சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. திருவாரூர்ப் பிறந்தார்கள்

பூங்கோயில் என்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள் இரத்தின தேசிகர் என்னை அழைத்துச் செல்லும்போதே சில விளக்கங்களைச் சொல்லிச் செல்கிறார். பிராகாரத்தில் பலகல் தூண்கள் காணப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் பந்தர் போடுவதற்கு இவை ஏற்பட்டவை. இதைத்தான் காவணம் என்று சேக்கிழார் வருணித்தாராம். காவணம் என்பது பந்தர். இதற்கு பக்தானுக்கிரக மண்டபம் என்று பெயர். இதைத் தாண்டிச் சென்றால் காணப்படுவது ஆயிரங்கால் மண்டபம். தேவாசிரிய மண்டபம் என்று சேக்கிழார் சொல்லியுள்ளார். தேவ ஆஸ்ரய மண்டபம் என்றால் தேவர்கள் விரும்பும் மண்டபம் என்று பொருள். அதுவே தேவாசிரிய மண்டபம் ஆகிவிட்டது. இந்த மண்டபத்திலேதான் திருத் தொண்டர்கள் கூடியிருக்க, அவர்களைத் தொழாமல் சுந்தரர் உள்ளே சென்று, விறன்மிண்டர் பகையைத் தேடிக்கொண்டது. கோயிலுக்குள் போகும் வழியில், கோபுர வாயிலிலே விறன்மிண்டர் சிலை காணப்படுகிறது.
திருவாரூரை சப்தவிடங்க ஸ்தலங்களிலொன்று என்று சொல்வார்கள். விடங்கர் என்றால், வி-டங்கர், அதாவது உளி படாது ஏற்பட்ட சுயம்புலிங்கம். இம்மாதிரியான விடங்கரை தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் காணலாம். திருவாரூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, வேதாரண்யம், திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி என்ற திருக்குவளை. இந்த ஏழு இடங்களிலும் ஏழு விடங்கர்கள் இருக்கிறார்கள். திருவாரூரில் இருப்பவர் பெயர் அவனி விடங்கர். இந்த விடங்கஸ்தலங்களில் விசேஷ மூர்த்தியாக எழுந்தருளியிருப்பவர் தியாகராஜர். இதற்கு ஒரு புராணக் கதையுண்டு. மகாவிஷ்ணுவின் திருமார்பில் இதயக் கமலமாக வைத்துப் பூசித்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தம். விஷ்ணு இதனை இந்திரனுக்குக் கொடுத்திருந்தார். இந்திரனுடைய போர் ஒன்றில் உனவி செக்கு முகுளுந்தலைக்கு இந்திரன் பிரதியுபகாரமாக ஏதாவது கொடுத்திருந்தான். முசுகுந்தன் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் ஆசை அவன் விரும் வாத்தைக் கேட்டால் கொடுப்பதாக வாக்குக் கொண்டு அதனையே வேண்டும் என்று கேட்டு விட்டான், ஆனால் உயிருக்குயிராகப் பேணி வந்த இந்திரன் அந்த சோமாஸ்கந்த மூர்த்தத்தை விட்டுப் பிரியத் தயங்கினான். கேட்ட வரம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்தபின் எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்புவது என்று யோசித்து, அந்த வடிவத்தைப் போல வேறு அறு நகல் உருவங்களைச் செய்து, ஏழு வடிவங்களையும் முசுகுந்தன் முன் வைத்து, அவனுக்கு வேண்டிய ஒன்றைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுமாறு சொன்னான். முசுகுந்தன் சாமானியனல்லன். ஏற்கெனவே சிவனது திருவருள் பெற்று அதிபராக்கிரமசாலியாக வளர்ந்தவன். இல்லாமலா இந்திரனே அவனது உதவியை நாடவேண்டி வந்தது? முககுந்தன் ஏழு உருவங்களையும் சோதித்துப் பார்த்தான். எப்படியோ உண்மையான அசல் உருவம் அவன் கண்ணில் பட்டது. அதையே தனக்கு வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னதும் இந்திரன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த ஏழு சோமாஸ்கந்த உருவங்களையுமே முசுகுந்தனிடம் கொடுத்து வாழ்த்தியனுப்பினான். முசுகுந்தன் அவற்றைக் கொண்டுவந்து பூமியில் ஏழு தலங்களில் பிரதிட்டை செய்தான். இந்திரன் வழிபட்ட, திருமால் மார்பிலணிந்திருந்த, அசல் உருவமே திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் என்று சொல்லப்படுகிறது. அதனால், இங்கு இப்போது நடைபெறும் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை என்று பெயர்.
”முகத்தைக் காட்டியே தேகம் முழுவதும் காட்டாத மூடுமந்திரம் ஏதையா?” என்ற பரதநாட்டியப் பாடலை நாம் கேட்டிருக்கிறோ மல்லவா? இந்தப் பாடல் திருவாரூர் தியாகராஜரை நோக்கிப் பாடப்பட்டது. தியாகராஜ சுவாமியின் அமைப்பைப் பார்த்தால் அவர் முகம் மாத்திரம் தோற்றும், மற்றைய பாகங்களெல்லாம் மறைக்கப்பட்டிருக்கும். இந்த உருவத்தினடியில் ஒரு ஸ்ரீசக்கரமுண்டு. அது பலமான தகட்டால் மூடிப் பாதுகாக்கப்பட்டிருக்கிறதென்றும், அபிஷேக நேரங்களில் நீர் முதலியவை படாதென்றும் சொல்கிறார்கள். முதலில் புற்றிடங்கொண்டார் சந்நிதியில் திருமூலட்டானரைத் தரிசித்து. பின்னர் இடப்புறத்திலிருக்கும் தியாகராஜரை வணங்குகிறோம். அம்மை கமலாம்பாளுக்குத் தனிக்கோயில். ஒரு காலத்தில் திருவாரூர் கமலாபுரம் என்ற பெயர் பெற்றிருந்தது. லக்ஷ்மி ஆலயம் என்று கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. மஹாலக்ஷ்மிக்கு இங்கு ஒரு கோயில் உண்டு. இங்கே லக்ஷ்மி தபசிலிருப்பதாக ஐதிகம். நேரே தரிசிக்க முடியாது, கல் சாளரம் வழியாகத்தான் பார்க்க வேண்டும். இதே போல் கமலாம்பாளும் தபசு நிலை. சுதந்திர சக்தி என்று சொல்வார்கள். நீலோத்பலாம்பாள் வடிவம் இங்கு விசேஷம். பக்கத்தில் ஒரு சேடி கந்தனை வைத்திருக்கும் காட்சி பார்த்து மகிழ வேண்டியது.
திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே பல கோயில்களிருக்கின்றன. அதிலொன்று அரநெறியெனப்படும். இதன் மீது திருநாவுக்கரசு நாயனார் ஒரு தனிப் பதிகமே பாடியிருக்கிறார். இதனை அசலேசம் என்பர். மற்றும் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் ஆனந்தேசம், விசுவகர்மேசம், சித்தீசம் என்று பல சந்நிதிகளைத் தரிசிக்கலாம். கும்பிட்ட கையை எடுக்காமலே கோயிலை வலம் வரலாம் என்று சொல்வார்கள். அப்படி நெருக்கமாயிருக்கின்றன உட்கோயில்கள்.
திருவாரூரில் சாயங்காலப் பூஜை மிகவும் விசேஷமாயிருக்கும். பிரமாதமான அலங்காரம் செய்திருப்பதைத் திருவந்திக்காப்பு என்பார்கள். இந்தப் பூசையில் அர்ச்சகர் நீண்ட அங்கியும் தலைப் பாகையும் தரித்து பூசை செய்யும் வழக்கமுண்டு. அதாவது தேவேந்திரனே நேரில் வந்து பூசை செய்வதாக ஐதிகம்.
திருவாரூரில் ஆதியிலிருந்த சுந்தரமூர்த்தி விக்கிரகம் ஒரு காலத்தில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கொண்டு போகப்பட்டுவிட்டது என்ற ஒரு கதையுண்டு. இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது. ஆனால், இப்போது திருவாரூரிலுள்ள உற்சவ விக்கிரகம் திருநாவலூரிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று சொல்வதில் சிறிது உண்மையுண்டு. திருநாவ லூருக்கு நாங்கள் சென்றபோது அவ்வூர்வாசிகள் சொன்ன கதை ஞாபகத்துக்கு வருகிறது. திருநாவலூரிலிருந்து சுந்தரமூர்த்தி விக்கிரகத்தைத் திருவாரூருக்குப் பரவையிடம் கொண்டுவரும் ஒரு விழா முன்பு நடந்து வந்திருக்கிறது. அப்படி நடந்து வருங்காலத்தில் சுந்தரமூர்த்தி விக்கிரகத்தைத் திருப்பி அனுப்பாமல் சிறு தகராறு நடந்ததென்று திருநாவலூர்வாசிகள் சொன்னதன் பொருள் இப்போதுதான் திருவாரூரில் தெரிய வந்தது.
சுந்தரமூர்த்தியையும் விறன்மிண்ட நாயனாரையும் தவிர, மற்றும் சில நாயன்மார் சரித்திரங்களும் திருவாரூரில் நடந்திருக்கின்றன. அவர்களில் ஒருவர் நமிநந்தியடிகள் என்பவர். இவர் திருவாரூருக்குத் தெற்கேயுள்ள ஏமப்பேறூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இப்போது அந்த இடம் திருநெய்ப்பேறு எனப்படுகிறது. இவர் திருவாரூர் பெரிய கோயிலிலுள்ள அரநெறி என்ற கோயிலில் எப்போதும் நெய் விளக்கேற்றி வைப்பதையே தொண்டாகச் செய்து வந்தார். ஒரு நாள் இரவு நெய் கிடைக்காமல், பக்கத்தில் எங்காவது ஒரு வீட்டில் கேட்கலாமென்று சென்றபோது, அந்த வீட்டில் வசித்தவர்கள் சமணர் என்று தெரிந்தது. சிவனடியாரைக் கண்டதும் அவர்கள் ஏளனமாக, “ஏன் உங்கள் சுவாமி கையில்தான் நெருப்பிருக்கிறதே! அந்த வெளிச்சம் போதாதா? அவசியம் விளக்கேற்ற வேண்டு மென்றால் குளத்தில் நிறைய நீர் இருக்கிறது. அதை எடுத்து விளக்கில் விட்டு எரிக்கவேண்டியதுதானே!” என்று பரிகசித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்த நமிநந்தியடிகள், செய்வதறியாது வந்து இறைவன் சந்நிதியில் விழுந்து அயர்ந்து போனார். பின்னர், “இறைவன் விரும்பினால் நீரும் எண்ணெயாகும்” என்று சொல்லித் திருக்குளத்திலிருந்த நீரை முகந்து வந்து விளக்கில் விட்டுத் திரியை ஏற்றினார். என்ன அற்புதம்! திருவிளக்கு சுடர்விட்டெரிந்தது. இந்த நிகழ்ச்சியைக் கண்ட பக்தர்கள் வியந்தனர். கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கினர். சமணர்கள் பெரும்பாலும் இம்மாதிரியான மந்திர தந்திரங்களில் வல்லவர்களாகையால், நமிநந்தியடிகளுக்கும் ஒரு சவால் விட்டனர். அது பலித்தது கண்டு தலைகுனிந்தனர்.
கோயில் குருக்களில் ஒருவராகிய பிச்சுக் குருக்கள் என்பவருடன் பேசிக் கொண்டிருக்கையில் நமிநந்தியடிகளின் வரலாற்றை அவர் எனக்குச் சொல்லிவந்தார். சமணர்கள் ஏளனமாகச் சொன்ன வார்த்தைகளைப் பிச்சுக் குருக்கள் சொல்லும்பொழுது அவர் குரல் தழுதழுத்து, கண்ணீர்வார்ந்த காட்சியை என்னால் மறக்க முடியாது. திருவாரூரில் நான் சந்தித்த நாலைந்து பெரியார்களில், கோயில் பூஜா கிரமங்களில் தொடர்புள்ள பிச்சுக் குருக்கள் ஒருவர். தெய்வ பக்தி நிறைந்த மனிதர் என்பதைக் கண்டேன்.
அறுபத்துமூவரில் நமிநந்தியடிகளைத் தவிர, திருவாரூருடன் சம்பந்தப்பட்ட இன்னொருவர் தண்டியடிகள் நாயனார் என்பவர். ஆனால் இவர் திருவாரூரிலேயே வாழ்ந்த பிறவிக் குருடர். இறைவனிடத்தில் அளவிறந்த பக்திகொண்டு வழிபட்டு வந்தார். திருவாரூரில் உள்ள திருக்குளத்தைச் சுற்றி அந்தக் காலத்தில் சமணர்கள் குடியிருந்து, நாளுக்கு நாள் அவர்கள் பாழிகளைக் கட்டிவந்ததால் குளத்தின் கரைகள் சுருங்கிவிட்டன. தண்டியடிகள் இந்தக் குளத்தைத் தோண்டி அகலமாக்க வேண்டுமென்று விரும்பினார். கண் குருடாயிருந்தாலும் விடாமுயற்சியில் ஈடுபட்டார். கரையில் ஒரு கோலை நட்டு அதில் ஒரு கயிற்றைக் கட்டி, குளத்தி னுள்ளும் ஒரு கோல் நட்டு அதில் அந்தக் கயிற்றின் மறுநுனியைக் கட்டி, அந்தக் கயிறே தமக்கு வழிகாட்டியாகத் தடவிக் கொண்டு, கூடையும் மண்வெட்டியும் தாங்கி தண்டியடிகள் மண்சுமந்து கொட்டிக் குளத்தை அகலப்படுத்தினார்.
சமணர்களுக்கு எப்போதும் சைவர்கள் மீது ஆத்திரம். இவர் செய்யும் வேலையைப் பார்த்து அவர்கள், “மண்ணைத் தோண்டினால் அதில் வசிக்கும் பிராணிகள் இறந்துபோம். ஆகையால் அவைகளை வருத்தவேண்டா” என்றனர். அதைக் கேட்ட தண்டியடிகள், “இது இறைவனுக்குச் செய்யும் தொண்டு. இந்தத் தருமத்தைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார். அவர்கள் கோபித்து, “நாங்கள் சொல்லும் தரும நெறியை நீ கேட்பதாகத் தெரியவில்லை. கண்தான் குருடு மாத்திரமல்ல, உனக்குக் காதும் செவிடாகி விட்டதா?” என்று பரிகசித்தனர். தண்டியடிகள், “மந்த அறிவும், காணாத கண்ணும், கேளாத செவியும் உங்களுக்குத்தான். நான் இறைவன் திருவடி ஒன்றையே காண்கிறேன். மற்றவற்றைக் காண்பதில்லை. ஆனால், மற்றவற்றையும் நான் காணக் கண்ணொளி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். சமணர், “உன்னுடைய கடவுள் உனக்குக் கண்ணொளி கொடுத்தாரானால், நாங்கள் இந்த ஊரை விட்டே போய்விடுகிறோம்” என்று சொல்லி விட்டு தண்டியடிகள் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துக் கொண்டு, அவருக்கு வழிகாட்டியாயிருந்த கயிற்றையும் கம்புகளையும் பிடுங்கி எறிந்தனர்!
தண்டியடிகள் அவலமுற்று அழுதுகொண்டு வந்து திருமடத்தில் சேர்ந்து இறைவனிடம் முறையிட்டபடி தூங்கிவிட்டார். மறுநாள் இந்தச் செய்தியைக் கொண்டுபோய் அரசனிடம் முறையிட்டார். அரசன் விசாரித்தபோது சமணர்கள் தாம் சொன்னதைச் சொன்னார்கள். அரசன் தண்டியடிகளைப் பார்த்து, ”நீர் உண்மையான பக்தன் என்பதை நம்புகிறேன். ஆனால் பரமசிவன் திருவருளால் கண்ணொளியைப் பெறலாம் என்பதை இவர்களுக்குக் காட்டும்” என்றான். தண்டியடிகள் உடனே குளத்திலிறங்கி நின்று, “இறைவா! நான் உனது அடிமையென்பது உண்மையானால், என் கண்ணில் பார்வை வரட்டும். இந்தச் சமணர்கள் தங்கள் கண்களை இழக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே மூழ்கி எழுந்தார். வெளியே யாவற்றையும் தம் கண்களால் கண்டார். கூடி நின்ற சமணர்கள் தம் பார்வையை இழந்து குருடர்களானார்கள்! அரசன் அவர்களை வேறு ஊர்களுக்குப் போகச் சொல்லிவிட்டு, தண்டியடி களிடம் திருப்பணியைத் தொடர்ந்து செய்யுமாறு வேண்டிக் கொண்டான்.
அறுபத்துமூவரில் காடவர்கோன் கழற்சிங்கன், செருத்துணை என்ற பெயருள்ள மற்றும் இருவர் திருவாரூர்ப் பூங்கோயில் ஈடுபாட்டால் பெருமை பெற்ற நாயன்மார்கள் என்று சேக்கிழார் சொல்கிறார். இருவரும் ஒரே செயலில் சம்பந்தப்பட்டவர்கள். செருத்துணை நாயனாரின் பூர்வோத்தரத்தைப் பற்றி நாம் அறிய மாட்டோம். திருவாரூர்ப் பக்கத்திலுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூரில் பிறந்த ஒருவர் என்பதுதான் தெரியும். இவர் திருவாரூர்க் கோயிலில் தினந்தோறும் வழிபாடு செய்து வந்தவர். காடவர்கோன் கழற்சிங்கன் என்பவன் தொண்டை நாட்டையாண்ட, பல்லவர் வரலாற்றில் புகழ் பெற்று விளங்கிய இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவன். இவன் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவன் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். காஞ்சியிலாண்ட இவன்தான் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலையும் கட்டிப் புகழ் பெற்றவன். இவனைப் பற்றிப் பின்னர் காஞ்சீபுரத்தில் நாம் அதிகம் அறியப் போகிறோம். இவனுக்கு இரு மனைவியர்- ஒருத்தி ரங்கபதாகை என்பவள் சைவமதத்தைச் சேர்ந்தவள்; மற்றவள் கங்கா என்ற பெயருள்ள சமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். இவள்தான் பட்டத்தரசியாகையால், இவளையழைத்துக் கொண்டு கழற்சிங்கன் திருவாரூருக்குத் தரிசனத்துக்கு வந்தான். வீதிவலம் வருகையில் தனியாக வந்த கங்கா, பிராகாரத்தில் மாலை தொடுக்கும் மண்டபத்தினருகே விழுந்திருந்த ஒரு பூவை எடுத்து மோந்து பார்த்தாள். இதை நேரில் கண்ட செருத்துணை நாயனார் மிகுந்த கோபத்தோடு வந்து, “சுவாமிக்கு அர்ப்பணம் செய்யவேண்டிய மலரை மோந்து பார்ப்பது பெருங்குற்றம்” என்று சொல்லி, அந்தப் பெண் ஒரு பட்டத்தரசி யென்பதையும் பாராது, அவள் மூக்கையரிந்து விட்டார்! பின்னால் வந்த கழற்சிங்கனுக்கு முதலில் விஷயம் புரியவில்லை. என்ன பாதகம் என்று பதைபதைத்தபோது செருத்துணை நாயனார் கோபாவேசத்தோடு, “சுவாமிக்கு சாத்தும் பூவை எடுத்து முகந்தாள்;
ஆகையால் மூக்கை வெட்டினேன்” என்று அச்சமின்றிச் சொன்னார். கழற்சிங்கன் மகா சிவபக்தன், கைலாச நாதருக்கே கோயில் எழுப்பினவனல்லவா? “பூவை எடுத்த இந்தக் கையையல்லலா முதலில் துணித்திருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே தன் சொந்த மனைவியின் கையை வெட்டினான். இந்த இரு காட்சிகளும் தேவையற்ற பாதகங்களென்று நமக்குத் தோன்றினாலும், அபார பக்தியினால் இறைவன் பணியே பணி மற்றெல்லாம் பாதகம் என்று நினைக்கும் அடியார்களின் செயல்களைப் பெருமைப்படுத்துவதே பெரியபுராணக் கதைகளின் நோக்கம். ஆகையால், மேற்சொன்ன இருவரும்- செருத்துணையும் கழற்சிங்கனும் இருபெரும் நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர். இறைவனே நேரில் வந்து வாழ்த்தினார். கங்காவுக்கும் கையும் மூக்கும் முன்போலாயின.
பிச்சுக்குருக்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது அரசியின் பெயரை கங்கையம்மாள் என்று குறிப்பிட்டார். சரித்திரத்திலே நரசிம்ம பல்லவனின் மனைவியரில் ஒருத்தி பெயர் கங்கா என்றே இருக்கிறது. வழிவழியாக வந்த கர்ணபரம்பரைக் கதையும் மாற்றம் பெறவில்லை.
வித்துவான் இரத்தினதேசிகருடன் கோயிலைச் சுற்றி வந்தோம் திருவாரூர்க் கோயிலில் பஞ்சமுக வாத்தியம் ஒன்றிருக்கிறது. மத்தளத்தின் மூட்டுப்போல் ஐந்து முகங்கள் கொண்ட வாத்தியம். ஐந்திலும் சுருதி வித்யாசமான நாதம் பிறக்கும். இதை ஒரு குருக்கள் வாசித்து, தியாகராஜர் எழுந்தருளும்போது காணப்படும் அஜபா நடனத்தின் தாள கதியைக் காண்பித்தார். திருவாரூரில் காண்பது அஜபா நடனம். அதாவது ஜபிக்கப்படாத நடனம் என்று பொருள். ஆதியில் திருமால் தியாகராஜப் பெருமானைத் தனது இதயகமலத்தில் வைத்து, மானசீகமாக மந்திரம் சொல்லும்போது, மேல் மூச்சு கீழ் மூச்சில் அசைந்தாடிய நடனம் இந்த அஜபா நடனம். மற்றைய தியாகராஜ ஸ்தலங்களில், திருநள்ளாற்றில் உன்மத்த நடனம், அதாவது பித்தனைப் போல் தலைசுற்றி ஆடுவது. நாகையில் தரங்க நடனம், கடல் அலைபோல் ஆடுவது. திருக்காறாயிலில் குக்குட நடனம், கோழி போல் ஆடுவது. திருக்கோளிலியில் பிருங்க நடனம், வண்டு மலர் குடைந்து ஆடுவது. திருவாய்மூரில் கமல நடனம், தடாகத்தில் தாமரை காற்றில் அசைவது போன்ற நடனம். வேதாரண்யத்தில் ஹம்சபாத நடனம், அன்னம் போல் அடியெடுத்து வைத்து ஆடுவது, இப்படி சப்தவிடங்க ஸ்தலங்களில் ஏழுவகையான நடனம் உற்சவகாலங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சுவாமியைய
பல்லக்கில் வைத்து வீதிவலம் வரும்போது, தூக்கி வருபவர்கள் முன்னும் பின்னும், இருபக்கங்களிலும், ஒருவித கதிபேதத்துடன் ஊசலாடிக்கொண்டு வருவதைப் பார்த்தால் அற்புதமாயிருக்கும். திருவாரூரில் இந்த அஜபா நடனத்தின் போது சுத்த மத்தளம்
வாசிப்பார்கள்.
“திருவாரூரிலே ராமாமிர்தக் குருக்கள் என்பவரை அவசியம் நீங்கள் கண்டு பேசவேண்டும். அவருக்குப் பழைய காலத்துச் சரித்திரங்களும் ஐதிகங்களும் நிறையத் தெரியும்” என்று சென்னையில் தியாகராஜ முதலியார் சொல்லி வைத்திருந்தார். நான் போன சமயத்தில் அவர் ஊரில் இல்லையென்றும் இரவுதான் வருவார் என்றும் சொன்னார்கள். ஆனால் தியாகராஜ முதலியாரின் தாயார் அடிக்கடி எனது சௌகரியத்தை விசாரித்துக் கொண் டிருந்தவர், இரவு ஒன்பதரை மணிக்கு ஓர் ஆள் அனுப்பி அந்த ராமாமிர்தக் குருக்களை அழைத்து வரச் செய்துவிட்டார். வயது எழுபத்தைந்துக்கு மேலிருக்கும். நல்ல ஞாபக சக்தி. திருவாரூர்க் கோயிலின் ஐதிகங்களைப் பற்றிப் பலவும் சொன்னார். பங்குனி உத்தரத் திருவிழாதான் வெகுகாலமாகப் பிரசித்தி பெற்ற விழாவாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாரங்களில் அப்பர் சுந்தரர் ஆகியோர் இந்தப் பங்குனி உத்தரத் திருவிழாவைக் குறிப்பிட்டிருக் கிறார்கள். “சுந்தரமூர்த்தியின் பரவையார் உருத்திர கணிகை என்று சொல்லப்படுகிறது. அந்தச் சந்ததியாரின் தொடர்பு இப்போது கோயில் உற்சவங்களில் உண்டா?” என்று குருக்களைக் கேட்டேன். “பல ஆண்டுகளுக்கு முன்னர் அது இருந்தது. இப்போதுதான் உருத்திர கணிகையர் என்ற இனத்தவர்களே மறைந்து போய் விட்டார்களே! அந்தக் காலத்தில் நான் அறியக்கூடியதாக பங்குனி உற்சவத்தில் நாலாம் நாள் வாகன உற்சவம் என்று நடக்கும். அந்த உற்சவத்தில் சுவாமி வீதி சுற்றி வந்தவுடன் சுந்தரமூர்த்தி எதிர் கொள்ளச் செய்வார்கள். அந்தச் சமயத்தில் தாசிகள் வந்து தமக்கே அவர் சொந்தம் என்று சொல்லித் தமது நகைகளைக் கழற்றிச் சுந்தரர் மேல் போடுவார்கள். சுந்தரர் அன்று அலங்கார புருஷராக வருவார். தாசிகள் அம்மானை முதலிய ஆட்டங்கள் ஆடுவார்கள். அவர்களுக்குள் பல போட்டிகள் நடக்கும். ரொம்ப வேடிக்கையா யிருக்கும்” என்று சொல்லிப் பழையகால நினைவுகளில் மூழ்கி ரசித்துச் சிரித்தார் ராமாமிர்தக் குருக்கள்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.