உத்தமசோழன்/’அது எதுக்குப்பா…?’

இந்தத் தீபாவளிக்கு உங்க மகன் ஊருக்கு வரும் போது கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுங்க… வயசாகிக்கிட்டிருக்கு… ‘
மீனாட்சியின் உத்தரவுக்கு மௌனமாய் தலையாட்டினேன். பெண் வீட்டுக்காரர்கள் ரொம்பப் பேர் எங்கள் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புதான் இது.
அதே மாதிரி தீபாவளிக்கு முதல் நாள் இரவு பெங்களூரிலிருந்து மதிவதனன் வந்து சேர்ந்தான். எனக்கு ரொம்பப் பிடித்தமான பெயர் அது. அவன் பிரியப்பட்டதையெல்லாம் செய்து பிள்ளையை
அசத்திவிட்டாள் அம்மாக்காரி.
நானும் மதிவதனனும் அப்பா மகன் என்பது போலல்லாமல் அணுக்கமான சிநேகிதர்களாகத் தான் இருப்போம்.
நான் அவனிடம் சொல்லவும் அவன் என்னிடம் சொல்லவும் ஏராளமான விஷயங்கள் இருந்தன. படுக்கையில் அருகருகே படுத்தபடி வெகுநேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு என்னை யறியாமல் உறங்கிப் போனேன்.
திடுக்கென்று விழிப்பு வந்த போது பக்கத்தில் படுத்திருந்த மதியைக் கானவில்லை.
மனைவி சோபாவிலேயே தூங்கி விட்டிருந்தாள்.
‘எங்கே போனான்…?’ என்று பார்த்தால் அலுவலக அறையில் சால்வையை போர்த்திக் கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தான்.
‘என்னப்பா இது… மணி ரெண்டாவுது… தூங்கலையா…!”
அவன் கொஞ்சம் தயங்கினான்.
“ரொம்ப நாளா உங்ககிட்டே ஒரு விஷயத்தைச் சொல்லணும் சொல்லணும்னு நினைப்பேன். தயக்கமா இருக்கும். பேசாம இருந்துடுவேன். ஆனா அது மனசிலே உறுத்திக்கிட்டே இருக்குப்பா…!”
எனக்கோ ஆச்சரியம்.
“நமக்குள்ளே எதுக்குப்பா தயக்கம்…?”
“எங்கூட படிச்ச பொண்ணு… மூணு வருஷம் ஜூனியர்… கூடவே வேலை பாக்குறா… ஆறு வருஷப் பழக்கம். மனசு நெருக்கமாயிடிச்சு… ரொம்ப ரொம்ப நல்ல குடும்பப்பா”
இப்படி ஒருதகவல் அவனிடமிருந்து வரும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. காரணம்… அதற்கான சின்ன அறிகுறி கூட அவனிடம் தெரிந்ததில்லை.
ஆசுவாசப்படுத்திக் கொள்ள எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
உறங்குவது போல் கேட்டுக் கொண்டே படுத்திருந்த அம்மாவின் அருகில் உட்கார்ந்திருந்தான் மதி.
“சரி… விவரம் தெரிஞ்சவன் நீ… தேடிக்கப் போற வாழ்க்கை உன்னோடது… உன் விருப்பப்படியே செஞ்சிடுவோம்…”
அவன் முகத்தில் சரசரவென நிம்மதி படந்தது.
‘அது சரி… அவங்க என்ன ஜாதியாம்…?” கொஞ்சம் தயக்கத்தோடு நான்.
‘அது எதுக்குப்பா?”
சட்டென்று மதியிடமிருந்து வந்த எதிர்க் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஊமையானேன்.

ஆனந்த விகடன்-

உத்தமசோழன்/யாராவது ஒருவன் – விருட்சம் நாளிதழ்