
அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16
நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தன.பயணிகளின் கால்தட சகதிகளைக் கோலங்களாக அரிதாரம் பூசியபடி திருவாரூர் ரயில் நிலையம் சிவப்பு நிற விளக்குகளில் மினுமினுத்தது.“டீ.. காபி.. டீ …காபி… டீ காப்ப்ப்ப்பி” போன்ற வியாபாரக் கோஷங்களுக்கு மத்தியில்.. பல தரப்பட்ட மக்களின் பேச்சு சத்தத்திற்கு மத்தியில், “வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கன்னி வரை செல்லும் மேடகான் எக்ஸ்பிரஸ்.. இன்னும் சற்று நேரத்தில்.. மூன்றாம் நடைமேடைக்கு வந்து சேரும்.. என்று எதிர்பார்க்கப்படுகிறது” தேனாய் மும்மொழிகளில் இனித்தது, தென்றலாய் பேசிய வருணாவின் குரல்.திடீரென கருத்த வானம் மழையைக் கட்டவிழ்த்தது போல இடித்துப் பெய்ய, வண்டியேறக் காத்திருந்தவர்கள் அனைவரும் நிழற்கொடையின் கீழ் ஒதுங்க ஓடி வர.. ரயில் நிலையமே நொடியில் மீன் சந்தையாய் மாறியிருந்தது.தேங்கிய தண்ணீரைக் கண்டவுடன் ஒரு சில குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். கைக்குழந்தையின் பெற்றோர்கள் குல்லா சகிதமாக உடை அணிவித்து, மாரோடு பிள்ளைகளை அணைத்து குளிரிலிருந்து காக்கலாகினர். இளைஞர்கள் சிலர் கையிலிருந்த பையைக் குடை போல வைத்தவாறு கொட்டகையின் கீழ் ஒதுங்கினர். இளம் பெண்டிரோ..தன் முந்தானை மற்றும் துப்பட்டாவின் முனையை ஏந்தியவாறு 'ஓடு ஓடு”என்று கிளி போல கீசிப் பறந்தனர். வயதான பெரியவர்களும் முதியவர்களும் நடையில் வேகத்தைக் கூட்டினாலும் கால் வழுகிடாமல் கவனமாய் ஒதுங்கிடம் தேடிப்புகுந்தனர். ஒரு மழை, ரயில் நிலையத்தை சில நிமிடங்களில் தேன்கூடாய் மாற்றியிருந்தது.இவையனைத்தையும் சன்னலோரத்தில் வருணா அமர்ந்து வேடிக்கை பார்க்க, மழைச்சாரலாய் வந்தது அவனது நினைவுகள்.
அவன்.. நாஞ்சில் குமரன்.
கண்ணகி கலைக் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டில் வருணா சேர்ந்திருந்த தினம்.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொகுத்து நோக்கல் நிகழ்வுக்கான கட்டடம் எதுவென பூக்களை மேயும் தேனீ போல அவள் வட்டமிட
“என்ன தேடுறீங்கன்னு சொன்னா.. உதவசுலபமா இருக்கும்” என்றது மனதை வசீகரிக்கும் ஒரு குரல்.
குரல் வந்த திசையில் அவள் நோக்க.. தேவதூதன் போல வெள்ளை அங்கி
அணிந்திருந்தான் அந்த இளைஞன் . தேன் சொட்டும் குரல். கூரான கண்கள். நேரான பார்வை. குறும்பு அரும்பாய் மலர்ந்த ஒரு வீசீகரப் புன்னகை. பார்த்தவுடன் அவனிடம் ஒரு பிடித்தம் வந்ததன் காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை வருணாவிற்கு. பதிலற்று அவள் நிற்கவே குமரனே தொடர்ந்தான்.
“முதல் வருட மாணவி தான நீங்க..? நான் நாஞ்சில் குமரன். இரண்டாம் வருட கணிதத்துறை மாணவன். நீங்க இப்போ நேரா போய் வலது கைப்பக்கம் திரும்புங்க. மஞ்சள் நிறக் கட்டடம் நூலகம். அதுக்கு எதிர்புறக்கட்டடம் தான் நீங்க போக வேண்டியது. நிறைய பேர் நிப்பாங்க. அத வச்சே நீங்க சுலபமா கண்டு பிடிச்சிடலாம்.” பேசி முடிக்கும் வரை அவன் புன்னகை குறையவில்லை. இவள் மூச்சி விட மறந்து அவன் முக அசைவுகளை ரசித்துக்
கொண்டிருந்தாள்.
“ஏய்.. இருடா.. கீழே போட்டுடாத..!! இரு ஒரு பக்கம் நான் பிடிச்சிக்கிறேன்” நூலகத்திற்கு சென்ற ஒரு மாணவனுக்கு உதவச் சென்ற அவன் அவள் மனதில் மருதாணி போல ஒட்டிக் கொண்டான்.
தேடிச்சென்று உதவி செய்வது என்பது அவனுக்கு இயல்பாக இருந்தது. அந்த இயல்பினால் கல்லூரியின் பெரும்பான்மை அவனது நட்பு வட்டத்தில் இருந்தது.
ஆனால் வருணாவிற்கு, கண்ட நாள் முதலே.. நட்பினைத் தாண்டிய ஒரு பாசம் அவன் மீது.
‘அவன் அறிவானா?’ என்றே தெரியாமல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பட்டாம்பூச்சியாய் அவள் மனதினில் ஒரு சிறகு முளைக்கும். உலகமே அழகாய் மாறும் அவள் கண்களுக்கு. அவனால், அவளும் கூட மாறிப்போனாள். தன் கடன்களை மட்டுமே கருத்திலேந்தும் அவள் கண்களுக்கு, பேருந்தில் நிற்க சிரமப்படும் மூதாட்டி தெரிந்தார். தன் இருக்கையை அவருக்கு கொடுத்த போது குமரன் நினைவுக்கு வந்தான்.முதல் மதிப்பெண் எடுக்கத் தீவிரமாய் தன்னைத் தயார்படுத்தும் அவளுக்கு,
வணிகக்கடிதத்தில் சிரமப்படும் கவிதா தெரிந்தாள். தேர்ச்சி பெறுவதே சிரமம் என்றெண்ணியவளை அறுபது விழுக்காடு வாங்க வைத்த போது அவள் சிரிப்பிலும் குமரனைக் கண்டாள்.
இப்படி அவனுடன் பழகிய ஒவ்வொரு தருணத்திலும் அவள் அவனாகிப் போனாள். ஒரு வருடம் அவனால் ஒரு மாதம் போல ஓடிப்போனது.
அன்று கல்லூரியில் ஒரு பெரும் கலை நிகழ்ச்சி. வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு கல்லூரி ஒரு திருவிழாக்கூடமாக உருமாறியிருந்தது. பல கல்லூரி மாணவ மாணவியரின் ஊர்வலம் அரங்கேற கல்லூரி ஒரு வண்ணமயமான ரங்கோலி கோலம் போல பொலிவாயிருந்தது. போதாக்குறைக்கு மழை மேகமாயிருந்தது. அதிகாலை மழைச்சாரல் அதிசயமாய் எட்டிப்பார்த்த சூரியனால் அழகான வானவில் ஓவியம் தீட்டியிருந்தது. அதை அந்த பழங்கட்டிடத்தின் தாழ்வாரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் வருணா. காற்றின் குழுமை, அவளது உடலை லேசாக நடுக்கியது.
“அட.. வருணாக்கே மழை குளிருமா?” அவள் விரும்பும் வானம்பாடி அவள் காதுகளில் ரீங்கரித்தது.
“குமரன்.. இங்க வந்து பாருங்களேன்” அவனை ஏறெடுத்தும் பாராமல் கூறினாள்.
“ பரவால்லயே.. குரல்லயே என்னை சரியா கண்டுபிடிச்சிட்டியே..!” என்றவன் அவள் காட்டிய திசையை நோக்க, அங்கு வெயில் காயக் காத்திருந்தன காக்கைகள், சிட்டுக்குருவிகள், மாடத்துப்புறாக்கள், அக்காகுயில்கள் தவிட்டுக்குருவிகள் மற்றும் மைனாக்கள் என ஒரு பெரும் பட்டாளம். “இந்த நாவல் மரத்துக்கு வயசு நூறு இருக்கும் வருணா. எப்பவுமே இது தான் நம்ம கல்லூரியோட வேடந்தாங்கல். இப்படி ஒரு மரம் போல.. வாழ்க்கையில சிலருக்காச்சும் உதவியா இருக்கனும்ன்றது தான் என் ஆசையே.”
அவன் புன்னகை ஆதவன் போல ஔி வீசியது.
“நீ தான் என்னோட வேடந்தாங்கல்” யோசனையின்றி சட்டென மனதினில் உள்ளது வார்த்தையாய் வெளி வர.. அவளே ஒரு கனம் நாக்கினைக் கடித்துக் கொண்டாள்.
“என்ன.. என்ன சொன்ன?” ஆச்சரியத்தில் அவன் புன்னகை பெரிதாய் விரிய.. வெட்கத்தில் அவள் கண்கள் குறுகியது.
அந்த நொடி, அவள் தாழ்வாரத்தில் சாய்ந்திருந்த பழைய மரப்பிடிமானம் ஒடிந்து சரிய, அவள் கைகளைப் பற்றி இழுத்துக் காப்பாற்றினான் குமரன். இரண்டு கண்களும் ஒரு நொடி சந்தித்தன. அடுத்த நொடி, அவன் கால்கள் நிலைதடுமாற, அங்கிருந்து கீழே விழுந்தவன், இல்லாமலே போனான்…!
அவன் கல்லூரிப்பையில் அவளுக்காக எழுதப்பட்ட ஒரு கவிதைப் புத்தகம். காதல் சொட்ட சொட்ட பல அழகான கவிதைகள். அவளிடம் பேசாத அவன் மனதை, எழுத்துருவில் கொட்டியிருந்தான். வாசிக்க வாசிக்க அவன் அவளை எத்தனை நேசித்தான் என அறிந்து வியந்து போனாள்.
இறந்தவனை எண்ணி, காற்றற்ற மழை போல கண்ணீரைக் கொட்டித் தீர்த்தது அவள் இதயம்.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மேடையில் வாசித்த ஒரு கவிதைக்கு அவன் எழுதிய குறிப்பு அது.
இன்று ரயில் நிலைய அறிவிப்பாளினியாய் அவள் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் அவனது அந்த ஒற்றை வரி.. அவள் கேசம் வருடிச் செல்லும் காற்றாய் அவனை நினைவுறுத்தி ஒரு புன்னகையை அவள் இதழ்களில் சூட்டிச் செல்லும்.
“மேடம்.. மழைன்னால என் வேலை முடிய ரொம்ப நேரமாகிடுச்சி. ரயில விட்டுட்டேன். இப்ப திருச்சிக்கு எப்பிடி போறது..? ஏதாச்சும் வண்டி இருக்கா..? இல்ல பஸ்ல தான் போகனுமா?” கைக்குழந்தையுடன் வந்த யுவதியின் குரலில், நினைவுகளிலிருந்து மீண்டாள்.
மணி இப்போதே பத்தாகியிருந்தது. யுவதியின் கண்கள் சிவந்திருந்தது. அழுதிருக்கிறாள்…!
நன்றாக நனைந்திருந்தார்கள் இருவரும். இரண்டு வயதிருக்கும் அந்த குழந்தைக்கு. குளிரில் நடுங்கியது. அவள் கேட்ட தகவல் மட்டும் சொல்லியனுப்ப முடியாமல் ஏதோ தடுத்தது.
கோவா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் சென்றதால்.. பெரும்பான்மையான கூட்டம் குறைந்து, ரயில் நிலையம் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தது. அடுத்த ரயில் அறிவிப்பிற்கு அரை மணி நேரம் இருந்தது. மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்தவள் அருகிலிருந்த ரவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாள்.
யுவதி மற்றும் குழந்தையை பயணிகள் காத்திருப்பு அறையில் அமரச் செய்தாள். தனது கைப்பையிலிருந்த ஒரு துண்டு கொடுத்து துவட்டச் சொன்னாள். இருவரும் உடை மாற்ற காவல் இருந்தாள்.
தன்னிடமிருந்த ஒரு சால்வையை கொடுத்தவள்,”குழந்தைக்கு துணி மாத்தினாலும் மழைல நனைஞ்சதுல குளிரும். இத வச்சி இறுக்கமா பொத்திக்குங்க.” என்ற போது யுவதியின் கண்கள் குளமாகின.
“என் பேரு ரதி. வீட்ல ஒரு பிரச்சனை மேம். மழைன்னும் பாக்காம வெளிய போ”ன்னு சொல்லிட்டாரு. கோவத்துல எதுவும் யோசிக்கத் தோணல . அதான் அப்டியே மழைல நனைஞ்சிக்கிட்டே பாப்பாவ தூக்கிட்டு வந்துட்டேன். பஸ்க்கு போகற அளவு காசு எடுக்காம வந்துட்டேன். அதான் ஏதாச்சும் ரயில் இருந்தா அம்மா வீட்டுக்கு போய்டுவேன்.” குனிந்த தலை நிமிராமல் பேசினாள்.
“இன்னும் ஒரு மணி நேரங்களிச்சி அடுத்த ரயில் இருக்கு. அதுல போக ஏற்பாடு பண்றேன். குழந்தைய கைல வச்சிருக்கீங்க. எதுன்னாலும் ஒருதடவைக்கு இரண்டு தடவை..அவசரப்படாம.. கொஞ்சம் யோசிச்சி செய்ங்க. இப்ப டீ, காபி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”
அவள் கை தாங்கி இதமாய் பேசினாள் வருணா.
அப்போது முகத்தில் படபடப்புடன் ஒரு இளைஞன் ரயில்நிலையத்தில் இங்கும் அங்கும் தேட.. “அது உங்க கணவரா ரதி?” வருணா.
“ம்ம்.. ஆமா..!” சிறிய ரயில் நிலையம் என்பதால் சட்டென தெரிந்தது. ரதியின் முகத்தில் அச்சமும், ஆறுதலும் ஒரு சேரத் தெரிய.. “Excuse me sir. கொஞ்சம் இங்க வாங்க.” என்று சத்தமாகக் கூப்பிட்டாள்.
ரதியைப் பார்த்தவுடன் பெருமூச்செறிந்தவன் விரைந்து வர “நீங்க பேசிட்டு.. பயணச்சீட்டு வாங்குற இடத்துல வந்து பாப்பாவ வாங்கிக்குங்க” குழந்தையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில், “ரொம்ப நன்றி மேம்.” மூவரும் சிரித்தவாறு கரம் கோர்த்து அவளிடம் விடைபெற்றார்கள்.
அவள் அடுத்த ரயிலுக்கான அறிவிப்பை வாசித்த நேரம்.. எங்கிருந்தோ பறந்து வந்த மாடப்புறா ஒன்று.. அவளருகினில் பயமின்றி நின்று கொண்டது. உடல் சிலுப்பி ஈரமாகியிருந்த தன் உடலைக் காய வைத்துக் கொண்டது.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மனதினில் மீண்டும் விரிய.. திருவாரூர் ரயில் நிலையம்..
வேடந்தாங்கலாய் அரிதாரமிட்டுக் கொண்டது.
ஆசிரியர் குறிப்பு
சாந்தி சந்திரசேகரன். வயது 37. சொந்த ஊர் சிவகாசி. வசிப்பது திருவாரூர். ஆசிரியராக பணியாற்றிய இவர், தற்போது பல்வேறு பத்திரிகைகளுக்கு கதை மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்கி ‘படம் சொல்லும் கதை’ போட்டியில் சிறப்புப் பரிசும், பேசும் புதியசக்தியின் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். இவரது சிறுகதை அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்று ‘கரையேற்றம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. மின்மினிகள் என்னும் நூலில் இவரது இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன.

நாடகத் தன்மை நிறைந்த நல்ல கதை
மிக்க நன்றி
முடிவைக் கொஞ்சம் மாற்றி இருக்கலாமோ?
இருந்தாலும் இந்த வருணா சுத்த மோசம். கல்லூரியில் நுழைந்த அன்றே காதலிலும் நுழையும் அவசரக்காரியாக இருக்கிறாளே!
கதை எழுதிய போது இந்த முடிவு ஏனோ என் மனதிற்கு இணக்கமாகத் தோன்றியது சார்.
வாழ்வு பற்றிய முதிர்ச்சியடையாத பருவத்தில் காதலென கண்டதையும் யூகிப்பது இயல்பே. வருணா சற்று அதிர்ஷ்டசாலி சார். சரியான நபர் மீதே அவளது ஈர்ப்பு உருவானது. ஆனால் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு தான் அவளுக்கு அமையவில்லை.
எளிமையான கதைதான். ஆனால் எழுத்து நடையும், கதை சொல்லும் பாங்கும் நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை அறிவிக்கின்றன.
காலங் காலமாகச் சொல்லப்படும் கதைகளிலெல்லாம் புதுமை இருந்தே ஆகவேண்டும் என்பதில்லை. சமூகத்திற்கு ஏதாவது பெரிய செய்தியைக் கடத்த வேண்டும் என்பதுமில்லை. பாதியில் விட்டு விடாமல் ரசித்து வாசிக்க வைக்கும் அழகியலும் சிறந்த கதைக்கான தகுதியே ! அந்த அழகியலை அள்ளித் தெளித்த கதை இது. வாழ்த்துகள். தொடருங்கள் சகோதரி !
ஆஹா.. மனமார்ந்த நன்றி சார்.