
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 15
ஆறு மாதங்கள் முன்பு
சென்னை புறநகர் ஆதம்பாக்கம்- கிண்டிக்குமிடையே அமைந்துள்ள மிகச்சிறிய பாலம் அது .அந்த பாலத்தின் கீழ் அங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கருமையான நிறத்தில் ஏதோ சாயப்பட்டறையிலிருந்து வெளி வருவதை போல கருப்பு நிறத்தில் அழுக்கை சுமந்து கொண்டு வந்தது.மழைக்காலங்களில் ஓரிரு நாட்களில் மட்டும் தன்னிடம் இருக்கும் நீரைஒட்டுமொத்தமாக சமுத்திரத்தில் கரைத்துவிட்டு அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுவிடும் மறுபடியும் சில நாட்களில் கருப்பு ஒட்டிக் கொள்ளும்
பிளாஸ்டிக் குப்பையும் தாவரக் கழிவும் ஆங்காங்கே போகும் வழி தெரியாமல் திகைத்து நிற்க அந்த நீர் வேகமாக செல்ல வாய்ப்பு இல்லாமல் ஒரு தேக்கம் .எத்தனையோ ஆயிரமாயிரம் கொசுக்களின் பிறப்பிடம்.
தினமும் அந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் சில நொடிகளில் அந்தப் பாலத்தை கடந்துவிடலாம் அந்த துர்நாற்றத்தை பொறுத்துக்கொண்டு அதன் மீது நடப்பவர்கள் மட்டும் மூக்கை மூடிக்கொண்டு கடக்க வேண்டும் அவ்வளவுதான்.
அந்த பாலத்திற்கு அருகில் ஒரு அடர்ந்த அரசமரம். மரத்தின் கீழே உள்ள கல் திண்டுகளில் அமர்ந்து விளையாட வாசு தன்னுடைய சகாக்களுடன் தினமும் வந்து விடுவான் .அவனுக்கும் அவன் சகாக்களுக்கும் சாக்கடையைப்பற்றியோ அந்த துர்நாற்றத்தைப் பற்றியோ கவலையே இல்லை
மாலை 3:00 மணிக்கு ஆரம்பிக்கும் அந்த ஆட்டம் இரவு 7:00 மணிக்கு தான் ஓயும். அத்தனை விறுவிறுப்பு வேகம் அவர்கள் ஆடும் ஆட்டத்தில். ஒவ்வொரு முறையும் ஆட்டம் முடிவில் கூச்சல் கும்மாளம் என்று கலகலப்பாக இருக்கும் சில நிமிடங்கள் தான் ..அடுத்த ஆட்டத்துக்கு உடனே தயாராகிவிடுவார்கள்.பெரும்பாலும் ஆட்ட நாயகன் வாசுவாகத் தான் இருப்பான். அவன் ஜெயித்தால் அனைவருக்கும் கொண்டாட்டம். நஷ்டம் அடைந்தவர்களுக்கும் உதவி செய்து நாயர் கடையில் டீ வடை போண்டா சமோசா என்று செலவு செய்து விட்டு மீதக் காசை எடுத்துக் கொண்டு போவான். மறுநாள் விளையாட ‘முதல்’ வேண்டுமல்லவா!
அது என்ன விளையாட்டு ரம்மியா அல்லது மூணு சீட்டா? இரண்டும் இல்லை .அதெல்லாம் அங்கே விளையாட முடியாது. காரணம் ஆதம்பாக்கம் காவல் நிலையம் கூப்பிடு தூரத்தில்.
அங்கே நடப்பது ஒரு பந்தயம். சீட்டு கோலி என்று எந்தவித உபகரணமும் இன்றி நடத்தப்படும் பந்தயம் தம்போலா என்ற நம்பர் விளையாட்டு.தம்போலா, டோம்போலா, இந்தியன் பிங்கோ அல்லது ஹவுசி என்றும் அழைக்கப்படும் ஒரு பிரபலமான விளையாட்டு, இது 1500 களின் முற்பகுதியில் இத்தாலியில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி விளையாடுவது வேடிக்கையானது .மற்றும் கற்றுக்கொள்வது எளிது. இப்போதெல்லாம் ஆன்லைனில் விளையாட முடியும் ஆனாலும் வாசுவிற்கும் அவன் நண்பர்களுக்கும் அந்த அந்த இடமே போதி மரம்.
வாசு குருநானக் கல்லூரியில் படிப்பை முடித்து இருந்தான். இன்னும் வேலை கிடைக்கவில்லை
வாசுவிற்கும் அந்த விளையாட்டுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை அவன் ஜெயிக்காத நாளே கிடையாது .குருட்டு அதிர்ஷ்டம் அவனுக்கு. எண்விளையாட்டு என்றால் அதில்அவன் கண்டிப்பாக ஜெயித்து விடுவான்.
எதற்கும் ஒரு நேரம் வேண்டும் அல்லவா ,அது அவனுடைய கேளிக்கைக்கும் கொண்டாட்டத்திற்கும் அதிகமாகவே இருந்தது.
‘கங்காதரன் இன்வெஸ்ட்மெண்ட்’ என்ற பெயர்ப்பலகையைத் தாங்கி இருந்த அந்த கட்டிடத்து மாடி அறை ஜன்னல்வழியே தூரத்தில் தெரிந்த அந்த மரத்தடியைப்பார்த்தான் கங்காதரன்.உள்ளே கம்ப்யூட்டர் திரையில் பங்கு வர்த்தக பண்ட வர்த்தக பரிவர்த்தனை துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தது.
ஒருகாலத்தில் அந்த அலுவலகத்தில் நிரம்பிவழியும் கூட்டம்..அத்தனை வாடிக்கையாளர்கள்!
உலகளாவிய பொருளாதார சரிவு, உள்நாட்டு நிதி நிலைமை என வெவ்வேறு காரணங்களினால் சந்தையும் சரிந்தது கங்காதரனும் ரொம்பவே சரிந்தான் .அவன் முதலீடு செய்யும் சமயம் பார்த்து பெரிய சரிவு நிகழும் .ஒவ்வொரு முறையும் விட்டதைப் பிடிக்கிறேன் என்று இறங்கி கடைசியில் இருப்பதையும் விடுவதுதான் இதுவரையில் அவன் கண்டது .ஆசை யாரை விட்டது?
அவன் தரகர் தொழிலை மட்டும் செய்து கொண்டிருந்தால் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்க மாட்டான். இடையில் வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல லட்சங்களை கோட்டை விட்டிருந்தான். அத்தனையும் அவன் அப்பா அந்த தொழிலுக்கு சம்பாதித்து வைத்திருந்த பணம் .மேலும் கடன் வேறு, வட்டியுடன் சேர்த்து எழுபது லட்சத்தைத் தாண்டி இருந்தது.
பணத்தை கோட்டை விட்டவன் அவன் மட்டுமல்ல அவனைப் போல் ஏமாந்தவர்கள் ஏராளம். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டுள்ள யாரைக் கேட்டாலும் நஷ்டம் என்று தான் சொல்கிறார்கள்.
எங்கு தான் போகிறது அத்தனை பணமும் ?இந்த கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அது ஒரு பெர்முடா திரிகோணம் மாதிரி. பணம் போனால் திரும்பி வராது. இந்த ரகசியம் எல்லாருக்கும் தெரியும் ஆனாலும் சூதாட்டம் இல்லையா!’மாயச்சூதினுக்கே ஐயன் மனமிணங்கிவிட்டான்’ என்று மகாகவி சும்மாவா சொன்னார்!
உள்ளே கம்ப்யூட்டர் திரையை பார்த்தான் சிவப்பும் பச்சை நிறமுமாக மாறிமாறி திரையில் உமிழ்வது அவனைப் பார்த்து கேலி செய்வது போல் இருந்தது.
மீண்டும் அவனது பார்வை மரத்தடியை மேய்ந்தது .அங்கே வழக்கம் போல உற்சாகம் கும்மாளம்.
“ சார் கோப்பி” நாயர் கடையில் பணிபுரியும் பையன் உன்னிக்ருஷ்ணன் கண்ணாடிகாபி டம்ளருடன் வந்தான்.
“ டேய் உன்னி..இங்கே வா.. தினமும் அங்கு கூட்டம் கூடுகிறதே யாரு அவங்க உனக்குத்தெரியுமா?” என்று மரத்தடியை கை காட்டிக்கேட்டான்கங்காதரன்.
“ஓ..அதுவா சார் ..கொரச்சி அறியாம்..அவங்க ஏதோ லோட்டரி மாதிரி விளையாடுவாங்க.. பேரு என்னவோ தம்போலா அப்படின்னு சொன்னாங்க ..வாசு என்கிறவர் தான் அங்க கேப்டன் .படிச்சவருதான்.. வேலை கிடைக்கலயாம். ஆனா தம்போலா நல்லாஆடுவார்.. இந்த ஒரு வருஷத்துல அவர் இதுவரைக்கும் தோத்து நான் பார்த்ததே இல்லை.. நல்ல அதிர்ஷ்டக்காரர்.”
உன்னி சொல்லச்சொல்ல கங்காதரனுக்கு மூளை வேகமாக வேலை செய்தது இனி நம்ம தொழிலை நம்பினால் ஆகாது நாம் இந்த வாசுவை வைத்துக்கொண்டுதான் முன்னேறினால் என்ன?
காபியை உறிஞ்சிக்குடித்தபடி யோசித்தான்.
டம்ளர் காலி ஆவதற்காக காத்திருந்த உன்னியிடம்,” டேய் உன்னி.ஒரு ஹெல்ப்டா… அந்த வாசுவை என்னை வந்து பார்க்க சொல்றியா?” என்றான்.
“ சரி சார் “ என்றவன் டம்ளரோடு நகர்ந்தான்.
வாசுவை பக்கபலமாக வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை மனதில் குறித்துக் கொண்டான் கங்காதரன்.
மாலை மணி ஏழு இருக்கும்.
எதற்காக வந்திருக்கிறோம் என்றும் என்ன செய்ய முடியும்என்றும் நமக்கே இன்னும் கைக்கு வேலை வந்து சேரவில்லை இந்த நிலையில் கங்காதரன் தன்னை அழைத்திருப்பது எதற்கு என்றும் புரியாமல் வாசு குழம்பினான்.
கங்காதரன் த்னனை அறிமுகம் செய்து கொண்டான். தான் வளர்ந்த கதை தொழிலில் நஷ்டம் என்று அத்தனையும் அவனிடம் சொல்லி முடித்தான் .அந்த அரை மணி நேரம் அதிகம் தான் அதிலேயே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் அறைக்குள் நுழைந்தாள்.
“ப்ரியா! இதுதான் வாசு ..நாம் தினமும் இங்கிருந்து பார்ப்போமே அந்த மரத்தடி ஹீரோ தான் இவர்!:என்று வாசுவை அறிமுகம் செய்த கங்காதரன் பிறகுவாசு விடம்,” வாசு ..இதுதான் பிரியா என் ஆபீசில் வேலை செய்கிறாள்..என் வருங்கால மனைவி. என்னுடைய கடன் அடைந்தால் தான் கல்யாணம் என்கிற என்னுடைய லட்சியம் நிறைவேறுவதற்காக எனக்காக காத்திருக்கிறாள் “ என்றான்.
பிரியா,” ஹலோ!: என்றாள் வாசுவைப்பார்த்து.
“ பிரியா! இந்த வாசு கிட்ட அதிர்ஷ்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு .அதுதான் நம்ம கிட்ட கொஞ்சம் கூட கிடையாதே “என்றவன் பிரியாவிடம் வாசுவின் பொழுதுபோக்கு விளையாட்டை அதில் அவனுடைய சாகசத்தை விவரித்தான்.
பிரியாவுக்கு பிரமிப்பாக இருந்தது.
“ எல்லாத்தையும் விட ஆச்சரியமான விஷயம் வாசுவிடம் என்ன தெரியுமா ?”என்று கேட்டாள்.
இரண்டு பேருக்குமே அவள் என்ன புதிர் போடுகிறாள் என்று புரியவில்லை.
“வாசு ஜெயிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ..ஆனால் அந்த சாக்கடை நாத்தத்தை எப்படித்தான் வாசுவும் அவர் சகாக்களும் சமாளிக்கிறார்களோ..ஹாரிபிள்.அதுதான் பெரிய ஆச்சரியம் .என்னால் அந்த இடத்தில் ஒரு நிமிஷம் கூட நிற்க முடியாது”
ப்ரியா இப்படி சொன்னதும் அவளோடு சேர்ந்து இரண்டு பேருமே பெரிதாக சிரித்தனர்.
இப்போதெல்லாம் மாலை 7:00 மணிக்கு வாசுவை கங்காதரனுடன் தான் பார்க்க முடியும் .
ஒரு நாள் கங்காதரன் ஆரம்பித்தான் .”வாசு! காசினோ பத்தி கேள்விப்பட்டு இருக்கியா?”
“முழுசா தெரியாது ஆனா அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் அதுக்கு ரொம்ப பிரபலமான இடம்னு படிச்சிருக்கேன்..”
“அதுவும் உ ன் தம்போலா மாதிரிதான்.எல்லாம் நம்பர்தான் உனக்கு இப்ப சொன்னா புரியாது ஒருதடவை விளையாடிப் பாரேன் அப்புறம் உன்னை யாராலயும் அடிச்சிக்க முடியாது உனக்கு நேரம் இருக்கா சொல்லு ?”
“நான் ரெடி கங்காதர்..முதல்ல கோவா போவோம் ..அங்க காசினோ ஒரு கை பார்த்து விடுவோமே.. நஷ்டம் வந்தால் நான் பொறுப்பில்லை. லாபத்தில் 10 சதவீதம் கொடுத்தால்போதும் அதுதான் என் சம்பளம் “
அந்த டீல் சரி என்று தோன்றியது கங்காதரனுக்கு.
கோவா நகரம் வாசுவுக்கு பிரமிப்பூட்டியது மிகப் பழமையான ஆலயங்கள் .அதிகம் குப்பை இல்லாத கடற்கரை.நிறைய பிரஞ்சுக்காரர்கள் கடற்கரையில் அவர்கள் சூர்யக்குளியல் எடுக்கவும் விஸ்ராந்தி ஆக குளிக்கவும் தொலைவில் ஒரு பீச் இருக்கிறதாம். வாசுவுக்கு ஆச்சரியமாக இருந்தது,
“ அங்கு ஆடையே இல்லாமல் வெட்ட வெளியில் இருபாலர்களும் குளிப்பார்கள் “என்று கங்காதரன் நமுட்டு சிரிப்புடன் சொல்லவும் வாசு வெட்கப்பட ஆரம்பித்தான்.
இரவு நேரம் வந்தது .இருவரும் தயாரானார்கள். கேசினோ வில் காசை அள்ள கப்பலை நோக்கி நடந்தார்கள்.
மேனேஜர் டிஸோஸா இடுப்பை எழுபது டிகிரி வளைத்து மரியாதை செலுத்தினார்.
பெரிய ஹால் .போக்கர் பில்லியர்ட்ஸ், கேரம் என்று விதவிதமான விளையாட்டுகளில் பலர் முழுகி இருந்தனர்.
கைதட்டினால் பீரும் விஸ்கியும் தட்டில் ஏந்தி வந்தனர். சிகரெட் புகையின் ஆதிக்கம் அதிகம்.
ஹாலின் மத்திய மூன்று கேசினோ மேஜைகள் .இரண்டில் பிரெஞ்சு ரவ்லட் (French Roulette)என்றும் ஒன்றில் அமெரிக்கன் ரவ்லெட் (American roulette wheel) என்றும்மேஜையில் எழுதியிருந்தது,
மேஜையின் முன் ஒருவன் காய்கள் வைப்பதை வைப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.
மேஜையின் அருகில் கோலியையும் உருட்ட ஒருவன் தயாராக இருந்தான் .மெதுவாக அந்த சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஆட்டம் ஆரம்பமாகியிருந்தது.
வாசு அந்த சக்கரத்தையும் எண்களின் வரிசையையும் உன்னிப்பாக கவனித்தான் .ஆட்டத்தின் விதிமுறைகளை அறிந்து கொண்டான். ஐந்து அல்லது ஆறு சுற்று ஆடுபவர்களையும் அந்த சூழலின் ஒவ்வொரு அசைவையும் மனதில்வாங்கிக் கொண்டான்.
வாசு இப்போது தயார் .முதல் சுற்றுக்கு சக்கரம் சுழல ஆரம்பிக்கும் நேரம் வாசு பத்தாயிரம் ரூபாயை பூஜ்ஜியத்தில் வைத்தான். யாருமே எதிர்பார்க்காத ஒரு எண்.
கோலி மெதுவாக வேகம் குறைந்து பூஜ்ஜியத்தில் விழுந்தது ஒரே சுற்றில் மூன்றரை லட்சம்! கங்காதரனுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை, கால் தரையில் நிற்கவில்லை.
வாசுவின் முகத்தில் எந்தவித பதட்டமும் பெருமிதமும் தென்படவில்லை ..அடுத்த சுற்று ஆரம்பிக்கும் நேரம். இப்போது மேஜையை நிர்வகிப்பவன் புதிதாக ஒரு விதிமுறையை விதித்தான்.இனி அதிகபட்ச பந்தயம் 5000 தான் என்று. ஒரே சுற்றில் வெட வெடத்து விட்டனர் நிர்வாகிகள் அனைவரும் .
மேனேஜர் டொஸோஸா ,வாசு ஜாக்பாட் அடித்ததை கேள்விப்பட்டு ஓடி வந்தான்.
வாசு அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டான் .
மறுபடியும் அதே பூஜ்ஜியம்!
இந்த முறையும் அனைவரும் புறக்கணித்த எண். கோலி, சொல்லி வைத்தாற் போல் பூஜ்ஜியத்தில் விழுந்தது. இந்த முறை ஐந்து லட்சம்! டிஸோஸா முகத்தில் ஈஆடவில்லை.
“ கங்காதர்! பணம் இப்போ இது போதும். கிடைத்தவரை லாபம்” என்ற வாசு நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டான். கங்காதரனுக்கு அரை மனதுதான்.
வாசுவின் திறமையையும் வேகத்தையும் கண்டு அனைவருமே அதிர்ந்து போய் இருந்தனர்.
வாசு வெளியேறி விட்டான்.
கங்காதரனுக்கு தெரியும் வாசுவின் போக்கு .அவன் போதும் என்று முடிவெடுத்து விட்டால் அவனை மசிய வைப்பது கடினம் .
அடுத்த நாள்… கப்பலிலும் ஐந்து லட்சத்திற்கு மேல் சூறையாடிவிட்டு பயணத்தை சுருக்கிக் கொண்டு இருவரும் சென்னை திரும்பினர்
ப்ரியாவால் நம்பவே முடியவில்லை .
“அது எப்படி வாசு உனக்கு மட்டும் இது சாத்தியம், உன் காதில் ஏதாவது பட்சிவந்து சொல்கிறதா?” என்று கேட்டா.ள்.
“ என்னை பொருத்தமட்டில் தம்போலா தான் கடினம். அதில் 100 நம்பர் கேசினோவில் 37 தான். இந்த விளையாட்டு எல்லாமே சைக்காலஜி தான். ……ஆட்டத்தை நடத்துகிறவன் கண் அசரும் போது நம்ம காரியத்தை கச்சிதமா முடிக்கணும்”
“ வாசு.. உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா அடுத்த வாரம் மலேசியா போகலாம். அங்கே காசினோ விளையாடுவதற்கு என்றே ஒரு மலைப் பிரதேசம் என்னுடைய அடுத்த இலக்கு ஒரு மில்லியன் டாலர் . உன் பங்கு ஒரு லட்சம் டாலர் அதன் இந்திய மதிப்புஏறத்தாழ 87 லட்சம்ருபாய்!”கங்காதர் வாசுவுக்கு தூண்டில் போட்டான்.
“ உன்னுடைய லட்சியமும் பிரியாவின் கல்யாணமும் நிறைவேறுவதற்கு நான் எப்போதுமே தயார் “
வாசு பாஸ்போர்ட் டின் நகல் ஒன்றை கங்காதரிடம் கொடுத்தான்.”
அடுத்த சில நாளில் டிக்கட்டும் விசாவும் கிடைத்துவிட்டன்.
மலேசியா விமான நிலையத்தில் அதிகமாக இந்தியர்களைப் பார்க்க முடிந்தது. அங்குள்ள முருகன் கோவில் மால் என்று எல்லா இடங்களையும் பார்த்து விடவேண்டும் என்று துடித்தான் வாசு. குரங்கு பொம்மை பேட்டரி கார் வாங்க வேண்டும் பக்கத்து வீட்டு குழந்தைக்காக.
கங்காதர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த உடனேயே எந்த ஞாபகமும் இன்றி இரவு நேரத்திற்காக காத்திருந்தான்.
மூன்றே இரவுகள் தான். அங்கிருக்கும் அனைத்து இடங்களிலும் வாசுவின் வெற்றி தொடர்ந்தது. மூன்றாம் நாள் இரவு கங்காதரனின் லட்சியம் நிறைவேறியது .அந்த அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் !ஜார்ஜ் வாஷிங்டன் அதில் சிரித்துக்கொண்டிருந்தார்.
கங்காதரனுக்கு இப்போதும் அரைமனதுதான். பணம் அவனை ரொம்பவே மாற்றி இருந்தது.அவனது ஒரு மில்லியன் டாலர் என்ற லட்சியம் இப்போது பத்து மில்லியனாக மாறியது .
அவனால் இப்போது எதையும் சாதிக்க முடியும் வாசுவின் துணையால்!
விமானம் சென்னை மண்ணை தொட்டது. கங்காதரன் விண்ணை தொட்டுக் கொண்டிருந்தான். அடுத்த இலக்கு அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்திருந்தது .
பிரியாவிடம் அனைத்தையும் கூறி மகிழ்ந்தான் கங்காதரன்.
“வாசுவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வளவு சீக்கிரம் உன் லட்சியம் நிறைவேறும் நம்ம கல்யாணம் அமையும் என்று நினைக்கவே இல்லை” பிரியா சந்தோஷத்துடன் சொல்லிய வார்த்தைகள் கங்காதரனின் காதில் விழுந்தும் விழாதது போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
“ இல்ல பிரியா. இது போதாது. இந்த பணத்தை பத்துமடங்காக ஆக்க வேண்டும் .அடுத்து அமெரிக்கா பயணம். அந்த உல்லாச நகரம் லாஸ்வேகாஸ்க்குப் போக வேண்டும். அங்கே காசினோக்களில் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி ஜெயிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை !”என்றான் கங்காதரன்.
அவன் குரலில் பணவெறி தெறித்தது.
பிரியாவுக்குப் புரிந்துவிட்டது .கங்காதரனுக்கு இனி அவள் தேவை இல்லை. அவனுக்கு இனி பணம் தான் எல்லாம் .
சொன்னபடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு விட்டான். ஆயிற்று ஆறு மாதங்கள் இன்னும் அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. பிரியாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ‘ஹாய்’ கூட இல்லை.
பிரியா அந்த மரத்தடியை நோக்கி நடந்தாள்.
வாசுவும் அவன் சகாக்களும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர் .வாசுவிற்கு வேலை கிடைத்து விட்டதாம் அடுத்த வாரம் பணியில் சேர வேண்டுமாம். கடைசியாக தம்போலா ஆடுவதாக சொல்லிக்கொண்டிருந்தான்.
அவன் அருகில் சென்ற பிரியா,”வாசு! என்னையும் சேர்த்துக் கொள்வாயா?” என்று கேட்டாள் .
அவனுக்கு அவளுடைய எதிர்பார்ப்பு புரிந்தது.
முதல்முறையாக அந்த சாக்கடை நாற்றத்தை அவள் லட்சியம் செய்யவில்லை.
ஆசிரியர் குறிப்பு
400க்குமேல் சிறுகதைகள்15 நாவல்கள் 400கவிதைகள் ..
பல பத்திரிகைகளில்நாவல் சிறுகதைக்கு பரிசுகள் வாங்கி இருக்கிறார். ஆனந்த விகடன் பவள விழாவில் இவர் கதைத் தொடருக்குப் பரிசு கிடைத்தது இவர் வாழ்க்கையில் மறக்க முடியாது.

One Comment on “ஷைலஜா/மாயச்சூது”
Comments are closed.