சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. குண்டையூர்க் கிழார்

பரவையை மணந்து இன்பவாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் சில நாட்கள் தங்கியிருந்தார். பரவையின் குணங்களையும் அவளுக்கிருந்த தர்ம சிந்தனையையும் நன்குணர்ந்த சுந்தரர், கடமை மறவாத கணவன் என்ற முறையில் பரவைக்கு அவ்வப்போது தேவைப் பட்டவைகளை வாங்கிக் கொடுத்துவந்தார். தாம் அனுபவிக்கும் இல்லற இன்பமானாலென்ன, மற்றும் எந்தக் காரியமானாலென்ன எல்லாம் ஈசனுக்கே அர்ப்பணம் என்ற எல்லை கடந்த நிலையில் தான் அவர் நடந்துகொண்டார். ஏற்கெனவே, “நான் உன் தோழன். இந்த உலகில் நீ வேண்டிய இன்பத்தை அனுபவித்து விளையாடுவாயாக” என்று கடவுள் சொல்லிவிட்டாரல்லவா? சுந்தரர் அந்தத் தோழமையை நன்றாக உபயோகிக்கத் தலைப்பட்டார். அவ்வப்போது தனக்கோ தன் காதலிக்கோ வேண்டியதை அடித்துக் கேட்பார் கடவுளிடம். கொஞ்சம் கொடுத்தால் போதாது, மேலும் கொடு என்று வற்புறுத்துவார்! கொடுக்காவிட்டால் “இந்த ஊரில் இருக்கும் நீர்தான் ஒரு கடவுளா? வேறிடத்தில் போய்க் கேட்கிறேன் பாரும்” என்று கோபித்துக்கொள்வார். வன்தொண்டர் என்பதற்குச் சான்றாக சுந்தரர் பல இடங்களில் கடவுளைக் கட்டாயப்படுத்தியும் வந்தார்.
திருவாரூருக்குத் தெற்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் கோளிலி என்ற ஸ்தலம் இருக்கிறது. அதன் அயலிலுள்ளது குண்டையூர் என்ற ஸ்தலம். பரவை நாச்சியார் பங்குனி உத்தரத் திருவிழாவில் அடியார்களுக்கு உணவளிக்கப் போதிய அரிசி இல்லையென்று குறைப்பட்டார். வழக்கமாக ஒவ்வொரு பங்குனி உத்திரத்திருவிழாவுக்கும் குண்டையூரிலிருந்த ஒரு பெரியவர், குண்டையூர்க்கிழார் என்ற தனவந்தர், சுந்தரரின் மிக நெருங்கிய
நண்பர்களில் ஒருவர், நெல் அனுப்பிவருவார். ஒரு முறை பஞ்சம் வந்ததால் நெல் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக சுந்தரர் குண்டையூருக்குப் போய் அங்கே நெல் ஏற்றி வந்ததாக ஒரு சம்பவமுண்டு. ஆகையால், அந்தக் குண்டையுரையும் சுந்தரர் வணங்கிய கோளிலியையும் பார்த்து வரலாமென்று நண்பர் இரத்தின தேசிகரிடம் தெரிவித்தேன். அவர் மனமுவந்து தாமே என்னோடு கூட வருவதாகச் சொல்ல. இருவரும் புறப்பட்டோம்.
திருவாரூரிலிருந்து குண்டையூர் போகும் பாதையில் சுமார் அறு மைல் தூரம் சென்றவுடன் தெருக்கரையில் ஒரு பழைய சிறிய கோயில் தென்பட்டது. வண்டியை நிறுத்தச் சொன்னார் தேசிகர், இருவரும் இறங்கிப்போய்ப் பார்த்தோம். “இதுதான் ஏமப்பேறூர் அல்லது திருநெய்ப்பேறு என்ற தலம். நமிநந்தியடிகள் குடியிருந்த இடம். உள்ளே பாருங்கள். நமிநந்தியின் சிலை காணப்படுகிறது” என்று சுட்டிக் காண்பித்தார் நண்பர். நமிநந்தியடிகள் விக்கிரகம் தெளிவாய்த் தெரிந்தது. முன்குடுமி, பூணூல், தோளில் விளக்கு, நெய்க்குப்பி இவைகளுடன் காட்சி தருகிறார் இந்த நாயனார். ஆனால் தேடுவாரற்றுக் கிடக்கிறது இவர் ஆலயம்.
அங்கிருந்து புறப்பட்டு நேரே குண்டையூருக்குப் போனோம். கோயிலை நெருங்கும்போது வழியில் ஒருவர், எங்கள் எதிரில் வந்தவர். வண்டியைக் கடந்து சைக்கிளில் சென்றதைக் கண்ட தேசிகர் உடனே அவரைத் திரும்பி வருமாறு சைகை செய்தார். “இவர்தான் குண்டையூர்க் கோயிலின் அர்ச்சகர். பூஜையை முடித்துக் கொண்டு போகிறார். திரும்பி வரச்சொல்லியிருக்கிறேன்” என்று தேசிகர் விளக்கினார். சற்று நேரத்தில் எல்லாரும் குண்டையூர்க் கோயிலில் சந்தித்தோம். அர்ச்சகர் சில சுவையான தகவல்களைத் தெரிவித்தார்.
குண்டையூர்க் கிழார் என்ற சைவ வேளாளர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடத்தில் பெரும் பக்தி கொண்டவர். அவர் மதுரைக்கு அடிக்கடி தரிசனத்துக்குப் போவார். ஒருநாள் அவர் தரிசனத்துக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, மதுரை சொக்கநாதர் அவரைச் சோதிக்க வேண்டி, இடியுடன் காற்றும் மழையும் பெய்யச் செய்தார். அதையும் பொருட்படுத்தாமல் சென்ற பெரியவரை சொக்கநாதர் ஒரு கிழவேதியர் வடிவில் தோன்றி, “எங்கே போகிறாய்?” என்று கேட்டார். பெரியவர் தாம் மதுரைச் சொக்கநாதரைத் தரிசிக்கப் போவதாகச் சொல்லவும், “இந்தக் காற்றிலும் மழையிலும் நீ எப்படிப் போக முடியும்? பக்கத்தில் என் வீடு இருக்கிறது. அதில் தங்கி மழைவிட்டபின் போகலாம்” என்று தடுத்தார். அதையும் கேளாமல் பெரியவர் போனார். அந்தச் சமயத்தில் இறைவன் காட்சி கொடுத்து, “பக்தா, நீ குண்டையூரிலேயே என்னைத் தரிசிக்க ஏற்பாடு செய்கிறேன். திரும்பிப்போ. அங்கு ஓரிடத்தில் இரு அத்தி மரங்கள் இருக்கும். ஒன்று பூ மாத்திரம் பூக்கும். மற்றொன்று காய்க்கும். அதுவே மதுரையென்று வழிபடு” என்றார். குண்டையூரிலிருக்கும் சிவாலயத்துக்கு “மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்” என்று தான் பெயர். ஆதியில் ரிஷபம் பூஜை செய்ததால் குண்டையூர் என்று பெயர். குண்டை என்றால் ரிஷபம் என்று சொன்னார் அ ர்ச்சகர்.
இந்த தெய்வகடாட்சம் பெற்ற குண்டையூர்க் கிழார்தான் ஆண்டுதோறும் பங்குனி உத்தரத் திருவிழாவுக்கு சுந்தரர் வீட்டுக்கு நெல் அனுப்பிக்கொண்டு வந்தவர். ஒருமுறை நாட்டில் பஞ்சம் வந்ததால் நெல் கிடைக்கவில்லை. அனுப்பவும் முடியவில்லை. சுந்தரர் திருவாரூரிலிருந்து இங்கு வந்தபோது, குண்டையூர்க்கிழார் இறைவனை வேண்டினார். ஏராளமாக நெல் வந்து குண்டையூர்க் கோயிலின் பக்கத்தில் மலையாகக் குவிந்துவிட்டது! குண்டையூர்க் கிழாருக்கோ ஆனந்தம். சுந்தரமூர்த்தியைச் சந்தித்து அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறார். சுந்தரர் வியந்து, அந்த நெல்லை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்று சிந்திக்கிறார். அவருக்குத் தான் அவர் தோழர் இருக்கிறாரே தியாகராஜர்! உடனே அடுத்தாற் போலுள்ள திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போய்ப் பார்த்து, வேண்டிக் கொள்கிறார்.

நீளநினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை யெம்பெருமான் அவையட்டித்தரப் பணியே.

உடனே இறைவன் தமது பூதகணங்களை விட்டு அத்தனை நெல்லையும் அன்றிரவே திருவாரூரில் பரவை நாச்சியார் இல்லத்தில்
கொண்டுபோய்ச் சேர்க்கச் சொல்லிவிட்டார்.
திருக்குவளை என்று இப்போது வழங்கும் திருக்கோளிலி ஸ்தலத்தைப் போய்ப் பார்த்தோம். தருமபுர ஆதீனத்தின் மேற் பார்வையிலுள்ளது இது. திருவாரூர் போல சப்த விடங்கஸ்தலம். இங்குள்ள தியாகராஜர் அவனிவிடங்கர். இவரது நடனம் பிரங்க நடனம். தேனுள்ள பூவில் வண்டு சுற்றி ஆடும் நடனம். இதன் காரணமாகவோ என்னவோ இங்குள்ள அம்பாள் பெயர் வண்டமரும் பூங்குழலாள். சுந்தரர் நெல் பெற்ற இந்தச் சம்பவம் நெல்மகோற்சவம் என்று மாசி மாதத்தில் நான்கு நாள் விழாவாக நடக்கிறது. மாசி மாதத்தில் மக நட்சத்திரத்துக்கு முதல் நாள் திருக்கோளிலியில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு வசந்த மண்டபத் துக்கு எழுந்தருளுதல்; மகத்தன்று காலை பஞ்சமூர்த்தி சந்திர நதியென்று குண்டையூருக்குப் போகும் வழியிலுள்ள நதியில் தீர்த்தம் கொடுத்தல்; பின் அன்றிரவு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, குண்டையூர்க்கிழாருக்கு நெல் நிறைய வேண்டுமென்று அனுக்கிரகம் பண்ணுதல்; மறுநாள் சுந்தரமூர்த்தி உற்சவ விக்கிரகம் குண்டை யூருக்குப் போய் நெல் மலையைப் பார்த்துவிட்டு வந்து ஆள் வேண்டு மென்று, “நீள நினைந்தடியேன்” என்ற பதிகம் பாடுதல்; இரவு கல்யாணமூர்த்தி அங்குபோய் நெல்லையெடுத்து திருவாரூருக்கு அனுப்புதல். இது நான்கு நாள் உற்சவமாக நடைபெறுகிறது.
இங்கே இப்படி நடக்கும் விழாவில் பத்துக்கலம் அல்லது ஐந்து கோட்டைக்குக் குறையாமல் நெல் அளந்து திருவாரூருக்கு அனுப்பப் படுகிறது. திருவாரூரில் பரவை நாச்சியார் கோயிலுக்கு இந்த நெல்லைக் கொண்டுவந்து வைத்து, மாசிமாதம் பூர நட்சத்திரத்தில் அபிஷேக ஆராதனை உபநியாசம் முதலியன செய்து, எல்லாருக்கும் விநியோகம் செய்வார்கள். இந்த வழக்கம் இன்றும் நடைபெற்று வருகிறது. ஒரு சில மணிகளாவது கிடைக்கப் பெற்றால் அந்தக் குடும்பத்திலே உணவுப் பஞ்சம் இருக்காது என்று திருவாரூர் மக்கள் நம்புகின்றனர்.
என்னுடன் வந்த இரத்தின தேசிகர் குண்டையூரில் தொடர்புள்ளவர். அங்குள்ள சிவாலயம் மிகவும் அழிந்துபோகும் நிலையிலிருப்பதால் அதற்கு உதவி செய்யவேண்டுமென்று நிதி படைத்தவர்களிடம் சிபாரிசு செய்யச் சொன்னார். பக்கத்திலே தருமபுர ஆதீனக் கோயில் திருக்கோளிலி இருக்கிறது. செல்வமும் செல்வாக்குமுள்ள இந்த ஆதீனமே உதவி செய்யலாம் என்று நான் தெரிவித்தேன்.
திருக்குவளையிலிருந்து திரும்பி வரும்வழியில் நாட்டியத்தான் குடியையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று நான் சொன்னபோது இரத்தின தேசிகர் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். இந்த நாட்டியத்தான் சற்று மேற்கேயிருக்கிறது. திருவாரூரிலிருந்து ஆறு மைல். இந்த ஊரில் குடி திருக்குவளையிலிருந்து திருவாரூருக்குத் திரும்பி வரும் வழியில் ஒரு காலத்தில் சேனாதிபதி தொழில் புரிந்த கோட்புலிநாயனார் இடமாகையால் நெல் சாகுபடிதான் முக்கியமானது. குண்டையூர் வசித்து வந்தார். நாட்டியத்தான்குடியும் திருவாரூரை அணித்தாயுள்ள கோளிலிபோல இங்கும் நிலப் பிரபுக்களிருந்தனர். அதைக் கொண்டு பசித்தோர்க்கு அன்னமிடும் வழக்கமுமிருந்தது. கோட்புலி நாயனார் ஒருநாள் அரசனிடத்திலிருந்து வந்த ஏவலில் கோட்புலி நாயனார் வீட்டிலும் போதிய அளவு நெல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. போர்க்களம் செல்லவேண்டியிருந்தது. அப்போது, தாம் சுவாமிக்குத் திருவமுதுக்காக ஓரிடத்தில் நெல்லை அளந்து வைத்துவிட்டுத் திரும்பி வரும் வரையில் தமது சுற்றத்தவர் எவரும் அந்த நெல்லை எடுக்கலாகாதென்று ஆணையிட்டுச் சென்றார். எதிர்பாராதவிதமாக சமாளிக்க முடியாத இவர் நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது. சுற்றத்தவர்கள், “இந்த அவசிய வேளையில் சுவாமிக்கென வைத்திருக்கும் நெல்லை எடுத்துச் செலவிட்டு, பிறகு கொடுத்து விடலாம்” என்று அந்த நெல்லை எடுத்து உபயோகித்து விட்டனர். கோட்புலி நாயனார் திரும்பி வந்த சமயம் நடந்ததையறிந்து மிகவும் கோபங்கொண்டார். தெய்வத்தின் சொத்தை உண்ட தமது சுற்றத்தவர் எல்லோரையும் அழைத்து ஒவ்வொருவராக வெட்டிக் கொன்றுவிட்டார்! ஒரு பச்சிளங்குழந்தை தப்பிக் கிடந்ததைப் பார்த்து, “இது நெல்லை உண்ணாவிட்டாலும் அதையுண்டவள் பாலை அருந்தியதல்லவா?” என்று அதையும் வெட்டப் போகும் போதுதான் இறைவன் வெளிப்பட்டு வந்து தடுத்து, யாவருக்கும் முத்தி கொடுத்தார் என்பது புராண வரலாறு.
இந்தக் கோட்புலி நாயனார் வரலாற்றிலே சுந்தரமூர்த்தியும் ஏதோ, ஓர் இடத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு வரும்வழியில் சுந்தரர் நாட்டியத்தான்குடிக்கும் வந்தார். வந்தவரைக் கோட்புலி வணங்கி, ஏற்கெனவே இவரது நட்புரிமை பூண்டவராகையால், சுந்தரருக்கு விருப்பமுள்ள உணவும் அளித்து மகிழ்ந்தார். சுந்தரர் அழகு சாதனங்களிலும் வாசனைத் திரவியங்களையும் பட்டு முதலியவற்றையும் சாத்தி, பட்டுப் பீதாம்பரங்களிலும் பொன்னிலும் மணியிலும் அதிகம் விருப்பமுள்ளவர் என்பதைக் கோட்புலி நாயனார் நன்றாய் அறிவார்போலும்! எல்லாம் பரிமாறி உபசாரம் முடிந்தபின் கோட்புலி தம் உள்ளத்தில் வைத்திருந்த எண்ணத்தைக் காரியத்தில் நிறைவேற்றக் கருதி, தமது புதல்வியராகிய சிங்கடி, வனப்பகை என்ற இரு நங்கையரையும் அழைத்து, சுந்தரர் முன்னிலையில் நிறுத்தி, “சுவாமி, இவர்கள் அடியேன் பெற்ற மக்கள். இவர்களை அடிமை யாகக் கொண்டருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். பரவையிடம் ஏற்கெனவே நாட்டம் கொண்ட சுந்தரருக்கு இது பொருத்தமாய்த் தோன்றவில்லை. உடனே அவர், “அப்படியா, நல்லது. இவர்கள் எனது சொந்தப் புதல்விகளாக இருக்கக்கடவர்”
என்று வாழ்த்தினார்.
சுந்தரர் தேவாரத்தில் பல இடங்களில் அவர் தம்மைச் சிங்கடியப்பன், வனப்பகையப்பன் என்று குறிப்பிட்டுப் பாடி விருப்பதைக் காணலாம்.
ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தில் இந்த ஸ்தலத்தில் நடவு உற்சவம் நடைபெறும். சுந்தரர் இங்கு முதலில் வந்தபோது நிகழ்ந்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதையுண்டு.”சுந்தரர் வருகிறார் என்று அறிந்த இறைவன் ஒரு சிறு விளையாட்டு நடத்தினார். கோயிலில் சுவாமி இல்லையென்பதைச் சுந்தரர் கண்டவுடன் வெளியே எங்கு சென்றார் என்று தேடினாராம். அங்கிருந்த விநாயகர், “ஈசான திசையில் போய்ப்பாரும்” என்று கைகாட்டி னாராம். கைகாட்டி நாயகர் என்ற விக்கிரகம் இப்போது அங்கிருக்கிறது. அந்தத் திசையில் சுந்தரர் போய்ப் பார்க்கும்போது சுவாமி நாற்றுக்களைப் பறித்துக் கொண்டிருக்க அம்பாள் நடவு நட்டுக் கொண்டிருந்தார். சுந்தரர் உடனே, “நட்ட நடவில் நாழி நடலாம், நாழி நடாக்குழி சேறு கிடக்கட்டும், நட்டது போதும் கரையேறி வாரும் நாட்டியத்தான் குடி நம்பீ” என்று சொன்னதாக ஐதிகம். இந்தப் பாட்டு எந்த நூலில் உள்ளதோ தெரியாது. நாட்டியத்தான்குடியில் நாங்கள் சந்தித்த சிங்கார சுப்பிரமணியக் குருக்கள் என்பவர் சொல்லக் கேட்டு எழுதிக் கொண்டோம். சுவாமி உடனே மறைந்துபோய், கங்கையும் பாம்பும் புலியுடையுமாய்த் தோன்றியவுடன் சுந்தரர் “பூணான் ஆவதோர் அரவங்கண்டஞ்சேன்” என்ற நாட்டியத்தான்குடிப் பதிகத்தைப் பாடினார் என்று அந்தக் குருக்களே சொன்னார்.
பாதுகாப்பும் அங்கு காணப்படவில்லை. ஆடிமாதம் கேட்டை நாட்டியத்தான்குடி கோயில் அவ்வளவு பிரசித்தி பெறவில்லை. நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நடவு உற்சவம் முடிந்தபின் கோட்புலி
நாயனார் வரலாற்று உற்சவம் நடக்கும். இதில் மரப்பொம்மைகளை வைத்து சம்ஹாரம் செய்வார்களாம்.
பொழுது சாயும் வேளையாகி விட்டதால் திருவாரூருக்குத் திரும்பப் புறப்பட்டோம். நாட்டியத்தான்குடி கோயிலுக்கு எதிரே ஒரு பெரிய வீடு. அதன் எதிரில் கீற்றுப் பந்தல் போட்டு அதில் ஜமக்காளம் விரித்துப் பட்டுத் தலையணையில் சாய்ந்தபடி ஒரு பண்ணையார் வீற்றிருந்தார். எதிரே ஒரு பணியாளன் கை கட்டி உத்தரவுக்குக் காத்து நிற்கிறான். பண்ணையாரின் மனைவி, காப்பி வெற்றிலை சகிதம் அவர் முன் வருகிறாள். “இந்த ஊரில் இவர் பெரிய பண்ணை” என்று தெரிவிக்கிறார் குருக்கள். அவர் பெயர் ஏழுவேலிப் பண்ணை. இந்த இருபதாம் நூற்றாண்டுப் பிற்பகுதி யிலும் இக்காட்சியைக் காண முடிகிறது என்ற சிந்தனையோடு திருவாரூருக்குத் திரும்பினோம்.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்