உத்தமசோழன்/யாராவது ஒருவன்

நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.
பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் அவதிப்படும் அப்பாவைப் போல் ஏகப்பட்ட
உறுமல்களுக்குப் பின் திணறித்திணறி உருளத் தொடங்கியது.
“என்னப்பா… இந்த உருமு உருமுது… கோட்டை வாசப்படியாவது தாண்டுமா…?’
கீழையூர் போகவேண்டிய ஒருவரின் கவலை.
“முதல்லே பஸ் ஸ்டாண்டை விட்டுத் தாண்டுமான்னு பாருங்க…!”
யாரோ ஒருவர் சொல்ல அத்தனை நெரிசலிலும் கொல்லென்று சிரித்தது கூட்டம்.
இந்த கிண்டலைப் பற்றியெல்லாம் கவலைப் படாத பஸ் மெதுவாய் உருண்டோடத் தொடங்கியது.
வேளாங்கண்ணிக்குள் நுழைந்த பஸ் வளைந்து திரும்பி நின்றது?
அங்கே பெருங்கூட்டம் ஒன்று பஸ்ஸை நோக்கி திமுதிமுவென்று ஓடிவந்தது. பஸ் நிற்குமுன்பே முட்டி மோதி ஏறியது.
“முதல்லே இறங்க விடுங்கப்பா…’இறங்கியவர்கள் எரிச்சலோடு கத்தியது ஏறியவர்களின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
இத்தனைக்கும் பஸ்ஸின் பாதிக் கூட்டம் வோளங்கண்ணியில் இறங்கிவிட்டது.
ஒரு வழியாக பஸ் புறப்பட்டது. அந்த நேரம் பார்த்து இரண்டு பேர் “நிறுத்து… நிறுத்து…” என்று கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி தட்டுத் தடுமாறிக் கொண்டே பஸ்ஸின் குறுக்கே நின்று வழி மறித்தனர். பஸ் நின்றது.
கோணல் மாணலாக ஏறியவர்களில் ஒருவன் “எங்கேடா அந்தக் கண்டக்டர் பய… எத்தனை மணிக்கு வரவேண்டிய பஸ்… எத்தனை மணிக்குடா வருது…?” என்று அதட்டினான்.
மற்றொருவன் வேறு மாதிரி பேசினான். “பஸ் நின்னோன்னேயே டீ குடிக்கப் போயிருப்பானுங்களே… கண்டக்டரும் டிரைவரும்.”
அவர்கள் ஏறுவதற்காக நின்ற பஸ் மறுபடி புறப்படவில்லை.
பஸ்ஸிலிருந்த கூட்டம் போதையில் தடுமாறிய அந்த இரண்டுபேரையும் எரிச்சல் மண்டிய கண்களால் பார்த்தது.
“நாட்டிலே அரிசி கிடைக்குதோ இல்லையோ… ‘இது’ தாராளமா கிடைக்குது… ஏத்திக்கிட்டு வந்துடுறாங்க… நம்ப உசிரை எடுக்குறதுக்குன்னே…?” இப்படி ஒருத்தன் அடித் தொண்டையில் ஆத்திரப்பட்டான்.
அவ்வளவுதான்.
‘ஆமாண்டா… நாங்க குடிச்சுட்டுதான் வந்திருக்கோம். உங்கப்பன் வீட்டு காசிலா குடிச்சோம்…? என் காசு. நான் குடிப்பேன். அதைச் சொல்ல நீ யாரு…”
போதைப் பேர் வழிகளில் ஒருவன் ஆத்திரப் பட்டவனிடம் சண்டைக்குப் போனான். துணைக்கு அடுத்த போதைப் பேர்வழியும் சேர்ந்து கொண்டான். விவரம் தெரிஞ்ச ஒருவர் குடிமகன்களை சமாதானப்படுத்தினார்.
“கோச்சுக்காதீங்கண்ணே… அவரு ஏதோ தெரியாம பேசிட்டாரு… உங்க காசு… குடிக்கிறது நீங்க… அவரு யாரு கேக்க…?”
“அப்படிச் சொல்லுங்க…”
குடிமகன்களுக்கு பரம சந்தோஷம்.
“பாத்தீங்களா… ஓசி டீ குடிக்கப் போன அந்த டிரைவர் பயலும் கண்டக்டர் பயலும் இன்னும் வர்லே…”
மறுபடியும் “தண்ணிப் பார்ட்டி” யின் கோபப்பாய்ச்சல்.
“கண்டக்டர் பய எங்கேயும் போயிடலை. உன் பக்கத்திலேதான் நிக்கிறேன்…”
இதுவரை போதை நபரின் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த கண்டக்டர் கோபத்துடன் வெடித்தார்.
”நின்னு…என்னசெய்றே வெங்காயமா வெட்றே… விசிலடிக்காம…?”
“இதுக்கு மேலே பேசினே… பேச நாக்கு இருக்காது…” கண்டக்டர் தீப்பந்தமானார்.
பஸ் பரபரப்பானது. “என்ன கண்டக்டர் நீங்க… அவனுங்கதான் குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றாங்கன்னா… நீங்களுமா…? தொலையுது விடுங்க… விசிலடிங்க…” சிலர் சமாதானப் புறாக்களாகினர்.
“குடிச்சிட்டா… எது வேணாலும் பேசலாமா… நீங்க யாரும் அதை கேக்க மாட்டீங்களா…?”
“அவங்க நிதானமா இருந்தாதானே கேக்குறதுக்கு…?”
அப்படிச் சொன்னவரிடம் குடிமகன்கள் இருவரும் பாய்ந்தனர்.
“எவன்டா நிதானமில்லாம இருக்கான்…?”
அவரோ அவர்களை அருமையாக சமாளித்தார்.
“உங்களை யாரு சொன்னா…? நீங்கதான் ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கீங்களே…’
“அதானே பாத்தேன்…!”
‘குடிமகன்கள்’ இருவருக்கும் ஏக திருப்தி.
“பஸ்ஸை எடுங்கப்பா… அவன்வன் வீடு வாசலுக்கு போக வேண்டாமா? இப்பவே லேட்டு… இப்படிக் கூத்தடிச்சு நேரத்தை போக்கிக்கிட்டிருந்தா காலையிலே வேலை வெட்டிக்கு திரும்பி வர வேண்டாமா…”
“கண்டக்டரின் கோபம் இப்போதைக்கு மாறாது. விசிலடிக்கவும் மாட்டார்” என்று புரிந்து கொண்ட டிரைவர் பஸ்ஸை எடுத்துவிட்டார்.
ஆர்ச்சு வந்து திரும்பிய போது அங்கே ஒரு கூட்டம் பஸ்ஸில் ஏறியது.
ஏறிய கூட்டத்தில ஒருவர் குடிமகன்கள் மீது இடித்துவிட்டார். அவ்வளவுதான்
இடிபட்ட குடிமகனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
‘ஏண்டா… உனக்கெல்லாம் கண்ணு தெரியாதா…? எருமை மாடு மாதிரி மேலே வந்து விழுறே…?”
தவறுதலாக இடித்தவர் அவனை முறைத்தார்.
”எனக்கு கண்ணு தெரியறது இருக்கட்டும். முதல்லே நீ வளைசல் நெளிசல் இல்லாம நிமிந்து நிக்கிற வழியைப் பாரு…?”
‘யாரு… யாரு… வளைஞ்சு நிக்குறது நீயா…நானா…?”
வளைந்து நெளிந்தபடியே கேள்விக்கு எதிர்க்கேள்வி கேட்டார் ஒரு குடிமகன்.
அடுத்த சண்டை ஆரம்பமாவதற்குள் விசிலடிக்காமலே பஸ்ஸை எடுத்து விட்டார் டிரைவர்.
பஸ் உப்பனாற்றின் உயரமான பாலத்தில் ஏறி இறங்கிய போது குலுக்கலில் நின்று கொண்டிருந்த அத்தனை பேரும் ஒருவரோடொருவர் இடித்துக் கொள்ள நேரிட்டது.
ஒரு குடிமகன், பக்கத்தில் நின்றவன் மீது இடிபட்டவனிடமே இடித்ததுமில்லாமல் சண்டைக்கும் போனான்.
“பஸ்லே வந்தா இடிக்காம வரத் தெரியாத உனக்கு…?”
“இடிபடாம போவணும்னா தனியாகாரெடுத்துக் கிட்டுப் போ… பஸ்ஸுன்னா இப்படித்தான்…!” “அப்படியா… இன்னொரு தடவை இடிச்சுப் பாரு… மூஞ்சி மோறையெல்லாம் பேத்துட்டு
மறுவேலை பாக்குறேன்…”
“அதுவரைக்கும் நீ நட்டமா நிக்க முடியுமான்னு பாரு… மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…”
“என்னடா சொன்னே…?”
குடிமகன், சடாரென்று கேட்டவரின் சட்டையைப் பிடிக்க… அவரோ அவனது கையை
படாரென்று தட்டிவிட, குடிமகன் தடுமாறி விழப் பார்த்து சுதாரித்தான்.
குடிமகனுக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த ஒருவன் பொறுமையிழந்து நற நறத்தான்.
“இதப்பாரு… குடிச்சிட்டா பெரிய கொம்பன்னு நினைப்பா உனக்கு…? நான் ‘ராவாவே’ முழுப் பாட்டிலை உள்ளே தள்ளுவேன்… ரொம்பத் துள்ளாம பொத்திக்கிட்டு வா…!”
‘யாரு.. நா … நான் பொத்திக்கிட்டு வரணுமா…?” என்று சொன்னவனின் நெஞ்சில் இன்னுமொரு குடிமகன் கையை வைக்க பக்கத்தில் நின்ற கூட்டம் அவர்களைப் பிரித்து விட்டது.
அவரவர்களுக்கும் பஸ் ஊர் போய் சேர வேண்டுமே என்று கவலை.
‘நிதானப்’ பேர் வழியிடம் அடித்தொண்டையில் ‘அவனுங்கதான்… போதையிலே இருக்கானுங் கன்னா… நீங்க எதுக்கு சரிக்கு சமமா அவனுங்களோட மல்லுக்கு நிக்குறீங்க… கிடக்குது விடுங்க” என்று ரகசியக் குரலில் புத்திச் சொல்லி சமாதானப்படுத்தியது கூட்டம்.
ஒரு பெரிய குழியில் பஸ் விழுந்து எழுந்தபோது குடிமகன்களில் தாட்டியாயிருந்த ஒருவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் மீது பொத்தென்று விழுந்து எழுந்தான். அந்தப் பொண்ணோ கொதித்துப் போனாள்.
“நானும் அப்போதிருந்து பாத்துக்கிட்டிருக்கேன். சும்மா சும்மா பொம்பளை மேலேயே வந்து சாயுறியே… என்னய்யா நினைச்சுக்கிட்டிருக்கே…”
“ஆசைப்பட்டா இடிக்கிறேன்… பஸ்ஸு அந்த ஆட்டம் ஆடு…”
“பஸ் ஆடலே… நீந்தான் ஆடுறே…”
“ஆமா… ஆடுறேன்… ஆடுவேன்… என்ன செய்யணுங்கிறே இப்போ…!” என்று கேட்டபடி அந்தப் பெண்ணை இடித்தபடியே சண்டைக்குப் போனான்:
“இதுவே உன் அக்கா தங்கச்சியா இருந்து இன்னொருத்தன் இடிச்சா பொறுத்துக்குவியா…?”
“என் அக்கா தங்கச்சி இதுமாதிரி ராத்திரியிலே வரமாட்டா…”
“அப்படீன்னா…?” அந்தப் பெண்ணின் கண்களில் நெருப்புப் பற்றிக் கொண்டது. மொத்தக் கூட்டத்தையும் சுட்டெரிப்பது போல் பார்த்தாள். பிறகு குமுறலாக கேட்டாள்.
‘பஸ்லே எழுபது எண்பது பேருக்கு மேலே இருக்கோம்… ஒரு ரெண்டுபேரு… குடிச்சுட்டு வந்து இல்லாத லூட்டி அடிக்கிறாங்க… எல்லாரையும் சண்டைக்கிழுக்கிறாங்க… ‘நமக்கெதுக்கு வம்பு’ன்னு எல்லாரும் இப்படி ஒதுங்கி ஒதுங்கி நின்னா என்ன அர்த்தம்?”
அந்தப் பெண் அப்படி கேட்டதுதான் தாமதம். பஸ்ஸிலிருந்த அத்தனைக் கூட்டத்திற்குள்ளும் குபீரென்று தீப்பற்றிக் கொண்டது.
அவ்வளவுதான். பஸ்ஸிலிருந்த குடிமகன்கள் இருவரையும் சுற்றி வளைத்தது கூட்டம்
பயணிகளில் ஒரு சிலர் பஸ்ஸை நிறுத்தினர்.
ஆள் நடமாட்டமில்லாத அத்துவானக் காட்டில் ஒரு குடிமகன் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விடப்பட்டான். துள்ளிக்குதித்த மற்றவனை முதுகில் இரண்டு வைத்து இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி கீழே இறக்கி விட்டார்கள்.
“இனிமே ஊருக்குப் போக பஸ் கிடையாது. ராத்திரி பூரா நடக்கட்டும். ‘இனிமே பஸ்லே ஏறினா வாயைத் திறக்கவே பயப்படணும்…”
பஸ் முழுக்க இதே பேச்சுதான். சுவாரசியமும் சந்தோஷமுமா

மனிதக் கூட்டம் எப்போதுமே நல்ல கூட்டம் தான்., அதை உசுப்பிவிடத் தான் யாராவது ஒரு நல்ல ஆள் தேவைப்படும்.

-‘களரி’ பட்டுக்கோட்டை தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுமலர் –

உத்தமசோழன்/தப்புக் கணக்கு – விருட்சம் நாளிதழ்

One Comment on “உத்தமசோழன்/யாராவது ஒருவன்”

Comments are closed.