
கூந்தலழகி
சேக்கிழார் பாடிய அறுபத்து மூவரில் நேசநாயனார் என்பவர் ஒருவர். சாலியர் வகுப்பைச் சேர்ந்த இவர் செய்த தொண்டு, தமது குலத்தொழிலாகிய ஆடை நெசவு செய்வதுதான். சிவனடியார் களுக்குத் தேவையான உடை, கீழ், கோவணம் என்றவற்றை அவர் தவறாது உபகரித்ததற்காக இறைவனருள் பெற்று நாயனாரானார் என்பது புராணம். இதற்கு மேல் வேறு செய்தியொன்றும் கிடையாது. இவர் காம்பீலி என்ற இடத்தில் வாழ்ந்தார் என்று பெரியபுராணம் சொல்கிறது, ஆந்திரப் பிரதேசத்தில் பெல்லாரி என்ற பகுதியில் காம்பீலி என்ற ஓர் இடமுண்டு. ஆனால், சேக்கிழார் நமது தமிழ் நாட்டுக்குள்ளேயே அறுபத்து மூவரையும் அடக்கியிருப்பதால் எந்த இடத்தைக் குறிப்பிட்டார் என்று நிச்சயமாக எவராலும் சொல்ல முடியவில்லை. பெரியபுராணத்துக்கு நீண்டதோர் உரை செய்து பல்லாண்டுகள் ஆராய்ச்சி நடத்திய கோயம்புத்தூர் சுப்பிரமணிய முதலியார் மாயவரத்தைச் சேர்ந்த கொரநாட்டைக் குறிப்பிடுகிறார். எனவே, மாயவரத்தில் தங்கியிருக்கும்போது நேசநாயனாரையும் பார்த்துவிடவேண்டுமென்று விரும்பினோம். எமது வக்கீல் நண்பரின் துணையோடு பட்டு வியாபாரி ஒருவரைச் சந்தித்து நேசநாயனாரைப் பற்றிக் கேட்டோம். அவர் தமக்கொன்றும் தெரியாதென்று சொல்லி, கொரநாட்டிலே தமது சொந்தக்காரர் ஒரு பெரியவர் இருக்கிறார், அவரைக் கேட்டுப் பாருங்கள் என்று அங்கே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எண்பத்தைந்து வயது நிறைந்த கனகசபைச் செட்டியார் என்ற அந்தப் பெரியவர் வெளியே வந்து எனது யாத்திரையைப்பற்றிக் கேட்டார். பின்னர் விளக்கினார்: “ஆமாம், இங்கேயுள்ள கொரநாட்டுச் சிவன் கோயில் நெசவாளர்களாகிய எம்மினத்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. சிவநேச நாயனார் எங்களவர். அவருக்குத் தனியாகச் சிலை வைத்து எங்கள் கோயிலில் வழிபாடு செய்து வருகிறோம். பல நூற்றாண்டுக்கு முன்னே எங்கள் மூதாதையர் காம்பீலியிலிருந்து வந்தவர்கள், தங்கள் கையோடு
விநாயகர், தண்டபாணி விக்கிரகங்களையும் கொண்டு வந்து இங்கே ஸ்தாபித்தார்கள், இப்போது பங்குனி ரோகிணி நாளில் நேச நாயனாருக்குக் குருபூஜை செய்து வருகிறோம். நேசநாயனாரும் ஒரு காலத்தில் இங்குதான் வந்து குடியேறியிருக்கலாம்” என்றார் அந்த பெரியவர். அறுபத்து மூவர் வரலாற்றைத் தேடி யாத்திரை செய்யும் என்னைப் பார்த்து, “உங்கள் தகப்பனார் செய்த புண்ணியம். நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். உங்கள் யாத்திரை நல்ல பலனைத் தரும்” என்று வாய் நிறைய அந்தப் பெரியவர் வாழ்த்தியது இன்னும் என் காதுகளில் இனித்துக் கொண்டிருக்கிறது.
கொரநாட்டுச் சிவன் கோயிலைப் பார்த்தோம். அங்குள்ள நேசநாயனாரையும் தரிசித்துப் படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுப் பக்கத்திலுள்ள திருநீடூருக்குச் சென்றோம். அறுபத்து மூன்று நாயனார்களில் இன்னொருவராகிய முனையடுவார் என்ற நாயனார் இந்த ஊரில்தான் வாழ்ந்தவர். இந்த நாயனாரும் நேச நாயனார், சிறப்புலியார் போலத் தன் தொழிலால் மாத்திரம் உயர்ந்தவர்.பெரிய தியாகத்தையோ அல்லது அற்புதங்களையோ செய்தவரல்லர். இவருடைய தொழில், கூலிக்குப் போர்முனை சென்று போராடுவது. அவ்வளவுதான். எந்த அரசன், அல்லது சிற்றரசன், தன் போருக்கு ஆள் தேவையென்று கேட்கிறானோ அதற்கெனக் கூலிபேசிப் போய்ப் போரிடுவதுதான் இவர் தொழில். ஆனால் இவர் திறமையுள்ள போர் வீரனாகையால் பெருமளவு பொருள் தேடி எல்லாவற்றையும் சிவனது சேவைக்குச் செலவழித் தார். இதில்தான் இவரது மாண்பு தெரிகிறது. அந்த வகையில் புண்ணியம் தேடி அறுபத்து மூவரில் ஒருவராக மதிக்கப்பட்டவரை, சுந்தரமூர்த்தி தம் திருத்தொண்டத் தொகையில், “அறைக் கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று பெருமைப் படுத்தினார். சேக்கிழார் அவரைப் பின்பற்றி, “சத்துருக்களுடைய போர் முனையிலே தோற்றவர்கள் தம்மிடத்தில் வந்து கூலி பேசினால், அவர்களுக்காகப் போய்ப் போர் செய்து வென்று, பொருள் சம்பாதித்து, சிவனடியார்களுக்குக் கொடுத்துத் தொண்டு செய்து, சிவபதம் பெற்றார்” என்று சுருக்கமாக ஆறு பாட்டுக்களில் சொல்லி முடித்துவிட்டார்,
நீடூர் என்பது பழைமையான சிவஸ்தலம். தேவார நாயன்மார் களில் சுந்தரர் மாத்திரம் ஒரு பதிகம் பாடியிருக்கிறார். மற்றவர்கள் ஏன் பாடவில்லையென்று தெரியவில்லை. சுந்தரரும் முதலில் இங்கு வராமல் சென்றவர் திடீரென நினைத்துக் கொண்டுதான் வந்து
ஒரு பதிகம் பாடினார் என்று சேக்கிழார் சொல்கிறார். இக்கோயிலில் முனையடுவார் நாயனாருக்குத் தனியாக உட்பிராகாரத்தில் ஒரு சந்நிதியுண்டு. முனையடுவார் குருபூசைமடம் ஒன்று இருக்கிறது.
பல்லவர் காலத்திலே சோழநாட்டிலிருந்த பலர் போர்த் தொழிலை ஒரு முறையான தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது பெரியபுராணக் கதைகள் பலவற்றில் நாம் காணக்கிடக்கிறது. நீடூர் வாசியாகிய முனையடுவார் இந்தத் தொழில் செய்தார். செங்காட்டங்குடிப் பரஞ்சோதியார் சரித்திரத்திலிடம்பெற்ற நரசிங்க பல்லவனின் சேனைத் தளபதியாயிருந்தார். (இவர் கதையைச் செங்காட்டங்குடிக்குப் போகும் போது நாம் தெரிந்து கொள்வோம்.) மாயவரத்துக்கு வடக்கே ஆனதாண்டவபுரத்தில் வசித்த மானக்கஞ்சாறர் என்பவரும், நாயனார் பதவிக்கு உயர்ந்தவர், போர்த் தொழிலில் ஈடுபட்டுச் சேனாதிபதி உத்தியோகம் பார்த்தவர் என்றே அறிகிறோம். எனவே, நீடூரிலிருந்து ஆனதாண்டவபுரத்துக்கு நாங்கள் பயணமானோம்.
மானக்கஞ்சாற நாயனார் ஊர் கஞ்சாறு என்றுதான் காணப் படுகிறது. நல்ல வேளையாய் கோயம்புத்தூர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தமது பெரியபுராண ஆராய்ச்சியில் இந்த ஊர் ஆனதாண்டவபுரம் என்பதைத் தெளிவாக நிரூபித்து விட்டதால் துணிவுடன் அங்கு போனோம். அங்கேயுள்ள சிவன் கோயில் அர்ச்சகரைக் கண்டு கேட்டதற்கு, “ஆமாம், திருக்கஞ்சாறு என்று இந்த ஊருக்குப் பெயர். அதுதான் கோயில் சம்பந்தமாக வந்த பெயர். ஆனால் இப்போது ஆனைதாண்டபுரம், ஆனைதாண்டாபுரம், ஆனந்ததாண்டவபுரம் என்று பலவிதமாகச் சொல்கிறார்கள். உண்மையில் இந்தக் கோயில் சுவாமி பெயர் பஞ்சவடீஸ்வரர் என்றிருப்பதால் புராண வரலாற்றின்படி கஞ்சாறு என்பதுதான் சரியான பெயர்” என்று விளக்கினார்.
இந்தக் கஞ்சாறில் வாழ்ந்த மானக்கஞ்சாற நாயனார் கதை தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சஞ்சாரம் செய்த சில கடும் தபசிகளை ஞாபகமூட்டுகிறது. பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டில் காபாலிகர், பாசுபதர், மாவிரதியார், காலாமுகர் என்ற பெயர்களைக் கொண்ட சில சந்நியாச வர்க்கத்தினர் ஊரூராகத் திரிந்து, பிட்சை வாங்கி உண்டு தத்தமக்கென ஒருவித கொள்கையைக் கடைப்பிடித்தனர் என்று தெரிகிறது. காஞ்சீபுரத்தில் ஒரு காலத்தில் பாசுபதரும் காபாலிகரும் செல்வாக்குள்ளவராக இருந்தனர். இவர்களில் மாவிரதியார் என்பவர்கள் மனித மயிரையே மகுடமாகவும்,
அதனையே திரித்து ஐந்து புரியாக்கிப் பஞ்சவடம் என்ற யக்ஞோபவீதமாகவும் (பூணூலாகவும்) தரித்துக் கொண்டு மனம் போன போக்கில் திரிந்து பிட்சை வாங்கியுண்டு ஊரூராக நடமாடினர். இத்தகைய சந்நியாசிகளுக்குப் பொதுமக்களும் வணக்கம் செலுத்தி உபசரித்தனர் என்பது சரித்திரங்களால் அறியப்படும். இந்தவகை மாவிரதியார் ஒருவர் சம்பந்தமான கதைதான் மானக்கஞ்சாற நாயனார் வரலாறும்.
மானக்கஞ்சாறருக்கு ஓர் அழகிய புதல்வி இருந்தாள். அவளுக்கு மணம் பேசி வந்தவர்களில் ஒருவர் கலிக்காமர் என்று புராணம் கூறுகிறது. இவர் பெருமங்கலத்தில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், கலிக்காம நாயனார் புராணத்தில் சேக்கிழார் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவர் வேறொரு கலிக்காமர் என்றுதான் கொள்ளவேண்டும். கல்யாண நிச்சயம் செய்து திருமண விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. அந்தச் சமயம் பார்த்து ஒரு மாவிரதியார் உள்ளே நுழைகிறார். இறைவனிடத்தில் பக்தி கொண்ட மானக்கஞ்சாறர் எந்தக் கொள்கையுடைய சந்நியாசிகள் வந்தாலும் தகுந்தபடி உபசரிப்பதில் தவறமாட்டார். மாவிரதியார் உள்ளே வந்ததும், “இந்த வீட்டில் ஏதோ விசேஷம் நடக்கிறது போலும்?” என்று கேட்டார். மானக்கஞ்சாறர், தமது அருமைப் புதல்விக்குத் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று சொன்னதும் மாவிரதியார், “ஆகா! நல்ல சமயத்தில் வந்தேன். மங்களமுண்டாகட்டும்” என்று வாழ்த்தினார். இந்த வாழ்த்து மானக்கஞ்சாறருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததுடன், தனது புதல்வி யாகிய மணப்பெண்ணே நேரில் வந்து மாவிரதியாரின் ஆசீர்வாதத் தைப் பெறவேண்டுமென்ற ஆசையால், அந்த அழகியை அழைத்துச் சந்நியாசியை வணங்கச் சொன்னார். பெரியவர் அடிகளில் அந்தப் பெண் விழுந்து நமஸ்கரித்து எழுந்தாள். பெண்ணைப் பார்த்த மாவிரதியாருக்கு அவளது திரண்டு வளர்ந்த நெடுங் கூந்தல் மேல்தான் கண்போனது! “கஞ்சாறரே, உமது பக்தியை வியந்தேன். இந்த மங்கையின் கூந்தல் எமது உபவீதமாகிய பஞ்சவடிக்கு உதவும்” என்றார். அவ்வளவுதான், சிவனடியார்களின் எவ்வித இஷ்டத் தையும் ஆலோசிக்காமல் பூர்த்தி செய்வதுதான் பக்தர்களின் கொள்கையாகையால், மானக்கஞ்சாறர், சேனாதிபதித் தொழில் புரிபவர், சட்டென்று தமது உடைவாளை உருவினார். மணப்பெண் என்றும் பாராமல் அவளது நீண்ட கூந்தலை அடியோடு அரிந்து எதிரே நின்ற அடியாரிடம் கொடுத்தார்! அதை வாங்கிய மாவிரதியார் திடீரென மறைந்தார். மானக்கஞ்சாறருக்கு ஒரு தோற்றம் தெரிந்தது. இறைவனே நேரில் காட்சி தந்தார். இந்தக் காட்சி மறைந்த சற்று நேரத்தில் மாப்பிள்ளை கலிக்காமனார் மேளதாளத்தோடு தம் சுற்றத்தவர் சூழ மணப்பந்தலில் நுழைந்தார். அவர் கண்ட காட்சி முண்டித்த தலையுடன் அவர் மணமுடிக்க வந்த பேரழகி நிற்பதைத்தான். என்ன அபசகுனம் என்று அவர் ஒரு கணம்தான் எண்ணினார். மறுகணம் அந்த அழகியின் கூந்தல் மாயமாய் மீண்டும் வளர்ந்து அவள் திருமுடியைச் சிறப்புச் செய்தது. எல்லாம் அவன் திருவருள் என்று சகலரும் திருமண வைபவத்தில் கலந்து கொண்டாடினர் என்பது புராண வரலாறு. “ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கீந்த பெருமையார்” என்று சேக்கிழார் வருணிக்கும் மானக்கஞ்சாறர், நாயனார் பதவியைப் பெற்றார்.
ஆனதாண்டவபுரத்தில் கோயில் குருக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இந்தக் கதையில் ஒரு திருத்தம் செய்தார். “மாவிரதியார் வந்தார்; பெண்ணின் கூந்தல் வேணும் என்று சொல்லி அதை வாங்கினார். சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கஞ்சாறர் கேட்டுக் கொண்டபோது வருகிறேன் என்று சொல்லிப் போனவர் திரும்பி வரவில்லை. பின்னர் அவர் மயிரினாலிழைக்கப் பட்ட பஞ்சவடி என்ற பூணூலையும் மயிர் முடியையும் தரித்துக் கொண்டு வந்து காட்சி கொடுத்து மறைந்தார். பழையபடி மணப் பெண்ணின் முடி வளர்ந்துவிட்டது.”
இங்குள்ள கோயிலில் சுவாமியின் பெயர் பஞ்சவடீஸ்வரர் என்பதால் மானக்கஞ்சாறர் வரலாறு இங்குதான் நடந்ததாக நம்பப் படுகிறது. இதற்குப் பொருத்தமாகச் சில வருடங்களின் முன்னர் இந்த ஊரின் பக்கத்திலுள்ள நிலத்தில் புதையுண்டிருந்த சில செப்பு விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் விநாயகர், சோமாஸ்கந்தர், உமையம்மை, பிச்சாடனர் முதலிய உருவங்களோடு சடாநாதர் என்னும் மாவிரதியார் உருவமும், மானக்கஞ்சாறர் உருவமுமிருந்தன. இவற்றால் இந்த ஸ்தலமே மானக்கஞ்சாறு என்ற பெயரில் வழங்கியதெனத் தீர்மானமாயிற்று. இந்த விக்கிரகங்கள் இப்போதும் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. ஆனால் ஆனதாண்டவ புரம் நமது தேவார நாயன்மார் மூவராலும் பாடப்பெறவில்லை. திருநாவுக்கரசர் பாடிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்
அக்காலத்தில் வழிபாட்டுக்குரியவையாயிருந்த பல ஸ்தலங்களை அட்டவணையாகத் தருகிறது. அதில் “கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும், கைலாயநாதனையே காணலாமே” என்று காணப் படுவதால் கஞ்சாறு என்று குறிப்பிட்டது இந்த ஆனதாண்டவ புரத்தையாயிருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். தேவார நாயன்மார், சிறுத்தொண்டர் போன்று மானக்கஞ்சாறரும் ஒரு சரித்திர நாயகர் என்று நம்ப இடமுண்டு. தொண்டை நாட்டில் விருத்தாசலத்துக்குத் தெற்கிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற வைணவத் தலத்தில் நித்தியேஸ்வரர் கோயில் என்ற சிவன்கோயில் இருக்கிறது. அதன் கோபுரத்தில் மானக்கஞ்சாற நாயனாருக்கு ஒரு சிலை யிருக்கிறது. இதனடியிலுள்ள கல்வெட்டில் இந்த நாயனார் “திருப்பதியம் பாடி இத்தலத்திலே இறைவனடி சேர்ந்தார்” என்ற பொருளுள்ள வாசகம் காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “மலைமலிந்த தோள்வள்ளன் மானக்கஞ்சாறன்” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் இவருக்கு முன்வந்த சம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களை மானக்கஞ்சாறர் பாராயணம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தாரோ என்னவோ. ஆனதாண்டவபுரத்தில் முன்பு தைமாதத்தில் வழக்கமாக உற்சவம் நடந்து வந்ததென்றும், இப்போது கைவிட்டு விட்டார்கள் என்றும் நாங்கள் போன சமயத்தில் குருக்கள் தெரிவித்தார். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் திரும்பினோம். பழையபடி மாயவரத்துக்கு வந்து அன்றிரவு தங்கியபின் என்கூட வந்த நண்பர்களுக்கு வேறொரு முக்கியமான அலுவல் காத்திருந்தது. ஆகையால் இரண்டொருநாள் அவர்களை விட்டுப்பிரிந்து தனியே செல்ல வேண்டியதாயிற்று. எனவே அடுத்த யாத்திரைத் திட்டத்தை வகுத்தோம். மாயவரத்திலிருந்து நான் நேரே திருவாரூருக்குச் சென்று சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, சீர்காழிக்கு வந்து சிவஞானக் கன்று திருஞான சம்பந்தர் கோஷ்டியில் கலந்து அவருடன் யாத்திரை செய்வதென்றும், நண்பர்கள் அங்கே சீர்காழியில் வந்து சேர்ந்து கொள்வதென்றும் முடிவு செய்தோம். ராதாகிருஷ்ணன் அன்று அதிகாலையிலேயே குளித்துவிட்டு விபூதிப்பூச்சுடன் சிவப்பழமாகக் காட்சி தந்தார். திருவாரூர் என்றவுடன் அவருக்கு ஒரே உற்சாகம். திருவாரூரில் சுந்தரரைச் சேரமான் பெருமாள் சந்தித்த கதை அவருக்கு ஞாபகம் வந்துவிட்டது. ராதாகிருஷ்ணனும் கேரளக்காரர்!
சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”
Comments are closed.