லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 51

      1.

கேசவன்  பணிஓய்வு பெற்று ஒரு மாதமாகிறது.. மகன் மணிவண்ணன்

ஸ்போர்ட்ஸ் பைக் கோரிக்கை வைத்தான். மனைவி பத்மா இந்தியா முழுதும் சுற்றுலா
சென்றுவரும் கோரிக்கையை வைத்தாள். அவற்றைக் -கேட்டதிலிருந்து கைக்கு வந்த பணம்
கடைசி நாட்கள் வரை தங்குமா என்ற பயம் பற்றிக் கொண்டது.
கேசவன் இஞ்ஜினீயரிங் பட்டதாரி. சிறு சிறு கம்பெனிகளில் வேலை பார்த்து .
பின்னர் ஒரு பன்னாட்டு இஞ்ஜினீயரிங் கம்பெனியில் முப்பத்தைந்து வருடங்கள்
பணியாற்றி டெக் மேனேஜராக ஓய்வு பெற்றவர்..
கேசவனுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. காலை பத்து மணிக்கு
உணவுண்ட பிறகு காலம் ஸ்தம்பித்தது. .எவ்வளவு நேரம் தொலைக்காட்சிப் பெட்டியின்
அபத்தங்களைக் பார்த்துக் கொண்டிருப்பது? எத்தனை மணி நேரம் புத்தகங்கள்
படிப்பது? வாழ்க்கை சுருங்கிப் போன உணர்வு துன்புறுத்தியது. .
அறுபத்து ஐந்து வயதுக்கு மேல் யாரும் வேலை தரமாட்டான்.
ஏதாவது சிறியதாய் வியாபாரம் செய்யலாமென்று தோன்றியது.’ ஜனங்க நம்மைத்
தேடி வர்ர வியாபாரம் பண்ணணும். பணம் புழங்கிக் கொண்டேயிருக்கிற பிசினசைச்
செய்யணும்’ என்று அசரீரி சொன்னது. வாகனங்களுக்கான உதிரி பாகங்கள்
கடையைத் தேர்வு செய்தார். லொகேஷனை யோசித்துக் கொண்டிருந்தபோது கார்த்திக்
வந்தான்.
கார்த்திக் கேசவனின் நண்பர் நடராஜனின் மகன்.. நடராஜன் சென்ட்ரல் எக்சைஸ்
துறையில் நடுநிலைப் பதவி வகித்தவர். அவர் வீட்டில் கேசவன் பதினைந்து
வருடங்களுக்கு முன்பு குடியிருந்தார். கேசவனுக்கு குடும்பச் செலவுகளால் பணத்
தட்டுப்பாடான காலம். முன்னும் பின்னுமாக வாடகை கொடுப்பார்.. நடராஜன் ஒரு
நாளும் முகம் சுளித்ததில்லை.. கேசவனுக்கு பன்னாட்டுக் கம்பெனியில்
வேலை கிடைக்க நடராஜன் அவருடைய உறவினர் மூலமாக உதவி செய்தார்..
கேசவனின் வாழ்க்கையில் அது ஒரு சுபிட்சமான திருப்பம். அந்த நன்றி
கேசவனுக்கு இன்றுமிருந்தது.
‘அம்மா எப்படியிருக்காங்க’ பத்மா கேட்டாள்.
‘எலிக் காய்ச்சல் வந்து ஒரே நாளில் போயிட்டா. மூணு வருஷமாச்சு’
காபி கொண்டுவருவதற்காக பத்மா சமையலறைக்குச் சென்றாள்.
‘அங்கிள், எத்தனை வருஷம் சர்வீஸ் இருக்கு’ கார்த்திக் கேட்டான்.
‘ரிடயராயிட்டேன்.’ஒரு மாசமாச்சு
‘ரிடயர்ட் லைப் எப்படியிருக்கு?
‘ப்ரிட்ஜ் க்ளீன் பண்றது. சாப்பிட தட்டுவெக்கறது. துணி மடிக்கறதுன்னு
ஆண்டிக்கு டொமஸ்டிக் ஹெல்ப்பா’யிட்டிருக்கேன்…… சின்னதா ஏதாவது பிசினஸ்
பண்ணலாம்னு யோசிக்கறேன்’ ’
‘அங்கிள் சின்னதால்லாம் இப்ப பிசினஸ் பண்ண முடியாது. சலூன் கடைக்கே
லட்சக் கணக்கி்ல் இன்வெஸ்ட் பண்ணணும்.. என்ன பிசினஸ்
பண்றதா இருக்கீங்க?’
‘ஆட்டொமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஆரம்பிக்கலாம்னு முடிவு
பண்ணியிருக்கேன்’.
‘ரீடெயல் பிசினஸ்ல மனி ரிடர்ன் லேட்டாகும். கடை வெச்சா ரௌடிகள்
கட்சிக்காரன், கமர்ஷியல் டாக்ஸ் தொல்லைகளை சமாளிக்கணும். உங்க லெவலுக்கு ஒத்து
வருமா?யோசிங்கோ’ என்றான் கார்த்திக்.
‘நீ இப்ப எங்க வேலை பாக்கறே?’ கேசவன் விசாரித்தார்.
‘கொஞ்ச நாள் மெடிகல் ரெப்பா இருந்தேன். அப்புறம் சொந்தமா பிசினஸ்
-ரெடிமேட் ஷாப் வெச்சேன். ட்ராவல் ஐட்டம்ஸ் – சூட்கேஸ் ஜர்னி பேக்ஸ்
ஷோ ரூம் வெச்சேன். . இப்போ . ரெண்டு மூணு கம்பெனி மருத்துகளுக்கு
டிஸ்ட்ரிப்யூட்டரா இருக்கேன்..
‘எவ்வளவு முதலீடு?’
‘இப்பத்திக்கு எழுபத்தைந்து லட்சம். டார்கெட் ஒரு கோடி’
‘அவ்வளவு பணத்தை எப்படி மேனேஜ் பண்ணே?’ கேசவன் வியப்புடன்
கேட்டார். .
‘வீட்டை அடமானம் வெச்சு பேங்க்ல முப்பது லட்சம் வாங்கினேன்.
என் சிநேகிதன் மதன் பார்ட்னரானான். அவன் பங்கு முப்பது.. அப்பாவோட
சிநேகிதர்கள்- உங்களுக்கும் தெரிஞ்சவங்கதான் ஏர் இந்தியா சிவப்ரகாசம், பத்திரப்
பதிவாளர் தண்டபாணி ஈ.பி லே டிவிஷனல் இஞ்ஜனீயரா இருந்த கணபதி அவங்க பேமிலி
மெம்பர்ஸ் பேர்ல ஆளுக்கு அஞ்சு கடனா கொடுத்திருக்காங்க. லோன் அக்ரிமெண்ட்
போட்டிருக்கோம்..ஒண்ணரை வட்டி தர்ரோம். மாசா மாசம் அஞ்சாம் தேதி செக் வந்துரும்.
வயசான காலத்துலே கடையெல்லாம் வெச்சு கஷ்டப்படாம நீங்களும் சின்னதா அஞ்சு எல்
இன்வெஸ்ட் பண்ணலாம். எங்களுக்கும் ஒர்க்கிங் கேபிடல் அதிகமாகும்,உங்களுக்கும்
வட்டி கூட வரும். வின்-வின் டீல்’
கேசவன் மனதிற்குள் கணக்கு போட ஆரம்பித்தார். தெரிந்த பையன். டீசண்டான
வியாபாரம். வட்டியும் கூட வரும். கடை வைத்து சாக்கடையானால்
முதலுக்கே நட்டம். வாய் வார்த்தையில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்
கொண்டுதான் தரப்போகிறேன். ‘ உங்க ஆபீஸ் எங்கே இருக்கு?’.’
அண்ணாமலைபுரத்துலே ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருக்கோம்.. நாலு
ரூம்லேயும் ஸ்டாக் வெச்சுக்கறோம். ஹாலை ஆபிஸாக யூஸ் பண்றோம்’ .
‘கார்த்திக் பிசினஸ் கார்டைக் கொடுத்தான்.. கேசவனின் கைப்பேசி எண்ணைக்
கேட்டுக் குறித்துக் கொண்டான்..’‘ஒரு நாள் வாங்க’ வரவேற்றான் . .
பத்மா காபியைக் கொடுத்தாள்.. குடித்துவிட்டுக் கிளம்பினான்.
. 2
கேசவன் யுனீக் மார்க்கெட்டிங் ஆபீசுக்கு விஜயம் செய்தார். வாசலில்
வெள்ளை நிற இடியாஸ் கார் பளபளத்தது. கார்த்திக்கும் மதனும் வரவேற்றார்கள்.
ஆபீஸ் திரைச்சீலைகள் தரை விரிப்புகள் ரூம் ஸ்ப்ரேக்களென அமர்க்களமாக
இருந்தது. ஏராளமான மருந்துகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கணக்காளர் கணினியை
இயக்கிக் கொண்டிருந்தான்.
‘அங்கிள். ஆபீஸ் எப்படியிருக்கு? கேசவன் ‘க்ராண்ட்’ என்று பதிலிறுத்தார்.
‘’இன்வெஸ்ட்மெண்ட் பண்றதைக் குறித்து ஏதாவது முடிவு பண்ணீங்களா?
‘’அஞ்சு அதிகம்.ரெண்டு. ஓகே. யோசிச்சு சொல்றேன். ’
‘ஓ.கே அங்கிள். சிறுதுளி பெருவெள்ளம்.’
*ஒரு மாதத்தில் கார்த்திக் பலமுறை கைப்பேசியில் தொடர்பு கொண்டான்.
எறும்பூறக் கல்லும் தேயுமே! தேய்ந்தது.
3
வட்டிக்கான காசோலைகள் முதல் மூன்று மாதங்கள் ஐந்தாம் தேதி
சரியாக வந்தது. ஐந்தாம் தேதி பத்தாம் தேதியானது. பத்தாம் தேதி பதினைந்தாம்
தேதியானது. . ஆறாம் மாதம் முப்பதாம் தேதியானது. அடுத்து இரண்டு மாதங்கள்
பின் தேதியிட்ட காசோலையாக வந்தது. அதற்குப் பிறகு வந்த காசோலைகளுக்கு
பணமில்லையென்று வங்கியில் திருப்பிவிட்டார்கள்.
கேசவனுக்கு தாங்கமுடியாத கோபம். நேரே யுனீக் மார்க்கெட்டிங்
அலுவலகத்துக்குப் போனார். மதன்தானிருந்தான். கார்த்திக் மைசூருக்குப் போயிருப்பதாகச்
சொன்னான்.
;பணமில்லாமல் செக் கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு அசிங்கமாத்
தெரியலியா? கேசவன் குரலை உயர்த்திக் கேட்டார்.
‘தப்புதான் அங்கிள். மன்னிச்சுக்குங்க. இனி அப்படி நடக்காது. ஆனா
எங்களைப் பொறுத்தவரையிலும் பிசினஸ்லே இது சகஜம். நாளைக்கு
பேங்க்லே போடுங்க. பேமெண்ட் ஆயிரும்’
கோபத்துடன் கேசவன் வெளியே வந்தபோது சிவப்ரகாசத்தை தொப்பி
அடையாளம் காட்டியது. தண்டபாணி மிகவும் மாறிவிட்டிருந்தார் அடையாளம்
தெரியவில்லை.சிவப்ரகாசம் சொன்ன பிறகுதான் தெரிந்தது..பரஸ்பரம்
பேசிக்கொண்டார்கள். அவர்கள் கதையும் கேசவன் கதைதான் என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த கடனை திருப்பிக் கேட்பதாகச் சொன்னார்கள்.. ‘லாக் இன் பீரியட்
மூணு வருஷம்னுதானே அக்ரிமெண்ட் போட்டிருக்கோம்னு சொல்றானுங்க.
என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டிருக்கோம்’ என்றார் தண்டபாணி.
அவர் சொன்னதைக் கேட்டு தன் ஏமாளித்தனத்தை நினைத்து முகம் சுருங்கிப்
போனார் கேசவன். ‘ ‘நம்ம கொடுத்த பணத்துக்கு அத்தாட்சி இருக்கு. என்னிக்கிருந்தாலும்
பணத்தை திரும்ப வாங்கிறலாம்’ என்றார்.சிவப்ரகாசம். மூவரும் கைப்பேசி எண்களை
பகிர்ந்து கொண்டனர். தொடர்பிலிருக்கவும் தீர்மானித்தனர் . . .
. 4 .
அடுத்த மாதம் காசோலை வரவில்லை. கேசவன் கைப்பேசியில் தொடர்பு
கொண்டார். கார்த்திக் மதன் இருவருடைய கைப்பேசியும் அணைக்கப் பட்டிருந்தது..
கேசவன் யூனிக் மார்க்கெட்டிங் அலுவலகத்துக்கு சென்றபோது அலுவலகம்
பூட்டப்பட்டிருந்தது.. அலுவலகத்தை இடமாற்றம் செய்கிறோம் என்று ஒரு தாளில்
எழுதி கதவு மீது ஒட்டப்பட்டிருந்தது. கேசவன் போன் செய்ய சிவப்ரகாசமும்
தண்டபாணியும் வந்தார்கள். அக்கம் பக்கத்தில் விசாரித்து வீட்டின்
உரிமையாளரைச் சந்தித்தார்கள். அவர் வாடகை பாக்கி மூணு லட்சமென்றார்.
மருந்துக் கம்பெனிகள் பணம் பாக்கியென்று அவரைத் தொடர்பு கொண்டதையும்
விவரித்தார். ‘மாத்து சாவி போட்டுத் திறந்து நான் ஆபீசிலிருந்த டேபிள், சேர், ஏசி
எல்லாத்தையும் என் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டேன். மருந்துக் கம்பெனிகளும் அவங்க சரக்கை எடுத்துட்டுப் போயிட்டாங்க. திரும்பவும் அவங்க போட்டிருந்த பூட்டையே போட்டு பூட்டிட்டோம். அவனுங்க வந்து பாத்திருக்கானுங்க, வாசல்லே நோடீஸ் ஒட்டிட்டு ஓடிட்டானுங்க. உங்க மூணுபேருக்கும் எவ்வளவு தரணும்?’ கேட்டார்.
கேசவன் பதிலிறுத்தார். ‘போலீசில் புகார் கொடுக்கப்போறோம்’
‘அதெல்லாம் வேலைக்காகாது சார். ரெண்டு பேரும் தலைமைவாவறதுக்கு
முன்னாடி ஆளைத் தேடிப்பிடிங்க. இரண்டு அடியாளைக் கூப்பிட்டுகிட்டு போயி
மிரட்டி பணத்தை வாங்குங்க’ என்றார் வீட்டின் உரிமையாளர்.


5
கார்த்திக் நடராஜன் காலத்து வீட்டில் இல்லை. நிறைய குடும்பங்கள்
இருந்த ஒரு வாடகை வீட்டில் ஒரு பகுதி. அவனுடைய மனைவிதான் இருந்தாள்.
வீட்டின் உள்ளே வரச்சொன்னாள். ‘எதுக்காக்கும் தேடுது? கடன் கொடுத்திருக்கோ?
‘மூவரும் விவரங்களைச் சொன்னார்கள்.
‘அந்தக் கள்ள நாயிண்ட மோன் வீட்டுக்கு வன்னு ஆறு மாசம் கழிஞ்ஞது.
யான் டென்த் மட்டும்தான் படிச்சிருக்கு.. சரியா வேலை ஏதும் கிட்டில்லா.
கால்டாக்சி ஓட்டும் என் தம்பி உபகாரம் செய்யுறான். ஜீவிக்கிறேன்.. அந்த நாயி
வீட்டுக்கு வந்தா விளக்குமாத்து அடி தரும்……….. மதன்னு ஒரு வேசி மோன், ப்ராடு
சினிமாவுலே நடிக்க வெக்கறேன்னு சொல்லி ஆசை காட்டி வீடு கிரயம் செஞ்ச அத்தர
பணமும் குடி, ஸ்த்ரீகளோடஉல்லாசம்னு கை விட்டுப் போயி. இப்போ நாளைக்கு
நாலு நெறஞ்ச வயசு ஆபீசர்கள் – கடன் கொடுத்த ஆட்கள் – இந்த ஆளைத் தேடி
வர்ராங்கள்..யான் பதில் சொல்லி சலிச்சுப் போச்சு.’
அவளுடைய குரல் தழுதழுத்தது. விம்மத் தொடங்கினாள். ‘ஒரு
கள்ளனிண்ட மோசம் போன யான் என்ன செய்யும்.? வாரம் ஒருத்தரா வாங்க.
என்னோட இருந்துட்டுப் போங்க’ முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள்.
கேசவனுக்கு உடல் நடுங்கியது. ஜாடை காட்டினார். மூவரும் வெளியேறினர். .

கேசவனுக்கு நடுக்கமெடுத்தது. மற்ற இருவரோடும் வெளியேறினார்.  

ஆசிரியர் குறிப்பு

கணையாழி பிரக்ஞை தீபம் நவீன விருட்சம் சொல்வனம் இணைய இதழ்களில் லாவண்யா சத்யநாதனின் கதைகள் பிரசுரமாகி
உள்ளன. ஆந்திரா மெட்ரிக் என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. சிறுகதைகள் தவிர நான்கு கவிதைத் தொகுப்புகளும் நிறைய பொனுளாதாரக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். எண்பதை நெருங்கும்
லாவண்யா சத்யநாதன்

கல்பனா சன்யாசி /சின்ன விஷயம் – விருட்சம் நாளிதழ்

4 Comments on “லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு”

  1. பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்த கதையாக இருக்கிறது ஆனாலும் திரும்ப படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது

Comments are closed.