உத்தமசோழன்/ஆதாய அறுவடை

ஒரு வாரம் ஆயிற்று. தாசில்தார் செல்வத்தை தூக்கம் தொட மறுத்து.
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார், கண்களை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றார். தூக்கம் வரவில்லை. விதம் விதமான விபரீதமான கற்பனைகள் தான் வந்தன.
கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களோடு இவர்கள் அவர்களைத் தாக்குவது போலவும், அவர்கள் இவர்களைத் தாக்குவது போலவும்… ஐந்தாறு உடல்கள் சரிந்து… துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே கூக்குரலும் அலறலுமாய்…
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் செல்வம். உடம்பு குப்பென்ற வியர்த்துப் போயிருந்தது.
பாத்ரூம் போயிருந்த ராணி கணவனைத் தொட்டதும் பதறிப் போனாள்.
“என்னங்க… என்னாச்சு…”
“ஒண்ணும் ஆகலே… ஆனா என்ன ஆகப்போவுதோன்னு பயமா இருக்கு…”
“என்னங்க நீங்க… எத்தனையோ பிரச்சினைங்க… இங்கே கலவரம்… அங்கே அடிதடின்னு ஒண் ணொண்ணும் தலைபோகிற மாதிரி… ஆனா நீங்க போனதுமே புஸ்வானமா போயிடுமே. அப்புற மெதுக்கு இப்படி… சாப்பிடாம… தூங்காம…”
“என்ன செய்யறது… அப்படியொரு சிக்கல்… இந்த பிரச்சினையிலே…’
“அப்படியென்ன பெரிய சிக்கல்…?”
“பெரியபாளையம்னு ஒரு ஊரு… அங்கே இந்துக்கள் பாதி… அடுத்ததா முஸ்லீம்… கொஞ்சம் கிறிஸ்துவங்கன்னு ஒரு கதம்பமான கிராமம். ஆனா அமைதியான கிராமம். நடந்து முடிஞ்ச பஞ்சாயத்து தேர்தல்லே, கொஞ்சம் மனக்கசப்பு. திடீர்னு… இந்த வருஷம் விநாயகர் ஊர்வலம் விடணும்னு தீர்மனம் பண்ணிட்டாங்க…”
“அதனாலென்ன…!”
“பிரச்சினையே அதனாலேதானே…! ஊர்வலம் அது இதுன்னாலே கடைசியாக கலவரத்திலேதானே முடியுது. அதனாலே அரசாங்கத்துலே ஏற்கனவே வழக்கத்திலே இருக்க ஊர்வலத்தைத் தவிர புதுசா எந்த ஊர்வலத்தையும் அனுமதிக்கக் கூடாதுன்னு
சொல்லிட்டாங்க…
”சரி… ஊர்வலத்துக்காரங்ககிட்டே இதை சொல்லிட வேண்டியதுதானே…!”
“சொல்லலாம்… ஆனா யார்கிட்டே சொல்றது தான்னு தெரியலே… ஊர்வலம் நடத்தப் போறவங்க அதை அந்த அளவுக்கு ரகசியமா வச்சிருக்காங்க. இதை யார் முன்னுக்கு நின்னு செய்றாங்கன்னு தெரியலே… ஆனா பஞ்சாயத்து தேர்தல்லே தோத்துப் போனவங்க தான். இதுக்குக் காரணம்னு தெரியுது…”
“கலெக்டர்கிட்டே சொன்னீங்களா…?”
“சொன்னீங்களாவா… ? நாலு நாள் முன்னாடியே கலெக்டரும் எஸ்.பி.யும் என்னையும், டி.எஸ்.பியை யும் கூப்பிட்டு ரொம்ப கறாரா சொல்லிட்டாங்க… ‘ஊர்வலம் போகக்கூடாது… அதை உத்தரவு போட்டு தடுக்கவும் கூடாது. சமயோசிதமா சமாளிக் கணும்’னு…”
“அதாவது பூவையும் பறிக்கணும். ஆனா கையிலே முள்ளும் குத்திடக் கூடாது… பரவாயில்லே.. புத்திசாலித்தனமான பரிட்சைதான்…! ஊர்க்காரங்க கிட்டே பேசிப் பார்க்க வேண்டியதுதானே…!”
“பேசினோம். ‘பிள்ளையாரா சொன்னாரு அவரை ஊர்வலமா தூக்கிக்கிட்டுப் போங்கன்னு…? யாரோ வேலையத்த சில பேரு வீண் வேலை பாத்தா எங்களை ஏன் தொந்தரவு பண்றீங்கன்னு சலிச்சுக்கிட்டு, எங்க கவலையை புரிஞ்சுக்காம அவங்கவங்களும் ம் அவங்கவங்க வேலையை பாத்துக்கிட்டிருக்காங்க…”
“அதுவும் சரிதானே…!”
“உன்னை மாதிரி வீட்லே உட்கார்ந்திருந்தா நானும், அதுவும் சரிதான் இதுவும் சரிதான்னு என்ன செய்யறது
சொல்லிக்கிட்டிருக்கலாம். தாசில்தாராயிட்டேனே…”
“அப்ப அவஸ்தைபட வேண்டியதுதான். வேணும்னா என்னை தாசில்தாரருக்குங்க… ஒரே நிமிஷத்திலே இதற்கு ஒரு முடிவு பண்றேன்…’
‘பல்லை உடைச்சேன்னா தெரியுமா…!”
ஓங்கிய கையை மடக்கி தன் கன்னத்தோடு சேர்த்துக் கொண்டாள் ராணி.
“சரி சரி படுங்க… இப்ப… ராத்திரி மூணுமணி தான் ஆவுது… ஆறு மணிக்கு மேலே கவலைப்படலாம்.”
‘ஆறு வரைக்கும் தாங்காது… அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டுடு…”
அவரை முறைத்துவிட்டு பிறகு சிணுங்கியபடி அவருக்கருகில் முடங்கிக் கொண்டாள்.


அதிகாலை நான்கு முப்பது.
தாசில்தார் வீட்டு வாசலில் ஜீப் ஹார்ன் சப்தம். திடுக்கிட்டு எழுந்தார் செல்வம். கூடவே வாரிச் சுருட்டிக் கொண்டு ராணியும்.
“எங்க ஜீப்பு ரிப்பேரு… போகும்போது கூட்டிக்கிட்டுப் போங்கன்னு
என்னையும் டி.எஸ்.பிக்கிட்டே சொல்லியிருந்தேன். அவர்தான் வந்திருக்காரு…’
அவசர அவசரமாய் வெளியே வந்தார்..டி.எஸ்.பி.யேதான்.
“இதோ வந்துட்டேன் சார்…”
“பரவாயில்லே… மெதுவா புறப்படுங்க.” டி.எஸ்.பி.யின் இங்கிதமான பதில்.
அதற்குள் ராணி உள்ளுக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
“என்னங்க… சாரையும் உள்ளே கூப்பிடுங்க… காபி குடிச்சிட்டுப் போகலாம்னு…”
டி -.எஸ்.பி. ஹாலில் உட்கார்ந்தார். அருகில் சரக இன்ஸ்பெக்டர்
தாசில்தார் ‘காக்கா’ குளியல் போட்டு கிடைத்த உடையில் நுழைந்து கொண்டார்.
ஆவி பறக்கும் காபியை டி.எஸ்.பி. முன் நீட்டி ‘சாப்பிடுங்க சார்…” என்றாள் ராணி.
காபியை வாங்கிக் கொண்ட டி.எஸ்.பி. ராணியை ஒருவித வாத்சல்யத்துடன் பார்த்தார்.
“ஏதோ… நாங்கதான்… விதியேன்னு அவஸ்தை படறோம். ராப்பகல் தெரியாம… உங்களையும் சேர்த்து இம்சை படுத்த வேண்டியிருக்கு
வார்த்தையில் நிஜமான வருத்தம் தெரிந்தது.
“இதிலே சிரமம் என்ன… சந்தோஷத்திலே பாதின்னா… சங்கடத்திலேயும் பாதிதானே…!”
அந்தப் பதில் டி.எஸ்.பி.யை அசத்திவிட்டது என்பதை அவர் முகம் காட்டிக் கொடுத்தது.
ராணி, கணவனுக்கு காபியை நீட்டினாள்.

டி.எஸ்.பி. யையும் தாசில்தாரையும், இன்ஸ் பெக்டரையும் இன்னும் சில கான்ஸ்டபிள்களையும் சுமந்து கொண்ட டிராக்ஸ் ஜீப் பெரியபாளையம் விழித்துக் கொள்ளும் முன்பாகவே அதன் சந்து பொந்துகளில் அதிக சப்தம் இல்லாமல் சுற்றிச்சுற்றி வந்தது.
இரண்டொரு இடங்களில் பாரா போடப்பட்டிருந்த எஸ்.ஐயும் போலீஸ்காரர்களும் டி.எஸ்.பி.க்கும் தாசில்தாருக்கும் சல்யூட் அடித்தபடி விறைத்து நின்றனர்.
‘ஏதாவது தகவல் உண்டா…?”
டி.எஸ்.பியின் கரகரப்பான குரல்.
”ஊருக்கு வடக்கே அரசமரத்தடி குளத்துக் கரையில் நாணல் புதருக்கு அருகில் பதினைஞ்சு அடி உயரத்துக்கு களிமண் பிள்ளையார் சிலை செஞ்சுக்கிட்டிருக்கிறதா கேள்வி…”
“நீங்க யாரும் பாக்கலையா…?”
‘இல்லே…
ஊர்வலத்துக்கு உள்ளூரில் அவ்வளவா ஆதரவு இல்லே… ஆனா அதுக்காக முன்னுக்கு நிக்கிற ஆளுங்களை நாம ஏதாவது செஞ்சா அவனுங்களுக்கு ஆதரவா… நமக்கு எதிரா திரும்புற வாய்ப்பும் இருக்கு…’
‘ஓகோ…!”
”ஊர்வலத்துக்கு வெளியூர்லேருந்து கார்லேயும் வேன்லேயும் ஆளுங்களை கொண்டாற ஏற்பாடும் நடந்துக்கிட்டிருக்கு… எப்போ புறப்படறாங்க… யார் யார் முன்னுக்கு நிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியலே..”
‘சரி… முஸ்லீம் தெருப்பக்கம் போறாங்களா…?”
‘கண்டிப்பா… அவங்க ஆட்சேபனை செஞ்சா அதையே பெரிய பிரச்சினையாக்கி பெரியாளா ஆயிடலாம்கிறதுதானே அவங்க திட்டமே…!”
“முஸ்லீம் தெருப் பக்கம் போனீங்களா…?”
“போனோங்கய்யா…அங்கே சிலபேரு இத்தனை காலமும் இல்லாத ‘இதென்ன… புதுப்பழக்கம்னு’ முணுமுணுக்கிறாங்க…
அவங்களும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம்னு எச்சரிக்கையா எங்கிருந்தோ ஆட்களை கொண்டாற ஏற்பாடு செஞ்சிருக்கிறதா தெரியுது.”
டி.எஸ்.பிக்கும் தாசில்தாருக்கும் மூளைக்குள் ஏகப்பட்ட குடைச்சல்.
‘யாரோ எதுக்காகவோ ஆரம்பிக்கிற பிரச்சினைக்கு எத்தனை பேர் நிம்மதி இழக்க வேண்டியிருக்கிறது.’
எந்த நேரத்திலும் எதுவும் நடகக்கலாம் என்று ஒரு மயான அமைதி.
கூடுதல் போலீஸ் அனுப்பச் சொல்லி மைக் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. சந்தேகப்படும் ஆட்களை சுற்றி வளைத்து விசாரிக்க கட்டளையிடப்பட்டது.
தாசில்தாருக்கும் டி.எஸ்.பிக்கும் படபடப்பு கூடியது.
‘ஊர்வலம் நடக்கக்கூடாது. ஆனால் நாம் தடுத்ததாகவும் இருக்கக் கூடாது. வேறு என்ன செய்யலாம்…?”
தாசில்தார் மூளையைக் குடைந்ததில் ஒரு யோசனை பொறிபோல பளிச்சிட்டது.
“டி.எஸ்.பி. சார்…! இப்படிச் செஞ்சா என்ன…?”
“எப்படி…?”
“ஊர்லே உள்ள முக்கியஸ்தர்களைப் பார்த்து…’ இதுவரைக்கும் அமைதியா இருக்கிற ஊருலே ஊர்வலம்கிற கலவரம் ஏற்படுத்தணுமா…? ஏற்பாடு செய்யறவங்க உங்க பையன்கதானே… நீங்க அவர்களை சமாதானப்படுத்தினா என்ன… ?’ என்று தயவாய்க் கேட்டுப்பார்ப்போம்… கட்டாயம் பலன் இருக்கும்…”
டி.எஸ்.பிக்கும் அதுதான் சரி என்று தோன்றியது.
இருவரும் ஊர் முக்கியஸ்தர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவராய் சந்தித்தனர்.
தாசில்தாரின் உருக்கமான பேச்சு எல்லாரையும் போகிக்க வைத்தது. அவருக்கு ஆதரவாக அனைவரும் அணி திரண்டனர்.
ஒரு வழியாய் பிள்ளையார் சிலை செய்து கொண்டிருக்கும் இடத்தில் குவிந்தனர்.
சிலை செய்து கொண்டிருந்தவர் தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கருமமே கண்ணாயிருந்தார்.
“ஏப்பா. தம்பி… எதுக்கு இந்த வேண்டாத வேலை…?”
ஒரு பெரியவர் மெல்ல ஆரம்பித்தார்.
சிலை செய்து கொண்டிருந்தவர் திரும்பினார். “யாரும் எதுவும் பேச வேண்டாம். பிள்ளையார் ஊர்வலமாய் போவார். அதைத் தடுக்க யாராலும் முடியாது. ஒரு வேளை நாங்க செத்து விழுந்தா நின்னு போகலாம்…”
அனைவரும் விக்கித்துப் போயினர்.
சிலை முடிந்தது. மாலைகளால் அலங்கரிக்கப் பட்டது.
திடீரென்று இரண்டு மூன்று வேன்களில் ஊர்வலத்துக்கு ஆதரவான ஆட்கள் திமுதிமுவென வந்து இறங்கினர்.
தாசில்தாரும் போலீஸாரும் பரபரப்பாயினர். கூட்டத்திலிருந்து கொஞ்சம் ஒதுங்கி, நின்று கொண்டு ஊர்ப்பிரமுகர்களை கூப்பிட்டார்கள்.
“இதப்பாருங்க… ஊர்வலத்திலே எவனாவது ஒருத்தன் அத்துமீறினாக் கூட போதும். கலவரம் குபீர்னு பத்திக்கும். அப்புறம் எல்லோருக்குமே அவஸ்தை தான். இது தேவையா…? ஊரு அமைதியை நினைச்சு நீங்கதான் தடுக்கணும்…”
ஊர்க்காரர்களுக்கு தாசில்தார் சொன்னதின் நியாயம் புரிந்தது. அதைவிட ஊர்வலத்துக்கென்று வந்திறங்கிய வெளியூர்க்காரர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
“ஏண்டா ஊர்லே இருக்கிற நாங்க சிம்பத்தாடி பசங்களா என்ன… ? எங்க ஊரு பிள்ளையாரைத் தூக்க எங்களுக்குத் தெரியாதா…? அதுக்கு வெளியூர்லேருந்து கார்லே வந்துதான் இறங்கணுமா…? எவனாவது ஊர்வலம் கீர்வலம்னு சொன்னீங்க கொலைதான் விழும் இங்கே…”
‘சரி கலவரத்தில்தான் முடியப் போகிறது…”
படபடப்பு கூடினாலும் பொறுமையாய் யோசித்து யோசித்து களைத்துப் போனார் தாசில்தார்.
டி.எஸ்.பி.யோ… இனிமேல் பொறுமை காத்துப் பலனில்லை என ஆறு ஏழு போலீஸ் வேன்களை பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னார்.
போலீஸார் துப்பாக்கியை தோளில் சாய்த்தபடி சுவர் போல் கூட்டத்தை சுற்றி வளைத்து விரைத்து நின்றனர்.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு திகில் நேரம்.
சட்டென்று கூட்டத்தை கிழித்துக் கொண்டு அமீது சுல்தானும் அப்துல் காதரும், வஹாபும் மற்றும் சிலரும் உள்ளே நுழைந்தனர்.
”யாரும் ஊர்வலம் போறதை தடுக்க வேண்டாம். தாராளமா போவட்டும். எந்தத் தெரு வழியாகவும் போகட்டும். நாங்களும் கூட போறோம்…”
திடுக்கிட்ட எல்லோர் பார்வையும் அவர்கள் மீதே நிலைகுத்தி நின்றன.
தாசில்தார் பதட்டமாய் குறுக்கிட்டார்.
“அமீதுபாய்… பிரச்சினை புரியாம நீங்க வேற என்னமோ பேசுறீங்க…?”
‘ஒரு பிரச்சினையும் வராது, காலம்காலமா அவங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு நாங்க போறோம். எங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு அவங்க வர்றாங்க… அதே மாதிரிதானே இதுவும். ஊர்வலத்திலே புதுசு என்ன பழசு என்ன…? அவங்க ஆசைப்படறாங்க… போகட்டும்… நம்ப ஊர்லே நம்ப ஜனங்கதானே போறாங்க… இதுலே என்ன இருக்கு…? எல்லாரும் தாயா புள்ளையாத்தானே இருக்கோம்…!”
சுற்றிலும் அமைதி. நெல் விழுந்தால் கூட சப்தம் கேட்கும் நிசப்தம்
“நாகூர் தர்ஹாவிலே வேளாங்கண்ணி மாதா கோவில்லே கூடுற கூட்டத்திலே பாதிப்பேரு யாரு…? எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கோம். யாரோ சிலர்… ஏதோ நினைச்சுக்கிட்டு… கிடக்குது விடுங்க…! தயவு செஞ்சு ஊர்வலம் புறப்பட ஏற்பாடு செய்யுங்க… எல்லோரும் ஒண்ணாவே போவோம்… ஒண்ணாவே இருப்போம்…!”
தாசில்தாருக்கு அசாத்திய தைரியம் வந்துவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் பிள்ளையார் தொப்பை குலுங்க பெரியபாளையம் கிராம வீதிகளில் சந்தோஷ ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார்.
ஊர்வலத்திற்கு முன்னும் பின்னும் கைலிகளும் வேட்டிகளும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து போய்க் கொண்டிருந்தன.

One Comment on “உத்தமசோழன்/ஆதாய அறுவடை”

Comments are closed.