கல்பனா சன்யாசி /சின்ன விஷயம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 50

அது அந்த அதி நவீன அடுக்ககத் தொகுப்பில் இருந்த ஒரு வீடு அதன்
வாழ்வறை.
ஒரு பக்க சுவரை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டிருந்தது மிகப் பெரிய
தொலைக்காட்சிப் பெட்டி.
இனி தொலைக்காட்சிப் பெட்டியை ‘பெட்டி’ என்று சொல்வதை
நிறுத்துங்கள், வேண்டுமானால் தொலைக்காட்சித் திரை என்று திருத்திக்
கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது அந்த அதி
நவீன தொலைக்காட்சியின் ஒல்லித் திரை.
அந்த திரையில் ஏதோ இரு அணிகள் ஏதோ ஒரு மிகப்பெரிய சர்வதேச
நாட்டில் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
மிருதுவான இருக்கைகளும், மென்மையான திரைச்சீலைகளும்
அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த வீட்டுக் கூடத்தில் ஒரு தொட்டிலும்
இருந்தது. அதில் ஒரு குழந்தையும் இருந்தது.
அங்கே மிருது இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி மடிகணிணியை அதன்
பெயருக்கேற்றபடி தன் மடியில் வைத்துக் கொண்டிருந்தான் அதர்வா.
அவன் கண்களின் பார்வை, நேர் எதிரே இருந்த சுவர் நிரப்பிய
தொலைக்காட்சித் திரை மீது.
மனதின் எண்ணம்: “அடுத்த தடவை இந்த மேட்சை நேர்ல பாக்கணும்”
அச்சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை லேசாக சிணுங்கியது.
அந்த சிணுங்கல் அங்கே அமர்ந்து தன் மடிகணிணியில் கவனம்
கொண்டிருந்த அதர்வாவை நிமிரச் செய்தது.
நிமிர்ந்தவன் தொட்டிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும்
திரையின் பக்கம் திரும்பிக் கொண்டான். அங்கே விளம்பரம் வரவும்,
அனிச்சையாக மடிகணிணியை நோக்கிக் குனிந்துகொண்டான்.

சிணுங்கல் சில நொடியில் சீரான அழுகையானது. மடிகணிணியை
மடியிலிருந்து இறக்கி வைக்காமலே கைகளை நீட்டித் தொட்டிலை கிட்டே
இழுத்தவன், அதை லேசாக ஆட்டினான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
அந்த அழுகை சத்தத்தால் சுவர் மீதும், மடி மீதும் கவனம் செலுத்த
முடியாமல் போனதால், அதர்வா லேசாக தொட்டிலை எட்டிப் பார்த்தான்.
அவனிடம் ஒரு சலிப்பான “ப்ச்”. “டயப்பர் மாத்தணும் போல” ஒரு
அலுப்பான முணுமுணுப்பு.
“ஸ்வப்னா, குழந்தை அழறா பார்”, வீட்டின் உள்பக்கம் நோக்கி குரல்
கொடுத்தான் அவன்.
வீட்டின் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.
குழந்தையோ திடீரெனெ வீறிட்டு அலறியது.
“குழந்தை அழறா ஸ்வப்னா. காதுல விழலை? வந்து என்னன்னு
பாரும்மா”, அதர்வாவின் அழைப்புக் குரல் மீண்டும் ஒலித்தது. சத்தம் சற்று
கூடுதலாக.
ஸ்வப்னா வருவதாகக் காணோம்.
“ஸ்வப்னா…!” இம்முறை குழந்தையை விடவும் அதிகமாக அலறினான்
அதர்வா.
அதற்குள் ஒரு டவலை சுற்றிக்கொண்டு ஈரம் சொட்டச் சொட்ட ஓடி
வந்தாள் ஸ்வப்னா.
பாதிக் குளியலில் வந்திருக்க வேண்டும். குழந்தையை வாரி
அள்ளிக்கொண்டாள்.
“பாப்பாக்கு டயப்பர் மாத்தணும் போல. ஆமாம் பாப்பாவைப் பாத்துக்கிற
அம்மா எங்கே?” அதர்வாவிடம் சற்றே சலிப்பான ஒரு கேள்வி.
“ஏதோ கல்யாணமாம். ஊருக்கு போயிருக்காங்க” அதி சுருக்கமாக பதிலைச்
சொல்லிவிட்டுக் குழந்தைக்கு டயப்பர் மாற்றத் தொடங்கினாள் ஸ்வப்னா.
அதர்வாவை மறுபடியும் தங்களுக்குள் இழுத்துக்கொண்டன
விளையாட்டும், அனிச்சையாக அவன் விரல்கள் தடவிக் கொண்டிருந்த
அவனது மடிகணிணியும்.

“நான் ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்”, காலை
உணவு அருந்திக் கொண்டிருந்த போது அதர்வாவிடம் அறிவித்தாள்
ஸ்வப்னா.
“ம். போயிட்டு வா. எப்ப கிளம்பறே?”
“இப்பவே.”
ஸ்வப்னா தன் பொருட்களையும் குழந்தையின் பொருட்களையும்
பெட்டியில் நிரப்ப,
“ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பெட்டியா?” அதர்வாவின் கேள்விக்கு,
“பாப்பாவோட சாமான்லாம் நிறைய இருக்கு”, ஸ்வப்னாவிடம் தயாராக
இருந்தது பதில்.
“நம்ம புது கார் ஃபர்ஸ்ட் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு சாயந்திரம் வந்துடும். நீ
ஈவ்னிங் கிளம்பேன்? உன் அம்மா வீட்டுக்கு?”
“டாக்ஸில போறேன்”
“சரி. வெயிட் பண்ணு. புக் பண்றேன்.”
“நானே புக் பண்ணிட்டேன். டாக்ஸி வந்தாச்சு.”
மௌனமாகப் புறப்பட்டவளை, “உன் வழக்கமான முத்தத்தை
மறந்துட்டியே?” – அதர்வா கேட்டு முடிப்பதற்குள் ஸ்வப்னா டாக்ஸிக்குள்
அமர்ந்து விட்டிருந்தாள்.
கொஞ்சம் ஏமாற்றத்துடன் அதர்வா கையசைக்க டாக்ஸி புறப்பட்டுவிட்டது.
கைக்குழந்தையுடன், இருபது மைல்கள் தள்ளி இருந்த தன் அம்மா
வீட்டிற்குள் நுழைந்த ஸ்வப்னாவை, “மாப்பிள்ளை வரலியா?” அம்மாவின்
விசாரணை எதிர்கொண்டது.
“இல்லை”, ஸ்வப்னாவிடம் சிக்கனமான பதில்.
“சரி, பாப்பாவைக் கொடு”, வாங்கிக்கொண்டாள் அம்மா. “ஆமா, குழந்தை
பால் எதும் குடிச்சுதா? நீ சாப்ட்டியா?”
“ரெண்டு பேரும் பசியோட இருக்கோம்.”
அம்மா பாலைக் கரைத்துப் புகட்ட, அதை குடித்துவிட்டு குழந்தை
உறங்கிவிட்டது.

உணவு மேஜையில் ஸ்வப்னா சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்த
போது, “எத்தனை நாள் இங்க இருப்பே?” அம்மா விசாரித்தாள்.
“சாகிற வரைக்கும்.”
அமமா இப்படி ஒரு பூகம்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. மாபெரும்
திகைப்பு ஆட்கொண்டது அவளை.
அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலே, “என்னடி சொல்றே?” அம்மா
கவலையுடன் கேட்ட கேள்வி முடிவதற்குள் ஸ்வப்னாவின் அலைபேசி
அழைத்தது.
அதர்வா!
“பத்திரமா போய் சேந்துட்டியா ஸ்வப்னா?”
“ம்.”
“எப்ப திரும்பி வருவே?”
“வரவே மாட்டேன்.”
“என்னது?”
அதர்வாவின் அதிர்ச்சியை ஸ்வப்னாவால் உணர முடிந்தது.
அலைபேசியை துண்டித்தாள்.
அம்மாவால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.
“கண்ணுக்கும் மனசுக்கும் நிறைஞ்ச புருஷன். காரு வீடுன்னு சௌக்கியமா
சந்தோஷமாதானே இருக்கீங்க ரெண்டு பேரும்? அப்புறம் அன்ன
ஸ்வப்னா? அப்டி என்னதான் நடந்துச்சு? நீ இப்டி கோச்சிக்கிற அளவுக்கு?”
ஸ்வப்னா மௌனமா இருக்க, அம்மாவோ “வாழ்க்கை போனா திரும்ப
வராதுடி. சண்டை பெருசாகிறதுக்குள்ள பேசித் தீத்துக்கலாம். நடந்தது
என்னன்னு சொல்லித் தொலை ஸ்வப்னா”, கோபம் போல் தோன்றிய
வார்த்தைகளை உண்மையான வேதனையோடு வீசினாள் அந்த அக்கறை
அம்மா.
ஸ்வப்னாவோ, “சொன்னா உனக்குப் புரியாதும்மா” பேச்சை வளர்த்தாமல்
பட்டுக் கத்தரித்தது மாதிரி சட்டென வெட்டிவிட்டாள் அம்மாவின்
விசாரிப்பையும் விசாரணையையும்.

அம்மாவின் சினம் மதியம் சமையலின் போது அவள் உருட்டுகிற
பாத்திரங்களின் ஓசையில் எதிரொலித்தது.
கண்டுகொள்ளாத ஸ்வப்னா, “அவியல் பண்ணும்மா. உன் கைப்பக்குவத்துல
சும்மா மணக்கும்.”
“அப்பா இல்லேன்னு செல்லம் கொடுத்து வளத்துட்டேனே?
கைக்குழந்தையை வச்சிக்கிட்டு இவ இப்டி புருஷனோட சண்டைன்னு
வந்து நிக்கிறாளே? ஒத்தை மனுஷி நான் என்ன பண்ணுவேன்?”
அவியல் வாசனையோடு அம்மாவின் முணுமுணுப்பும் சேர்ந்தொரு
கலவை நிலவியது அங்கே.
ஸ்வப்னா அவியலை ரொம்பவே ரசித்தாள்.
“இன்னும் கொஞ்சம் வச்சிக்கம்மா” ஸ்வபா அம்மாவுக்கு பரிமாற, அந்த
அம்மாவோ மகளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு எழுந்து போனாள்.
தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் ஸ்வப்னா. அந்தப் புன்னகையில்
கொஞ்சம் சோகம் இல்லாமல் இல்லை. சோகத்தை விட ஏமாற்றமே
மிஞ்சி இருந்தது எனலாம்.
அன்று மாலையே ஸ்வப்னாவைத் தேடி வந்துவிட்டான் அதர்வா.
“ஏன்? ஏன் ஸ்வப்னா? என்னாச்சு உனக்கு?”
“உங்ககிட்டப் பேச எதுவுமில்லை. நீங்க கிளம்பலாம்.”
“உனக்கென்ன பைத்தியமா? புது வீடு, புது காரு, குழந்தைன்னு நம்ம
வாழ்க்கை நல்லாதானே போயிட்டிருக்கு? இன்னும் என்ன வேணும்
உனக்கு?”
“விவாகரத்து.”
சத்தியமாக இதை அதர்வா எதிர்பார்க்கவே இல்லை.
‘உளறாதே ஸ்வப்னா. இப்ப என்ன நடத்துடுச்சி? விவாகரத்து கேக்கிற
அளவுக்கு?”
“பேச எதுவுமில்லை. கிளம்புங்க.”
“எனக்கு உண்மையிலேயே ஒண்ணும் புரியலை ஸ்வப்னா.”
மௌனமாக இருந்தாள் ஸ்வப்னா.

“சிகிரெட் ஆல்கஹால்னு எனக்கு கெட்டப் பழக்கம் எதும் இருக்கா?”
“இல்லை.”
“வேற எந்தப் பொண்ணோடவாவது எனக்குப் பழக்கம் இருக்கா?”
“இல்லை.”
“உன்னை திட்றனா? அடிக்கிறேனா?”
“இல்லைதான்.”
“பின்னே ஏன் ஸ்வப்னா?”
“குழந்தை பொறந்தப்ப கூட வேலை முக்கியம். நீ வேலையை விட
வேணாம்னு நான்தானே சொன்னேன்?”
“ஆமாம்.”
“நீ சிரமப்பட வேணாம்னு குழந்தையைப் பாத்துக்கவும் ஆள் நான்தானே
ஏற்பாடு பண்ணேன்?”
“உண்மைதான்.”
“பின்னே ஏன் ஸ்வப்னா விவாகரத்து? உனக்கே தெரியும் நீன்னா, நம்ம
குழந்தைன்னா எனக்கு எவ்ளோ பிரியம்னு..”
“பிரியம்னா? என்னது? கொஞ்சறது மட்டும்தானா?”
“நீ என்ன சொல்ல வர்றே? எதுவும் புரியலை எனக்கு.”
“குழந்தை உங்களுதும்தானே?”
“ஆமாம். அதிலென்ன சந்தேகம்?”
“அப்போ அது அழுதா நீங்க என்னன்னு பாக்கக் கூடாதா? நான்தான்
வரணுமா?”
“கடவுளே, இந்த சின்ன விஷயத்துக்குப் போய்-“
“எது சின்ன விஷயம் அதர்வா?” அவனைத் தொடர்ந்துப் பேச விடாமல்
இடைவெட்டினாள் ஸ்வப்னா. தான் பேசினாள்:
“பால் புட்டி நான்தான் கழுவணும். டயப்பர் நான்தான் மாத்தணும்.
குளிப்பாட்டி பவுடர் போட்டு நல்ல டிரஸ்ஸும் போட்டுவிட்டா, நீங்க
கண்ணே மணியேன்னு கொஞ்ச மட்டும் கொஞ்சுவீங்க. அப்படிதானே?”

“குழந்தைக்கு அம்மாதானே ஸ்வப்னா செய்யணும் எல்லாம்?”
“யார் சொன்னா அப்டி? எது செய்யலைன்னாலும் குழந்தை அழறப்பவாவது
உங்களுக்கு துடிக்கணும். ஒரு அப்பாவா உங்களுக்கும் வலிக்கணும்.
அம்மா வர்ற வரைக்கும் அழவிட்டுட்டு கண்டுக்காம இருக்கிறது என்ன
நியாயம்? அது மனுஷத்தனமே இல்லை. ‘வந்து பாரு, வந்து பாரு’ன்னு
அம்மாவையே ஏவுறீங்களே? டயப்பர் மாத்துறது என்ன அம்மாவின்
வேலை மட்டும்தானா? அப்பாவுக்கு பொறுப்பில்லையா? உலகத்துல
எல்லா அப்பாவும் உங்களை மாதிரிதான் இருக்காங்களா? சொல்லுங்க.”
“என்ன ஸ்வப்னா, இந்த சின்ன விஷயத்-“
“மறுபடி இதை சின்ன விஷயம்னு சொல்லாதீங்க. அது உங்களுக்கு சின்ன
விஷயமாவே தெரியுற வரைக்கும்.. பேசிப் பிரயோஜனமில்லை. சீக்கிரமே
விவாகரத்து நோட்டீஸ் வரும். கையெழுத்துப் போட்டு அனுப்புங்க. இப்ப
கிளம்புங்க.”
ஸ்வப்னாவின் குரலில் தீர்மானம் தெறித்தது.
புறப்படுவதை தவிர வேறு வழியில்லாமல் போனது அதர்வாவுக்கு.
அவன் அகன்றதும், “என்ன ஸ்வப்னா, இந்த சின்ன விஷயத்..”
ஆரம்பித்த அம்மா, மகளின் அழுத்தமான நேர்ப் பார்வையில்
மௌனமானாள்.
குழந்தையின் சிணுங்கல் கேட்டது. இரண்டு அம்மாக்களும் அதன் அருகே
விரைந்தார்கள்.

ஆசிரியர் குறிப்பு

செல்வி. கல்பனா சன்யாசி, வயது: 58, பொறியியல் மற்றும் சைக்காலாஜி, சிறிது காலம் ஆசிரியர், தற்சமயம் எழுதுதல்
புத்தகம்: தங்கச்சி கல்யாணம், சிறுகதைகள் தொகுப்பு, மணிமேகலை பிரசுரம், சர்வம் காதல் மாயம், நாவல், கேலக்ஸி பதிப்பகம்
பரிசுகள்: அந்திமழை, உத்திராடம், பட்டுக்கோட்டை பிரபாகர் கதைப்போமா போட்டிகளில் சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.
வாசகர்களுக்கு சுவாரஸ்யமான இனியதொரு வாசிப்பு அனுபவம் தரும்படி எழுத வேண்டும். எனது எழுத்துகளில் பிரதிபலிப்பது வாசகர்களின் மனித நேயமே!

கமலா முரளி/காலத்தினால் செய்த… – விருட்சம் நாளிதழ்

3 Comments on “கல்பனா சன்யாசி /சின்ன விஷயம்”

Comments are closed.