
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 49
முல்லையம்மன் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது சிவப்பு நிற க்ரேட்டா ! நரேன் அத்தை பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ! திவ்யாவுக்கு வரவே இஷ்டமில்லை. ‘மிதமானது முதல் கனமான மழை பரவலாகப் பெய்யக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பைக் காட்டித் தப்பிக்கலாம் என்று பார்த்தாள்.
“எம்மா, சீசனல் ரெயின் நாம பாத்ததே இல்லயா ! கார்ல போய் ஸ்பாட்ல இறங்கப் போறோம். அப்படியே திருப்பி ரிடர்ன். அதுல நீ கரைஞ்சுடுவியா ? கண்டிப்பா போகணும்”
”என்னால ப்ரதீப் குட்டியைத் தூக்கிகிட்டு வரமுடியாது. மரிக்கொழுந்து வேலைக்கு வந்தா தான் வருவேன்.”
“ ஏன், அவங்களுக்கு லீவு கொடுத்திட்டு, பிள்ளையைத் தூக்கிகிட்டு வந்தா என்ன ஆயிடும் ?”
“அவன் ஃபுட்டை ரெடி பண்ணி, ஊட்டி விட்டு, டயைபர் அவிழ்த்து க்ளீன் பண்ண அங்க நா வரணுமா ? “
குழந்தையைப் பாத்துக் கொள்ளும் மரிக்கொழுந்து வந்த பின், அவளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துவிட்டு, சீக்கிரம் வந்து விட வேண்டும் என்ற உறுதிமொழியை நரேனிடம் வாங்கிக் கொண்டு நிச்சயதார்த்ததுக்குக் கிளம்பினாள்.
காணாமல் போன அம்மாவைத் தேடி அலையும் சின்னக்குழந்தைகளைப் போல கருமேகங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன. அம்மாவைக் காணாமல் பீரிட்டு அழத் தொடங்கிவிட்டன
மேகங்கள் ! அந்தக் கண்ணீர் தெருக்களையும் ரோடுகளையும் சிற்றோடைகளாக்கி விட்டிருந்தது. க்ரெட்டாவின் வைப்பர்கள் எவ்வளவு வேகமாக இயங்கியும் , அக்கண்ணிரின் சுவடுகளைத் துடைக்க முடியவில்லை.
விருந்தினர்களின் வரவு மிகவும் குறைவு. மிதமான மழை, கன மழை ஆகிவிட்டது.
வீடியோவுக்காக அவ்வப்போது மேட்டிமையாக போஸ் கொடுத்து, கேள்விகேட்டவர்களுக்குச் சிரித்தபடி பதில் சொன்னாலும் திவ்யாவின் மனதில் ப்ரதீப் தான் இருந்தான். மரிக்கொழுந்து சரியாகக் கவனித்துக் கொள்கிறாளா என்ற கவலை அவளுக்கு !
மரிக்கொழுந்து நல்லவள் . ப்ரதீப்பை நன்றாகக் கவனித்து கொள்வாள் ! அவளுடைய கணவன் வேறு ஒருத்தியுடன் வாழ்வதும் தன் ஒரே பெண் ஆறு வயது மோனிஷாவைப் பரமாரிக்க அவள் படும் அவதியும் மரிக்கொழுந்துவை சில நேரங்களில் தடுமாற வைத்துவிடும். தினமும்அவள் வேலைக்கு வருவாளா மாட்டாளா என்ற தவிப்பு திவ்யாவுக்கு
!“திவ்யா, சீர்வரிசைத் தட்டு தூக்க வாம்மா” என்று நரேனின் அத்தை அழைத்தார்.
வாசலில் இருந்து, பெண்கள் சீர்வரிசைத் தட்டுகளை ஏந்தி வர, வீடியோ காரர் காட்சியை உள்வாங்கினார். பலத்த மழையின் சப்தம் எல்லோரையும் கேமராவைப் பார்க்காமல், தெருவைப் பார்க்க வைத்தது.
காலி வாட்டர் பாட்டில்கள், கிழிந்த பந்துகள், உணவுப் பொருட்களின் உறைகள் இன்ன பிற இத்யாதி வஸ்துக்களுடன் வெள்ளமாக மழைநீர் . முன்பு இருந்ததை விட அதிக மட்டத்தில்… !
“ எப்போ முடியும் ஃபங்ஷன் ?”
“சாப்பாடு ரெடியாயிடுமா ?”
”வெதர்மேன் என்ன சொல்லி இருக்கார் பாரு ?”
“கன மழை வரலாமாம் !”
சீக்கிரம் நிச்சயதார்த்த நிகழ்விலிருந்து விடை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோ நிலையில் அனைவரும்!
திவ்யாவுக்கோ, முள் படுக்கையில் இருப்பது போல இருந்தது.
மரிக்கொழுந்துவுக்கு போன் பண்ணினாள். பதில் வரவில்லை. மீண்டும் அழைத்த போது தொடர்பே இல்லை.
தினமும் மரிக்கொழுந்து வந்தவுடன் அவள் ஷேமலாபங்களை விசாரிப்பாள் திவ்யா !
“என்ன ஒரு இண்ட்ரஸ்ட் உனக்கு ! அடுத்தவ கதை கேக்க ! அதுவும் அழுவாச்சின்னா …
அப்பப்பா” என்று கிசுகிசுத்தான் நரேன், முந்தாநாள்.
“சும்மா இருங்க ! நா என்ன பாக்கறவங்க கதையெல்லாமா கேட்டுகிட்டு இருக்கேன். வொர்க்
ஃப்ரம் ஹோம் அப்படின்னாலும், மரிக்கொழுந்து வராம ப்ரதீப்பை பாத்துக்க முடியாது ! அவ
வீட்டு நிலவரம் கேக்கறது அவ ஏதாவது லீவ் எடுத்துடுவாளான்னு தெரிஞ்சுக்கத் தான்… “
“ஓ ! எம்ப்ளாயி சிச்சுவேஷன் அப்ரைசல்… அப்டிதானுங்களே… !”
“மிஸ்டர். நரேன், பேரண்ட் ஆஃப் ப்ரதீப், இரண்டு நாளைக்கி லீவ் போட்டு பிள்ளையைப் பாத்துகுறீங்களா ?”
“தாயே, உன் திசைக்கு ஒரு கும்பிடு ! ஆளை விடும்மா”
பக்கத்தில் இருந்த உறவினர், அவளைத் தட்டி, ”ஆசிர்வாதம் பண்ணும்மா “ என்று சொல்ல அட்சதையையும் பூக்களையும் தூவி ஆசிர்வாதம் செய்தாள்.
இன்று திவ்யா, மரிக்கொழுந்துவிடம் சரியாகப் பேசவில்லை.
“நைட்டெல்லாம் எங்க சைடு மழம்மா ! வீடு ஊத்துது ! “ என்று ஏதோ சொல்ல வந்தவளை, “இரும்மா, நா வந்து பேசறேன் “ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
நிச்சயதார்த்த மண்டபம் பரபரத்தது.
“கனமழை”
“சரி, ரொம்ப பேசாத ! சார்ஜ் போயிடப் போகுது.”
“கரண்ட் இல்லியாம் நம்ம வீட்டுல ! இன்வெர்ட்டர வேஸ்ட் பண்ண வேனாம்ன்னு சொல்லியிருக்கேன்“
“ஒரு காரும் வரல்லம்மா ! மழ செமயா இருக்கு ! ஆட்டோ புடிச்சி டக்குன்னு மூவ் ஆயிடலாம்”
விருந்தினர்கள் திண்டாடினார்கள்.
மீண்டும் க்ரேட்டாவின் பயணம். முல்லையம்மன் நகரை விட்டு வெளியே வரவே முக்க வேண்டியிருந்தது. சிற்றோடைகள் நதிகளாகிவிட்டன. பேய்மழையில் ,வெள்ளநீர் குத்தாட்டம்!
சகல தெய்வங்களையும் வேண்டியபடி திவ்யாவும், ஒரு சூப்பர்மேனுக்குரிய சாகசத்துடன் நரேனும் !
மரிக்கொழுந்து போனுக்கு ரிங் போவது போல் தான் உள்ளது. ஆனால் அவள் எடுக்கவில்லை ப.க்கத்து ப்ளாட் பத்மினிக்குப் போன் போட்டாள் திவ்யா. அவளும் எடுக்கவில்லை.
நரேனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. நங்கூரம் போட்டாற்ப் போல் ,கார் நின்று கொண்டு இருந்ததால் நரேன் மெசெஜ் படித்து, பதிலும் அனுப்பினான்.
“எப்ப வீடு போய் சேருவோம்ன்னு நா ஒத்தி இங்க அழுது கிட்டு இருக்கேன். காரை நடுவீதில
நிறுத்திட்டு என்ன மெசெஜ் பாத்துட்டு இருக்கீங்க ?”
”இருடி, எங்க ப்ளஸ் டூ குருப்பில இருந்து எஸ்.ஓ.எஸ் மெசெஜ் !”
“ஹேய் ! சொல்லுடா துரை ! அது எங்க எரியா தான் ! நா போறேன் ! “ நரேன் நண்பனிடம்.
“அட்ரஸ் அனுப்பு !”
கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. பள்ளம் மேடுகளில் நிலை குலைந்து, டிவைடர்கள் கூட புலப்படாமல், ஏன், திக்குதிசை தெரியாமல் என்றே சொல்லிவிடலாம்… சாகசப் பயணம் தான்
நரேன் சற்று வேகத்தைக் கூட்டியிருந்தான்.
தன் வீட்டுப்பாதை அல்லாமல் வேறு வழியில் போகிறதோ என திவ்யா நினைத்தாள்.
சிறிது நேரம் கழித்து, வெள்ளநீர் சற்று குறைந்து காணப்பட்டப் பகுதிக்கு வந்தது க்ரெட்டா !
“ஒரு தெருவும் புரியலடா” என்றான் நரேன்.
“இது நம்ம பக்கமே இல்ல ! நீங்க கன்ஃபூஸ் ஆகி வேறெங்கோ…”…திவ்யா!
பேசாதே எனச் சைகை செய்தான் நரேன். அவன் யாருடனோ இணைப்பில்…
திவ்யா கைபேசி ஒலித்தது. பக்கத்து ப்ளாட் பத்மினி. “ ரொம்ப மழை திவ்யா ! பாத்து வாங்க !
மரிக்கொழுந்துவைப் பேசச் சொல்லுறேன்” என்று சொன்னாள்.
நரேன் காரை நிறுத்தினான்.
“என்னங்க ? எங்க இருக்கோம் ?வீட்டுக்குப் போகாம” என்று திவ்யா சொல்லும் போதே, நரேனின் போனில் ஒரு வீடியோ கால்…
“ஐயா, என் பொண்ணக் காப்பாத்துங்க ஐயா ! திருவள்ளுவர் தெருவுங்க ஐயா ! அங்கன பக்கத்தல ஒரு ரொட்டிக்கடை இருக்கும் !”
சுற்றுமுற்றும் பார்த்தான்.
மழை பெய்து கொண்டுதான் இருந்தது. கனமழை !
சட்டென ரெயின்கோட்டைப் போட்டுக்கொண்டு கீழே இறங்கினான்.
“திவ்யா, நீயும் வா! “
கேள்வி எதுவும் கேட்காமல் இறங்கினாள்.
ரொட்டிக்கடை தெரிந்தது.
“இனியா பேக்கரி, திருவள்ளுவர் தெரு !” நரேன்.
“ஆமாய்யா ! அதே தான் !”
இந்த பேரை மரிக்கொழுந்து சொல்லுவாளே …திவ்யா யோசித்தாள்.
“இந்த போன்ல அவரு என்ன சொல்லுராருன்னு கவனமாக் கேளு ! “ நரேன் தன் போனை அவளிடம் கொடுத்துவிட்டு, தெருவில் உள்ள வீடுகளைப் பார்த்தான்.
“இடது பக்கம் ஏழாவது வீடாம் ! “ திவ்யா கத்தினாள்.
துழாவிக்கொண்டே சென்றால்… அங்கே வீடே இல்லை !
நொறுங்கி விழுந்த ஓடுகளும் உடைந்து துருத்திக் கொண்டு இருக்கும் ஓடு வேயப்பட்ட மரத்துண்டுகளும்.
நரேன் வேகமாக ஓடி, இடிபாடுகளை கஷ்டப்பட்டு நகர்த்தினான்.
“அம்மா, என் புள்ள பேசிட்டே இருந்தாம்மா ! அப்பா கூரை ஆடுதுன்னா ! அரை மணியா ஒரு தகவலும் இல்ல ! மோனிஷா குட்டி !”
“திவ்யா, இங்க வா ! “ நரேன்.
இருவருமாகச் சேர்ந்து, முனகல் சத்தம் வந்த திசை பார்த்து, ஓடுகளை நகர்த்தினார்கள்.
மழையின் வேகம் மறுபடி அதிகரித்தது.
அதோ குழந்தையின் கைகள் ! தொப்பலாக நனைந்தபடி, கணவனும் மனைவியுமாக அச்சிறுமியை மெல்ல வெளியில் இழுத்தார்கள்.
மயக்கமாக இருந்தாள். உடல் முழுதும் காயங்கள் ! நெற்றியில் மிகப்பெரிய காயம் !
அருகில் ஒரு செல்போன் கிடந்தது. ப்ரதீப் அம்மாவிடம் இருந்து அழைப்புகள் வந்திருந்தது
அந்த போனில் !
நண்பர் குழு சொன்ன மருத்துவமனைக்கு க்ரெட்டாவைச் செலுத்தினான் நரேன்.
பக்கத்து ப்ளாட் பத்மினி தயவில் மரிக்கொழுந்து ப்ரதீப் சகிதமாக வீடியோவில் வர,
திவ்யாவுடன் மோனிஷா இந்தப்பக்கம்!
மரிக்கொழுந்து ப்ரதிபைக் கட்டி அணைத்து முத்தம் தந்து நன்றி சொன்னாள்.
பாராட்டிய நண்பர்களிடம் ”இது உதவி இல்ல ! கடமை” எனச் சொன்னான் நரேன்.
ஆசிரியர் குறிப்பு
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்டைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய
அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,
மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை, மூத்த குடிமக்கள் மன்றம், கலைமகள் பத்திரிக்கையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையும் பரிசு பெற்றது. கலைமகள் வெளியுட்டுள்ள சிறப்பு பதிப்பில் “யதார்த்த வாழ்வு” எனும் அச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
குவிகம் மின்னிதழ் நடத்திய “குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வு செய்யப்பட்டு, குவிகம் குறும்புதினம் இதழில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதை 2024 போட்டியில் ஆறுதல் பரிசு வென்றுள்ளார்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம்
வெளியீடாக வந்துள்ளது.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.
மின்னஞ்சல் : kamalamurali63@gmail.com

சிறப்பு.
அருமை. காணாமல் போன அம்மாவைத் தேடி அலையும் சின்னக்குழந்தைகளைப் போல கருமேகங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன. அம்மாவைக் காணாமல் பீரிட்டு அழத் தொடங்கிவிட்டன
மேகங்கள் !…..மிக சிறப்பு.