மஞ்சுளா சுவாமிநாதன்/ரகசிய ஆசை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 53

“ கீர்த்தி! என்னம்மா இது? காலை 9 மணி ஆகுது… இன்னுமா தூங்கிட்டு இருக்க?” என்று படுக்கை அறையில் தரையில் படுத்திருந்த கீர்த்தியைப் பார்த்து அவளை எழுப்பியபடியே தனது புடவையை கட்டத் தொடங்கினாள் அவளது அம்மா. சோம்பலுடன் அம்மாவைப் பார்த்தாள் கீர்த்தி! அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா காலை வீட்டு வேலைகளை அறக்கப் பறக்க செய்துவிட்டு, புடவையை குத்துமதிப்பாக சுற்றிக்கொண்டு தனது அலுவலகத்திற்குக் கிளம்பிவிடுவாள். ஒவ்வொரு சமயம் அம்மா அவசரமாக பஸ் ஸ்டாப்பிற்கு ஓடுவதைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாக இருக்கும்.
இருந்தும், பள்ளியில் புது ஃபேஷன் டிரெண்ட் என்ன? எந்த பையனும் எந்த பொண்ணும் லவ் பண்ணறாங்க? சீனியர் பாய்ஸுடன் ஜூனியர் கேர்ள்ஸ், ஏதாவது லவ் கிசு கிசு உண்டா? நிர்மலா டீச்சர் மூணாவது முறை பிரெக்னன்ட் ஆயிட்டாங்களா? கவிதா மிஸ்ஸுக்கு நாற்பது வயசுலயாவது கல்யாணம் நடக்குமா? சுரேஷ் சார் தோச்ச சட்டை போட்டாரா? இல்ல அழுக்கு சட்டைதானா? பொண்ணுங்க மத்தியில பேமஸ்ஸா இருக்குற ரகு சார் லவ்வர் யாரு? போன்ற முக்கியமான கவலைகளுக்கு நடுவில் தேர்வுகள், டியூஷன், மதிப்பெண் போன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கே அவளுக்கு சரியாக இருந்தது. இப்போது பொதுத் தேர்வு முடிந்த நிலையில் ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
அம்மா, அப்பா இருவரும் ஆபீஸ் சென்றவுடன் கொண்டாட்டம் தான் அவளுக்கு. பொறுமையாக தூங்கி எழுந்து தொலைக்காட்சி பார்ப்பது, தோழிகளுடன் தொலைபேசியில் அரட்டை அடிப்பது, காதல் கதைகள் படிப்பது என்று ரம்யமாக அவளது விடுமுறை நாட்கள் சென்று கொண்டிருந்தன.
பக்கத்து வீட்டு சீதா பாட்டியின் பேத்தி பூஜாவும் கோடை விடுமுறைக்கு விஜயம் செய்திருந்தாள். வருடா வருடம் விடுமுறைக்கு வரும் பூஜாவும் கீர்த்தியும் ஜிகிரி தோஸ்துகள். இதில் முதலாம் ஆண்டு கல்லூரி செல்லும் மாடி போர்ஷன் ராமும் இவர்களோடு சேர்ந்தால் நாள் முழுக்கக் கூச்சலும் கும்மாளமும்தான்.
“ஏண்டி உனக்கு செக்ஸ்ன்னா என்னானு தெரியுமா?” என்று ரகசியமாக ஆரம்பித்தாள் பூஜா.
“அச்சச்சோ எதுக்கு இப்போ அதப்பத்தி பேசற?” என்று பதறினாள் கீர்த்தி.
“சீ ரொம்ப சீன போடாத! இங்கிலீஷ் புக் எல்லாம் படிக்கற… உனக்கு தெரியாதா? ஸ்கூல்லயே தான் ரீபுரொடக்ஷன் பத்தி சொல்லித்தராங்கல்ல?”
“போ டீ… ஏதோ ஓவரி, யூடெரஸ், எக், ஸ்பர்ம், டெஸ்டிகிள்ஸ், ஃபர்டிலைசேஷன் என்று வார்த்தைகள் மட்டும்தான் தெரியும்… இதுல பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்சுக்கு தனியாதான் கிளாஸ் நடத்தினாங்க… இங்கிலீஷ் புக்ல கூட மறைமுகமா ஃபர்ஸ்ட் பேஸ், காரஸ்டு, மேட் லவ்ன்னு தான் எழுதுவாங்க … ரொம்ப புரியாது …”
“சரியான மக்கு! உனக்கு தெரிஞ்சுக்கணும்னு ஆசை இல்லையா?”
“ இருக்கு… ஆனா, பயமாவும் இருக்கு… தெரிஞ்சா சுவாரசியம் போயிடுமோ… இன்னோசென்ஸ் போய்டுமோன்னு ஒரு பயம்…”
“ பைத்தியம்… இப்பவே நீ குழந்தை கிடையாது. நம்ம டீன் ஏஜ்ல இருக்கோம். இப்போ தெரிஞ்சுக்காம எப்போ தெரிஞ்சிக்க போறியாம்?” என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்த பூஜா ஒரு மணி நேரத்திற்கு நீட்டி முழக்கினாள்.
“பூஜா, இந்த ப்ளூ ஃபிலிம்னு சொல்றாங்களே அத பார்த்திருக்கியா?
“அட போ கீர்த்தி… எனக்கு எங்க அதுக்கெல்லாம் சான்ஸ்? ஸ்டார் மூவீஸ்ல கிஸ்ஸிங் காட்சிய கூட கட் பண்ணிடறாங்க. மில்ஸ் அன்டு பூன்ஸ் படிச்சு தான் மனசை தேத்திக்கறேன்! ”
“சரி, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், நம்ம அம்மா அப்பா கூட செக்ஸ் வச்சுக்கிட்டுதான் நம்ம பொறந்தோமா?” என்று ரகசியமாக கேட்டாள் கீர்த்தி.
“அதுல என்ன சந்தேகம் உனக்கு?”
“அய்யோ!” என்று கண்களை மூடிக்கொண்டாள் கீர்த்தி. “அவங்க அநாவசியமா பேசிக்க கூட மாட்டாங்க… அப்போ எப்படி?” என்று உரக்க யோசித்தாள் அவள்.
“அது தெரியணுமுன்னா அவங்க பெட்ரூம தான் எட்டிப் பார்க்கணும்,” என்றாள் பூஜா தீர்மானமாக.
“நான் அவங்க பெட்ரூம்ல தானே படுக்கறேன்,” என்ற கீர்த்தியும், பூஜாவும் ரகசியமாக சிரித்துக்கொண்டார்கள்.
“ப !” என்று இவர்கள் மந்திர ஆலோசனையை சத்தம் போட்டு கலைத்தான் ராம். “என்னாங்கடீ ரகசியம்?”
“அதெல்லாம் சொல்ல முடியாது… ஆமா, உன்ன என்ன காலைல இருந்து ஆளைக் காணோம்?” என்றாள் மிடுக்காக பூஜா.
“எனக்கு நீங்க மட்டும் தான் பிரெண்ட்ஸா? கிரிக்கெட் விளையாடப் போயிருந்தேன்!”
“அதான் ஒன்பது மணிக்கே விளையாடிட்டு வந்துட்டியே … நா பார்த்தேன்” என்றாள் கீர்த்தி.
“சரி, நா சொல்றேன் … ஆனா, யார் கிட்டயும் சொல்லக் கூடாது,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தான் ராம்.
“சொல்லுடா!” என்று மற்ற இருவரும் ஆவலானார்கள்.
“ என் ப்ரெண்ட் கணேஷ் வீட்ல பலான படம் பார்த்தோம்,” என்று சிறிது நேரம் பிகு செய்துவிட்டு சொன்னான்.
“அடப்பாவி!” என்று வாயில் கை வைத்தாள் கீர்த்தி.
“டேய் எங்களுக்கும் வாங்கித் தருவியா?” என்று ஆவலானாள் பூஜா.
“நீங்க சின்ன பொண்ணுங்க, நா வாங்கித்தர மாட்டேன்பா,” என்று சீனப்
போட்டான் ராம். பின் இருவரின் கெஞ்சல்களுக்கு இசைந்தான்.
“எனக்கு பயமா இருக்கு பூஜா, அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். இதெல்லாம் தப்பு…” என்றாள் கீர்த்தி
“போ டீ பயந்தாங்கோலி, இப்போ பார்க்காட்டி எப்போ பார்ப்பியாம்?” என்று அவர்கள் ஆசைக்கு தூபம் போட்டாள் பூஜா.
“கல்யாணத்துக்கு அப்பறம்… அப்போ யாரும் நம்மள கேட்க மாட்டாங்க”
“ஸ்டுபிட் மாதிரி பேசாத, அப்போ பார்த்தா என்ன? பார்க்காட்டி என்ன? லைஃப்ல ஒரு திரில் வேணாமா?”
“இத பத்தி பேசறதே திரில்லிங்கா தான் இருக்கு”
“இவ இன்னும் 80’ஸ்லயே இருக்கா. குரோ அப் கீர்த்தி! 2kவே வந்துடுச்சு … இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்க?”
“அப்போ பூஜா, உங்க வீட்ல பார்க்கலாம். எனக்கு பயமா இருக்கு. அதோட பாட்டி வீட்ல இருக்கும் போது உங்க வீட்டு கம்ப்யூட்டர்ல பார்த்தா சந்தேகம் வராது,” என்று கீர்த்தி கூறினாள்.
“ஆல்ரைட் … எங்க வீட்ல பார்க்கலாம். பாட்டி மத்தியானம் தூங்கும் போது ஹிந்தி படம் பார்க்கறோம்னு சொல்லிட்டு பார்க்கலாம். ராம் எங்களுக்கு ஒரு ஹிந்தி படம், ஷாரூக் கான் படம் ஒண்ணும் எக்ஸ்ட்ரா வாங்கிக் கொடு டா … இந்தா பணம். அப்புறம் நாங்க மட்டும் பார்க்கறோம், நீ வேணாம் ராம் …” என்று திட்டங்கள் தீட்டினாள் பூஜா.
“திட்டம் எல்லாம் பலமா இருக்கு? உனக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் போலியே… சரி, உங்க வழிக்கே நா வரல , சிடி கொடுத்துட்டு நான் எஸ்கேப் . ஆனா, நினைவில இருக்கட்டும், என்ன மாட்டிவிடக் கூடாது!” என்ற ராம் நகர்ந்தான்.
மறுநாள் காலை சிடியை ஒப்புதல்படி கீர்த்தியிடம் கொடுத்தான் ராம். கீர்த்தியும் அந்த விளம்பரமில்லா சிடியை பூஜாவிடம் இருந்து அழைப்பு வரும்வரை பத்திரமாகக் காத்தாள்.
மதியம் 2 மணியளவில் “பாட்டி தூங்கிட்டாங்க, வா கீர்த்தி,” என்று மெல்லமாக அழைத்தாள் பூஜா.
“இந்த மானிட்டர் எல்லாம் இன்னும் வெச்சு இருக்காங்களா?” என்று அந்த ஹைதர் அலி கால கணினியைப் பார்த்து சிரித்தபடி சிடியை நீட்டினாள் கீர்த்தி.
“இதுல தான் நம்ம பார்க்கப்போறோம் தெரிஞ்சுக்கோ. கதவு, ஜன்னல் எல்லாம் சாத்திடறேன். இருட்டுல பார்த்தா செம்ம ஃபன்னா இருக்கும்,” என்று படத்தைப் போட்டாள் பூஜா.
சாதாரண திரைப்படம் மாதிரி கதை ஆரம்பமானது. கணவன் ஆபீஸ் போன பிறகு வீட்டிற்கு வருகிறான் கள்ளக் காதலன். ஏதோ சர்வீஸ் செய்ய வந்தவன் போல வந்தவன் திடீரென மனைவியை முத்தமிடத் துவங்குகிறான்… கீர்த்திக்கும் பூஜாவிற்கும் வியர்த்துப் போனது. காட்சி இப்போது படுக்கை அறைக்கு நகர்கிறது… பட்….என்று ஒரு சத்தம்… பதறிப்போய் இருவரும் பார்க்க, பவர் கட் ஆகி இருந்தது.
“அடச்சே… இப்போ போய் பவர் கட் ஆகணுமா?” என்று கடுப்பானாள் கீர்த்தி.
“சரி, இன்னும் கொஞ்சம் பார்க்கலாம், அதான் யூ பி எஸ் இருக்குல்ல?” என்றாள் பூஜா.
பீப் … பீப்… பீப்… என்று சத்தம் போடத் துவங்கியது யூ பி எஸ். இரண்டு காட்சிகள் கூட நகரவில்லை, பட்!… பட்!… பட்!… என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
“பாட்டி என்ன வேணும்?” என்று பூஜா உள்ளிருந்தபடி கேட்டாள்.
“கரண்டு போயிடுச்சு, ரெண்டு பேரும் இருட்டுல உள்ள என்ன பண்ணுறீங்க? யூ பி எஸ் வேற கத்துது? தெறங்க கதவ!” என்றாள் சீதா பாட்டி.
“ஷட் டவுன் பண்ண முடியல, சிடி மாட்டிக்கிச்சு…” என்று ஒரு காதல் காட்சியில் உறைந்து போய் நின்ற மானிட்டரைப் பார்த்து பதறினாள கீர்த்தி.
பட்!… பட்!… பட்!… என மீண்டும் பலமாக பாட்டி கதவைத் தட்டினார்.
பீப் … பீப்… பீப்… என்று யூ பி எஸ் சத்தம் வேறு மறுபுறம் வந்தது. செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனார்கள் இருவரும். பூஜா சமயோசிதமாக சிந்தித்து டேபிள் மீது இருந்த பாட்டியின் புடைவையை எடுத்து மானிட்டரை போர்த்தி கதவைத் திறந்தாள்.
“அப்பா! கத்திரி வெய்யில்ல எப்படி வியர்த்திருக்கு ரெண்டு பேருக்கும்… படுபாவிங்க கரண்ட கட் பண்ணி தொலச்சிட்டாங்க…ஒரு நிமிஷம் ஃபேன் இல்லாத இருக்க முடியுதா?” என்று புலம்பிய பாட்டி தனது புடவைத் தலைப்பால் இருவர் முகத்தையும் துடைத்து விட்டார்.
அப்போது ஆபத்பாந்தவன் போல கரண்ட் வர, இரு தோழிகளும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.
“என்னடீ… என் புதுப் புடவைய எடுத்து கம்ப்யூட்டர மூடியிருக்க?” என்ற பாட்டி இருவரும் தடுக்கும் முன் சடாரென புடவையை எடுக்க, பாட்டி கண்ணில் அந்த காட்சி தென்பட, இருவரும் பயத்தில் அசைவற்றுப் போனார்கள். அடுத்த நொடி அந்தப் படம் மறைந்து கணினி மூடத் துவங்கியது. இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்த பாட்டி, “ஒரு செகண்ட் நா புடைவைய லேட்டா எடுத்து இருந்தா ரெண்டு பேரும் தப்பிச்சு இருப்பீங்க இல்ல? இனிமேல் மொதல்ல பிளக்க புடுங்கிடுங்க,” என்று கூறி விஷமமாக சிரித்துவிட்டு நகர்ந்தார்.

ஆசிரியர் குறிப்பு

வயது 38, பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். அடையாரிலிருந்து வெளிவரும் Adyar Times என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பிறகு மங்கையர் மலர் மின்னிதழில் துணை ஆசிரியராக பணியாற்றி, தமிழிலும் நேர்காணல்கள், கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார்.
‘இலக்கியபீடம்’ மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசும், பிரபா ராஜன் நினைவு சிறுகதை போட்டியில் முதல் பரிசும் வென்றுள்ளார். குவிகம் இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் சிறப்புப் பரிசும், கலைமகள் மாத இதழ் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் பரிசும் வென்றுள்ளார்.
பல தமிழ் மாதாந்திர இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் இவரது கதைகள் பிரசுரம் ஆகியுள்ளன.
இவரது முதல் சிறுகதை தொகுப்பு “தேசம் தான் பெரிது” 2024 இல் வெளிவந்துள்ளது

ராமசந்திரன் உஷா/கொக்கு – விருட்சம் நாளிதழ்