
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 11
”டேய் கதிர், ரிசல்ட் வந்துடுச்சாம்”வேகமாக வீட்டிற்குள் வந்தாள் கடைசி சித்தி.
அப்போது அவன் வீட்டின் முகப்பு ஜன்னலில் மடங்கி உட்கார்ந்து கதைப்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
ராயர் சார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகம். மாயவரத்தின் பொது
நூலகத்திலிருந்து பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பெரிய
பைகள் நிறையப் புத்தகங்களைத் தூக்க முடியாமல் சுமந்து எடுத்து வருவார்
அவர். அவருடைய தனிப்பட்ட ஆர்வமே அதற்கு காரணம். வாசிப்பில் ஆர்வம்
கொண்டவர்களுக்கு நல்ல புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. அனேகமாக
ராயர் சார் எடுத்துவரும் புத்தகங்கள் அனைத்தும் வீட்டுக்கு வந்துவிடும்.
அவன் பள்ளி, நல்லூரில் உள்ளது. அம்மா வழி தாத்தா அவனை அழைத்துவந்து
ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அப்பா ஒன்றும் சொல்லாமல்
ஒப்புக்கொண்டார். நல்ல வேளையாக அவனுக்கும் படிப்பும் கொஞ்சம் ஒட்டிக்
கொண்டது. இதோ, பதினோராம் வகுப்பு ரிசல்டும் வந்துவிட்டது. நாட்கள்
ஓடியதே தெரியவில்லை.
ஆறாம் வகுப்பில்தான் ஆங்கில வாக்கியம் எழுத அவன் கற்றுக்கொண்டான்.
ஆரம்பத்தில் கணக்கும் கதிருக்குப் பாகற்காய்தான். சுப்புணி சாரின் கைகள்
கதிரின் முதுகில் விளையாடாத நாட்களே இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். ஆனால், அவரது ’கைவண்ணமோ’ என்னவோ, ஏழாம்
வகுப்பில் காலாண்டுத் தேர்வில் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினான்.
அரையாண்டுத் தேர்வில் மூன்றாவது ரேங்க். அதிலிருந்து அவன் படிப்பு
ஏறுமுகம். இல்லாவிட்டால் பாட்டியிடம் ’வாய்ப்பாட்டும்’ சித்திகளிடம் வசவும்
யார் வாங்குவது.
இரண்டு நாட்களாகவே ரிசல்ட் வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டு
இருந்தார்கள். இதோ ரிசல்ட் வந்துவிட்டது. நிச்சயம் பாஸ்தான். ஆனால்,
என்ன மார்க் ?
கல்லூரியில் சேரவேண்டும். அதற்குத் தேவையான மார்க் இருந்தால் போதும்.
இல்லாவிட்டால் அப்பாவால் கல்லூரியில் சேர்க்க முடியாது. சித்திகளும்
அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“ அப்படியா… யார் சொன்னது?”
”என் பிரண்டுதான்… ஸ்கூலுக்குப் போயிருந்தாளாம். உன் நம்பர் அவளுக்குத்
தெரியாதாம்”
”நிஜம்மாவா?
“ஆமாண்டா, சீக்கிரம்.. கிளம்பு… குளிச்சிட்டியா இல்லையா”
பதில் சொல்லாமல், உடைமாற்றிக் கொள்ள காமிரா ரூமிற்குள் சென்றான்
கதிர்.
எதிர்வீட்டு அக்கா, பாட்டியிடம் ஏதோ கேட்க உள்ளே சென்றாள். ’பாட்டி
ஸ்கூலுக்குப் போரேன்’ என்று சொல்லிக்கொண்டு படியில் இறங்கினான்.
பாட்டி வீட்டிற்கு இப்போதுதான் வந்தது போலிருக்கிறது. முன் வாசலில்
தாத்தா வளர்த்திருந்த பல வகையான வித்தியாசமான குரோட்டன்ஸ்கள் மதிய
வெயிலில் ஆடிக்கொண்டிருந்தன. நடைபாதையின் வலது புற வேலியில் நுணா
மரத்தின் முல்லைப் பூக்கள் அந்த நேரத்திலும் வாசனையைக் காற்றில் பரப்பின.
தெருவில் நின்ற பெரிய குல்மோஹரின் நெருப்புப் பூக்கள் தரையில்
சிதறிக்கிடந்தன. அகலமான தெரு. நடக்கத் தொடங்கிய கதிரின் மனமும்
சிதறிக்கிடந்தது.
கோடைக் காலத்தில் மெயின் ரோடிற்குப் போகாமல், ரிஷி கோவில் தாண்டி,
இடதுபக்கம் இலுப்பைத் தோப்பில் குறுக்கே புகுந்து மரங்களுக்கு இடையே
செல்லும் தடத்தில் இறங்கி, அறுவடை செய்யப்பட்ட வயலில் கால்தடத்தில்
நடந்து சோழனாற்றுக் கரை ஏறி இறங்கினால் நல்லூர் கடைத்தெரு
வந்துவிடும்.
இலுப்பைத் தோப்பில் இறங்கி லட்சக்கணக்கான காலடிகள் பட்டு
மென்மையாகிவிட்ட பூமணலில் நடந்தான். இலுப்பைப் பூவின் வாசம்
மூக்கைத் துளைத்தது. தோப்பை விட்டு வெளியில் வந்ததும், வழக்கம் போல்
பார்வை கிழக்கிலிருந்து வந்து சேரும் தெருவுக்குச் சென்றது. குளத்திலும்
அல்லியைப் பார்க்க முடியவில்லை.
அறுவடை முடிந்த வயல்களில் விளைந்திருந்த பயத்தங்காயைப் பறித்து,
கைகளில் அடக்கிக்கொண்டு ஒவ்வொன்றாகப் பற்களில் உருவி
இழுத்துக்கொண்டே நடந்தான். பச்சை வாசத்துடன் வாயில் கரைந்தது காய்.
தடத்தில் நடந்து, நான்கைந்து வயல்களைத் தாண்டினால் மரங்கள் அடர்ந்த
சோழனாற்றுக் கரை.
ஆற்றில், ஓரமாக, கணுக்கால் அளவு ஓடிக்கொண்டிருந்த நீரில் நடந்து அதன்
தென்கரையில் ஏறினான். மழைக் காலத்தில் ஆறு நுரை பொங்க
வழிந்தோடும். பாட்டி ஆற்றில் குளிக்கச் செல்வதற்கு அனுப்பமாட்டாள்.
பதினெட்டாம் பெருக்கு அன்றைக்கு மட்டும் விதிவிலக்கு. வேகமாக இவனைக்
கடந்து பொறையாறு பக்கம் பேருந்தொன்று போனது.
அல்லியைவிட மார்க் அதிகம் வாங்கவேண்டும் என்பதுதான் கதிரின் இலக்கு.
அல்லி எவ்வளவு மார்க் வங்கியிருப்பாள்? யார் ஸ்கூல் பர்ஸ்ட்
வாங்கியிருப்பார்கள்? வகுப்பில், இவனுக்கு அப்புறம் அழகன்தான். அவனாக
இருக்குமோ? அல்லது பி செக்ஷன் இளவரசனா?
கதிர் பள்ளிக்கூடம் இருந்த தெருவில் திரும்பினான். ரயில் கேட் மூடியிருந்தது.
ரயில் போயிருக்குமோ? இணையாகச் சென்று கொண்டிருந்த ரயில் பாதையில்
தட தடவென சப்தமிட்டபடி கூட்ஸ் வண்டி ஒன்று தெற்கு நோக்கிச் சென்று
கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும், பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட்
சுவரோரம் நின்றிருக்கும் நெட்டிலிங்க மரங்களும், பிள்ளையார் கோவிலின்
கோபுரமும் தெரிந்தன.
கேட்டைத் தாண்டி கோவில் வாசலைக் கடந்து, அலுவலகப் படிகளில் ஏறி,
வராந்தாவின் வலதுபக்கம் கரும்பலகையில் ஒட்டியிருந்த ரிசல்டைப்
பார்த்த்தான்.
பாஸ் தான். மதிப்பெண்? தமிழ், சரித்திரம், எலெக்டிவ் ஹிஸ்டரியில் நல்ல
மார்க். கணக்கில் நூற்றுக்கு ஒன்று குறைவு. எத்தனாவது ரேங்க்?
பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அலுவலகத்திலிருந்து யாரோ வெளியில்
வந்தார்கள். வந்தவர் இவனருகில் நின்று, தோளில் கைவைத்தார். கதிர்
திரும்பிப் பார்த்தான். தமிழாசிரியர். பதற்றமானான்.
”சார் குட்மார்னிங்” உள்ளங்கை வியர்த்தது.
”வாடா கதிர். ஹெட்மாஸ்டர் உன்னைப் பார்க்கக் கூப்பிடுகிறார்”
எதற்கு? கதிருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கையில்
அப்பாவுடன் அவர் அறைக்கு வந்ததுதான். ’படவா’ என்று சொல்லி
கன்னத்தில் அறைந்தது நினைவுக்கு வந்தது. ஏதோ அன்று தவறாக
நினைத்துவிட்டார். வகுப்பாசிரியர் கதிரைப் பற்றிச் சொன்னவுடன், ’அப்படியா’
என்று சொல்லி ’ஒழுங்கா படி’ என்று சொல்லி அனுப்பினார். அவருக்கு அது
நினைவில் இருக்குமா?
“உள்ளே வா….”
கிளார்க் ரமணி சாரும் பியூன் வெங்கட்ரமணியும் ஓரமாக நின்றிருந்தனர்.
மேஜையில் தலைமையாசிரியர் ரவுண்ட்ஸ் வந்தால் அவர் கையை
அலங்கரிக்கும் பிரம்பு. உலக உருண்டை நீல வண்ணத்தில். இந்தியா மேப்
ஒன்று சுவரில் தொங்கியது. வலது பக்கச் சுவரில், பிஸ்கட் நிற பலகையில்
முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் பட்டியல் வெள்ளை வண்ணத்தில்
எழுதப்பட்டிருந்தது.
“சார்.. இவன்தான் ஸ்கூல் பர்ஸ்ட்.. கதிர்..எங்க ஊரு பையன்தான்…”
’ஸ்கூல் ஃபர்ஸ்ட்..?’ என்ற தலைமையாசிரியரின் குரல் கேட்டது. குப்பென்று
இவனுக்கு வியர்த்தது. கை தன்னிச்சையாக இடது கன்னத்தைத் தடவியது.
தலைமையாசிரியர் ஏதோ சொல்லி வாழ்த்தினார். சித்திகளின் பெயரைச்
சொல்லி தமிழாசிரியர் அறிமுகம் செய்தார். எதுவும் காதில் விழவில்லை.
கதிருக்குக் கைகால்கள் நடுங்கி, உள்ளங்கை வியர்த்தது. அந்த இடத்தைவிட்டு
வெளியேறத் திரும்பினான்.
தலைமையாசிரியருக்குப் பின்புறமிருந்த ஜன்னல் வழியாக, மதிய வெயிலில்
செம்பருத்தி ஒன்று பளிச்சென்று எட்டிப் பார்த்தது.
இப்போது, அப்பா இருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நினைத்தான்
கதிர்.
முன்னாள் மாணவர்களின் பட்டியலில் தனது பெயரும் ஏறும் என்று மனதுக்குள்
நினைத்துக் கொண்டான் கதிர்.
கதிருக்கு அந்த நாள் திடீரென்று நினைவில் வந்தது. தமிழாசிரியர் ஏன் அப்படி
அன்று சொன்னார்?
பள்ளிக்கூட வளாகத்திற்குள் இருந்த அந்தக் கோவிலில் இறுதித் தேர்விற்குப்
பணம் கட்டுவதற்குப் பூஜை நடந்தது. கற்பக விநாயகருக்குமுன் பதினோராம்
வகுப்புத் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.
கோவிலின் சிறிய மண்டபத்தின் சிமென்ட் தரையில் மாணவிகள்
அமர்ந்திருந்தனர். ஓரத்தில் ஆசிரியர்கள், எதிர்புறம், ஆசிரியைகள்.
மாணவர்கள் அனைவரும் வெளியில் நின்றனர். முகமதுவும் பஷீரும் சற்றுத்
தள்ளி நின்றார்கள்.
தமிழாசிரியர்தான் முதலில் நின்றிருந்தார். இடுப்பில் துண்டு. குருக்கள் பூஜை
ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.
கோவிலின் தென்புறம் பள்ளியின் அலுவலகமும் ஹெட்மாஸ்டர் ரூமும். அவர்
இன்னும் வரவில்லை. தீபம் காட்டும்போது வரலாம். கோவிலுக்கும்
அலுவலகத்திற்கும் இடையில் செம்பருத்தி மலர்கள் தலையாட்டிக்
கொண்டிருந்தன. இடையிடையே நந்தியாவட்டை பூக்கள். கிழக்குப் பார்த்த
கோவில். எதிரில் உயரமான மரமல்லி மரம். வெண்ணிற மலர்கள் ஏராளம்,
தரையில் உதிர்ந்து கிடந்தன
அந்த மரத்தின் உயரத்திற்குச் சூரியன் வந்துவிட்டான். அந்த மரமல்லியும்
வேம்பும் இல்லையென்றால் வெயில் சாகடித்துவிடும். வேகமாக வீசிய காற்றில்
மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்தன. கூடவே மிக மெலிதான வாசமும். ஆனால்,
கோவிலின் முன் இருந்தவர்கள் அமைதியாக இறுக்கமாக இருந்தனர்.
குருக்களின் பாடல்களும் அவ்வப்போதான மணியோசையும் தவிர்த்து
வேறொன்றும் கேட்கவில்லை.
சென்ற ஆண்டுவரை பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இங்கு நடத்த
அனுமதியில்லை. மாயவரம் நகராட்சிப் பள்ளியில் தான் எழுத வேண்டும்.
இந்த ஆண்டு இங்கேயே எழுதலாம் என்பதால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி.
தெரிந்த இடம், பழகிய சூழல். பதினொன்றாம் வகுப்பு எழுதும்
மாணவர்களின் கடைசி செட் இதுதான் என்கிறார்கள். அடுத்த
ஆண்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரைதான். பிளஸ் டூ என்ற பாடத்திட்டம்
அறிமுகமாகிறதாம். மறுபடியும் மாயவரம் தான்.
கதிர் இரண்டாம் வரிசையில் நின்றிருந்தான். அவனுக்கு ஒருபுறத்தில்
நாராயணன், மறுபுறத்தில் அழகன். பின் வரிசையில், அமர்,
இராஜேந்திரன். கண்ணப்பன். இராஜேந்திரனுக்குக் கதிரை மிகவும் பிடிக்கும்.
முன் வரிசையில் அல்லி. அவளருகில் சாமிப் பாடல்களைப் பாடியவாறு
இரண்டு பெண்கள். குருக்கள் கைமணியை அடித்துக்கொண்டே உரத்த
குரலில் மந்திரங்களைச் சொல்லத்தொடங்கினார். தலைமையாசிரியர்
வந்துவிட்டார். திடீரென்று பயம் கலந்த அமைதி.
கற்பூரத் தட்டுடன் வெளியில் வந்தார் குருக்கள். தலைமையாசிரியர் பக்கம்
நீட்டினார். அருகில் நின்ற ஆசிரியர்களுக்கும் காட்டிவிட்டு தட்டைத்
தமிழாசிரியர் கையில் கொடுத்துவிட்டு பிரசாதம் எடுத்துவர உள்ளே போனார்.
தமிழாசிரியர் விபூதி கொடுக்க ஆரம்பித்தார். முதலில் மாணவிகளுக்கு, நல்ல
மார்க் வாங்கணும் என்று சொல்லி வாழ்த்தி அவர்கள் கையில் விபூதியைப்
போட்டார். பிறகு மாணவர்களுக்குக் கொடுக்கத்தொடங்கினார். வாழ்த்துகளும்
விபூதியும்.
இளவரசன் கையில் விபூதியைக் கொடுத்தவர், “ஸ்கூல் பர்ஸ்ட் வரணும்”
என்றார். அவன் பயபக்தியுடன் நெற்றியில் இட்டுக்கொண்டு
பிள்ளையாரைப் பார்த்துக் கும்பிட்டான். நாராயணன் கையில் கொடுத்து,
”மெட்ராஸ் லயோலா” என்றார். அவனும் நெற்றியில் பூசிக் கொண்டு உள்ளே
பார்த்துக் கும்பிட்டான்.
அழகன் கையில் கொடுத்து, ’மெட்ராஸில் நல்ல காலேஜில் இடம்
கிடைக்கணும்’ என்றார். கதிரின் கையில் கொடுத்து, மாயவரத்தில் ஒரு
காலேஜின் பெயரைச் சொன்னார்.
இளவரசன் நன்கு படிக்கக் கூடியவன் தான். அவன் வகுப்பில் அவன் தான்
முதல் மதிப்பெண் வாங்குவான். அவனை மட்டும் ஆசிரியர் அப்படி ஏன்
அன்று சொன்னார்? ஊர்க்காரனான அவனை அவர் அப்படி வாழ்த்தாதற்குக்
காரணம் என்ன இருக்கமுடியும்? வகுப்பில் நல்லாத்தானே நடத்துவார்.
ஏதாவது தமிழ்ப் பாடலை விளக்கிப் பேசும்போதும், அவன் பெயரைச்சொல்லி
கேலியும் செய்வார்தானே. சூழலும் பொருளும் விளங்காத நாட்கள்.
ஓர் ஆசிரியர் அப்படி மாணவர்களுக்குள் பேதம் காட்டி வாழ்த்தலாமா? அது
தவறில்லையா? கதிருக்கு அன்று அது பெரிதாகத் தோன்றவில்லை. தீவிரமாக
எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அப்படித் தோன்றுகிறது.
ஆனால், தேர்வின் போது எப்போதும் படித்ததுபோல் படிக்காமல், அதிக
நேரம் எடுத்துக்கொண்டு படித்தான். ஓட்டுவீடாக இருந்தாலும், பாட்டி வீட்டில்
அன்றைக்கு மண்னெண்ணை விளக்குதான். அதனால், பகல் நேரத்தில் அதிகம்
படிப்பான். இரவில் ஒரு எட்டு மணி வரை படித்துவிட்டுப் படுத்துவிடுவான்.
தேர்வின்போது எட்டு மணிக்குப் படுப்பது பத்து மணியாகியது. அவ்வளவுதான்.
தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒருபக்கத் தலைவலி
வேறு வந்துவிட்டது. தலையில் ஒருபக்கம், மண்டைக்குள் யாரோ உள்ளே
உட்கார்ந்து உடைப்பதுபோல் வலிக்கும். ஒரு கண்ணிலிருந்து நீராகக் கொடும்.
தலையை அழுத்திப்பிடித்துக் கொண்டு, சிறு துணியால் கண்களை
மூடிக்கொண்டு அரைப் பார்வையில்தான் தேர்வு எழுதினான். சிரமமான
நாட்கள்.
ஏன் திடீரென்று அந்த நிகழ்வு மனத்தில் எழுந்தது என்று தெரியவில்லை.
ஆழ்மனத்தில் அந்தச் சம்பவம் தீவிரமாகப் பதிந்திருந்து, இப்போது வெளியில்
வருகிறதோ?
தெரிந்த நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை. அழகனோ, கண்ணப்பனோ,
இராஜேந்திரனோ யாரும் தென்படவில்லை. பள்ளிக்கூடம் அமைதியாக
இருந்தது ஆச்சரியமாகத் தோன்றியது. வேறு பிரிவு மாணவர்கள் இரண்டு
மூன்று பேர் மரமல்லி மரத்தடியில் நின்றிருந்தனர். புது அட்மிஷனுக்கு
வந்தவர்கள் போல் சிலரும், அவர்களது பெற்றோர்களும்.
திடீரென்று அவன் ரிசல்ட் ஒட்டியிருந்த கரும்பலகை இருந்த இடத்திற்கு
ஓடினான். இளவரசன் என்ன மார்க்? அவனைக் காட்டிலும் இவன் ஒரேயொரு
மதிப்பெண் தான் அதிகம். ஒரு மார்க்! ஆனால், எவ்வளவு வித்தியாசம்?
மகிழ்ச்சியா, தெரியவில்லை. எப்போதும்போல் கதிருக்கு உள்ளங்கை
வியர்த்தது. கால்சட்டையில் துடைத்துக்கொண்டான். தமிழாசிரியர் வாக்குப்
பொய்த்துவிட்டது. அவரே தலைமையாசிரியரிடம் இவன் தான் முதல்
மதிப்பெண் என்று அறிமுகப்படுத்திவிட்டார். அது போதும். ஆனால்,
அவனுக்கு மகிழ்ச்சியாகவே இல்லை. அது என்னவோ, அப்போதும்
இப்படித்தான். மகிழ்வும் துக்கமும், அவனுக்குத் தாமரை இலை நீர்
போலத்தான்.
தமிழ் சார் உள்ளே ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் சொல்லிக்கொள்ள
வேண்டுமா?
அலுவலகத்தை விட்டு இறங்கும்போது படிக்கட்டு அருகில் பெரிதாக மலர்ந்து
அசைந்து கொண்டிருந்த அடுக்குச் செம்பருத்தி செடியை அவன் கைகள் வருடின.
ஆசிரியர் குறிப்பு
மயிலாடுதுறையைச் சேர்ந்த இவர் பொதுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

One Comment on “இரவி ரெத்தினசபாபதி/ ஒரு மதிப்பெண்”
Comments are closed.