குமார் அம்பாயிரம்/தேடூ

நாட்களாகக் கிணறு அமைதி இழந்துவிட்டது. இக்குடியிருப்புப் பகுதியும்கூட. கைப்பிடிச் சுவரின் கரையேறி வெளியே வழிந்து போய் விடாமலும், உள்ளே ஒரு சுனை கண்பிடுங்கி வற்றி உலர முடியாமலும் தண்ணீர் துக்கமடைந்திருக்கிறது. நீரின் இளகிய தோல்மீது யாரோ புரிந்துகொள்ள முடிவற்று வரைந்து கொண்டிருக்கும் பன்னீர் பூச்சியின் புள்ளியற்ற கோலங்களைக் கோடுகளை, கரையில் வளர்ந்து உதிர்ந்து காற்றோடு கூடிக்கொண்டு அழித்து நிரவிக் கொண்டு தண்ணீரின் சருமத்தைப் படிகாரமாக்கும் வேம்பின் இலைகளும் கரையொதுங்கிவிட்டன. கரையின் விளிம்பில் காணும் உலகையே மங்கலாக்கும் கண்ணீரோடு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். பாதாளக் கொறடாவால் குறுக்கும் நெடுக்கும் கிணறு கிழிக்கப்பட்டு அதன் சருமம் ஆகிவிட்டது தண்ணீராக. செல்லும் குரங்குகளுக்கும் உடலே முள்ளான பாதாளக் கொறடு மௌனமாக
ஆழங்களோடும் பேசா மலிருக்கும் பாறைகளோடும் பேசி மூழ்கிவிடத் துணிந்த செப்புக் குடங்களையும் நிர்வாணத்தைத் தேடிப்போய் நைந்துவிட்ட ஆடைகளையும் நீரின் முகப்பில் கொண்டுவந்து அம்மணப் படுத்துகிறது. தேடிக் கொண்டிருப்பது நீர்ப்பரப்பிற்கு இழுத்து வரப் பட்டவைகளின் அவமானத்தையல்ல. பாலிய தேகத்தை. வெந்தய டப்பாவுக்கும் கொதித்து வடி தட்டை தள்ளப்போகும் உலைக்கும் இடையில்தான் காணாமல் போனான். தலை மேலுள்ள வளையத்தோடு முடிச்சிடப்பட்ட மூடமுள் இரும்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சொர்பாணமாகப் பாய்கிறார்கள். உறைந்து நிற்கும் மீன்கள் திடுக்கிட்டு அசைக்கின்றன கண்ணாடியை, உடைந்துவிட்ட நீரில் அவர்களின் தலைகள் காலி இளநீர் குடுக்கைகளாக மிதக்கின்றன. கண்ணாடிக் கிணற்றின் தரையைத் தொட்டவர்கள் யாருமில்லை. விளையாட்டிற்கேனும் மூழ்கி மண்ணெடுத்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? கிணறு கொஞ்சம் ஆழமானது காகட்டான் பூவைப்போல்.
முன்பிருந்த நாட்களில் கிணற்றின் புறங்களிலிருந்து பிரிந்து சென்ற வாய்க்கால் நீர் கண்ணுக்கெட்டாத தூரம் வரை போய் பச்சையும் நீலமும் கலந்து செம்மஞ்சளாக திரிபுறும் அந்தியிலிருந்து விடியல் வரையும் விடியலிலிருந்து அந்தி வரையும் பாயும். கிழக்கே சூரியன் எழுகை மேற்கே சிறுவனத்தில் முடிய, வடக்கே ஈசான்யம், தென்கிழக்கில் இரவிலே நட்சத்திரங்களின் சரிவு எனத் தான் நகரின் தோற்றம். ஏனோ தன்னை மீறி நகரம் விரிவுற நிலத்தை விற்றவர் களின் வேண்டுகோளுக்கிணங்கி அறுவடை சென்றதும், நீர் உறிஞ்சியாக செயல்பட்ட கலாய் பைப்புகள் கழட்டி நீக்க வாய்க்காலில் படித்திருந்த பாசி உலரத் துவங்கியபோது வரப்புகள் இடித்துச் சமமாக்கப்பட்ட பூமியில் கற்களும் கம்பிகளும் விதைக்கப்பட கிணற்றின் கரையில் சிறு குன்றென குவிந்திருந்த நொறம்பு மண்தான் மீண்டும் மீண்டும் வயலாக மாறிவிடத் துடிக்கும் நிலத்தின் சதுப்பை தணித்தது.
இவ்வாறாக நிலைபெற்ற குடியிருப்பில் பழைய நினைவில் நீரருந்த வரும் வறண்ட காற்று மேலும் வறண்டு குடித்தனக்காரர் களின் ஒலிகளைச் சுமந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வீதிகளில் புகுகிறது. அதுவொரு முன்மாதிரி நகரமாக உருவாக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பின் சிறந்த கால்வாய் அமைப்பு கொண்ட குடியிருப்பாக நலச்சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களது கழிவுகளைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும் குழந்தைகள் பூங்காவில் நகரின் வேறு பகுதியிலிருந்து வந்து ஆக்கிரமிப்பு செய்யும் காதலர்களை விரட்டவும் இரவிலே களவுகளைத் தடுக்கவும் இளைஞர்களைக் கொண்ட சுய பாதுகாப்புக் குழுவொன்றும் இயங்கியது. அங்கே வசித்தவர் அனைவரும் தூரத்திலே இருந்த ஆலையொன்றில் பணிபுரிந்தனர். இங்கிருந்து பார்த்தால் அங்கே பெரிய உலைகளில் புகை போவது மட்டுமே தெரியும். அங்கே என்ன காய்ச்சுகிறார்கள்? ஏது உருக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆண்களும் பெண்களும், இரவிலும் பகலிலும் மாறி மாறி ஆலைக்குப் போய் வந்து கொண்டிருப்பார்கள். ஆலைகள் உருவாக்கும் இருண்ட வானத்திற்குப் பதிலாக நட்டு வளர்க்கப்பட்ட மரங்களுக்குப் பின்னால் எப்போதும் பாதி மூடிய கதவுகளுக்கு வெளியே தானே அடித்துக் கொண்டிருக்கும் காற்றிலும் வெயிலிலும் நிழல் மயானம்தான் குடியிருப்பு
வாழ்க்கை அழைத்த, அழைக்காத பாதையில் எனது உறவுகள் தூரத்து நகரங்களுக்கு சென்றுவிட்டபின் வாழும் சமூகத்தோடு என்னை இணைக்குமுகமாக எனக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர், மின்சாரம் இவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட எனது வீட்டில் தனிமையில் இருந்தேன் விடுதலையாய். எனது நடை சுருங்கி வீட்டினுள் வருகிறது ஒற்றையடிப் பாதை. நான் தூங்கி எழுந்தோ, எழாமலோ போகின்ற நாளில் ஜன்னல்களும் கதவுகளும் பிணைப் பிலிருந்து விடுபட்டுவிடும். சுவர் ஏறி உலகையே கைப்பற்றத் துடிக்கும் உன்னி மலர்க்கொடிகள் தாழ்வாரத்தையும் கடந்து உள்ளே வர எனது வீட்டைக் கள்ளமும் பாழும் சூழ்ந்து கொள்ளக்கூடும். அப்போது நானோ எனது பிணமோ வெளியேற, வெளியேறிக் கலைந்து போகும் ஒன்றையடிப் பாதை கூட.
அவன்முன் இல்லாத இளமையுமற்ற, முதுமையும் பெறாத குருடன் முன்வரிசையில் கலந்து வளர்க்கப்பட்ட உக்கிர நிற மலர் மரங்களடியில் வசிக்கிறான். நானும் அவனைக் குருடனாகவே எண்ணுகிறேன். எனக்கு வீடும் எனக்காக விட்டுச் செல்லப்பட்ட கிண்ணிகளும் கோப்பை களும் உண்டு. அவனுக்கு அவனே வீடு. இடாமலும் தொடாமலும் இருக்கும் வேளையில் அவனது பிட்சைப் பாத்திரத்தில் ரத்த நிற மலர்களும் பவள மல்லியும் பூத்திருக்கிறது. விரல்கள் உதட்டை அறிவதுபோல் என்னையும் அவன் அறிவான். எனது வழியில் நான் கடந்து செல்கையில் பெட்டியிலிருந்து சில சிகரெட்டுகளை அவன் மடியில் எறிந்து செல்வேன். அவன் புகைப்பிடிப்பதை ஒருவர் கண்டால் உணர முடியும், பாரம்பரியமாக புகைப்பவன் அல்ல என்பதை. அவனுக்கு சிறார்கள் தேடூ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இன்றோ, நேற்றோ, நாளையோ குடியிருப்போர் நலச்சங்கம் கூடுகிறது. சிறு பள்ளத்தைத் தூர்ப்பது, வேகத்தடை உருவாக்குவது, சால வாலை சுழற்றிப் போகும் பன்றிகளுக்கும் திறந்த கதவினூடாக உருளைக்கிழங்கைத் தூக்கிச் செல்லும் குரங்குகளுக்கும் எதிராக
எதற்காகவும் கூடும் நலச்சங்கம் கூடுகிறது. சிங்கத்தின் கால்களால் தாங்கப்பட்ட இருசு மர மேஜை முன் கூடியபோதும் மௌனமாய் இருக்கிறார்கள். மேஜைக்கு முன்னாலும் பின்னாலும் கூடியவர்கள் இன்னும் கலைக்கவில்லை மௌனத்தை. அப்படியொரு அமைதி. குருடனுக்கு எதிராக எடுக்கப் போகும் முடிவுக்கு முன்தான். இதொன்றும் அறியாத தேடூ அவரைப் பந்தலின் செழிப்பைப் பற்றியும் வெண்கல் தோடுகளை ஒத்த கவரை மலர்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கலாம். சங்கத்தில் கூடியிருப்போர் குடியிருப்போர் நலன் சார்ந்தே கூடியிருக்கிறார்கள். அவன் இங்கே குடியிருப்பவன் அல்ல. இருந்தாலும் அவனது தோள்களின் மீதாக நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் ஒப்புமைகளுக்கு அப்பாற்பட்ட இசைவிருக்கும். விடியலில் மரமல்லி மரங்களடியிலும் மதிய வெயில் பொடிந்து
தடிக்கும் நாளில் கல் கரையும் முன் பறம்பை மரத் தடிக்கும் நாளில் நித்யத்தில் நித்யமும் மாறாது இடம் மாறிக் கொள்வான். உதிரும் பூக்களோ ஊரும் நிழல்களோ ஆகாய மார்க்கத்தில் தொட்டோ பரவியோ ஒரு துருப்புச் சீட்டென காலநினைவூட்டி இடம்பெயரவில்லை என்பேன். மாற்றவியலாதபடி அவனுள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதுகளால் உயிர்ப்புள்ள கடிகாரம்தான் அவன்.
இளமையாகப் பொங்கி தன் தசைத் திரள்களில் பூரித்து ரசமிழக்கும் கண்ணாடியைப்போல் பார்வையிழப்பை அடையவில்லை அவனது கண்கள். பார்த்துக் கொண்டிருக்கும்போதே மாட்டி வைத்திருக்கும் ஆணியிலிருந்து விழுந்துவிடும் புகைப்படக் காட்சியென இரு கண்களொன்றில் பாதாளத்தில் வீழ்ந்தும், மற்றொரு கண்ணில் ஆகாயத்தில் பறந்து மறைவதாகக் காணும் காட்சிகள் கரைந்து விடுகின்றன. மேலே எரவானத்தில் போய் செருகிக் கொண்ட காண்உலகை இழுத்து நிறுத்த விழிகளைக் கீழிருந்து மேலாகச் சுழற்றுகிறான். யாராலோ வைர ஊசியால் சிறுசிறு கட்டங்களென அறுக்கப்பட்டு போராடி இழுத்து நிறுத்திய காட்சிகள் உதிர்ந்தன. முடிவற்ற வெண்மை பிறப்பெடுக்கிறது. இருட்டறையில் சணல் கயிற்றில் காயவைக்கப் பட்ட புகைப்பட வில்லைகள் கிளிப்பில் இருந்து விடுபட்டு ஆழத்திற்கு விரைவது போன்ற அவனது காணும் புலன்களை அள்ள வெண்ணிறப் பாதாளத்தில் குனிகிறான். வெண்ணிறத்தின் துன்பத்திலிருந்து விடுபட, விடுவிக்க ஒரே நாளில் கடந்துவிட்ட ஒரு யுகத்தின் பகலிரவு களாய் நிழல் மாறாட்டங்களின் பாலையிலிருந்து பிரிந்துவந்த தனி மணலின் கண் உறுத்தல் முடிவற்று நீள விழி பாப்பா மிகத் துயருற்றாள்.
உதிர்ந்த கட்டங்களுனே கைகளால் நிமிட்டி நிமிட்டி நிறுத்த மணலின் தனித்துகள் பாப்பாவைக் குத்திவிட்டபோது இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத சப்தங்களைப் போன்ற தனி வண்ணங்கள் பாப்பாவிலிருந்து கொட்டின. முதலில் சிகப்பு, சமையலறையில் பெருக்கெடுத்து வீடு நிறைய நிரம்பத் தொடங்கி வாசல் வரை வந்து நின்றது. வானம் ஓட்டை விழுந்து கொட்டும் இடைவிடாத மழைபோல் மஞ்சள், உலகமே மஞ்சளாக மாறிவிட்டிருக்கும் இந்நேரம். இதில் நனைந்த அனைவர் மீதும் காளான் முளைக்குமளவிற்கு மஞ்சள் கொட்டென்று கொட்டி அவனுள் நிரம்பி விட, சின்ன பளிங்கு மண்டபத்தில் இசைத்த இசை நின்று யாவரும் சென்ற பின் கூட்டிப் பெருக்கி ‘வாரும் பெண்ணின் துடைப்பம் பட்டு எழும் சிதறிய முத்துக்களின் ஸ்வரமாய் முதுகுக்குப் பின்னால் சற்றே கால் நேரம் வழிந்து அடங்கிவிட்டது நீலநிறம். பின் சப்தமும் வண்ணங்களும் இல்லை, மௌனமும் இல்லை, கோரங்களும் இல்லை. உறக்கம், உறக்கம் போன்ற ஒன்று.
விழித்தெழுந்தால் பழுதில்லாமல் மிக நெருக்கமாக பத்திரமாய் நகரத்திலிருந்து இறக்கி விடப்பட்ட அசையாத யானை ஒன்று நிற்கிறது. அது ஏற்கனவே இறந்துவிட்டதால் எறும்புகளைக் கண்டு அஞ்சி காதை விசிறி, தும்பி சுழற்றி முன்னும் பின்னும் அசைந்து உதிர்ப்பதில்லை இருளை. அது அசையும் என்றும் பெண்கள் சாணி தெளித்துக் கோலம் போட்டவுடன் அதிகாலை மசமசப்பாய் யானை சென்றுவிடும் என்றொரு நீண்டகால நம்பிக்கை. ஆனால் யானை இன்னும் நெருங்கி வந்து பாப்பாவுக்குள்ளேயே விழுந்துவிட்டது. ஒருவகை நிறைவு, ஒருவித உவகை தோன்ற யானையை மெல்ல பழக்கி உருட்டி விளையாடுகிறது பாப்பா. உருட்டி உருட்டி வெளியே தள்ளிவிட நோக்கமாயிருக்கும் பாப்பாவுக்குள் விழுந்துவிட்ட யானை பெரியது. பாப்பாவோ யானையின் கண் அளவு சிறியது. பாப்பாவுக்குத் தெரியும், பூமிக்குக் கீழேயும் பரலோகங்களுக்கு அண்டைவரையிலும் யானை சுழல்கிறது என்று. சுழற்றுவது பாப்பாதான். உருட்டிப் பெரட்டி எவ்வாறேனும் வெளியே அனுப்பவிட இந்தச் சின்ன இமைகளால் மாளாதென்றும் சித்தெறும்பு அளவேனும் கிள்ளி எறிய முடியாது யானையின் கருஞ்சதையை என்றயர்ந்தபோது பாப்பாவுக்குள்ளே யானையை பத்திரமாக வைத்து இறுகப்பூட்டி இமைகள் விழிகள் மீதாகக் கவிந்து கொண்டன.
சிள் வண்டுகளும் கத்தலை நிறுத்திவிட்ட விடியலில் தனி ஏர் பூட்டி நிலத்தில் உழத்தொடங்கி, கஞ்சிக்கும் கூழுக்கும் தான் தேடூ உழுதானென்றாலும் உழுதுகொண்டே செக்கச் செவேல் சூரியனுக்குள்ளே
போய் குறுக்கும் நெடுக்கும் சால் பிடிக்கையில் உழவன் மட்டுமே அறிந்த சூர்யனின் குளுமை உணர்ந்த தேடூவுக்கு வேண்டாம் அக்குளுமை. வேண்டும் எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இருளை சுட்டெரிக்கும் சூரியன். உச்சி வெயிலில் வந்து நிற்கிறான் தேடூ, பாப்பாவுக்குள் விழுந்திருக்கும் யானை நிழல் தேடி மரத்தடிக்கு சென்றுவிடும் என்று.
அதுவே ஒருவகை நிழல்தான், தன்மேல் போர்த்திக் கொண்டுள்ளது. யாருக்கும் கட்டுப்படாத மரணத்தை எல்லா நிழல்களின் தந்தையான சூரியன் நாளெல்லாம் அதனிடம் மன்றாடிக் கேட்டும் பயனற்றுத் தளர்ந்து அஸ்தமிக்கும்போது தனக்குள் பொங்கும் நிறமற்ற ரௌத்ரத்தில் மண்ணைப் பிறாண்டுவதும் ஆகாயத்தில் கைகளை வீசி அலைவதுமான அவன் செய்கை கண்டு இரக்கமுற்றோர் கண் சிகிச்சைக்கான மருத்துவ மனையொன்றில் சேர்த்துவிட மருத்துவர்களின் கேள்விகளாலும் கருவிகளாலும் துளைத்தெடுக்கப்பட்டான். கேள்விகள் ஒன்றுக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டவனின் கண்களைப் பிதுங்கி நுண்நோக்கியால் பார்க்க எடுக்க இயலாதபடி பழஞ்சாவி ஒன்று விழுந்துவிட்டது
என்றது நுண்நோக்கி. அதை மறுத்த பிறிதொரு தொலைநோக்கி உள்ளே பூ விழுந்துவிட்டது என்றது. இன்னொரு மருத்துவர் கோடை மின்னல் இதனுள் பாய்ந்துவிட்டதென்றார். கண் மூடி சிந்தித்த மருத்துவச்சி இது ஒரு சாபம் என்றாள். அவ்வழியே மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த அறிஞர் ஒருவர் இஃது கல்லாமை என்க, உடன் வந்த கவிஞர் கனவில் காகங்கள் இவன் கண்களைக் கொத்தி இருக்கலாம் எனக் கூற, வருவோரும் போவோரும் இது பூனை, இல்லை இல்லை இது புலி, இது தீட்டு, பித்ருக்களின் கோபம், இது நரிகளின் இரவு, இல்லை, ஆந்தைகளுக்கு வழங்கப்பட்ட பகல், இன்னும் சிலர் இமைகளுக்குள் எட்டிப் பார்த்து கண்ணீரே சுரக்காத வறண்ட நிலம் என்றெல்லாம் கூற, அறிஞரும் வல்லுநரும் அவ்வழியே சென்றோரும் கலிம்பிற்கேனும் குருட்டை, யானை என்று சொல்ல இயலா விழிகொண்ட அவர்களின் குருட்டுத் று தனத்தில் வெட்கி யாரும் அறியாமல் மருத்துவமனை நீங்கி இம்மலர் மரங்களடியில் வாழ்வு கொண்டான்.
தன் விதியின் பயன்தான் யானையோடு தன் மிச்சமிருக்கும் வாழ்க்கை என அமைதி கொண்டபோது சுனைகளைக் கடந்து வரும் காற்றின் குளிர்மை பெருகி, பெருகிய காற்று ஓயும்போது இந்த வாழ்வில் சிரசை மார்பின் மீது தொங்கவைக்கும் நிலைக்கு யார் பொறுப்பு? யானையா? தன் விதியா? என எழும் விடைதெரியா கேள்வியால் மீண்டும் கோபம் பிறக்கிறது. பிட்சைப் பாத்திரத்தில் மீந்திருக்கும் அன்னத்தை வாரி இறைத்து வண்டை வார்த்தைகளை சப்தமின்றி உதிர்க்கிறான்.
“யார்மீதும் படாமல் மையமென அவனைக் கொண்டு வட்ட திசையில் போய் விழுந்தன. விழுந்த அன்னத்தைக் காக்கைகள் கொத்தித் தின்றுவிட வாயிலிருந்து தெறித்த வண்டை வார்த்தைகள் அறுக்கப்பட்ட சதைத்திரளாய், யோனியாய், முலையாய், புட்டமாய், பூலாய், ஸ்தூல வடிவில் வீழ்ந்து பறிக்கப்பட்ட பட்ரோஸ் பூக்களாய் பொழுதெல்லாம் மினுங்கிக் கொண்டிருந்துவிட்டுப் பட்டுப்
போயின. ஆலைக்கு அவ்வழியே சென்று வந்த ஆண்களும் பெண்களும் ஓரக்கண்களால் உள்ளுக்குள் அவைகளை ரசித்தபடி சென்றனர். ஒருவர் மேல் ஒருவர் விளையாட்டுப் பகைகொண்ட இளைஞர்கள் எதிரிகளின் வீட்டு மாடத்திலும், சுற்றுச்சுவர் முகப்பிலும் சிதறாமல் காகிதத்தில் குறிகளை அள்ளி வந்து ஒட்டிவைத்து குறும்பு செய்தனர். ஒட்டி வைக்கப்பட்ட குறிகளைப் போதுமான அளவு ரசித்தபின் வீட்டிலுள்ள பெண்கள் வெளிப்படையாகத் திடுக்கிட்டனர்.இ ப்போதுகூட தேடூ மேல் யாருக்கும் கோபம் வரவில்லை. சின்னஞ் சிறுவர்களும் சிறுமிகளும் அவைகளை வீட்டிற்கே கொண்டுவந்து தம் விளையாட்டினூடே பயன்படுத்தியபோதுதான் பெற்றோர்களின் கோபத்தை தேடூவுக்கு எதிரான தீர்மானமாக மாற்றிச் செயல்படுத்த சங்கம் கூடியது. சங்கப் பலகைமேல் தன் துளசி மாடத்தில் தினமும் காலையில் எந்தக் காளையோ கொண்டுவந்து வைத்துப் போகும் தேடூ வாயிலிருந்து தெறித்த, புணர்ந்த வடிவில் உள்ள இருபால் குறிகளை குருடனான தேடூவுக்கு எதிராக வைத்தாள். கல்லாய் இருந்தால் லிங்கமென வழிபடலாம். இன்னும் சற்று நேரத்தில் வாடிவிடப்போகும் இவைகளை என்ன செய்வது. சங்கத்தில் கூடிய பலரும் அவர்தம் காகிதத்தில் சுற்றிக் கொண்டுவந்த மடக்… கழுதை… திருட்டு… கிழக்… தடிசு… நாய்… நரி… குறிகளையும் பலகைமேல் பரப்பினர். அவை இவர்கள் யாரும் பார்க்காதபோது ஒன்றை நோக்கி ஒன்று ஈர்க்கப்பட்டு நகரத் துவங்கின, பார்க்கும்போதோ அசையாமல் நின்று விடுகின்றன.
குற்றமெனில் தண்டிக்கலாம். இயலாமையின், ரௌத்ரத்தில் வெளிப்படும் வார்த்தைகளுக்கு என்ன தண்டனை அளிப்பது என மௌனித்திருந்தனர். இது குற்றமல்ல என்றாலும் ஒருவகை துன்புறுத்தல், நமக்கு நிம்மதியின்மை என ஒருவரும், தவறுகள் மட்டுமே புதிது புதிதாக பிறப்பெடுப்பதையும் தண்டனை மிகவும் அலுப்பூட்டும் விதத்தில் பழமையாக இருப்பதையும் சிலர் சுட்டிக் காட்டினர்.
நாம் இங்கே கூடியிருப்பது குற்றம் சுமத்தவோ தண்டனை அளிக்கவோ அல்ல. நமது குழந்தைகள் உரிய பருவம் அடைந்த பின்போ, குழந்தைகளின் உறக்கத்தில் எழும் அறை சப்தங்களைக் கொண்டோ, அவர்கள் அறிந்துகொள்ளும் பாலியல் செய்கைகளை நம் கண் முன்னே நகரத்துடிக்கும் வார்த்தைகளின் ஸ்தூல வடிவத்திலிருந்து அறிந்து பிள்ளைகள் மனம் பின்னமுறாமல் காக்க வேண்டும் என்றார். மத்திய வயது மெலிந்த தேக பெண்ணொருத்தி. அவர் கூறிய யோசனையே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இரக்க உணர்வோடு அவன் நடத்தப்பட வேண்டுமெனும் சிலரது கோரிக்கையும் ஏற்கப்பட யோசனையை நிறைவேற்றும் நாள் குறிக்கப்பட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞர்களிடம் விடப்பட்டது.
இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தபடியே அந்நாளும் வர, குடியிருப்பின் புறம்பே இயங்கிய பேக்கரியிலிருந்து மூன்று சக்கர சைக்கிளை இரவலாகப் பெற்று வந்து தேடூவின் அழுக்கு முடிச்சுகளை வண்டியில் ஏற்ற, நல் உள்ளம் கொண்ட சிலர் நேற்றிரவே கிண்டிய உணவை அவனது பாத்திரத்தில் நிரப்பினர். புட்டிகளில் தண்ணீர் அடைத்து அவனது அண்டையில் வைத்தனர் சிலர். பலவந்தத்திற்கு இடமளிக்காமல் தேடூ இளைஞர்களிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான்:
சிறுவர்களும் இக்கூட்டத்தில் சேர்ந்துகொள்ள ஆரவாரமாக தேடூவை ஏற்றிக்கொண்டு ஊர்வலம் புறப்பட்டது. குடியிருப்பின் பிரதான பாதைகள் வழியாக ஊர்வலம் நகர்ந்து சென்றது. தேடூ அவர்களிடம் நாம் எங்கே செல்கிறோம் தம்பிகளே என வினவ, நாம் உல்லாசம் காணப் போகிறோம் என்றனர். ஜன்னல்களுக்குப் பின்னாலிருந்தும் நிலைப்படியில் நின்று பலரும் ஊர்வலத்தைக் கண்டனர். அவனது வலிந்த தேகத்திற்குப் பொருந்தாத கந்தல் ஆடை பறக்க ட்ரை சைக்கிளின் மேல் நின்றிருந்தான்.
சிறு மேட்டிலிருந்து தடதடவென இறக்கத்தில் வண்டி விசையாய் விரைய சிறுவர்கள் உற்சாகக் குரலெழுப்பிப் பின்தொடர்ந்தனர். இம்முடிவை எடுத்தவர்களுக்கே எப்போதும் தீர்மானத்தோடு நிறுத்திக் கொள்வதுபோல் இவன் விஷயத்தையும் விட்டிருக்கலாம். காலம் கடந்த தண்டனையாகவும் அபவாதமாகவுமே தோன்றியது இது. எனினும் இதைவிட மென்மையான, இதைவிடக் கடினமான தண்டனையை யாராலும் வழங்க முடியாதுதான். காலையில் கிளம்பிய ஊர்வலம் மதிய வேளை வரை இப்பகுதிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து இக்கூட்டம் பிறக்கப்போகும் கிறிஸ்துவின் பிறப்பை வீடு வீடாகச் சென்று அறிவிக்கும் ஏழ்மையான இளைஞர்களிடன் பஜனைக் குழுவைப் போல் தோற்றமளித்தது. வண்ண உடையணிந்து பனி நிற தாடி வைத்து குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சாண்ட்டா கிளாசாவாக குழுவின் நடுவில் அவனிருந்தான்.
நகரத்திற்குள்ளாக சென்று விரிந்த சாலைகளின் வழியாகவும் மைய வீதிகளோடு இணைக்கும் குட்டை சந்துகளின் உள்ளும் புறமும் தலைகீழாகவும் சுழற்றி மழற்றியும் தான் எங்கிருக்கிறோம் என குருடன் அறிந்துகொள்ள முடியாதபடி திரும்பத் திரும்ப பல வழிகளிலும் ஒரே பாதையிலும் சுற்றி வந்தனர். அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை இதுதான்: வீடுகளில் நாம் நடந்து செல்லவே இடறும்வகையில் பெருகிவிட்ட நாய்களையும் பூனைகளையும் கோணிப்பையில் கட்டி அவைகளின் மோப்பத்தைக் குழப்பி வேறெங்காவது விட்டுவிடுவதைப் போல தேடூவையும் அவனறிந்த பாதைகளை அர்த்தமற்ற வழிகளால் குழப்பி இப்பகுதியிலிருந்து அகற்றி தூரத்தில் விட்டுவிடுவது. இச்சிறு நகரத்தில் தொலைதூர மென்பது இல்லை என்றாலும், நாள் முழுக்க செய்த பிரயாணத்தால் வேறொரு நகரத்தில் தான் இருப்பதாக குருடனே என்னும்படி சுற்றிவந்து பெரிய கோயிலொன்றின் கோபுர வாசலில் இறக்கி விட்டுத் திரும்பிச் சென்று இனிமேல் எப்போதும் அவன் காணப்படவே மாட்டான் என அறிவித்தனர்.
அப்படியே சில நாள் தேடூ காணப்படவில்லை. குடியிருப்பு வாசிகள் அதற்காக நிம்மதி அடையாமல் அதை அன்றே மறந்து விட்டனர். தேடூவின் வார்த்தைத் தெறிப்புகளைக் காணமுடியாமல் சிலர் ஏக்கமுற்றனர். நான் ஒரு நண்பனை இழந்ததுபோல் வருத்தமுற்றேன். என் வருத்தம் நீடித்திருக்க விரும்பவில்லை. அது நீடித்திருக்கவும் இல்லை. தேடூ அகற்றப்பட்ட மறுநாள் காலையில் நிகழ்ந்த இன்னொரு துக்கத்தால் என் வருத்தம் கலைந்து போனது.
என் அயலவள் தூங்கி எழுந்த தன் சின்ன மகனின் படுக்கையை மடிக்கும்போது போர்வையிலிருந்து பேன்கள் இறங்கிப்போனதைப் பார்த்தாள். அதைப் பிறரிடம் பகிரும் முன்னே சிறுவன் காணாமலும் போய்விட்டான். அவள் சிறுவனைக் கவனிக்காமல் தீய சகுனமென பேன்கள் இறங்கிப்போனது பற்றியே அதிகமும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டான். அதேநாளின் இன்னொரு பொழுதில் தேடூ மீண்டும் எப்போதும் அவனிருக்கும் இடத்தில் தோன்றினான். நாய்களும் பூனைகளும் எவ்வாறு பிறந்த இடத்திற்கே திரும்பி விடுகின்றதோ அவ்வாறே இவனும் திரும்பி இருக்கலாம். ஒருவேளை திரும்பாமலே போய் விடுகின்ற நாய்களும் பூனைகளும் தாம் நேசித்த மனிதர்களின் செய்கையில் வருத்தமுற்று யார் முகத்திலும் விழிக்காமல் இருந்து விட எண்ணியிருக்கலாம். தேடூ மீண்டும் தோன்றியது பலருக்கும் வியப்பைத் தந்திருந்தாலும், சிறுவன் காணாமல்போன பதற்றம் வியப்பை உரையாடலாக மாற்றவில்லை. உண்மையில், சிறுவன் காணாமல் போய்விட்டானா? இறந்துவிட்டானா? என்பதை உறுதிகொள்ள முடியவில்லை. ஏனெனில் படுக்கையிலிருந்து இறங்கிச் சென்றது பேன்களா இல்லை மச்சங்களா என உறுதியாகத் தெரியாமல் அவளும் அவர்களும் குழம்பி இருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே யாரிடமாவது இதைப் பகிர்ந்திருந்தால் தீமையின் பாரம் குறைந்திருக்கும் எனப் பெண்கள் அங்கலாய்த்தனர். காணாமல் போக்கடிப்பதற்கும் காணாமல் போனவனைக் கண்டுபிடிப்பதற்கு மான இழை ஒன்றேதான். ஆயினும் அவ்விழையைக் கண்டுகொண்டவர் யார்? தேடாத இடமெல்லாம் தேடி கண்ணாடிக் கிணற்றின் கரையில் துக்கப்படுகிறார்கள். துக்கத்தில் கும்பலாகக் கூடிவிட்ட வர்களின் தோள்களை விலக்கி கிணற்றின் முகப்பிற்கு வருகிறான் தேடூ அவனது கரம் பிடித்து யாரும் அழைத்து வரவில்லை. அங்கே தளர்வும் சலிப்புமுற்ற இளைஞர்கள் கரையேறி தரையில் கால் பாவ முடிய யாமல் ஆழத்தில் இறக்கிவிடப்பட்ட ஏணிகளையும் கரையேற்றிவிட்டனர். கிணற்றை விட்டுக் கரையாத துக்கத்துடன் கலைய எண்ணியபோது தேடூவாகிய குருடன் கடப்பாரையாகக் கிணற்றினுள் பாய்கிறான். நீச்சல் அறியாதவர்க்கும் மும்முறை வாழ்வளிக்கும் நீரொப்ப அலையின் தளும்பல் போக்கில் மூச்சடக்கி முங்கி வலிந்த பாதங்களால் ஆகாயத்தை உதைத்து மேகங்கள் அலைந்தோட பூமியின் உள்ளே போக இருக்கும் ஒற்றையடிப் பாதையில் தலைகீழாகக் கண்டதையும் காணாமல் போனதையும் கண்டு சிறுவனை அழைத்துவர இதுவரை யாரும் திறந்து பார்க்காத அண்ட லோகங்களுக்கு விரைகின்றான்.
காத்திருக்கிறோம் கரையில் வாழ்வின் நாட்களில் கரைந்து போகும் துக்கத்திலும் இயலாமையிலும் கைகளைப் பிசைந்தபடி.

குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020 – விருட்சம் நாளிதழ்