உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…

காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.
இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் கொண்டே யிருக்கும். வெறிச்சோடிக் கிடக்கும் பள்ளி வளாகம் ஒன்பது மணிக்கெல்லாம் ஒரு பூந்தோட்டம் போல் மாறிவிடும்.
தந்தையின் இடுப்பை கோர்த்தபடி வந்திறங்கும் பெண், அப்பாவின் கன்னத்தை இழுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு “பை… டாட்…!” என்று புத்தகப் பையோடு உள்ளே நுழையும். அந்தத் தகப்பனோ… அந்தக் குழந்தை வகுப்புக்குள் சென்று நுழையும் வரை அது நடந்து செல்லும் அழகைக் கண்குளிரப் பார்த்து விட்டுதான் பைக்கை ஸ்டார்ட் செய்வான்.
அம்மாவோடு சைக்கிளில் வந்திறங்கும் குழந்தைகள் “மம்மி… டாட்டா…” என்று சொல்லிய படியே புத்தகச் சுமையோடு குடுகுடுவென்று உள்ளே
ஓடும். கண்ணிலிருந்து மறையும் வரை இமைக்காமல் பார்த்து மனசுக்குள் குழந்தையை விழுங்கிய பிறகே அம்மாக்கள் வீட்டை நோக்கி நடப்பார்கள்.
தாத்தாக்கள்… பாட்டிகளின் கைகளை பிடித்துக் கொண்டே லூட்டி அடித்தபடி நடந்து வரும் குழந்தைகள், வாசல் வந்ததும் பைகளை வாங்கிக் கொண்டு “பாத்துப்போ தாத்தா…!” என்று கவலையோடு எச்சரித்துவிட்டு உள்ளே நுழையும். தாத்தாக்களும் பாட்டிகளும் உடனே திரும்பிவிடுவ தில்லை. சிமெண்ட் பெஞ்சில் கொஞ்ச நேரம் ஆசுவாசமாய் உட்கார்ந்து கொண்டு தங்களது பேரப்பிள்ளைகளை கண் கொட்டாமல் பார்த்து விட்டுதான் மெல்ல எழுந்து போவார்கள்.
ஏதோ அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்பது போல் அவர்களின் முகம் சொல்லும். மனசெல்லாம் நெகிழ்ந்து போயிருப்பது கண்களில் தெரியும்.
வாசலோரம் நிற்கும் பெரியசாமியோ இந்தக் காட்சிகளை பார்த்துப் பார்த்து உருகிப் போய் உட்கார்ந்திருப்பார்.
குழந்தை பள்ளிக்குள் போவதையே முகம் கனிய பார்த்துக் கொண்டே நிற்கும் அப்பா அம்மாக்களையும் தாத்தா பாட்டிகளையும் பார்த்து மனதுக்குள் சொல்லிக் கொள்வார்…
‘ஹும்… இந்தப் பாசத்தை முடிஞ்சவரைக்கும் இப்பவே கொட்டிங்குங்க… அள்ளிக்குங்க. இதெல்லாம்… கொஞ்ச நாளைக்குதான்…! அதோ
திரும்பித்திரும்பி பாத்துக்கிட்டே உள்ளே போறானே… அந்தச் சின்னப்பயல்… பெரியவனாகிறவரைக்கும் தான். அப்புறம் அவனுக்கு உங்களையெல்லாம் திரும்பிப் பார்க்கக் கூட நேரமிருக்காது. அவன் வேற ஒரு உலகத்திலே வாழ ஆரம்பிச்சிடுவான்.’
சில நேரம் அவரது வருத்தமும் கோபமும் பள்ளி ஓரத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் மீது திரும்பும்.
“ச்சே… நீ ரொம்ப மோசம்பா… இந்தப் பிள்ளைங்களை எப்போதும் பிள்ளைங்களாவே இருக்க வச்சு எங்களையும் அப்பாவாவே வச்சிருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்…! இதப்பத்தியெல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா…?
கண்களில் ஈரம் துளிர்விட முணுமுணுத்துக் கொள்வார். அவரிடம் ஒரு கெட்டப் பழக்கம். எதையெல்லாம் மறக்க நினைப்பாரோ அதையே அடிக்கடி நினைத்துக் கொள்வார்.
பெரியசாமிக்கு இந்த ஊர் இல்லை.
திருத்துறைப் பூண்டி பக்கம். வெள்ளங்கால் என்ற பட்டிக்காடு. அந்தக் கிராமத்தின் நாலா பக்கமும் ஆறு. வருஷத்தில் பாதி தண்ணீரால் ஓடும். மீதிக் காலம் வறண்டு கிடக்கும்.
அந்த ஊருக்குள் முதல் மடையோரம் ஆறு ஏக்கர் நஞ்சை. நில உச்ச வரம்பு சட்டம் வந்தபோது அவர்
சேவகம் செய்த பண்ணையார் அவரது விசுவாசத்திற்கு பரிசாக பத்திரத்தை மட்டும் வாங்கி வரச் சொல்லி பதிவு ‘வருஷா வருஷம் பண்ணிக் கொடுத்துவிட்டார். மகசூலில் பணத்தைக் கொடு’ என்று.
பண்ணை நிலத்தையே சொந்த நிலமாக நினைத்து பாடுபட்டவருக்கு. சொந்தமாகவே நிலம் கிடைத்தால் சும்மா இருக்க முடியுமா…? நிலத்தில் பொறுக்கு அடித்து… ஆட்டுக்கிடையும் மாட்டுக் கிடையும் வைத்து மக்கிய இலை தழைபோட்டு மண்ணைப் போட்டால் பொன்னாய் விளையும்படி மாற்றினார். எல்லோர் நிலமும் மாவுக்கு பதினைந்து கலம் நெல் விளையுமென்றால் பெரியசாமியின் நிலம் முப்பது கலம் காணும்.
வயல்காரர்களின் பொறாமைப் பக்கத்து பார்வையை சந்திக்கும்போதெல்லாம் சொல்வார்.
“டேய்… நீ மண்ணைக் கவனிச்சா அது உன்னைக் கவனிக்கும். இதைக் கூட புரிஞ்சுக்காம ஏண்டா பெருமூச்சுவிட்டு ஜீவனைப் போக்கிக்கிறீங்க…”
இரண்டு போகம் நெல்… மூன்றாம் போகமாக உளுந்து பயறு… அதிகச் செலவில்லாத வருமானம்.
வருஷா வருஷம் அவரது கை ஓங்கிக் கொண்டிருந்தது. ஆறு ஏக்கரை பன்னிரெண்டு ஏக்கராக்கினார். இதெல்லாம் இப்போதைய விவசாயத் தொழிலில் நம்ப முடியாத அதிசயம்.
இந்த சந்தோஷம் இருந்தாலும் பிள்ளை இல்லையே என்ற குமைச்சல் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
அவரது அப்பாவும் அம்மாவும் அவர் கூடத்தான் இருந்தனர்.
“டேய் பெரியசாமி… நம்ப குல தெய்வம் அங்காளம்மனுக்கு ‘மதலை’ எடுத்து விடறேன்னு வேண்டிக்கடா… ராசாத்தி வயித்திலே நிச்சயம் ‘பூச்சி’ வைக்கும்…!”
அப்பா அம்மா சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு. சொன்னதை செய்தார். ராசாத்தியின் வயித்தில் அம்மாக்காரி சொன்னபடி ‘பூச்சி’ வைத்தது. ‘அருண்குமார்’ பிறந்தான். அதோடு ராசாத்தியின் வயிறு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுவிட்டது.
‘அதென்ன ‘அருண்குமார்… ‘னு நவீனமா ஒரு பேரு…!’
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.
பெரியசாமியின் தகப்பன் பெயர் அருணாசலம். ராசாத்தியின் அப்பா பெயர் குமாராசாமி. இரண்டு பாட்டன்கள் பெயரையும் ஒன்றாக்கி ‘அருண்குமார்’ என்று நவீனமாக்கி விட்டார்கள்.
அருண்குமார் பெரியசாமி மாதிரியில்லை. அப்படியே ராசாத்தியின் சாயல். ராசாத்தி குளத்தோரத்து தாழம்பூ நிறத்தில் இருப்பாள்.
அந்தப் பயலை யாரும் தரையில் நடக்க விடுவதில்லை. அப்பா… அம்மா… பாட்டி… தாத்தா என்று ஒருவர் மாற்றி ஒருவர் தலையில் தூக்கித் திரிந்தனர்.
அவரது அப்பாவும் அம்மாவும் அவர் கூடத்தான் இருந்தனர்.
சும்மா சொல்லக் கூடாது. பயல் தளதளவென்று வளரும் காட்டுச் செடி போல் வளர்ந்தான். படிப்பில் துறுதுறுவென்றிருந்தான். இடையூரில் உள்ள ‘பெரிய பள்ளிக் கூடத்தில்’ அவன்தான் முதலாவதாக வந்தான்.
பெரியசாமிக்கோ நெஞ்சு கொள்ளாத பெருமை. ராசாத்தியோ சந்தோஷத்தால் பூரித்துப் போய் இன்னும் அழகாய் தெரிந்தாள்.
ப்ளஸ் டூ முடித்ததும் திருச்சியில் மண்டல பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் சீட் கிடைத்தது. பெரியசாமி அருண்குமாரோடு திருச்சிக்குப் போனார். அப்போதுதான் அவர் தஞ்சாவூரையே தாண்டி யிருக்கிறார்.
மகன் பெரிய படிப்பு படிப்பதில் பெரியசாமிக்கு நெஞ்சு கொள்ளாத பெருமைதான். ஆனால் படிப்புச் செலவு அவரது சக்திக்கு மீறியதாக இருந்தது. அதற்காக சோர்ந்துவிடவில்லை.
‘இருக்கிறது ஒரே பிள்ளை. இந்த சொத்து சுகமெல்லாம் அவனுக்காகத்தானே. கஷ்டத்தை பாத்தா முடியுமா…? நாளைக்கே அவன் பெரிய என்ஜினியராகி பத்து ஏக்கருக்குப் பதிலா இருபது ஏக்கர் வாங்கிட்டுப் போறான்…’
மனதைத் தேற்றிக் கொண்டு வருஷா வருஷம் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை விற்று படிக்க வைத்தார். அவன் படிப்பு முடியும்போது அவரிடம் இருந்தது வீடும் ரெண்டு ஏக்கர் நிலமும் மட்டும் தான்.
ஆனால் அவர் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
அருண்குமார் படிப்பு முடித்து வெளியே வருவதற்கு முன்பே ஒரு சர்வ தேச கட்டுமான நிறுவனமொன்றில் வேலை கிடைத்தது. கைநிறைய சம்பளம். கார்… வீடு என்று சமூகத்தின் முதல் தட்டு மனிதனாக மாறிப்போனான். அப்புறமென்ன… மிக அந்தஸ்தான இடத்திலிருந்து வசீகரமான நிறைய படித்த பெண் மனைவியாக வந்து சேர்ந்தாள்.
‘இதற்கு மேல் இந்த பூரிப்பை தாங்க முடியாது… என்று நினைத்தாளோ என்னவோ ராத்திரி வெகு நேரம்வரை பெரிசாமியிடம் பேசிக் கொண்டிருந்த அவரது சம்சாரம் ராசாத்தி அர்த்த ஜாமத்தில் மாரடைப்பில் இறந்து போய்விட்டாள்.
பெரியசாமிக்கோ தனது பலம் முழுதும் பறிபோனது போலிருந்தது. ரொம்பவே தளர்ந்து போனார். அவள் இல்லாமல் அவரால் எதுவும் முடியாது. தாயின் மரணச் செய்தி கேட்டு சென்னையிலிருந்து காரிலேயே வெள்ளங்காலுக்கு வந்து சேர்ந்தான் அருண்குமார். முழுசாய் ஒரு நாள் கூட… அவன் பிறந்து ஓடியாடித்திரிந்த அந்த ஊரில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அருணின் சம்சாரமோ. ‘வெள்ளங்காலை ஒரு ஊர் என்றோ அங்கேயிருப்பவர்களும் ஜனங்கள்தான் என்றோ’ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களது ஐந்து வயது மகனை ‘யாராவது தொட்டு விடுவார்களோ… கண்டதையெல்லாம் தின்னக் கொடுத்து கொடுத்துவிடுவார்களோ’ என்பதுதான்

அவளுக்கு பெருங்கவலையாக இருந்தது. ‘பேரன் நெய்ப் பந்தம் பிடித்தால்தான் பாட்டி சொர்க்கத்துக்கு போக வழி தெரியும்’ என்றதைக் கூட முகச்சுழிப்போடு நெய்ப்பந்தம் பிடிக்க சம்மதித்தாள்.
அம்மாவுக்கு பால் தெளித்த அடுத்த நிமிஷமே ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்து திரும்புகிறவன் மாதிரி தனது சம்சாரம் பிள்ளையோடு காரில் ஏறி உட்கார்ந்து அப்பாவிடம் பயணம் சொல்லிக் கொண்டான்.
பெரிய சாமியோ மகனை வெறித்துப் போய் பார்த்தார். மனசு கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போவது போலிருந்தது.


பத்தாம் நாள் காரியத்திற்கு அருண்குமார் மட்டுமே வந்திருந்தான்.
‘அண்ணி…குழந்தையெல்லாம் வரலை யாண்ணே…!’
அவன் பெரியப்பா மகள் ராணிதான் ஆதங்கமாய் கேட்டாள்.
இல்லேம்மா…பையனுக்கு எக்ஸாம் நடக்குது… அவனைத் தனியாவிட்டுட்டு அவளாலே
எப்படி வரமுடியும்…?”
கேட்டவளிடம் எதிர்கேள்வி கேட்டான்.
பெரியசாமியோ வாயே திறக்கவில்லை.
………….
காரியம் முடிந்த மறுநாள் பெரியசாமியிடம் அருண்குமார் தீர்மானமாக சொன்னான்.
“இனிமே நீங்க இங்கே தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க…? என்னோட புறப்பட்டு வந்துடுங்க… இந்த வீட்டையும் மிச்ச நிலத்தையும் யார்கிட்டயாவது வித்துடலாம்…’
அவர் மனசுக்குள் ஒரு பிரளயமே மூண்டது. ‘இதே ஊரில்… விற்ற நிலத்தையெல்லாம் மகன் மூலம் திரும்ப வாங்கி அந்திமக் காலம் வரை ராசாத்தியுடன் உழவு… நடவு … அறுப்பு என்று… இந்த ஆத்திலே நீந்தி குளத்துலே குளிச்சு சந்தோஷமா வாழணும். அடிக்கடி மகன் மருமகள் பேரன் என்று எல்லோரும் வந்து ஒண்ணா உட்கார்ந்து சீராடணும்’ என்பது அவரது நெடுநாள் ஆசை. கனவு.
அதில் பாதியை ஏற்கனவே ராசாத்தி கலைத்து விட்டுப் போய்விட்டாள். மீதத்தை இப்போது மகன்காரன் கலைத்துக் கொண்டிருகிறான்.
பெரியசாமி கொஞ்ச நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அருண்குமாரோ அப்பாவையே பார்த்துக் கொண்டிருநதான்.
ராணியோ… ”என்னக் கொடுமைப்பா இது.. வளர்ந்த மரத்தை வேரோடு பேத்தெடுக்கிற மாதிரி அண்ணன் இப்படி சொல்லுதே…!” என்று கண்கலங்க உட்கார்ந்திருந்தாள்.
கடைசியாய் பெரியசாமி உதடு நடுங்க சொன்னார்.
“சரிப்பா… எல்லாத்தையும் வித்துடுவோம்… ஆனா மூணாம் மனுஷன்கிட்டே கொடுக்க வேண்டாம். என் அண்ணன் ‘பொண்ணு… இந்த ராணிகிட்டேயே கொடுத்துடுவோம். அதுங்க கையிலே இருக்கிறதை இப்போ வாங்கிக்குவோம். மிச்சத்தை ரெண்டு மூணு வருஷத்திலே கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கலாம்…!”
ராணி தன் காதுகளையே நம்ப முடியாமல் சித்தப்பனைப் பார்த்தாள்.
அருண்குமார் என்ன நினைத்தானோ என்னவோ… “சரிப்பா…” என்று தலையாட்டிவிட்டான்.
இருந்த இரண்டு வேட்டி துண்டை எடுத்து ஒரு மஞ்சள் பைக்குள் திணித்துக் கொண்டு மகனோடு புறப்பட்டுவிட்டார் பெரியசாமி.
‘சரி… கொஞ்ச காலம் கிராமம்… வயல்… வாய்க்கால் என்று வாழ்ந்துவிட்டோம். மிச்சக் காலத்தை பட்டணம்… பேரன்… மகன் மருகளோட வாழ்ந்துட்டுப் போவோம்…’
மனசை சமாதானப்படுத்திக் கொண்டார்.


கார் சென்னையைச் சேர்ந்த போது மாலை ஆறு மணி இருக்கும்.
கார் நின்றதும் “இறங்குங்கப்பா…” என்றான் மகன்.
“இதுவா நம்ப வீடு….!”
குழப்பமாய் பார்த்தார் பெரியசாமி.
“இல்லேப்பா… இது நம்ப வீடில்லே… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்டுக்குங்க… நாங்க ரெண்டுபேரும் வேலைக்குப்… போயிடு வோம்… பையனும் ஸ்கூலுக்குப் போயிடுவான். நாளெல்லாம் வீட்லே நீங்க மட்டும் தனியா இருக்கணும்… உங்களால அப்படி இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனாலேதான் உங்களை இங்கே தங்க வைக்கலாம்னு நினைச்சேன். உங்களை மாதிரி வயசானவங்க ரொம்பப் பேரு இங்கேதான் தங்கியிருக்காங்க… பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும். நேராநேரத்துக்கு சாப்பாடு உள்ளுக்குள்ளேயே சின்ன தோட்டம்… கோவில் எல்லாம் இருக்கு. உடம்புக்கு முடியலேன்னா… டாக்டர் இருக்காரு… மாசம் ஒரு தடவை நான் வந்து பாத்துக்குவேன். எந்தப் பிரச்சினையுமில்லாம நீங்க நிம்மதியா சந்தோஷமா… இங்கே இருக்கலாம். சிட்டியிலேயே ரொம்ப வசதியான ஹோம் இதுதான்…
ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் மிகவும் பக்குவமாய் தகப்பனிடம் சென்னான் மகன்.
பெரியசாமிக்கு எல்லாம் புரிந்து போய்விட்டது. மகனை வெறுமையுடன் பார்த்தார்.
“சரிப்பா… நீ சொன்னா சரியாத்தானே இருக்கும்.!”
அந்த முதியோர் இல்லத்திற்கு வந்ததிலிருந்து அவருக்கு சந்தோஷம் தரும் ஒரே இடம்
பக்கத்திலிருக்கும் இந்தக் கான்வெண்ட்தான். அந்தப் பள்ளிக் குழந்தைகள் அத்தனை பேரையும் அவரது பேரன் பேத்திகளாக நினைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் அங்கே வந்து உட்கார்ந்து கொள்வார். மனசு கொஞ்சம் லேசாகும்.
கான்வெண்ட் வாசலில் மரத்தடியில் தன்னை மறந்து உட்கார்ந்திருந்த பெரியசாமியை “சித்தப்பா…!” என்று உலுக்கினாள் ராணி.
திடுக்கிட்டுப் போன பெரியசாமி “ராணி…!” என்றபடி அவள் கைகளை சட்டென்று பிடித்துக் கொண்டார்.
“எப்படிம்மா இங்கே வந்தே…?”
அவரது கண்களில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் குபுகுபுத்தது.
“கிராமத்திலேயே சுத்திக்கிட்டு திரிஞ்ச பெரியப்பா பட்டணத்திலே போயி எப்படி முடங்கிக் கிடக்கோ… ‘ன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன். சரி போயி பாத்துட்டு வந்துடுவோம்னு வந்தா… வீட்லே
நீ இல்லே…’ எங்கேண்ணே… ‘ன்னு பதறிப் போய் கேட்டேன். . ‘ஒண்ணும் பயப்படாதே… அப்பாவுக்கு வசதியா ஒரு இடத்திலே தங்க வச்சிருக்கேன்… ‘னு ரொம்ப சாதாரணமா சொல்லிச்சு. என்னாலே தாங்கிக்க முடியாம உடனே கிளம்பி இங்கே வந்துட்டேன்…”
கண்கலங்கியபடி சொன்னாள்.
வறண்டுகிடக்கும் மண் திடீரென்று பெய்த மழையை சரசரவென்று தனக்குள் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு நெகிழ்ந்து போவதைப் போல ‘ஆக…நம்மைப்பத்தி நினைச்சுப் பார்க்கவும் இந்த உலகத்திலே ஒரு ஜீவன் இருக்கு’ என்று ஈரம் கண்களை மறைக்க அவளை பார்த்து சொன்னார்.
“அருண் சொல்ற மாதிரி இங்கே எனக்கு எந்தக் குறையுமில்லேம்மா… எல்லாமே நேரா நேரத்திலே செஞ்சு கொடுக்கிறாங்க. எல்லா வசதியும் இருக்கு ஆனா என்னப்பா… உங்க முகம் கொஞ்சம் வாட்டமா இருக்கேன்னு’ ஒரு வார்த்தை பிரியமா கேக்கதான் நாதியில்லே… ஒரு துளி பாசத்துக்கு மட்டும்தான்மா இங்கே பஞ்சம். அது இல்லேன்னா அப்புறம் என்ன இருக்கு… ? மனுஷன் உயிருள்ள பொணமாத்தானே இருக்க முடியும்…?”
அவர் கண்கள் கலங்கி உதடுகள் கோணிக் கொண்டன.
சித்தப்பனின் கைகளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள் ராணி.

உத்தமசோழன்/ஆதாய அறுவடை – விருட்சம் நாளிதழ்

2 Comments on “உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…”

Comments are closed.