவிட சாட்சிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பது சத்தியமாக பிக்குவுக்குத் தெரியாதா என்ன? பிக்கு, நான் செய்த தொழில் மேல சத்தியமா உண்மையை மட்டும்தான் பேசுறேன். நான் கடை திறக்கலங்கிறத ஆதாரபூர்வமா நிரூபிக்கத்தான் இந்த கோழிக் கூண்டையே தூக்கி வந்தேன். அய்யா இந்த கூண்டுல இருக்கறத எல்லாம் ஒயிட் லக்கான் கோழிய்யா. இதோட வாழ்நாள் எவ்ளோன்னு உங்களுக்கேத் தெரியும் 65 நாள்தான் அய்யா. நான் கடை திறந்து ஆம்லேட், ஆபாயில் போடாததால வாங்குன முட்டையை அழவத்துல வச்சேன். மூனே நாள்ள குஞ்சி பொறிச்சது. சம்பவம் நடந்து இன்னிக்கு 45 நாள் ஆவுது. அதுல மூனு நாள இந்த கோழிங்க வயசுல கழிச்சா இதுங்களோட வயது 42 அப்ப இதுங்கள என்னிக்கு நான் அழவத்துல வச்சேன்ங்கறத இந்த நாட்கள் வச்சி கண்டுபிடிக்கலாம். அப்பிடியும் உங்களுக்கு நம்பிக்கை வரலன்னா இப்பவே இந்த இ கோழிகளைக் கொன்னு கார்பன்டேட் டெஸ்டுக்கு அனுப்பிவைங்க. அப்ப நான் கடை திறந்தனா இல்ல என் பார்ல கொலை விழுந்த தான்னு உங்களுக்கு புரிஞ்சிடும் என்றான் துணிவாக. ஒரு வழக்கறிஞரை விட அறிவு பூர்வமாகவும் துல்லியமாகவும் வாதிடும் சாட்சியை மெச்சி இரண்டு கோழிகளை மட்டும் கார்பன்டேட் டெஸ்டுக்கு அனுப்ப உத்தரவிட்டார். மீதி கோழிகள் காக்கி நிற தொப்பைகளுக்கு கார்பன்டேட்டாகிப் போனது.
போனவன் போய்விட்டான் இனி இருப்பவர்களைத்தான் பார்க்கனும் என பேசிப் பேசி செத்தவன் வீட்டை குளிரச் செய்து மறுக்கும் கைகளில் எதை எதையோ திணித்துக் கொண்டிருந்தார்கள் இடை நின்றவர்கள். பசித்தவனின் கைகளில் வைக்கப்பட்ட சூடான மரவள்ளிக் கிழங்கைப் போல் வாங்க முடியாதபடி மனம் மறுத்தாலும் கைகள் ஏனோ நீள்கின்றன. இருந்தாலும் இன்னும் சூடு தணியாத உள்ளிருந்து கேட்கும் ஒரு குரல் போனவன் போய்விட்டான், போய்விட்டான், எங்கே போய்விட்டான்? இங்கே தான் தலைக்கு மேல மிதந்துகிட்டு இருக்கான். முதியவர் பகை வேண்டாம் பதற வேண்டாம் போய்விடுவான் அது வாதமும் மீதமும் பார்க்க மிதக்கிறது என்றார். வானில் ஒரு துளையை உருவாக்கும் வல்லமை இங்கே யாருக்கும் இல்லையே. முடிவற்ற சாட்சிகளாலும் மௌனங் களாலும் கைகளின் தேய்த்தல்களாலும் தேய்க்கப்பட்ட தேக்குமர கூண்டில் நிர்மௌனமாக நிறுத்தப்பட்ட பிணவறையில் பிரேதத்தை அடையாளம் காட்டி அழுதவள் நின்றாள்.
நீங்கதான் கடைசி. நீங்க பேசணும். உங்க பேரென்ன?
என் பேர் எதுவானாலும் இனியென்ன. அவன் கதிமோட்சம் போவாமல் அலைவது உங்கள் நீதிக்கோ வெளியே பேசும் பழி வாங்குதலுக்கோ இல்லை. அது எனக்கே எனக்கு மட்டும் தெரிந்த த்தாவோட ஏக்கம். நான் இழந்தது என்ன? அத திருப்பித்தர யாரால முடியும்? இரவெல்லாம் காலை இறுக்கிப்போட்டுத் தூங்கிட்டு, விடிகாலையிலதான் த்தா என்னை எப்போதும் கூப்பிடும். அன்றும் அப்படித்தான். விரைக்க ஆரம்பிச்ச, நான் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த அவனுடைய எனக்கு மட்டுமே உடைய குஞ்சி. நான் தோட்டத்துக்கு சென்று வருவதாய் ஏனோ நான் உதாசீனப்படுத்திய அந்த நேரம் வாட்டுகிறது என்னை. த்தாவினுள் பொங்கி எனக்குள் மட்டும் யார் கண்ணிலும்படாமல் வாழ்நாளெல்லாம் பாய்ந்திருக்கும் சத்து. இனி எப்போதும் என் கண்கள் காணமுடியாதபடி மறைந்துவிட்ட அம்மணம். எப்போதும் நிமிண்டி கிள்ளி விளையாடும் விரல்கள். வீட்டினுள் நுழையும் முன்னே கொண்டுவரும் மாம்ச பட்சணங்களின் வாசனை. கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் கண்கள். என்னுள் மோகமூர்க்கத்தில் துடிக்கும் உடல். உடைந்து விடுமோ என நான் அஞ்சும் த்தாவின் எலும்புகள். த்தா எப்போதும் நட்டு படர் முல்லைக்கொடி. உதட்டோடு மறைந்து போய் காதுக்குள் மட்டும் கேட்டுக்கொண்டேயிருக்கும் த்தாவின் விசில் ஒலி. நான் மேல் விழுந்து அழுது துடித்தபோது அன்று விடியலில் த்தா அழைத்தபோது இருந்த அதே விரைப்புநிலை எனக்கு மட்டும் தெரிந்த அந்தரம். எட்டுத் தெரு சுத்தி, ஏழு தண்ணி எடுத்தாந்து எல்லோரும் ஊத்தினாலும் வெப்பம் தீரலியே. குறுக்கே ஒரு ஆஸ்பத்திரி கட்டு. அத அவுத்து ஆற்ற எனக்கில்லையே ஒரு வழி. த்தா செத்தது யாரால? த்தா செத்தது என்னால. ஐயோ த்தா…. என்ன தேனட மாதிரி பிச்சி பிச்சி தின்பியே. த்தாவ அவங்க கொல்லல. நான்தான் கொண்ணேன். தோட்டம் போயி திரும்பி வந்தா பாதி படுத்துக்கிட்டே என்னைக் கூப்பிட்ட த்தாவை படுக்கையில காணம். இங்கேதான் இருக்கும்னு நெனச்சி, வீட்டைக் கழுவி, வாசல் தெளிச்சி கோலம் போட்டேன். த்தா திரும்பி வரவேயில்லை. பொணம் போன பின்னாடிதான் வாசல் தெளிச்சி கோலம் போடுவாங்க. நான் என் த்தாவுக்கு கொலை விழறதுக்கு முன்னாடியே கோலம் போட்டேனே. மரணக் கொட்டடியில் நான் பார்த்தது, அடையாளம் சொன்னது என் த்தா இல்ல. அது என் த்தாவே இல்ல. என் த்தாவ கொன்னது அவங்க இல்ல. என் த்தா எனக்குள்ளதான் இருக்கு. செத்தது என் த்தா இல்ல. என் த்தாவ கொன்னது அவங்க இல்ல நான்தான்.
அம்மா நீங்க பேசணும். மெளனமாகவே எவ்வளவு நேரம் இப்படி நிப்பீங்க? கண்களில் கட்டிக்கொண்ட சிந்தாத கண்ணீர் மறைத்தது மன்றத்தை. எங்கேயோ போய்த் திரும்பிய காற்றில் ஆலம் பழங்கள் ஆலங்கட்டிகளைப் போல் விரைவு நீதிமன்றத்தின் கூரையின் மீது விழுந்து இருண்ட மௌனத்தைக் கலைத்தது. எதிர் தரப்பு வழக்கறிஞர். நீதியரசரிடம் குற்றம் சந்தர்ப்ப சாட்சிகளின் மூலம் சரிவர நிரூபிக்கப்படாததாலும் இத்தனை பேரின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில்கொண்டும் வழக்கைத் தள்ளுபடி செய்து விடுதலை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டார். வழக்கமான கனத்த மௌனத்துடன் இருந்த நீதியரசர் அழைப்பாளனிடம் நீண்ட நாள் மூடிக்கிடந்த ஜன்னலைத் திறக்கச் சொன்னார். ஆலமர இலைகளால் தழுவப்பட்ட காற்று உள்ளே வந்தது. வானத்தை சுட்டிக் காட்டிய நீதியரசர் அப்போ அங்கே மிதக்கிறதே அது என்ன? என்றார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரை நோக்கி, சற்றே சிந்தித்த வழக்கறிஞர் தனது கோட்டை சரிசெய்துகொண்டு அது ஒரு பொழியாத மேகம் என்றார். தீர்க்கமாக அது பொழியும் வரை தீர்ப்பைத் தள்ளிவைப்பதாக நீதியரசர் உத்தரவிட்டார். அச்சிறு நகரத்தில் தீர்ப்புக்கும் பிண மழை பொழிவிற்கும் வானத்தை நோக்கிக் காத்திருந்தனர்.

One Comment on “குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020”
Comments are closed.