ராமசந்திரன் உஷா/கொக்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 52

சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் வீசிய கடற்காற்று முகத்தில் மோதியதும், கோபமும் எரிச்சலும் குறையத் தொடங்கியது.அருகில் இருந்த சதீஷ் கையைப் பிடித்துக்கொண்டேன்.
“ரம்யா, சாப்பிட வரலை? கேட்டுக்கொண்டே அம்மா உள்ளே இருந்து வந்தார்.
“அம்மா! சென்னைக்கு டிக்கெட்டு புக் பண்ணதும், அப்பாக்கிட்ட உங்கண்ணனுக்கு கொழந்தைங்களை காட்ட மாட்டேன். அந்த ஆளு மூஞ்சிலையே முழிக்க விருப்பமில்லைன்னு அவ்வளவு எடுத்துச் சொன்னேன். அதுக்காகத்தான் ஊருக்கு வராம, உங்களை சென்னைக்கு வரச் சொல்லிப் பார்த்துட்டு, இங்கிருந்தே அப்படியே பெங்களூருக்கு போயிடலாம்ன்னு பிளான் பண்ணினா, அப்ப சரி சரின்னுட்டு, இப்ப ஊருக்கு வரச்சொல்லி எரிச்சலைப்படுத்துகிறாரு”
“நா எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். பேரன் பேத்தி மாப்பிள்ளை பொண்ணு எல்லாரையும் அவரு அண்ணனுக்குக் காட்டி ஆசிர்வாதம் வாங்கணுமாம்”
சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடலாம்ன்னு பார்க்கிறேன் என்றதும், நல்ல ஐடியா என்றார் எரிச்சலுடன்.
உள்ளே இருந்து அப்பா, அம்மாவை அழைப்பது கேட்டது.
சதீஷ் ஆதரவுடன், “நாம நாளைக்கே பெங்களூர் கிளம்பிடுவோம்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது, உள்ளே இருந்து அம்மா வேகமாய் வந்தார்.
“ஊர்ல இருந்து போன் வந்துச்சாம். அந்தாளுக்கு ஹார்ட் அட்டாக்காம். காஞ்சிபுரம் ஆஸ்பத்தில சேர்த்து இருக்காங்களாம். காலைல நாம எல்லாரும் அவரைப் பார்க்க போகணும், வண்டிக்குச் சொல்ல சொல்லிட்டு படுத்துட்டாரு ரம்யா! ” என்று அம்மா சொன்னதும், மிக மெல்லிய குரலில் “ நீங்க சொன்னா மாதிரி, காலைல சைலண்டா,பெங்களுருக்கு போயிடரோம்” என்றேன்.
“சதீஷ், எங்க வீட்டு கதை உனக்கு முழுக்க தெரியாது இல்லே? பெரியப்பாவுக்கு, எங்கப்பா, சொன்னதை செய்யும் அடிமை. எங்க ரெண்டு பேரையும் புழு பூச்சிய பார்க்கிறா மாதிரி பார்வையிலேயே ஒரு அலட்சியம்.
அவரோட ஓரே பொண்ணு பொற்கொடி. அவ என்னை விட எட்டு வயசு வயது பெரியவ, பெரியம்மாவும் அவளும், எங்களை அதிகம் கண்டுக்க மாட்டாங்க.
சின்ன வயசிலேயே பேரெண்ட்ஸ் போயிட்டதாலே, எங்கப்பாவுக்கு அவரு அண்ணந்தான் எல்லாம். சின்ன ஓட்டு வீடு, பக்கத்துல கொஞ்சம் நெலம். அவ்வளவுதான் சொத்து. படிப்பு பெருசா ஒன்னுமில்லே. ஆனா அந்தாளு பெரிய கில்லாடி. புரோக்கர் வேலைன்னு நல்லா காசு சொத்து சேர்த்துட்டாரு.
எங்கப்பாவுக்கு ஐக்யூ கொஞ்சம் கம்மி போதாதற்கு திக்குவாய் வேற, ஏதாவது கேட்டா பதில் சொல்லவே ரெண்டு நிமிஷம் ஆகும்.
அம்மாவை சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு கட்டி வெச்சிட்டாங்க. அந்தாளு, எங்கப்பாவை மரியாதை இல்லாமல் நடத்துவது பார்த்து கேட்க போக, பக்கத்துலையே தனிக்குடித்தனம் வெச்சிட்டாங்க.
அம்மா, அவங்கக்கிட்ட இருந்த நகைகளை வித்து மாடு வாங்கி பால் வியாபாரம், வீட்டு திண்ணையில சின்னதா பலசரக்கு கடைன்னு எதுக்கும் அவங்க கையை எதிர்ப்பார்க்காம வாழ ஆரம்பிச்சாங்க.
எங்கப்பா வழக்கப்படி அவருக்கு சேவகம் செஞ்சிக்கிட்டுத்தான் இருந்தாரு. ஆனா ஒன்னு, அம்மாவோட வைராக்கியம் புரிஞ்சி எதுலையும் தலையிடலை.
ஒரு இன்சிடெண்ட், சாகும்வரை என்னால் மறக்க முடியாது. ஊர்ல ஒரு கல்யாணம். நான் அப்ப நைன்த் ஸ்டாண்ட்டு படிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த பக்கம் போன என்னை நிறுத்தி, என் தம்பி பெத்தது. எப்படி தேவாங்கு மாதிரி இருக்கு பார்த்தீங்களா? படிப்பும் ஒன்னும் சொல்லுகிறா மாதிரி இல்லே, எம் பொண்ணு பொற்கொடி பிளஸ் டூல ஸ்டேட் ரேங்கு. அண்ணா யூனிவர்சிட்டிலேயே சீட்டு கிடைச்சுது. அவ்வளவு தூரம் அனுப்ப முடியாதுன்னு, இங்கே காஞ்சி புரத்துல பி.ஈ கம்யூட்டர் படிப்பு சேர்த்து விட்டேன். நெறம், அளகுல நம்ம சாதிசனத்துல எம் பொண்ணுக்கு ஈடு ஆரு? என்று பெருமையுடன் சொன்னவர், நாளைக்கு இது இருக்கிற அழகுக்கு, கட்டிக்கொடுக்க கூட எந் தம்பி என் கிட்டத்தான் வந்து தலையை சொறிஞ்சிக்கிட்டு நிக்கப் போறான், அதுக்கும் நான் தான் தண்டம் அழணும்ன்னு சொல்லி சிரிச்சார்.
அந்த வக்கிர பேச்சுக் கேட்டு அப்படியே தலை குனிஞ்சிக்கிட்டு நின்னேன் அவரோட சேர்ந்து மத்தவங்களும் சிரிக்கிற சத்தம் கேட்டது.
ஆனா, அந்த நக்கல் பேச்சு எனக்கு ஒரு இன்ஸ்பிரெஷனாய் ஆச்சு. படிப்புத்தான் நம்மை உயர்த்தும்ன்னு புரிஞ்சிது. படிப்புல கான்சன்ரேட் செய்ய ஆரம்பிச்சேன். டென்த்ல நல்ல மார்க். பிளஸ்டூல ஸ்கூல் பர்ஸ்ட். ஈசியா பி.ஈ சீட் கிடைச்சிது.
இந்த இன்சிடெண்ட்டுக்கு அடுத்த மாசம் பெரியம்மாவோட அப்பா காலமாயிட்டாருன்னு மதுரைக்கு கிளம்பினாங்க. பொற்கொடி. லாஸ்ட் செமஸ்டர் நிறைய படிக்க இருக்குன்னு பிடிவாதமாய் அவங்கக்கூட போக மாட்டேனுட்டா. அப்பாக்கிட்டபொற்கொடியைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ள சொல்லிட்டு, ரெண்டே நாள்ல திரும்பி வந்துடரேன்னு சொல்லிட்டுப் போனார்.
அவ,படிக்க நிறைய இருக்கு, வீட்டுலேயே இருந்துக்கிறதாகவும் நைட்டு துணைக்கு அவங்க வீட்டுல துணி தோய்க்கும் லேடி வந்துடும்ன்னு சொல்லிட்டா.
“நல்லா திட்டம் போட்டு இல்லே அந்த ராசாத்திய துணைக்கு கூப்பிட்டு இருக்கு? ” அம்மா ஆற்றாமையுடன் புலம்பினார்.
“ இருங்கம்மா! இப்படி சொன்னா சதீஷ்க்கு புரியாது. மறுநாள் ரஜினி படம், மாட்னி ஷோ பார்க்கணும்ன்னு பொற்க்கொடி என்னையும் கூட்டிக்கிட்டு போனா. அப்பா தியேட்டர் வாசல் வரைக்கும்கொண்டு விட்டு, படம் முடியும் வரை அங்கேயே இருந்து எங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தார்.
அன்னைக்கு தியேட்டரில் நடந்ததை நினைத்து பயந்துப் போயிருந்த நான், அம்மாவிடம் தயங்கி சொல்ல ஆரம்பித்தேன்.
கனகராஜ், எங்க ஸ்கூல்ல , பொற்கொடிக்கு ஒரு வருஷம் சீனியர். இன்னைக்கு காலைலதான் அண்ணா யூனிவர்ச்சிட்டில கோல்ட் மெடல் வாங்கி பி டெக் பாஸ் செஞ்சதை, பிரேயர்ல எங்க ஹெச் எம் சொன்னாரு. கொஞ்ச நாள்ல மேலே படிக்க அமெரிக்கா போக போறாரு. நீங்களும் இந்த மாதிரி ஸ்கூலுக்கு பேர் வாங்கி தரணும்ன்னு சொன்னாரு. இன்னைக்கு அவனும் எங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தான். அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுராங்கன்னு சொன்னதும், அம்மா வாயை மூடுன்னு என்னை அதட்டினாங்க.
படம் பார்க்கும்பொழுது, அவங்க ரெண்டு பேரும் கிஸ் பண்ணியதை சொல்லியே விட்டேன்.
அந்த கனகராஜ், வீட்டுல துணி தோய்க்க வரும் ராசாத்தியோட மகன்னதும், அம்மா பயந்துப்போய்ட்டாங்க.
என்னை இழுத்துப்போய், சாமிப் படத்துக்கு முன்னால நிக்க வெச்சி. இதை யாருக்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டாங்க.
நாம என்ன சொன்னாலும் உங்க பெரியப்பனுக்கு கோபம் நம்ம மேலேத்தான் திரும்பும். அவங்க பொண்ணு, அவுங்க பாடு. நாம ஏதாவது சொல்லப் போக பிரச்சனை நமக்குத்தான் என்று அம்மா சொன்னதின் உண்மை புரிந்து நான் யாரிடமும் அதைப்பத்தி சொல்லலை”
“ உன் பேச்சை எல்லாம் நம்பி நான் எப்படி அவங்கக்கிட்ட சொல்ல முடியும்?” அம்மா வருத்தமாய் சொன்னதிலும் உண்மை இருந்தது.
“சரியாய் பைனல் செமஸ்டர் எக்சாம் முடிஞ்சி ரிசல்ட் வந்த பிறகு, காலேஜ் டூர்ன்னு போனவ திரும்பி வரவே இல்லை. அவக்கிட்ட இருந்து லெட்டர் மட்டும் வந்தது.
பெரிய ஷாக் எங்க பெரியப்பாவுக்கு. பாவம் பெரியம்மா! பொண்ண சரியா வளக்கலேன்னு அவங்களுக்கு அடி உதை திட்டு”
“அந்த ராஜாத்தி இனி துணி எடுக்க வரமாட்டேன். மகன் படிச்சி முடிச்சிட்டான். சென்னைக்கு போறேன்ன்னு கிளம்பிப் போகும்பொழுதே எனக்கு லேசாய் சந்தேகமா இருந்துச்சு” அம்மா சோகமாய் கேட்டார்.
அவுரு , மகளையும் தேடிக்கொண்டு இருந்தப்பொழுது பெரியம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. பெரியப்பா இருக்கும் இடமே தெரியவில்லை. அப்ப செல்போன் எல்லாம் எங்க ஊர்ல யாருக்கிட்டையும் இல்லே. ஊர் பஞ்சாயித்து முடிவுப்படி அப்பாதான் எல்லாம் செஞ்சாரு.
சரியாய் கிரிமினேஷன் முடிஞ்சி வீட்டு வாசலில் கால் கழுவும் பொழுது பெரியப்பா காரில் இருந்து இறங்கினார். விஷயத்தை சொன்னதும், அப்படியே உட்கார்ந்து விட்டார். பிபி அதிகமாகி ஸ்ட்ரோக்!
அவர் நிலையைப் பார்த்து, பெரியம்மாவோட பேமிலி, கிராமத்தில் வசதி போதாதுன்னு ட்ரீட்மெண்டுக்கு பெரியப்பாவை மதுரைக்கு அழைச்சிக்கிட்டு போயிட்டாங்க.
நான் டென்த், பிளஸ் டூ முடிச்சி சென்னை அண்ணா யூனிவர்ச்சிட்டில பீ.ஈ சேர்ந்ததும், மூணு வருஷம் கழிச்சி பெரியப்பா, கொஞ்சம் சரியாகி மீண்டும் கிராமத்துக்கு வந்தாரு.
என்னோட மார்க், படிப்பு எல்லாம் தெரிஞ்சி அவருக்கு பெரிய ஷாக்.
படிச்சி முடிச்சி, பெங்களூரில் வேலைக்கு சேர்ந்து ரெண்டாவது வருஷமே, நீ பிரப்போஸ் செஞ்சதும், அம்மாக்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அம்மா, விஷயத்தை சொல்லாம, அப்பாவையும் அழைச்சிக்கிட்டு பெங்களூருக்கு வந்து எல்லாம் பேசி முடிச்சாங்க.
எக்கேஜ்மெண்ட் டேட் பிக்ஸ் செஞ்சிட்டு, அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போய் அந்தாள்கிட்ட சொல்லியிருக்காங்க. அவர கேக்காம எல்லா அரேஜ்மெண்டும் செஞ்சாச்சுன்னு தெரிஞ்சி அவரால தாங்க முடியலை. நிச்சயத்துக்கு வந்தவருக்கு, உங்களை எல்லாம் பார்த்து அவ்வளவு ஜெலஸ். ஒரு வார்த்தை ஒருத்தரோட பேசலை.
கல்யாணத்தப்போ , ஒடம்பு முடியலை, வர செளகரிப்படலைன்னு சொல்லிட்டார்.
சதீஷ், நாம லண்டன் போவதற்கு முன்னாடி நா கிராமத்துக்குப் போயிருந்தேனே, அப்ப அப்பா என்னை பக்கத்து வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனார். அவர் என்னை அன்னைக்குப் பார்த்த பார்வை என்னால மறக்கவே முடியாது. என் இடத்தில் தன் மகளை நினைத்து வருத்தமும், எனக்கு வந்த வாழ்வை நினைத்து வந்த வெறுப்பைக்காட்டிய பிறகு வழக்கமான நக்கல் பார்வை. அன்னைக்கே முடிவெடுத்தேன், இனி அந்தாளு முகத்திலேயே முழிக்கக்கூடாதுன்னு. இப்ப நம்ம குழந்தைங்களை அந்த ஆளுக்கு காட்டி ஆசிர்வாதம் வாங்கணும்ன்னு அப்பா சொல்லும்பொழுது எனக்கு எரிச்சல்தான் வருது.
அப்பா உள்ளே இருந்து கத்துவது கேட்டது.
எங்களைப் பார்த்ததும், “எங்கண்ணன் போயிட்டாரு. பாப்பா, காரு சொல்லிடு, இப்பவே கிளம்பரோம் என்றார்.
இனம் தெரியாத நிம்மதியுடன், அப்பா, சதீஷ் நைட் டிராவல் வேணாம்ன்னு சொல்லுவார். நாம் விடிஞ்சதும் கெளம்பிடலாம் என்றேன்.
நீங்க பெங்களூர் கிளம்புங்க. நானும் அம்மாவும் பார்த்துக்கிறோம் என்றார்.
இல்லப்பா, நீங்க சொன்னா மாதிரி, கடைசியா நாங்களும் அவரைப்பார்த்துடரோம் என்றதும், பாப்பா, இப்ப இன்னாத்துக்கு நீங்க அல்லாரும் அங்க வரணும்? அதுதான் போய் சேர்ந்துட்டாரே, வண்டி சொல்லு நேரமாகுது இல்லே என்று சொல்லிக்கொண்டே போனார்.
“ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்தே ஆவணும்ன்னு சொன்னாரு, இப்ப வேணாங்கிறாரு” அம்மா குழப்பத்துடன் பார்க்க, சதீஷ் , ஆண்டி, இன்னுமா புரியலே? என்றுச் சொல்லிக்கொண்டே, என்னைப் பார்த்து சிரித்தான்.
நானும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க ஆரம்பிக்க, “ஆஹா நா ஒங்கப்பனை என்னமோன்னு இல்லே நினைச்சேன்” என்று பிரமிப்புடன் கண்களை விரிய , முகம் முழுக்க சிரிப்புடன் மெல்ல கத்தினார் அம்மா.

ஆசிரியர் குறிப்பு

Age : 63
என்னுடைய சிறுகதைகள் ஆனந்த விகடன், கணையாழி, குங்குமம், கலைமகள், அமுதசுரபி, கல்கி மற்றும் பல இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் வெளியாகியுள்ளன. சில பரிசுகளும் வாங்கியுள்ளேன்.
கலைமகள் நடத்திய கி.வா ஜெகன்னாதன் நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் நான் எழுதிய கரை தேடும் ஓடங்கள் என்ற நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அது இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது.
வாசிப்பதிலும், ஊர் சுற்றுவதிலும் மிகுந்த ஆர்வம். மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் பல செடிகள் வளர்த்து வருகிறேன்

லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு – விருட்சம் நாளிதழ்

One Comment on “ராமசந்திரன் உஷா/கொக்கு”

Comments are closed.