
சங்கரும் கண்ணனும் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தார்கள். இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை.
பேசக்கூடாது என்றில்லை. பேசத் தோன்ற வில்லை. இருவருடைய முகத்திலும் என்னென்னவோ சிந்தனைகள். சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி அலைகள். கண்ணனின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள்.
நான்கு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது இப்படியில்லை. அப்போதும் இதேபோல் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தனர். இரவு முழுக்க பேசிக்கொண்டே வந்தார்கள். ‘அதிகாலை தூக்கம்… அசத்தும் நேரம்’ என்பார்களே… அப்போது கூட அவர்களை தூக்கம் நெருங்கவில்லை. பேச்சு… பேச்சு… அப்படியொரு பேச்சு. ஒருவரோடொருவர். கழுத்தைக் கட்டிக் கொண்டு காதோடு காதாக மாற்றி மாற்றி விதம் விதமாக கேள்வி கேடப்தும் பதில் சொல்வதும் இடையிடையே வெடித்துக் கிளம்பிய சிரிப்பொலிகளுமாய் வந்தார்கள். முன்னும் பின்னும் இருந்தவர்கள் தூக்கம் கலைந்து எரிச்சலடைந்தார்கள். அதை அவர்களால் உணர முடியவில்லை.
அவர்களுடைய ஒரே நோக்கம் கலந்து கொள்ளப் போகும் போட்டியில் இதுவரை யாரும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறவேண்டும். என்பது மட்டுமே எனவே வேறெதுவும் அவர்கள் கவனத்தை கலைக்க முடியவில்லை.
இப்போதோ… வந்த காரியம் முடிந்து, போட்டியில் பதினைந்து லட்சம் ரூபாயை ஜெயித்து… அதற்கான காசோலையை சூட்கேஸில் பத்திரப் படுத்திக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருக் கின்றனர்.
பிறகென்ன…? வந்ததைவிட பத்து பங்கு கலகலப்பாகவல்லவா திரும்பவேண்டும்… !
வேண்டும்தான்.
ஆனால்… எப்படியோ தெரியவில்லை… இருவருக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை ஒன்று விழுந்தது தெரியாமல் விழுந்துவிட்டது.
சங்கரும் கண்ணனும் இன்றைக்கு நேற்று நண்பர்களல்ல… தெருப்புழுதியில் விளையாடத் தொடங்கியதிலிருந்தே அவர்களது நட்பின் கதை தொடங்குகிறது.
இருவருக்கும் ஒரே தெரு… ஒரே வயசு… ஒரே பள்ளிக்கூடம்… சாப்பிடும் தூங்கும் நேரம் தவிர… சில நேரங்களில் அதுவும் கூட ஒன்றாய்த்தான். ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் மாதிரிதான்.
ப்ளஸ் டூ முடித்ததும் மேற்கொண்டு என்ன செய்வது என்று இருவருக்குமிடையே பலத்த யோசனை. தடுமாற்றம். அவர்கள் குடும்பச் சூழலுக்கு ப்ளஸ் டூ என்பதே அதிகபட்சம். தொழிற்கல்வி… கல்லூரிக் கல்வி பற்றியெல்லாம் கற்பனைதான் செய்ய முடியும். யாரும் சொல்லாமலே ‘பிழைப்பதற்கு வழி என்ன…?’ என்று எதிர்காலம் குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.
தங்கள் சக்தி என்ன… தங்களால் என்ன செய்ய முடியம் என்று விதம்விதமாய் கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தபிறகு யதார்த்த சிந்தனையோடு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அவர்களது ஊரைவிட்டு கொஞ்சம் தள்ளியுள்ள ‘கூடுசாலை’யில் கண்ணன் ஒரு சிறிய மளிகைக் கடையும், சங்கர் ஒரு டீக்கடையும் வைப்பதென்பது தான் அந்த முடிவு.
‘கூடுசாலை’ என்பது வீடு வாசல் இல்லாத பேருந்து சாலையில் உள்ள ஒரு வனாந்திரமான இடம். அந்த கூட்டு ரோடிலிருந்துதான் நாலாபக்கமும் உள்ள ஊர்களுக்கு கிளைச்சாலைகள் பிரிந்து போகும். சுற்றுப்பட்ட மக்களெல்லாம், பஸ் ஏற, அங்கேதான்
வந்தாக வேண்டும்.
சூட்சமத்தை புரிந்து கொண்ட அவர்கள் தங்கள் வீட்டிலிருந்த மரம் கழிகள் கீற்றுகளை வைத்து கூடுசாலை சந்திப்பில் சேர்ந்தாற்போல் இரண்டு
கொட்டகைகள் போட்டார்கள். ஒவ்வொரு கொட்டகையிலும் வியாபாரத்திற்கு பாதி இடம்
என்றால், பேருந்துக்காக காத்திருப்போர் உட்கார்ந் திருக்கவும் பேசிக்கொண்டிருக்கவும் பாதி இடம் என்று திட்டமிட்டார்கள்.
அவர்களின் திட்டம் வீண் போகவில்லை. பேருந்துக்கு வருகிறவர்கள் காத்திருக்கின்ற நேரத்தில் அந்த பொட்டல் வெளியில் உட்கார வேறு இடமில்லை. இப்போது இவர்களது கடையில் வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சும்மா உட்கார முடியாதல்லவா…? டீ குடித்தார்கள். பிஸ்கட் பழம்’ வாங்கினார்கள்.
பாக்கெட் பால் இல்லாமல் சொந்த மாட்டுப் பாலில் நாக்கில் ஒட்டிக்கொள்வது போல் ருசியான டீயாய் போட்டுக் கொடுத்தான் சங்கர். டீயோடு போண்டா… வடை… பஜ்ஜி… சமோசா… என்று விரிவுபடுத்தினான். சூடும் சுவையுமாக இருந்ததால் போடப் போட தீர்ந்து போனது. இப்படி டீக்கடை கொஞ்சம் கொஞ்சமா களைகட்டத் தொடங்கியது.
கண்ணன் மட்டும் சளைத்தவனா… என்ன…? பக்கத்து நகரத்தில் என்ன விலைக்கு மளிகை சாமான்கள் கிடைக்குமோ அதே விலைக்குக் விற்றான். எல்லாப் பொருட்களையும் சுத்தமாக புடைத்து சரியான எடைக்கு கொடுத்தான். அப்புறமென்ன…?
இருவருக்குமே வியாபாரம் றெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.
கொட்டகை போடக்கூட கையில் காசில்லாதவர் களுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?
எல்லாம் சங்கர் சொன்ன யோசனைதான். இருவரும் பக்கத்து நகரத்தில் உள்ள பெரிய மளிகைக் கடைக்குப் போனார்கள். “இன்ன இடத்தில் கடை வைத்திருக்கிறோம். இங்கே நீங்க விக்கிற விலைக்கே
கொடுக்கணும். எல்லா சாமானையும் மொத்தமா உங்க கடையிலே ம் வாங்கிக்கிறோம். வாங்கின கையோட காசு. ஆனா எங்களுக்கு கொஞ்சம் கமிஷன் கொடுக்கணும்
டவுன் விலைக்கே கண்ணன் கடையிலே கிடைக்கும்னு ஜனங்களுக்குத் தெரியணும் . ‘என்ன சொல்றீங்க…” என்றான்.
அவருக்கு கசக்கவா போகிறது…! தாராளமா…!” எனறு கடைக்காரர் சம்மதித்தார்.
‘காசு செலவழிச்சு டவுனுக்கு எதுக்குப் போவணும்…? அதே விலைக்குதான் நம்ப கண்ணன் நம்ம ஊர்லேயே கொடுக்கிறானே. காசுக்கு காசும் மிச்சம்… நேரத்துக்கு நேரமும் மிச்சம்.’
வருகின்றவர்களெல்லாம் கண்ணன் கடையில் வீட்டிற்குண்டான சாமான்களை வாங்கிக் கொள்வார்கள். சங்கர் கடையில் வடையும் போண்டாவும் தின்று டீ குடித்துவிட்டு டவுன் பக்கம் போகாமலே
ஊருக்குத் திரும்பினார்கள்.
ருசியான டீயால் சங்கர் கூட்டத்தைக் கூட்டினால், தரத்தாலும் விலையாலும் மளிகைக் கடைக்கு
கூட்டத்தை கூட்டினான் கண்ணன். ஒருவருக்கு மற்றவர் உதவி… ஒருவரால் மற்றவருக்கு வியாபாரம்.
வாழ்க்கை சிறிது சிறிதாக தன்னிறைவுக்கு வந்தது. பிறகென்ன…? இவனுக்கு அவன் பெண் பார்த்தான். அவனுக்கு இவன் பெண் பார்த்தான்,
சடங்கு சம்பிரதாயம்… அவரவர் முறைப்படி யென்றாலும் ஒரே நாவில் ஒரே மேடையில் இருவருக்கும் திருமணம், மறு வருஷம் இருவரின் வாரிசுகளில் பொக்கை வாய் சிரிப்புகள்,
இவனுக்கு முள் தைத்தால் அவனுக்கு வலிக்கும். அவனுக்கும் மகிழ்ச்சி என்றால் இவனது முகம் பூரித்துப் போகும்.
இப்படித்தான் ஒரு நாள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது.
“உங்களுக்காக ஒரு போட்டி… ‘பொது அறிவுப் போட்டி.’ யாராக இருந்தாலும் கலந்து கொள்ளலாம். அதற்குத் தகுதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் திறமை மட்டுமே. மொத்தம் ஐம்பது கேள்விகள். பரிசு ஒரு கேள்விக்கு ஒரு லட்சம். ஐம்பதும் கேள்விக்கும் பதில் சொன்னால் ஐம்பது லட்சம். அதைப் பெறப்போகிறவர் நீங்களாகக் கூட இருக்கலாம். உடனே தொடர்பு கொள்ளுங்கள்…’
இதைப் பார்த்த இருவருக்குள்ளும் திடீரென்று ஒரு யோசனை.
“நாம கலந்து கொண்டா என்ன…?” சங்கர்தான் கேட்டான்.
“கலந்துக்கலாம்தான்… நம்மால பதில் சொல்ல முடியுமா…?” கண்ணன் யோசித்தான்.
‘முடிஞ்சவரைக்கும் சொல்றோம். கிடைக்கிற வரைலாபம்தானே…”
‘அதுவும் சரிதான். என்னைவிட நீதான் இந்த விஷயத்துக்கு லாயக்கு… அதனாலே உன் பேரிலேயே எழுதிப்போடு. நான் உனக்கு உதவியா வாரேன்…” சங்கர் கண்ணனுக்கு முடிசூட்டினான்.
“ஏன்… உனக்கு ஒண்ணும் தெரியாதா.? என்னைவிட நீதான் போட்டிக்கு பொருத்தமான ஆளு…”
சங்கர் கேட்டதற்கு கண்ணன் மறுப்பறிக்கை வாசித்தான்.
“நாம ரெண்டு பேர்லே யாரு கலந்துகிட்டா என்ன…? நீதான் கலந்துக்கிறே…? நான் உனக்கு உதவி…”
கண்ணன் முடிவாக சொல்லிவிட்டு அன்றே டி.விக்கும் சங்கர் பெயரில் எழுதிப்போட்டான்.
போட்டிக்கு அழைக்கப்பட்டபோது சங்கர் ரொம்பவே பயந்து போனான். கண்ணன்தான் தைரியம் சொல்லி அழைத்துக் கொண்டு போனான்.
போட்டிக்கு வந்தவர்கள் அனைவருமே எக்கச்செக்கமான தயாரிப்புகளோடு வந்திருந்தனர். அவர்கள் பேச்சு. உடை… பாவனையில்… சங்கர் மிரண்டுபோனான்.
“டேய் சங்கர். காடுன்னா சிங்கம் மட்டுமே இருக்காது… புலி… யானை… மான் அப்படின்னு பெரிசும் சின்னதுமா எத்தனையோ விலங்கிருக்கும். ஆனா ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விதத்திலே பலம் இருக்கும். அது மாதிரிதான் நீயும்… யாரைக் கண்டும் பயந்து சாவாதே…”
சங்கரின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் காதோடு காதாக தைரியம் சொன்னான் கண்ணன்.
*
போட்டி ஆரம்பமாயிற்று.
போட்டி நடத்துபவர் அசத்தலாக இருந்தார். இவன் நெஞ்சுக்குள் கண்களுக்குள் புகுந்து நுழைந்து
எதையோ தேடுவதைப் போல் ஊடுருவினார்.
‘பயப்படாதே…!’ என்று தூரத்திலிருந்து களாலேயே தெம்பு சொன்னான் கண்ணன்.
“சரி… சங்கர்…! பாத்தாலே தெரியுது… நீங்க ரொம்ப தைரியமா இருக்கீங்கன்னு… உங்களுக்கான முதல் கேள்வி..’ தன்னை வெட்ட வரும் மனிதனைப் பார்த்து மரங்கள் உள்ளுக்குள் பயந்து நடுங்குகின்றன…’ சரியா… தவறா…?”
சங்கர் குழம்பினான். நடுங்குகிறதா…எப்படி…?’
“தவறு சார்..!”
போட்டி நடத்துபவர் சங்கரைப் பார்த்து அழகாய் முறுவலித்தார்.
“நல்லா யோசிச்சு சொல்லுங்க… அவசரப்பட வேண்டாம்.
யோசித்தான். ‘இல்லை. நாம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறோம். நம்மை வெளியே அனுப்ப இவர் பாசாங்கு செய்கிறார்.. நாம் உஷாரா இருந்துக்கணும்../’
“தவறுதான் சார்…” சங்கர். தீர்மானமாய் சொன்னான்
போட்டி நடத்துபவரிடம் புன்னகை மறைந்தது.
‘உங்கள் நண்பரோட ஆலோசனையைக் கேட்கலாமா…!”
”எனக்கு சந்தேகமில்லே… நீங்க சொல்றதால கேட்கலாம் சார்…!”
கண்ணனைத் திரும்பிப் பார்த்தான் சங்கர்.
போட்டி நடத்துபவர் கண்ணன் பக்கம் திரும்பி
“உங்க நண்பருக்கு உதவலாமா…? மரம் பயப்படுமா…?” என்றார்.
“பயப்படும் சார்…! ‘சரி’ என்பதுதான் சரியான பதில் சார்…!”
”உங்கள் நண்பர் தவறு என்கிறாரே…!”
“இல்லைங்க சார்.. ‘சரி’ என்பதுதான் சரி. சமீபத்திலே தான் படிச்சேன்…!”
போட்டி நடத்துபவர் கம்ப்யூட்டரை கிளிக் செய்தார்.
“சரியான பதில்…!”
போட்டி நடத்தியர் மட்டுமல்ல… படப்பிடிப்பு அரங்கமே கைதட்டியது. தன்னைறியாமலே கண்ணனை திரும்பிப் பார்த்தான் சங்கர். நன்றி மின்னும் கண்களுடன்.
அதன்பிறகு சங்கருக்குள் ஏதோ ஒரு மாயாவி புகுந்து கொண்டதைப்போல் ஒவ்வொரு கேள்விக்கும் டான் டாண்ணு பதில் சொன்னான். பரிசுத் தொகை ஆறு லட்சமாகிவிட்டது.
நிகழ்ச்சியாளர் “இப்போ எப்படி இருக்கு சங்கர்…?” என்றதும் “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்…!” என்றான்.
“இப்போ ஆறு லட்சம் உங்க பாக்கெட்லே…
இதுலே உங்க ஃபிரெண்ட்..ஆலோசகர்…கண்ணனுக்கு எவ்வளவு கொடுப்பீங்க…?”
சங்கரின் புருவம் லேசாக சுருங்கி விரிந்தது. வசீகரமாய் சிரித்தபடியே ‘மாட்டேன்’ என்று தலையாட்டினான்.
“என்ன சங்கர்… அவர் உங்க ஃபிரெண்ட்……… பார்ட்னர்… உங்ககூட வந்திருக்கார்… அவருக்கு கொடுக்கமாட்டீங்களா…?”
“மாட்டேன்… அப்படியே நான் கொடுத்தாலும் அவன் வாங்கிக்கவும் மாட்டான். அப்படிவாங்கிக்கிறது அவனுக்குப் பிடிக்காத விஷயம்…!”
அவனது பதில் நிகழ்ச்சியாளரைக்கூட லேசாக முகம் சுருங்க வைத்தது.
இருந்தாலும் அவர் அதை மறந்து அடுத்தடுத்து கேள்விக்குத் தாவினார்..
பதினைந்து கேள்விகளுக்கு பட்பட்டென்று பதில் சொன்னவன் பதினாறாவது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டான் சங்கர். பதினைந்து லட்சத்திற்கான காசோலையை சங்கரிடம் கொடுத்து ‘வாழ்த்துக்கள்…!” என்று நிகழ்ச்சியாளர் கை குலுக்கினார்.
பஸ் ஓடிக் கொண்டேயிருந்தது.
சங்கருக்கு சந்தோஷத்தால் தூக்கம் இல்லை. கண்ணனுக்கோ மன உளைச்சலால் தூக்கமில்லை. ‘ஜெயிச்ச பணத்திலே உங்க பிரெண்ட் கண்ணனுக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு
கேட்டதுக்கு ‘எதுவும் கொடுக்கமாட்டேன்னு’ பளிச்சின்னு சொல்லிட்டானே… ‘கொடுத்தா அவனே வாங்கிக்க மாட்டான்னு’ சமாதானம் வேறே… திருட்டுப் பயல்… முதல் கேள்விக்கு நாம பதில் சொல்லலேன்னா… இவன் எடுத்த எடுப்பிலேயே தலையை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியே வந்திருப்பானே…! பணம்னு கிடைச்சோன்னே பயல் டக்குன்னு மாறிட்டானே…! என்னது அவனதுன்னு ஏதுமில்லே சார்… எல்லாமே அவனதுதான்னு’ ஒப்புக்காவது சொல்வான்னு நினைச்சேன். பயலுக்கு அதுக்குக்கூட மனசு வரலையே… ச்சே… நாமதான் வாங்க மாட்டோம்னு தெரியும்லே… எல்லாத்தையும் அவன்கிட்டேதான் கொடுப்பேன். அவனால்தானே இந்தப்பணம். அவனாப்பாத்து எனக்கு எவ்வளவு கொடுக்கிறானோ அதை சந்தோஷமா வாங்கிக்கு வேன்னு சொல்லியிருந்தா எவ்வளவு பெருமையா இருந்திருக்கும்…!’
கண்ணணின் மனசு முழுக்க கசந்து போயிருந்தது.
ஊரே தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது சங்கரை, கண்ணனின் மனைவி கூட “எங்களால சந்தோஷத்தை கட்டுப்படுத்திக்க முடியலேண்ணே…’ என்று முகமலர சங்கரிடம் சொன்னாள்.
அன்று இரவு வழக்கம்போல் இரண்டு
குடும்பமும் சாப்பாட்டிற்காக ஒன்று கூடியது. கண்ணன் கண்ணிலேயே தென்படவில்லை. “எங்கம்மா அவன்…?” சங்கர் கண்ணன் மனைவியிடம் கேட்டான்.
“உடம்பு சரியில்லைன்னு படுத்திருக்காங் கண்ணே…!” என்றாள்.
“உடம்பு சரியில்லையா…! அதான் வர்றப்பவே ஒரு மாதிரி உம்முன்னு இருந்தானா…?”
சட்டென்னு அறைக்குள் நுழைந்து படுக்கை யிலிருந்த கண்ணனை தட்டி எழுப்பினான் சங்கர்.
“நாளைக்கு டாக்டர் கிட்டே காட்டி உடம்பை சரி பண்ணிக்கலாம். முதல்லே இதை வாங்கிக்கோ…!”
எழுந்து கொண்டவனின் எதிரே சங்கரின் மனைவி நின்றிருந்தாள். அவளது கையில் ஒரு பழத்தட்டு. அதில் போட்டியில் ஜெயித்த பதினைந்து லட்ச ரூபாய் செக். அதை கண்ணனின் மனைவியிடம் நீட்டினாள். சங்கர் நெகிழ்ச்சியோடு சொன்னான்.
“நாம ரெண்டு குடும்பமும் பட்ட கஷ்டத்துக்கு ஒரு முடிவு வந்துட்டுதும்மா… செக் என்பேர்லே இருந்தாலும் அது கிடைச்சது உன் புருஷனாலதான். இதை வச்சு நம்ப ரெண்டு குடும்பமும் என்ன செய்யணும்னு நீயும் உன் புருஷனுமா நல்லா யோசிச்சு சொல்லுங்க…”
பொடேரென்று யாரோ தன் பிடரியிலடித்தது போலிருந்தது கண்ணனுக்கு.

One Comment on “உத்தமசோழன்/தப்புக் கணக்கு”
Comments are closed.