
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 13
சுருக்கம் விழுந்த மலர்முகத்தையும் உதட்டு விளிம்பில் பொங்கும் சிரிப்பையும் காண்பதற்காகவோ அல்லது அந்த வாழ்ந்து முடித்த பூரிப்பை எட்டிப் பார்க்கும் ஆவலினாலோ தேநீர்த் தாத்தாவின் கடையில் பால் பொங்கி உருண்டு எழுந்து வரும்.
வறுமையின் பாரத்தால் சற்று வளைந்து இருக்கும் அவரது முதுகு
“என்னடா பொல்லாத வறுமை” என்று துன்பத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்பும்.
இடும்பைக்கே இடும்பைப் படுக்கும் அந்தக் கிழவனின் வயது எண்பதை நெருக்குவது போலவே வாடிக்கையாளர் கூட்டமும் நூறைத்தாண்டும்.
அந்தக் கடைதான் பூவநாதபுரம் கிராமத்தினரின் பூங்காவனம். கிழவரின் விரல்கள் பத்தும் மும்முரமாக களமாடுவதைப் பார்த்துத் தோள் கண்டார் தோளே கண்டது போல நிற்பாள் கிழவி.
“ஏத்தா காலங்காத்தால என்ன யோசனையில நிக்கறவ..
“அந்தா அந்த டீக்கிளாச எடுத்தா” என்பார் கிழவர்.
அவர் குரலைப்பிடித்துக்கொண்டே நடந்து போய் டீக்கிளாஸ்களைச் சேகரித்துத் தருவாள் கிழவி.
(ஒரு பேச்சுக்கத்தான் அவர்களை நான் கிழவன் கிழவி என்கிறேன். நீங்களும் சொல்லிக்கொள்ளலாம்.. ஆனால் “அவுக ரெண்டுபேரு காதிலும் விழாமல் பார்த்துக்கோங்க”.)
அவரைக் கிழவருன்னு சொல்லிட்டா கிழவிக்கு பழியாக் கோபம் வரும். அதேபோலத்தான் கிழவி என்று கூறினால் அவருக்கும் கோபம் வரும்.
டீக்கடையில் அவருக்கு ஒத்தாசையாக நிற்பதோடு மனைக்கும் விளக்கமாகத் திகழ்ந்தாள் கிழவி.
அவரைப் பட்டினி போட்டது இல்லை. வக்கணையாகச் சளைக்காமல் இலைபோடுபவள் அவள்.
இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் பொழுதுபோக்காகப் பாடியவர்…
அவளுக்காகப் பாடிக்கொண்டே இருக்கிறார்.
முன்பெல்லாம் அவரைப் பாட வைத்துக்
கேட்டவள் தான்..
யோவ் மாமா..
“அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்”…
அந்தப் பாட்டப்படியும்… என்பாள்..
அவர் வேண்டுமென்றே…
பூங்காத்து திரும்புமா… ஏம்..பாட்ட விரும்புமா.. என்று வேறு ஒரு பாடலைப் பாடினாலும்…
மாமா…பாடும்யா… என்று கேட்டுச் சிலிர்ப்பாள்
சில நேரங்களில்… அவர் முணுமுணுக்கும்…. ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன …பாடலில் கிழவி லயித்துப் போவாள்.
வேரென நீயிருந்தாய் …என்று அவர் பாடிக் கொண்டே லேசாகப் புன்னகை தவழ அவளைப்பார்ப்பார்.
அவள் அவர் உள்ளங்கையைத் தடவிப் பார்ப்பாள். அது பகலெல்லாம் தண்ணீரில் நனைந்து சுருங்கி…இருக்கும்.
தேநீர் தூள் வடிகட்டும் பையை சூட்டோடு பிடித்துப் பிடித்து உள்ளங்கை காய்த்துப்போயிருக்கும்..
அவள் லேசாகக் கண் கலங்கினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்…
“ஒம்ம வெங்கலத்தொண்டைய வச்சிக்கிட்டுச் சும்மாஇரும்யா. இருமல் வரப்போகுது”
என்று செல்லக் குமுறல் செய்ததாலும் அவளுக்கு ரேடியோவும், டி.வியும் இல்லாத குறைக்கு அவர் தான் ஒலிப்பேழை.
ஒரு காலத்தில் சுருட்டுப் புகைந்தது அவரது உதட்டு இடுக்கில்.
இப்போது இருமல் சுரக்கிறது.
இரவில் மட்டும்.. விங்…விங் .. ஙென… இருமுகையில்
விலா எலும்புகள் புஸ் புஸ் ஸென விம்மிப் புடைத்து அமரும்.
வயிற்றுச் சதை உள் வாங்கி வெளி வரும்.. மிகவும் சிரமப்படுவார்…
முதுகை நீவி.. நீவி… இருமலை விரட்டுவாள் கிழவி..
அவரைத் தன் கைப்பக்குவத்தில் ஒரு குழந்தையைப் போல வைத்திருந்தாள்.
அவள் தயாரிக்கும் கசாயமும் பச்சிலைச் சாறும் இருமல் பேயோட்டும் சாட்டைகள்.
வேறென்ன வேண்டும்…கிழவன் கொடுத்து வைத்தவன் தான்.
அவர் தூங்கியதும் அவரருகே தூணில் சாய்ந்தவாறே கோழித்தூக்கம் போட்டுப்பின் உறஙகிப் போவாள்.
இரவெல்லாம் இடை இடையே புகைச்சலால் சிரமப்பட்டாலும் மனைவியை உறங்கும் போது எழுப்பவே மாட்டார்.
ஆனாலும் அவர் இருமல் அவளை எழுப்பி விடும்.
இரவில் தூக்கக் கெடுதி இருந்தாலும் காலையில் பாலுக்கு முன் நிற்கும் போது பாலைவனச் சோலை போல நிற்பார் அவர்.
களைக்கொத்தி பிடிப்பவர்கள் முதல் கல்லூரி வரை யார் யாருக்கு எந்தருசியில் தேநீர் தேவை என்பதை அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அருளும் கரங்களுடன் இருப்பார்.
நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சி சேர்த்து நல்ல பாலில் சரியான அளவு தேயிலைக் கரைசல் ஊற்றி ஆற்றும் லாவகம் கூடி வரும்.
இடை இடையே அரசியலைக் கிண்டல் செய்தவாறே பேச்சுடன் கூடிய நமட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.
வருகிற வாடிக்கையாளர்களின் தோரணைக்கும் ஜோடனைக்கும் ஏற்ப அவர்களுக்கு ஏற்ற சொல் வீசி, சார் வாங்க, ஐயா வாங்க, சாமிவாங்க வாங்கப்பூ செளரியந்தானா… என்று ரகம் ரகமாகக் குரல் வளை(லை) விரிப்பார்.
“கெழக்க மழ எறங்கி இருக்கு”. “கெழக்காம போறவுக தூரலுக்கு முன்ன கெளம்புங்க”. என்று அக்கறையுடன் டீக்கடைக் கூட்டத்தைக் கலைப்பார்.
பெண்களிடம் “இப்ப என்னத்தா இருந்தா குடு”.
“இல்லைன்னா பெறகு கொண்டாந்து தா”
“நா என்ன கோட்டையா கெட்டப் போறேன்”.
எனத் துட்டு கொண்டு வராத மறதியைச் சகித்துக் கொள்வார்.
தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்ற பயமோ…ஏக்கமோ.. அவரிடம் துளியும் இருந்ததில்லை. ஆனாலும்
அவரது வாடிக்கையாளர்கள் இந்தச் சாதாரண உலகிற்குள்… பணத்தின் முன் மண்டியிடும் வாழ்க்கைக்குள்… அவரை இழுக்க முயன்றார்கள்.
தாத்தா… நாங்க சொல்றத கேளுங்க…
“இந்தச் சுற்று வட்டாரத்தில எல்லாப் பயல்களும் வெலைக்கிமேல வெலவச்சி விக்கிறானுக நீங்க ஒருத்தர்தான் இன்னும் ஏழு ரூபாய்லையே நிக்கிறீங்க…ஏத்துங்க. உங்க டீக்கு பதினஞ்சு ரூபாய் தரலாம்…” என்பார்கள்
“நமக்கு வாரது போதும் தம்பி”
“இந்தாருக்கே பூவநாதபுரம் அதுல இருக்க கொத்தனுக்கும் கூலிக்காரனுக்கும் தான் என்னோட டீ…” என்று சொல்லிவிடுவார்.
அப்போது அவரது குரலில்“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் பாரதியின் அதிர்வு இருக்கும்.
ஒரு காலத்தில் சுறு சுறுப்பாக இயங்கிய டீக்கடை இப்போதெல்லாம் மழைவெய்யிலுக்கு ஒதுங்கி நிற்கும் இடமாக மாறிப்போனது. வந்து வந்து அவரைத் தேடித் தேடிப் பறந்தார்கள் கல்லூரிப் பேராசிரியர்கள்.
எல்லோருக்கும் அது வெறும் கடந்து போகும் செய்தியாத மட்டுமே இருந்தது.
“போன வாரந்தான் தவறிப் போனாரு…”
“எனக்கும் மனசு கேக்கலைங்க சார்”
“நான் இறப்புக்கு போயிருந்தேன். அவரோட வீட்டம்மா என்னப் பாத்துட்டு அய்யா வாங்கய்யான்னு அழுதாங்க”
சார்… நீங்க எதுக்கு போனீங்க… என்றார் ஒரு பேராசிரியர்.
அதற்கு பதில் வரும் முன் மற்றொருவர் கேட்டார்.
“ஏதும் பழைய பாக்கி அவரு தர வேணாடிருந்ததா….?! “
கிண்டல் செய்தவாறே அனைவரும் அவரைப் பார்த்துச் சிரித்தனர்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பேசத் தொடங்கினார்.
“அப்பிடியல்லாம் இல்ல சார்.”
“இப்ப நெனைச்சாலும்
மனசுக்கு சங்கடமா இருக்கு சார்”
“நல்ல மனுசன் என்ன சார்.” …… “ என்றார்.
அவரோடு கரிசனைப்பட்டவர் போல குரல் குழைந்த வாரே.. ஒருவர் கேட்டார்.
ஆமா சார்… எண்ணக்கி எறந்தாரு…?
“நாம அண்ணைக்கி ஒரு நாளு, விலையைக் கூட்டுங்கண்ணு சொல்லி, அவரு கடையில்வச்சுப் பேசிட்டு இருந்தோம்ல சார்…”
ஆமா.. ஆமா…
அந்த வாரத்தில தான் சார் “
ஓகோ…
“ஆனா கடைசி வரைக்கும் விலைய கூட்டவே இல்ல சார்”…
“அது சரி ஒரு டீக்கடைக்காரரரு செத்ததுக்கெல்லாமா…போகணூ… என்றார்கள் சுற்றி நின்றவர்கள்.
அதற்கு அவர்…
“இல்ல சார்…அப்படி இல்ல… நான் புதுசா கல்யாணம் ஆகி குடித்தனத்துக்காக வீடு பாக்க அலைஞ்சேன்….
பூவநாதபுரத்தில் அவர் தான் வீடு பார்த்துத் தந்தார்….
அதுமட்டுமில்ல ஒரு நாளு இராத்திரி வயித்து வலியில அழுது உருண்டுக்கிட்டுக் கெடந்தா என் மனைவி…
என்கிட்ட காசு இருந்துச்சு.. ஆட்டோ கெடைக்கல….டாக்டர் கெடைக்கல…எனக்கு சொந்த ஊர் இது இல்லங்கற பயமும் பதட்டமும் தான் இருந்துச்சு…
கையும் ஓடல காலும் ஓடல… தவிச்சுப் போயி நின்னேன்…தற்செயலா அங்க வந்தவர்… என்னப் பாத்துக்கேட்டார்….’என்ன தம்பி வீடெல்லாம் நல்லா இருக்கா…
புடிச்சிருக்கா… இத ஒங்க சொந்த ஊரு மாதிரி நெனைச்சிக்கங்க…ஒங்களுக்கு என்ன வேணுமோ தயங்காமல் கேளுங்க…
என்ன ஒருமாதிரி இருக்கீங்க…’
‘ஒண்ணுமில்லை…என் மனைவி வயித்து வலியில துடிக்கிறா…ஆட்டோ ஏற்பாடு பண்ணமுடியுமா…
ஆஸ்பத்திரி போகணும்…’
‘எதுக்கு அங்க போயிக்கிட்டு பத்து நூறு செலவழிச்சிக்கிட்டு…
த்தியன் பயங்காட்டுவான்… சீக்கச் செரங்காக்குவான் சொரிஞ்சிக்கிட்டே திரிய வேண்டியதுதான்…ஏம் பொம்பளையாளு கைப்பக்குவத்த நீங்க பார்த்ததில்லையே…
அருமையா கசாயம் போடுவா…ஒங்க வீட்டம்மாவுக்கு ஒண்ணுமில்லை சூட்டுவலி …பயப்படாதீங்க… காலேசு வாத்தியாரு … இப்பிடியா…
கெடந்து தவிச்சிக்கிட்டுக் கெடக்கது…நாங்கள்லாம் இருக்கோம் வாத்தியாரே…ஒண்ணும் ஆகாது…ன்னு ஆறுதலா பேசுனாரு… ‘
‘அவரு சொன்னது மாதிரியே அடுத்த அரைமணி நேரத்தில் சூட்டு வலி சரியாப்போச்சு….
ஐநூறு ரூபாய எடுத்து கையில திணிச்சி வச்சிக்கோங்க…பிடிங்க… இந்தாங்க… ம் அட இருக்கட்டும்… ம்
வாங்கிக்கங்க… ஐயா…பிடிங்க… ன்னு
நானும் என்னென்னவோ சொல்லி குடுத்துப்பாத்தேன் கிழவர் மசியல…
காசு வேண்டாம்…ன்னு சொல்லிட்டு கிழவர் சொன்னார்…
‘காசு வாங்குனா கைப்பக்குவம் எங்க கையவிட்டுப் போயிரும் தம்பி…
இந்த மருத்துவம் தான் எங்க சொத்து… எங்களுக்கு வேறெதுவும் வேணாம்… இந்த மருத்துவம் எங்க புள்ள மாதிரி….
எங்க புள்ளைய நாங்களே விப்போமா…? ‘ என்று சொல்லிக் கொண்டே….
திருநீறு எடுத்து என் மனைவி நெத்தியில பூசி விட்டு, ஒனக்கு ஒண்ணும் வராதாத்தா… மவராசி நல்லா இருண்ணு சொல்லிட்டு போனாங்க….
ஊர விட்டு ஊரு வந்து இருக்க எங்களப் போல உள்ளவங்களுக்கு கெடைக்கிற ஒதவிக்குக் கைமாறா நாங்க என்ன செய்யப் போறோம்\…ன்னு தெரியலங்க சார்…
‘அப்படிப்பட்ட மனுசனோட எறப்பு ஒரு சாதாரணமான டீக்கடைக்காரனோட எறப்பாத் தெரியல… அதுதான் போனேன்’.. என்றவாறே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ஆசிரியர் குறிப்பு
பிறந்த நாள் 7/6/1983
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முதுகலை பட்டம் பெற்றவர். தூய சவேரியார் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர்.நடிகர் சண்முகராஜன் நெறியாளுகையில் கள்ளச்சாராய ஒழிப்பு வீதி நாடகம் நடித்தவர்.
இவரது ஊதிவிடப்பட்டகாற்றுக்குமிழி என்ற சிறுகதையானது சிவகாசியில் நடைபெற்ற மாபெரும் சிறுகதைப் போட்டியில் எழுத்தாளர்
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது (மூன்றாம் பரிசு).
பச்சையம் யாசிக்கும் இலை என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

One Comment on “அ.எபநேசர் அருள் ராஜன் /உதவிவரைத்தன்றுஉதவி”
Comments are closed.