
கற்பகத்தின் பூங்கொம்பு
திருவாரூர் என்றவுடன் நம் மனக்கண் முன் என்னென்ன காட்சிகளெல்லாம் தோன்றுகின்றன. வழிவழியாகச் சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்திய ராஜதானி. “சோழவளநாடு சோறுடைத்து’ என்ற முதுமொழிக்கிணங்கத் தமிழ்நாட்டுக்கு நடுநாயகமாக விளங்கும் நெற்களஞ்சியம். இசையும் நாட்டியமும் வளர்த்த கலை நகரம். சங்கீத மும்மூர்த்திகளைத் தோன்றுவித்த புனித நகரம். பிறக்க முத்தி தரும் பெரும்பதி. திருத்தொண்டத் தொகை தோன்றிய புண்ணிய ஸ்தலம். சேக்கிழார் பாடிச் சிறப்புச் செய்த திருநகர்.
சென்னையிலுள்ள நண்பர், திருவாரூர்ப் பெருமகன் தியாகராஜ முதலியாரிடம் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்தபடியால் அவர் திருவாரூரில் தமது சகோதரர் தக்ஷிணாமூர்த்திக்கு எனது வரவை அறிவித்திருந்தார். நான் அங்குப் போய்ச் சேர்ந்ததும் அவர்கள் உபசாரம் என்னைத் திணறடித்துவிட்டது. திருவாரூர்க் கோயிலின் பரம்பரைத் தர்மகர்த்தாக்களாகிய இவர்கள் பண்பாட்டிலும் பரம்பரையாகவே ஊறியவர்கள். சிவநெறியில் நின்று வள்ளன்மை பெருக்கும் மாண்பினர். திருவாரூர்ச் சிறப்பைச் சொன்ன சேக்கிழார் அங்கு வாழ்ந்த குடிகளைப்பற்றி,
அரசுகொள் கடன்களாற்றி மிகுதிகொண் டறங்கள் பேணி
பரவருள் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பும்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள்
என்று வருணிக்கிறார். அந்தப் பண்பு சேக்கிழார் காலத்துக்குப் பின் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் வடபாதிமங்கலக்குடியில் நிலைத்து நிற்பதைக் காணப் பெருமகிழ்ச்சி தருகிறது.
நண்பர் தக்ஷிணாமூர்த்தி எனது யாத்திரைத் திட்டத்தையும் நோக்கத்தையும் கேட்டறிந்தவுடன் இரத்தின தேசிகர் என்ற தமிழ் வித்துவான் ஒருவரை வரவழைத்து அறிமுகப்படுத்திவிட்டு,கோயிலிலுள்ள சில குருக்கள்மாருக்கும் எனது வரவைப்பற்றிய தகவலைச் சொல்லியனுப்பினார். இரத்தின தேசிகர் ஒரு சைவ இலக்கியக் களஞ்சியம். ஒரு நாள் முழுவதும் அவர் என்னுடனே கூட இருந்து திருவாரூரையும் பக்கத்திலுள்ள மற்றும் சில தலங்களையும் பார்த்துத் தகவல் சேகரிக்க உதவியதை மறக்க முடியாது.
“திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் இங்குள்ள கோயிலைப் போல் அளவாலும் சரித்திரத்தாலும் ஒப்பு நோக்கக்கூடிய கோயில் வேறெதுவுமில்லை என்று சொல்லலாம். சிதம்பரம் கோயில் நடராஜப்பெருமானின் சிறப்பைக் கொண்டது. ஆனால் திருவாரூர்க் கோயில் தியாகராஜப்பெருமான் சிறப்புடன் மற்றெத்தனையோ சிறப்புக்களையும் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டுச் சரித்திரமே இந்தக் கோயிலில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தனை சிற்பச் சிறப்புக்கள்; கல்வெட்டுச் சாசனங்கள்; சரித்திரச் சின்னங்கள். ஒருகாலத்தில் சோழமன்னரின் ராஜதானியாயிருந்த இந்த நகரம் அவர்கள் பெருமையையெல்லாம் கதை கதையாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. சோழருக்குப் பின் வந்தவர்களும் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் மூலம் தமது கால வரலாற்றைப் பொறித்து வைத்துச் சென்றனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூருக்கு வருகிறார் என்ற செய்தியை அந்த ஊர் மக்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்ததால் வீதிகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டன. மாளிகைகளிலும் மண்டபங் களிலும் இடபக்கொடிகள் பறந்தன. வீடுகள் தோறும் தோரணங்கள். வாயில்தோறும் மணி விளக்குகள். மங்கல வாத்தியங்கள் முழங்க ஆரூர் மக்கள் திரண்டு வந்து சுந்தரரை வரவேற்றனர். சுந்தரர் தமது பரிவாரங்கள் புடைசூழ ஆரூர் மூலட்டானத்தை வணங்கி, புற்றிடங் கொண்ட பிரானைச் சேவித்து, வீதிவலம் வரும்போது அவர் காதில் மாத்திரம் இறைவனின் வாசகம் ஒன்று கேட்டது. “சுந்தரா, இன்று முதல் நாம் உன் தோழன். முன்பு நாம் உன்னைத் தடுத்தாட்கொண்ட கல்யாணத்திலே, அன்று நீ கொண்டிருந்த மணக் கோலத்தையே என்றும் பூண்டவனாகி, உனது ஆசை தீரும்படி இவ்வுலகத்திலே நீ விளையாடுவாயாக!” என்ன அற்புதம்! மிகுந்த ஆசையோடு கல்யாணம் செய்யச் சென்றவரைத் தடுத்த சிவ பெருமான் இப்போது விடுதலை கொடுத்தது மாத்திரமன்று, உதவிக்கும் வரப் போகிறார், தோழன் என்ற முறையில்!
உடனேயே இந்த விளையாட்டு ஆரம்பிக்கிறது. கோயில் வீதி வலம் வரும்போது எதிர்ப்படுகிறாள் ஒரு நங்கை. கண்ணை மின்னுகிறது அவள் அழகு, சுந்தரர் ஒரு கணம் திகைத்து நிற்கிறார். இருவர் கண்களும் ஏக சமயத்தில் கவ்வுகின்றன. அவ்வளவுதான். இந்தக் காட்சியைச் சேக்கிழார் தமது இலக்கியப் புலமைத் திறமையால் வருணிக்கும் சிறப்பு இலக்கிய ரசிகர் மாத்திரமல்லர், எல்லாருமே அனுபவிக்க வேண்டிய சிறப்பு. சுந்தரர் வியப்புறுகிறாராம்; “இவள் என்ன கற்பகத் தருவின் பூங்கொம்போ, காமன் தன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, அல்லது அற்புதமேதான் உருவெடுத்து வந்து நின்றதோ! ஒருவேளை சிவனருள்தான் நேரில் வந்து தோன்றியதோ” என்று அதிசயித்தாராம் சுந்தரர். இதற்கு நேராக அங்கு வந்த நங்கை என்ன நினைக்கிறாள்? “என் எதிரில் வந்தவர் அழகுத் தெய்வம் முருகனோ? அல்லது மன்மதன்தானோ? ஒருவேளை கந்தர்வரோ? அல்லது இறைவனருளால் ஏற்பட்ட தோற்றமோ? என் மனத்தை இப்படித் திரித்தவன் யாரோ?” என்று மயங்கினாராம்.
எதிர் வந்தவள் திருவாரூரில் கணிகையர் குலத்தில் தோன்றிய பரவை என்ற நங்கை. இதைப்பற்றி முன்பே ஒரு குறிப்பு கொடுத்திருந்தோம். அதாவது, முற்பிறவியிலே தேவலோகத்தில் சுந்தரர் ஆலாலசுந்தரர் என்ற பெயரில் சிவனுக்குத் தொண்டு செய்துவந்தார். அப்போது ஒருநாள் நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பார்வதிதேவியின் சேடியர்கள் இருவரைக் கண்டவுடன் சுந்தரர் மோகித்தார். அவர்களில் ஒருவர் கமலினி. மற்றவர் அநிந்திதை. சிவபெருமான் இதையறிந்ததும் மூவரையும், “பூமியில் போய் விளையாடுங்கள். இது தெய்வநிலம். இங்கே அதற்கு இடமில்லை” என்று சொல்லிச் சபித்து அனுப்பிவிட்டார். அது காரணமாகவே ஆலாலசுந்தரர் நம்பி ஆரூரர் என்ற பெயரில் திருநாவலூரில் வந்து பிறந்தார். கமலினி திருவாரூரில் பரவை என்ற உருத்திரகணிகையாகப் பிறந்தாள். அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலி என்ற பெயரில் பிறந்தாள். நம்பியாரூரர் சங்கிலியைச் சந்தித்த கதையைப் பின்னால் திருவொற்றியூர் போகும்போது தெரிந்து கொள்ளலாம்.
பரவையைக் கண்டு மோகித்த சுந்தரர், எப்படியும் அவளை அடைய வேண்டுமென்ற ஆசையோடு வீடு திரும்பினார். அதே விதமான ஆசையோடு பரவையாரும் தனது மாளிகைக்குத் திரும்பினாள். இவர்கள் ஆசையை நிறைவேற்ற, ஏற்கெனவே
இறைவன் தாமே சுந்தரரின் தோழன் என்று பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல, “மணக்கோலத்துடன் விளையாடுவாய்” என்றும் வாழ்த்தி விட்டாரல்லவா? மறுநாளே ஊர் முழுவதும் கதை பரவி விட்டது. “நம்பியும் பரவையும் நல்ல ஜோடி” என்று கண்ட திருவாரூர் மக்கள் விதிப்படி விவாகம் செய்து கொடுத்தார்கள்.
ஆரூரன் ஆரூரில் குடிகொண்டு விட்டார். அழகும் அறிவும் ஆற்றலும் பண்பும் நிறைந்த பரவையுடன் இன்பம் பெருகும் இல்லறத்தில் அமர்ந்தார். ஆயினும், இறைவன் கோயிலுக்குப் போய் வழிபாடு செய்வதை மறக்கவில்லை. இப்படியிருக்கும்போது ஒரு நாள், திடீரென்று கோயில் வாயிலில் விறன்மிண்டர் என்ற சிவனடியார் சுந்தரரை உள்ளே போகவிடாமல் தடுத்தார். “இந்தக் கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் பல திருத்தொண்டர்கள் கூடியிருப்பது உமது கண்ணுக்குத் தெரியவில்லையோ? அவர்களை யெல்லாம் அலட்சியம் செய்து அவர்களை வணங்காமல் நீர் உள்ளே போவது மகாபாவம். இதுவரை எந்த அடியாரும் அப்படிச் செய்ததில்லை. சிவத்தொண்டர்களை வணங்காமல் போகும் நீர் என்ன அவ்வளவு பெரிய பரமாத்மாவோ?” என்று கோபித்துத் தடுத்து நின்றார். சுந்தரமூர்த்திக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை. உடனே தமது தோழரை நினைத்துப் பார்த்தார். இறைவன், “கவலைப்படாதே. விறன்மிண்டர் கொஞ்சம் கோபக்காரர்தான். கடுமையான பிடிவாதமுள்ளவர். நமது கோயிலின் இரண்டாவது சுற்று வடக்குக் கோபுர வாயிலின் பக்கமாக வா, அங்கே நான் உனக்குக் காட்சி தருகிறேன்” என்று சொல்லி அந்தப் பக்கமாக வந்து ஒட்டியிருந்து காட்சி கொடுத்தார்!
இந்தச் சம்பவத்தையொட்டி ஒரு ருசிகரமான கதையுண்டு. இம்மாதிரியாக இறைவன் சுந்தரருக்கு இரகசியமாய்க் காட்சி கொடுத்துவிட்டார் என்பதை விறன்மிண்டர் அறிந்தவுடன் அவருக்கு அளவற்ற கோபம் வந்துவிட்டது. இந்தச் சுந்தரன்தான் அடியார்களை மதிக்காமல் விட, அதற்கு இறைவனும் உடந்தையாக இருக்கிறாரே என்று ஆத்திரம் கொண்டு, “சுந்தரன் எனக்குப் புறகு, இறைவனும் புறகு” என்று சொல்லி திருவாரூரையே வெறுத்து, இனிமேல் ஒருபோதும் அதற்குள் கால் வைப்பதில்லை என்று சபதம் பூண்டு, பக்கத்திலுள்ள ஊரில் தங்கியிருந்து நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவளித்து வந்தார். ஆனால் ஒரு நிபந்தனை: எல்லா அடியார்க்கும் தாராளமாக உபசாரம் செய்வார், திருவாரூர்க்காரர் மாத்திரம் அங்கே வரக்கூடாது! எவராவது அடியார் திருவாரூர்க்
காரர் என்று தெரிந்தால் போதும் உடனே கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாம் வைத்திருக்கும் கோடரியால் அந்த அடியாரின் காலைத் தறித்துவிடுவாராம். அத்தனை கோபம் அவருக்கு திருவாரூர் மீதும் அந்த ஊர் மக்கள் மீதும். ஒருநாள் ஆரூர் இறைவனே ஒரு சிவனடியார் வேடம் பூண்டு விறன்மிண்டர் மடத்துக்குப் போனார். வாசலில் வரவேற்ற விறன்மிண்டரின் மனைவி, “உங்கள் ஊர் யாது சுவாமி?” என்று கேட்டார். அடியார் இறைவனல்லவா? பொய் சொல்ல முடியாது. ஆகையால் உண்மையைச் சொல்லி, “நான் திருவாரூர் வாசி” என்றார். அந்த அம்மாள் மனங்கலங்கி, “ஐயா, திருவாரூர் வாசி ஒருவரையும் எனது கணவர் மதிக்கமாட்டார். அதுவுமல்லாமல் அவர்கள் காலை வெட்டிவிடுவாரே. ஆகையால், தாங்கள் வேறு ஊர்க்காரர் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுங்கள்” என்று யோசனை தெரிவித்தார். அடியார் சிறிது சிந்தித்துவிட்டு, “பொய் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. ஆனால், எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். தங்கள் கணவர் தனது வலப்பக்கத்திலேதான் எப்போதும் கோடரியை வைத்துக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்று மாத்திரம் தாங்கள் அந்தக் கோடரியை அவர் இடது பக்கத்தில் எடுத்து வைத்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்படியே அந்த அம்மாளும் உதவி செய்தார்.
விறன்மிண்டர் அடியாரை வரவேற்று வழக்கம் போல, “சுவாமி, தாங்கள் எந்த ஊரோ?” என்று கேட்டார். அடியார் கொஞ்சமும் யோசிக்காமல், “செல்வம் நிறைந்த திருவாரூர் வாசி” என்றவுடன் ஆத்திரமடைந்த விறன்மிண்டர் கோடரியைத் தேடினார். வழக்கத்தில் வலப்பக்கத்திலிருப்பதைக் காணாமல் இடப்பக்கத்தில் தேடுவதில் ஒரு சிறிது தாமதமேற்பட்டது. அதற்குள் அடியார் ஓட்டம் பிடித்தார். பின்னால் துரத்திக் கொண்டு வந்த விறன்மிண்டர் அடியாரைத் தொடர்ந்து ஓடி வந்தபோது தம்மையுமறியாமல் திருவாரூர் எல்லைக்குள்ளேயே வந்துவிட்டார். அடியவர் உடனே, “திருவாரூர் எல்லைக்குள் வந்தோமிப்பால்” என்று சொன்னபோதுதான் விறன்மிண்டர் தமது நிலைமையை உணர்ந்தார். தமது சபதம் கெட்டுப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் தமது கால்களையே கோடரியால் வெட்டப்போக, எல்லாம் வல்ல இறைவன் அவரைத் தடுத்துத் தம் சுயரூபத்தைக் காண்பித்து ஆசீர்வதித்தார். அதன் பின்னர், விறன்மிண்டரை அழைத்துச் சென்று சுந்தரருடன் சேர்த்து வைத்தார்.
விறன்மிண்டர் திருவாரூர் எல்லையைக் கடந்து வசித்த இடம் இப்போது திருவாரூருக்கு வடக்கிலுள்ள ஆண்டிப்பந்தல் என்றும், அடியாரைத் துரத்தி வந்து திருவாரூர் எல்லைக்குள் நுழைந்த இடம் வண்டாம்பாலை என்றும் சொல்வார்கள். “வந்தோமிப்பால்` என்ற வார்த்தைதான் திரிந்து வண்டாம்பாலையாகிவிட்டது என்று தெரிகிறது. விறன்மிண்டர் சுந்தரரைத் தடுத்தபோது, இறைவன் வடக்குக் கோபுரத்தருகில் ஒட்டி நின்று காட்சி கொடுத்ததைக் குறிக்க இப்போது அந்த இடத்தில் “ஒட்டுத் தியாகர்” என்ற ஒரு சிலை வைத்துக் கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். சுந்தரர் தேவாரத்திலே ஓரிடத்தில் “ஒட்டியாட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை” என்று பாடியதைச் சிலர் மேற்சொன்ன கதைக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு விளக்கம் தருவார்கள்.
இந்த விறன்மிண்டர் மேற்சொன்ன சம்பவத்தின் பின்னால், அவருடைய அடியார் பக்தியின் காரணமாக, நாயனார் பதவி பெற்றார். சுந்தரருக்கும் புத்தி வந்தது. மறுநாளே திருவாரூர்ப் பூங்கோயிலினுள் நுழையும்போது, முதலில் தேவாசிரிய மண்டபத் தைப் பார்த்தார். திருத்தொண்டர் என்ற சிவனடியார்கள் உட்கார்ந் திருந்தனர். உடனே இறைவனைத் தியானித்து, “அப்பனே, அடியார் திருக்கூட்டத்தை மறந்த என் பிழையைப் பொறுத்தருளி, அவர்களுக்கு என்னை அடியவனாக்கி, அவர்களைப் பாட எனக்குத் திறனையும் அறிவையும் அருளவேண்டும். இத்திருத்தொண்டர் வரலாற்றையும் அவர்கள் பண்பையும் தெரியச் செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தார். அவர் தியானத்தில் உடனே இறைவனருள் கிடைத்தது. தேவாசிரிய மண்டபத்திலெழுந்தருளியிருந்த அடியார் களைப் பற்றிய ஞானம் சுந்தரர் சிந்தையில் உதித்தது. “தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்ற முதல் அடி வாக்கிலெழ, திருநாவலூர்ப் பிறந்த தேசிகன் சுந்தரன், திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தைப் பாடி முடித்தார்.
இத்திருத்தொண்டத் தொகையே சைவ நாயன்மார் வரலாற்றுக்கு அடிப்படை. இதைக் கொண்டு நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என்ற ஒரு நூலைச் செய்தார். அந்த நூலையும் கர்ணபரம்பரையாக வந்த வரலாற்றையும் வைத்து சேக்கிழார் தமது ஒப்பற்ற காவியமாகிய பெரியபுராணத்தைப் பாடினார். அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றி நாமும் இந்தக் கதைகளையெல்லாம் சொல்லத் துணிந்தோம்.
சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”
Comments are closed.