சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. ஆயிரத்தில் ஒருவர்

திருக்கடவூரில் மார்க்கண்டர்க்கருளிய காலசம்ஹார மூர்த்தியை வணங்கிக்கொண்டு அபிராமியம்மையின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு, குங்கிலியக்கலயர், காரி நாயனார், உய்யவந்த தேவனார், அபிராமிபட்டர் ஆகியோரிடம் விடை பெற்றுக்கொண்டு, மாயவரத் துக்குத் திரும்பிவரும் வழியில் ஆக்கூர் என்ற தலத்தையடைந்தோம்.
நாங்கள் போன சமயம் மாலைநேரம். சிறிய கோயில். மக்கள் நடமாட்டத்தைக் காணவில்லை. இதுதான் நாங்கள் தேடிவந்த கோயிலோ என்று சந்தேகத்துடன் பார்த்தபோது. உள்ளேயிருந்து வயதான ஒருவர் அங்கவஸ்திரத்தையெடுத்து மார்பளவில் கட்டிக் கொண்டு, வாயில் தேவாரமொன்றை முணுமுணுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டு வந்தார். அவரை நிறுத்தி நாங்கள் “இதுதான் ஆக்கூர் ஈஸ்வரன் கோயிலா?” என்று கேட்டோம். தென்னாட்டில் யாத்திரை செய்யும்போது கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் கோயில் களைக் காணலாம். ராஜகோபுரம் அல்லது விமானம் பெரிதா யிருந்தால் அதன் அமைப்பிலிருந்து சிவன் கோயிலா அல்லது பெருமாள் கோயிலா என்று தெரிந்துகொள்ளலாம். வெளிப்புறத்தில் இத்தகைய தோற்றம் தெரியாவிட்டால் உள்ளே சென்றுதான் பார்த்தறிய வேண்டும். ஊரவர்களிடம் கேட்பதானால் சிவன் கோயிலை ஈஸ்வரன் கோயிலென்றும், வைஷ்ணவக் கோயிலை பெருமாள் கோயிலென்றும் குறிப்பிட்டுச் சொன்னால்தான் தெரியும்.
வெளியே வந்தவர் முகம் மலர்ந்தது. தன்னந்தனியாகத் தரிசனம் செய்துவிட்டு வந்த அவர் தமது ஊர்க்கோயிலில் வழிபட வெளியூரி லிருந்தும் மக்கள் வருகிறார்களேயென்று பரம சந்தோஷப்பட்டார். வாய்விட்டும் சொன்னார். “இந்தத் தலத்து சுவாமிக்கு ஆயிரத்தி லொருவர் என்ற பெயர் இருக்கிறது. அதற்கேற்றாற்போல, ஆயிரத்தி லொருவர்தான் இங்கே வழிபடவும் வருகிறார்கள். மிக ஏழை இந்த சுவாமி. நீங்கள் இவ்வளவு தூரம் இவரைத் தேடி வந்தீர்களே. நீங்கள்
கேட்ட ஆக்கூர் ‘தான் தோன்றி ஈஸ்வரன்’ கோயில் இதுதான்” என்றார். நாங்கள் ஆக்கூரில் வாழ்ந்த சிறப்புலி நாயனாரைத் தேடி வந்தோம் என்று சொன்னதும் அவர், “சிறப்புலி நாயனார் தம்மிடம் வரும் அடியார்களுக்குச் சோறு போட்டே இறைவனடி சேர்ந்து நாயனாரானார். ஆனால், இங்குள்ள சுவாமிக்கு அந்த வசதி கிடைக்கவில்லை” என்று வருந்தினார்.
இந்த ஆக்கூருக்கு யாத்திரையில் வந்த திருஞானசம்பந்தர் ஊரையும் மக்களையும் பார்த்து அழகாக வருணித்தார். “வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே,” என்றும், “இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லையென்னாதே ஈயும் தன்மையார்” இந்த ஊர் மக்கள் என்றும் சிறப்பாக வருணித்திருக்கிறார். கொடுத்துப் பெருமை பெற்றவர்கள் இந்த ஊர் மக்கள். இவர்களில் ஒருவர்தான் சிறப்புலி நாயனார். அறுபத்து மூவரில் ஒருவராகச் சுந்தரமூர்த்தி நாயனாரால் திருத்தொண்டத் தொகையில், “சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்” என்று பாடப் பெற்ற இந்த அடியார், மற்றைய வன்தொண்டர்களைப் போல நடந்து கொள்ளாமல், அடியார்களுக்கும் மற்றவர்களுக்கும் சோறு போட்டே பரகதி யடைந்தவர். சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் நாலே நாலு பாட்டில் இவரைப் பற்றிச் சொல்லி, “வள்ளல் தம் செயல் வாய்ப்ப ஈசர்தாள் நிழல் தங்கினாரே” என்று முடித்துவிட்டார்.
எங்களைச் சந்தித்த பக்தர் அழைத்துச்சென்று கோயில் அர்ச்சகருக்கு அறிமுகப்படுத்தி, பல அரிய தகவல்களையெல்லாம் எடுத்துச் சொன்னார். இங்கிருக்கும் சுவாமி பெயர் தான்தோன்றி யப்பர். அதாவது, தானாகவே எழுந்தருளிய சுயம்பு லிங்கம். ‘ஆக்கூரிற் தான்தோன்றியப்பனாரே” என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியிருக்கிறார். எங்களைச் சந்தித்த பக்தர் இதற்கு ஒரு கதை சொன்னார். இந்த ஊரை ஆண்ட அரசன் ஒருவன் ஆயிரம் பிராமணர்களுக்கு சமாராதனை செய்தான். யாவரும் உட்கார்ந்த பின் எண்ணிப் பார்க்கும்போது ஆயிரம் இலையில் ஓர் இலை ஆளில்லாமலிருந்தது. அப்போது புதிதாக ஒருவர் வந்து உட்கார்ந்தார். அரசனுக்கு இவரைத் தெரியவில்லை. உள்ளூர் ஆசாமியாகவும் காணப்படவில்லை. அரசன் அவரைப் பார்த்து, “நீர் எந்த ஊர் சுவாமி?” என்று கேட்டான். வந்தவர் அதற்குப் பதிலாக, “கஸ்யபுரம்” என்றார். கஸ்ய என்றால் வடமொழியில் ‘யாருடைய’ என்று பொருள். புதிதாக வந்தவர், “யாருடைய ஊரைக் கேட்டாய்?” என்ற பொருள்படச் சொல்லிவிட்டு எழுந்துபோய் ஒரு காட்டினுள் மறைந்து விட்டார். அரசனும் மற்றவர்களும் உடனே அங்கு போய்ப் பார்த்தபோது ஒரு புற்றுக் காணப்பட்டது. அந்தப் புற்றண்டை பசுக்கள் போனால் பால் தானாகவே சொரிந்தது. அரசன் அந்தப் புற்றை வெட்டச் சொல்லிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கம் காணப் பட்டது. வெட்டிய காயம் பட்டு லிங்கத்தின் மீது இரத்தம் சிந்தியது. அந்தப் புற்றில் தோன்றியவர்தான் இங்கே எழுந்தருளியிருக்கும் தான்தோன்றியப்பர். லிங்கத்தின் மீது இப்பொழுதும் ஒரு கறை யிருக்கிறது. ஆயிரத்திலொருவராக வந்து சமாராதனையில் கலந்து கொண்ட சுவாமியாகையால், ஆயிரத்திலொருவர் என்ற பெயரில் அழகான உற்சவ விக்கிரகம் ஒன்றிருக்கிறது.
சாய்க்காடு போன்று இங்கு ஆக்கூரிலுள்ள கோயிலும் மாடக் கோயில். இங்குள்ள அம்பாளுக்கு கட்கநேத்ரி என்று பெயர். அதாவது வாள்தடங்கண்ணாள் என்பது தமிழ்ப் பெயர். தமிழ் நாட்டுக் கோயில்களிலுள்ள அம்மன் திருவுருவங்களுக்கெல்லாம் அழகொழுகும் பெயர்களை வைத்திருப்பதைக் காணலாம். தமிழில் சொல்லும்போதுதான் அந்த அழகு கொழிக்கிறது. யாழைப் பழித்த மொழியாள், அறம் வளர்த்த நாயகி, நன்முலை நாயகி, இப்படி.
ஆக்கூரிற் சந்தித்த சிறப்புலி நாயனாரிடம் விடைபெற்றுக் கொண்டு, எங்களுக்கு உபகாரம் செய்த அந்தப் பெயர் சொல்லாத பக்தருக்கும் நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் மாயூரம் வந்து சேர்ந்தபோது எங்கள் வக்கீல் நண்பர் எங்களுக்காகக் காத்திருந்தார். “மாயவரத்திலுள்ள சில நண்பர்கள் சேர்ந்து சிந்தனையாளர் மன்றம் ஒன்று வைத்திருக்கிறோம். இன்று மாலை கூடும் கூட்டத்தில் நீங்கள் பேச வேண்டும்” என்று வற்புறுத்தினார். நண்பரின் வேண்டுகோளுக்காக அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டோம். வக்கீல்கள், வைத்தியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என்று பலதரப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் கொண்ட அந்த மன்றத்தில் சிந்திக்கத் தூண்டும் பேச்சுக்கள் இடம் பெற்றன. ஆனால், அன்று முழுவதும் ஓய்வில்லாமல் யாத்திரை செய்து திரும்பி வந்த எங்களுக்குப் புதிய சிந்தனையொன்றும் தோன்றவில்லை. ஆயினும் அவர்கள் மத்தியில் கலந்து கொண்டது ஒரு புதிய அனுபவமாயிருந்தது.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.