
பொதுவாக உங்களுடைய நாள் எப்படித் துவங்கும்? வழக்கமான நேரத்தில் எழுவீர்கள்.. கொட்டாவி விட்டு, உடலை
முறித்தபடியே வந்து கதவைத் திறப்பீர்கள்.. பேப்பர், பால் எனத் துவங்கி ஸ்நானம் முடித்து அதன்பிறகான தினசரி இயந்திர வாழ்க்கைக்குள் உங்களை
பொருத்திக்கொள்வீர்கள்.
ஆனால்.. ஒரு விடியல் இப்படியில்லாமல், நீங்கள் வாசற்கதவைத் திறக்கும்பொழுது அங்கு ஒரு சவத்தைக் காண்பதோடு துவங்கினால்…? ஏதோ
மர்மக்கதை ஆரம்பமாவதாக நினைத்து நுனி இருக்கைக்கு வராதீர்கள். இன்று ராமநாதனுடைய பொழுது அப்படியாக விடிந்துவிட்டதைத்தான் சொல்ல வருகிறேன்.
காலை மணி நான்கு முப்பதைக் கடந்திருந்தது. ராமநாதன் தினசரி நடைப்பயிற்சிக்கு கிளம்பும் நேரம் இது. ஆனால், இன்று
திருவண்ணாமலையில் அன்னதானத்திற்குத் திட்டமிட்டிருந்தபடியால் நடைப்பயிற்சியை ரத்து செய்திருந்தார்.
ஆன்மீகத்தையும் பித்ருதர்மத்தையும் இரு கண்களாய் பாவிக்கும் ராமநாதன், அமாவாசை, பிரதோஷ நாட்களில் ஏதேனுமொரு கோவிலுக்கு முன்பாக அன்னதானம்
செய்துகொண்டிருப்பார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளைக் கொண்டிருந்த இந்த புறநகர்ப்பகுதியில்
குறைந்தவிலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட்டிருந்தார். அவர் கணித்ததுபோலவே குறுகிய காலத்திலேயே வீடுகள் பெருகிவிட்டிருந்தன. மூத்தவன் திருமணம் முடித்து
குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகியிருந்தான். தாமதமாகப் பெற்றுக்கொண்ட இரண்டாமவள் ராகவி, முதுகலைப் படிப்பிலிருந்தாள்.
இன்றைய விவகாரத்துக்கு வருவோம்..
குளித்து முடித்து பீரோவைத் திறந்தவேளையில்தான் ராமநாதனுக்கு ஞாபகம் வந்தது, நேற்று மதியம் காவி வேட்டியை அலசிப்போட்டது. ஈரத்துண்டுடனே
மொட்டைமாடியை நோக்கி பயணித்தவருக்கு இனம்புரியாத அதிகாலை உற்சாகம் பீறிட்டது. கிருஷ்ணபட்ச இருளில் ஜெமினிகணேசன் பட பாடலொன்றை சற்றே
சப்தமாக முணுமுணுத்தபடி படியேறிக்கொண்டிருந்தார்.
வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டவர், துண்டை உதறி கொடியில் போட்டுவிட்டு குட்டைச் சுவர் நோக்கி நடந்தார். வீட்டின் பின்புறத்தை இடதும்
வலதுமாக நன்றாக எட்டிப்பார்த்துவிட்டு அப்படியே பக்கவாட்டுச் சுவர்களுக்கும் சென்று பார்த்தார். இப்படி நாலாபக்கமும் நோட்டமிடுவதற்கு விசேட காரணங்கள்
ஏதுமில்லாமல், ஓவ்வொருமுறை மாடிக்கு வரும்பொழுதும் அனிச்சையாகவே செய்துகொண்டிருந்தார்.
இறுதியாக முன்பக்க சுவரை நோக்கி வந்திருந்தார். வலது மூலையிலிருந்து இடது மூலை வரை நன்றாக எட்டிப்பார்த்துவிட்டு சரீரத்தை உள்ளே
இழுத்துக்கொள்ளப் போனவருக்கு சட்டென பாட்டு நின்று, முகம் இருண்டுபோனது. மீண்டும் எட்டிப்பார்த்தார். நொடியில் நடுக்கம் தொற்றிக்கொண்டது.
வீட்டு வாசலில்.. சுற்றுச்சுவரின் இரும்புக்கதவை ஒட்டி.. ஏடாகூடமாய் கிடந்தான் ஒருவன். போதையில் கிடப்பவன் போன்று மல்லாந்தோ, குப்புறவோ, அல்லது
ஏதேனுமொரு சயனநிலையிலோ அந்த உடல் கிடக்கவில்லை. இடுப்பு வரையிலான பகுதி குப்புறவும், அதற்குக் கீழ் மல்லாந்தும், ஒரு ஓலைபக்கோடாவைப் போல்
கிடந்தது. உயிருள்ள மனிதனொருவன் இப்படி ஏடாகூடமாகக் கிடப்பதற்கு சாத்தியமே இல்லையென மனம் சொன்னபொழுது வயிறு கலகலத்துப் போனது
ராமநாதனுக்கு. மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தார். அசந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்தமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றார்.
முடியவில்லை.
“சாவித்திரி… சாவித்திரி…” உலுப்பி எழுப்பினார். சலிப்புடனே கண்களை சுருக்கிக்கொண்டபடி விழித்தாள் அவள்.
“என்னங்க காலங்காத்தால?”
“இங்க பாரு, தண்ணி தெளிக்கறேன், கோலம் போடறேன்னுட்டு இன்னைக்கி வெளியில எதுவும் போய் தொலைஞ்சுடாத. உன் பொண்ணுகிட்டயும் சொல்லி வை.
எனக்கு தெரியாம யாரும் வாசக்கதவை தொறக்கக்கூடாது”
“என்னங்க ஆச்சு? விஷயம் எதுவும் சொல்லாம மொட்டையா கதவை தொறக்காதன்னா என்ன அர்த்தம்?”
“எல்லாத்தையும் இப்பவே சொல்லணுமா ஒனக்கு? நேத்து பால் எதுவும் மீதியிருந்தா காபி போட்டு கொண்டா மொதல்ல. வெடவெடன்னு இருக்கு”
ராமநாதனுடைய பதற்றம் அவளை எந்தவிதத்திலும் பாதித்திருக்கவில்லை. கையை ஊன்றி மெதுவாக எழுந்தமர்ந்து கொட்டாவி விட்டாள். கட்டிலை விட்டிறங்கி,
முடியை உதறி முடி போட்டுக்கொண்டே அடுப்பறை நோக்கி நடந்தாள். அறையிலிருந்து அவள் வெளியேறியதும், அவசரகதியில் ஜன்னலருகே
சென்று நின்றவர், ஒற்றை விரலால் லேசாக கதவை நீக்கி வாசலில் கிடப்பவனைப் பார்க்க முயற்சித்தார். படுக்கையறையானது வீட்டின் வலதுபுறமாகத்
தள்ளியிருந்ததில், அந்தக் கோணத்திலிருந்து பாதம் மட்டுமே தெரிந்தது. மீண்டும் இழுத்து சாத்திக்கொண்டுவிட்டு கட்டிலுக்கு வந்து அமர்ந்துகொண்டார்.
காபியைக் கொண்டுவந்து நீட்டினாள் சாவித்திரி. “ரோட்ல எதும் சண்டையா? என்னங்க பிரச்சனை?”
“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். நீ தூங்கறதுனா தூங்கு”. கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்தபடியிருந்தார்.
‘விசாரனை விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாதவகையில் அனைவரையும் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றுவிடலாமென்றால், தெருமுனை
கேமராக்களை ஆராய்ந்து பார்த்து, எதற்காக அத்தனை அவசரமாக எல்லோரும் கிளம்பிச் சென்றீர்கள் என கேள்வியெழுப்புவார்கள்’ – வரவிருக்கும் வீண் சச்சரவுகள்
பூதாகரமாகத் தெரிந்தன. என்ன செய்வதென விதவிதமாக யோசிப்பதும் நிராகரிப்பதுமாக இருந்தார்.
இறுதியில், வீட்டினுள் முடங்கிக் கிடப்பதே உத்தமமெனப்பட்டது ராமநாதனுக்கு. ‘பேப்பர் இளைஞனோ, கோனாரோ அல்லது சாலையில் செல்லும்
எவரேனும் ஒருவரோ நிச்சயமாக அவனை எழுப்ப முயற்சிப்பார்கள். உயிரெதுவும் ஒட்டிக்கொண்டிருந்தால் ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லுவார்கள். இல்லையேல்
போலீஸை கூப்பிடுவார்கள். நாம் இப்படியே ஒன்றும் தெரியாதவன்போல இருந்துகொள்ளவேண்டியதுதான்’ என சொல்லிக்கொண்டார்.
தான் போலீஸுக்கு ஃபோன் செய்தால், ‘முதல் சாட்சி’ என முத்திரை குத்தி ஸ்டேஷனில் உட்கார வைத்து, காலம் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்தே
பிராணனை எடுத்துவிடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கியிருந்தது அவருக்கு. மணி ஏழரையாகியிருந்தது.
மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். ‘மியூட்’டில் போடப்பட்டிருந்த டிவியில் கடமைக்காக செய்தி ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்குள் அனைவரும்
உறங்கிக்கொண்டிருப்பது போன்றதொரு மாயையை உருவாக்க, வீட்டில் எந்தவொரு சத்தமுமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். தன் வீட்டு வாசல்கூட செய்திகளில்
வரலாமென அவரது மனம் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டிருந்தது.
அழைப்பு மணி ஒலித்தது. ‘பக்’கென்றானது ராமநாதனுக்கு. பயத்தைக் காட்டிக்கொள்ளாமல், அசையாமல் அழுத்தமாய் அமர்ந்திருந்தார்.
பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாத நிலையில், கேட் தாழ்ப்பாளும் பலமாகத் தட்டப்பட்டது.
சாவித்திரியையும் ராகவியையும் இருக்கையிலிருந்து எழவேண்டாமென சைகையால் காட்டிவிட்டு பூனைபோல் படுக்கையறைக்குள் சென்றார். முன்பு
போலவே ஜன்னல் கதவை லேசாக நீக்கிப் பார்த்தார். ஐந்தடி உயர சுவற்றிற்குமேல் சில மனிதத் தலைகள் தெரிந்தன. ஏற்கனவே
இங்கிருந்து தெரிந்துகொண்டிருந்த ‘அவனது’ பாதம் இப்போது அங்கு இருக்கவில்லை. தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதை புரிந்தது. புதிதாக வேலைக்குச்
சேர்ந்திருந்த போலீஸ்கார இளைஞனொருவன் அழைப்பு மணியை அடித்து ஓய்ந்துபோனவனாய் திரும்பிச்செல்வது தெரிந்தது.
ஹாலுக்கு வந்தார்.
“அப்பா… புத்திசாலித்தனமா பண்றதா நெனைச்சுகிட்டு உங்கமேல தேவையில்லாத சந்தேகத்தையெல்லாம் வரவைக்கப் போறீங்க. நீங்களே ஃபோன்
பண்ணி சொல்லிருங்கன்னு அத்தனைதடவை சொல்லியும் அடம்புடிச்சுட்டீங்க”
“சும்மா ஒளறாத. உங்களுக்கெல்லாம் ஃபோன் பண்றது மட்டும்தான் தெரியும். அதுக்கப்பறம் வரப்போற அவஸ்தையெல்லாம் எனக்குதான் தெரியும்” – கோபத்தைக்
காட்டிவிட்டு சாய்ந்தமர்ந்தார். நேரம் கடந்திருந்தது. தற்போதைய நிலவரத்தை அறிந்துகொண்டுவிட்டு கதவைத் திறந்துவிட முடிவெடுத்தார். மீண்டும் ஜன்னல் ஏரியாவுக்கு வந்து, மிக மென்மையாக
ஒற்றைவிரலால் கதவைத் தள்ளினார்
அந்நேரம்…
சற்றும் எதிர்பாராதவகையில் ஜன்னல் வெடுக்கென வெளிப்புறமாக இழுக்கப்பட்டு முழுவதுமாகத் திறந்துகொண்டது. பயங்கரமாய் அதிர்ந்துபோனார்
ராமநாதன். அங்கு ஒரு காக்கி முறைத்தபடி நின்றிருந்தது. கேட்டில் ஏறிக்குதித்து வந்திருக்கவேண்டும்.
“கதவைத் தொறக்கறீங்களா..?”
வழிந்தார் ராமநாதன்.
ஒற்றை சோபாவில் இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.
அருகில் துவாரபாலகர்களாய் இரண்டு கான்ஸ்டபிள்கள். பெரிய சோபாவில் இவர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். ராமநாதனைப் பற்றிய அடிப்படைத்
தகவல்களையெல்லாம் ஊரே வழங்கிவிட்டிருந்தது.
“இடியே வுழுந்தாலும் நாலரை அஞ்சுக்கெல்லாம் வாக்கிங் கெளம்பிருவீங்கன்னு சொல்றாங்க? இன்னைக்கி என்னாச்சு?”
“அன்னதானத்துக்காக திருவண்ணாமலைக்கி போக வேண்டியிருந்தது சார்.. அதான்…”
“ஏன் போகல?”
“உடம்புக்கு கொஞ்சம் முடியல”
“என்ன பிரச்சனை?”
“பயங்கர தலைவலி, மயக்கம்…”
“ம்… மூணு பேரும் வீட்டுக்குள்ளதான் இருந்துருக்கீங்க… மணிக்கணக்கா பெல் அடிச்சும் கதவை ஏன் தொறக்கல?”
சாவித்திரி, நடுக்கம் தெரியாமலிருக்க கையைக் கட்டிக்கொண்டாள்.
“ஏம்மா, எப்பவும் ஆறு மணிக்குள்ள தண்ணி தெளிச்சு கோலம் போட்டு முடிச்சுர்ற நீங்க இன்னைக்கி எப்புடிம்மா ஏழரை வரைக்கும் தூங்குனீங்க?
உங்களுக்கும் தலைவலி மயக்கமா?”. சாவித்திரி மிடறு விழுங்கினாள்.
“கோலமாவு தீர்ந்து போச்சு சார். தண்ணியை தெளிச்சுட்டு எப்புடி மொட்டையா வுட்டுட்டு வர்றதுன்னு…”
ராகவியைப் பார்த்தார்.
“உனக்கென்னம்மா? கோலமாவு காலியான மாதிரி கரெக்டா இன்னைக்கின்னு பாத்து காலேஜ்ல லீவு அனௌன்ஸ் பண்ணிட்டாங்களா?”
சிறிதுநேரம் அமைதியாகக் குனிந்திருந்துவிட்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.
“இவங்களமாதிரி நினைச்சதும் பொய் சொல்ல வரல சார் எனக்கு. எங்கப்பா காலங்காத்தாலேயே மாடியிலேர்ந்து பாத்துட்டு மிரண்டு போயிருக்காரு.
அதுக்கப்பறம் எங்களையும் நகரவே விடல. ஃபோன் எல்லாத்தையும் சைலண்ட்ல போட்டு ஷெல்ஃப்ல எடுத்து வச்சுட்டாரு. காலேஜ்ல ப்ராஜக்ட் ஒர்க் இருக்கு,
போகணும்னு சொல்லியும்கூட வெளியில விடல சார். ஸேஃப்ட்டி சைடுல ப்ளே பண்றதா நெனைச்சுகிட்டு ரெண்டுபேரும் பொய் சொல்லிகிட்டிருக்காங்க. மத்தபடி,
வாசல்ல எப்ப என்ன நடந்துச்சுன்னு எங்க யாருக்குமே தெரியாது சார்”
தலையிலடித்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.
“கவர்மெண்ட் ஜாப்லேர்ந்து ரிட்டயரான ஆள்தானே நீங்க? வீட்டுக்கு முன்னாடி ஒரு பொணம் கெடந்தா, அந்த வீட்டுக்காரங்ககிட்ட விசாரிக்காம கேஸை
மூவ் பண்ணமுடியாதுங்கற பேஸிக் அறிவுகூடவா இல்லாம போவும் உங்களுக்கு? படிக்காதவங்ககூட தெளிவா யோசிக்கறாங்க”
இன்ஸ்பெக்டரின் கடுமை ராமநாதனை தலைகுனிய வைத்தது.
“ஸாரி சார்..”
“வாசல்ல ஒருத்தன் குத்துயிரும் கொலை உயிருமா கெடக்கறானே, தண்ணிகிண்ணி குடுத்து காப்பாத்த பாப்போம்னு இல்லாம, கதவை இழுத்து மூடிகிட்டு
உக்காந்துருக்கீங்க, இல்ல?”
அமைதியாக இருந்தார்.
“நாகப்பட்டினத்துல யாரும் இருக்காங்களா உங்களுக்கு?”
“எங்க நேட்டிவ் அதுதான் சார்”
“ஓஹோ.. செத்துப்போன ஆளோட பையை செக் பண்ணி பாத்ததுல, உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி மாதிரிதான் இருக்கு. நாகப்பட்டினத்துலேர்ந்து பஸ்ல வந்த
டிக்கெட் இருந்துச்சு. ரவுடிங்க பிரச்சனையில, வேற ஒரு ஆளை போடறதுக்கு பதிலா தப்பான அடையாளத்தை வச்சு இவரை போட்ருக்கானுங்க”
பலமாக அதிர்ந்தது ராமநாதனின் குடும்பம்.
“பாத்தப்பவே ஒரு ஃபோன் பண்ணியிருந்தா காப்பாத்தவாவது முயற்சி பண்ணியிருக்கலாம்”
“ப்ளீஸ் சார்.. அவரு யாரு என்னன்னு கொஞ்சம்..”
“தெரிஞ்ச உசுருன்னதும் ஒரே செகண்ட்ல மனநிலை மாறிப்போவுது, இல்ல? நல்ல ஆளுங்கய்யா நீங்கள்லாம்”
வெறுப்புடன் சில வினாடிகள் மௌனம் காத்தார் இன்ஸ்பெக்டர்.
“போட்டுத்தள்ளுனவனுங்க அவரோட ஃபோனையும் தூக்கிட்டு போயிருக்கானுங்க. இனிமேதான் ட்ராக் பண்ணனும். ஸ்டேஷன்ல அவரோட பை
இருக்கு. வந்து பாத்துட்டு, யார்னு தெரிஞ்சா அவங்க ஃபேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. அப்புடியும் தெரியலன்னா மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு போகச் சொல்றேன்”
என்றபடியே நடக்கத் துவங்கினார்.
“ஏங்க, நானும் வரட்டுமா?” – குரல் நடுக்கத்துடன் கேட்ட சாவித்திரிக்கு
தலையசைத்தார். வழக்கு வாய்தாக்களுக்கு பயந்து பதுங்கியவர், இப்பொழுது இன்ஸ்பெக்டருக்கு முன்னால் நடக்கத் துவங்கியிருந்தார்.
ராமநாதனை மேலும்கீழுமாக பார்த்தபடியே நடந்த இன்ஸ்பெக்டர், “அன்னதானம் அதுஇதுன்னு பண்ணி நெறைய புண்ணியமெல்லாம் சேத்து
வைக்கறீங்கன்னு ஊர்ல பேசிக்கறாங்க, அப்புடியா..?” என்றார்.
தலையைக் குனிந்தவாறே அமைதியாக நடந்துகொண்டிருந்தார் அவர்.
ஆசிரியர் குறிப்பு
அறுபது வயதுடைய, சந்துரு மாணிக்கவாசகம், தஞ்சையை பூர்வீகமாகக்கொண்டு திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். கணையாழி, கல்கி உள்ளிட்ட இதழ்கள், அமைப்புகள் மற்றும் தமிழ்ச்சங்கங்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார். ‘அவள் வண்ணதினுசேஷம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியுள்ளதோடு, ‘அசுரகுரு’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
பரிசு பெற்ற இவரது சிறுகதைகளின் முதல் தொகுப்பான ‘தாமரையும் அருக்காணியும்’ நூலானது, 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை நூலாக தேர்வு பெற்றது. கம்பம், பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் சிறந்த நூலுக்கான விருதையும் இந்நூல் பெற்றுள்ளது.
அ.எபநேசர் அருள் ராஜன் /உதவிவரைத்தன்றுஉதவி – விருட்சம் நாளிதழ்

ராமநாதன் நிலையில் என்னை பொருத்திப் பார்த்தால், அப்படித்தான் நடந்து கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது.
அருமை.