
ஊன்றப்பட்ட முதல் விதை…
இந்தப் பிரபஞ்சத்தின் புரியாத புதிர் என்பது மரணம்தான். எத்தனை தூரம் யோசித்தாலும் மரணம் பற்றிய கேள்விகளும் பதில்களும் ஒருவரைத் திருப்திபடுத்துவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன என்கிற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் அளிக்க முடிபவர்களால் கூட, மரணம் என்று வரும்போது யூகமாகத்தான் சுட்டிக் காட்ட முடிகின்றது. ஞானிகள் மட்டுமே அதற்கான பதில்களை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது உணர்ந்தவாறு உணர்த்துகின்றனர். சொற்கள் மூலமாக சொல்லிக் கொண்டே இருக்கும்போது அதை அப்படியே அனுபூதி மண்டலத்திற்குள்ளும் மெதுவாகச் செலுத்துகின்றனர். அப்படித்தான் கபாடியா பாபா ராம்சுரத்குன்வர் எனும் அந்த இளைஞனை ஊடுருவினார்.
ஹோ…. என்று கங்கை பாய்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. கரையைத் தாண்டி சற்று தூரத்தில் ஒற்றைக் குடிலுக்குள் கபாடியா பாபா சிறு விளக்கு வெளிச்சத்தின் முன்பு அமர்ந்திருந்தார்.
கலங்கிய கண்களோடும் தேடலோடும் அமர்ந்திருந்த ராம்சுரத்குன்வரை அருகே அழைத்தார்.
‘‘இன்னொரு முறை உன் கேள்வியைக் கேளப்பா’’ கபாடியா கேட்டுவிட்டு கண் மூடிக்கொண்டார்.
‘‘மரணம் என்றால் என்ன பாபாஜி’’
‘‘நீ பிறந்திருக்கிறாயா... சுரத்.’’
‘‘ஆமாம்... பாபாஜி’’
‘‘நீ பிறந்தால் இறப்பாயப்பா’’
‘‘நான் பிறந்தால் இறப்பேனா.’’
‘‘ஆமாம். இப்போது பார்த்தாயே. அந்த சிட்டுக்குருவி பிறந்தது. இறந்தது. ஆனால், இறந்தது என்பதை எப்படியப்பா சொல்கிறீர்கள். அந்தச் சரீரம் விழுந்ததை வைத்துத்தானே. அந்தச் உடலுக்குள் என்ன இருந்தது எப்படிப் போயிற்று. ஏன் போயிற்று.’’
‘‘ஏதோ ஒன்று இயக்கிக்கொண்டிருந்தது. உடல் தன் இயக்கத்தை நடத்த முடியாதபோது விழுந்துவிடுகின்றது. ‘‘சுரத் கூர்மையாக பார்த்து, தான் சரியாகச் சொல்கிறோமா என்றபடி தயங்கிக் கேட்டார்.
‘‘ஆஹா… ஆஹா… அப்போது உடல் தான் இயங்கமுடியாதபோது விழுந்துவிடுகின்றது. உடல் வளர்ச்சியடையும்போது மாறும் கணந்தோறும் இயக்கமும் மெல்ல நின்றுபோகின்றது. அப்போது உடல் விழுவதை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஏன் அப்படி... ’’
‘‘புரிவதுபோல் உள்ளது பாபாஜி. ஆனால்…’’
‘‘நேரடியாகப் பார்க்கிறாயப்பா. உடல் விழுந்துவிடுகின்றது. அதுவரை உடலைப் பிடித்துக்கொண்டிருந்த ஒன்று அந்த உடலின் வழியாகச் செயல்பட முடியாமல் அப்படி நின்றுபோகின்றது. இவ்வளவுதான் நாம் அறிந்த மரணம். ஒருவரின் இயக்கம் நின்று போகின்றபோது மரணம் என்கிறோம். இல்லையாஞ் அப்போது நாம் இந்த சரீரம் என்று நினைப்பதால் இந்த சரீரமே நான் என நினைப்பதால், இந்தச் சரீரமே என் எல்லை என உன் மனம் சொல்வதால், நீ சரீரமாக இருந்து இன்னொருவரையும் சரீரமாகப் பார்ப்பதால் அந்தச் சரீரம் விழும்போது நீயே அவர் இறந்து போய்விட்டார் என்று சொல்கிறாய். இதைத்தான் மரணம் என்கிறாய்.’’
‘‘ஆமாம்… என்னை நானே சரீரமாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன். அதனால் அது விழும்போது மரணம் அடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் இப்படி பாபாஜி…’’
‘‘வா… கொஞ்சம் தூரம் நடக்கலாம்’’ என்று பாபாஜி மெல்லிய இருளில் கைகளில் வைத்துக்கொண்டிருந்த விளக்கோடு கங்கைக்கு அருகேயுள்ள பெரும் பாறையில் அமர்ந்தார். பாறையின் மீது விளக்கு வைத்தவுடன் அருகேயுள்ள நீரோட்டத்தில் விளக்கின் ஜோதி பரவி அந்த இடமே தாமிரப் பாளமாக ஜொலித்தது.
பாறைக்கு அருகேயுள்ள சிறு பாறையில் சுரத்குன்வர் அமர்ந்தார்.
‘‘ஏன் இப்போது இடம் மாற்றினேன் தெரியுமா’’ பாபாஜியின் குரலில் குதூகலம் தெரிந்தது.
‘‘தெரியவில்லை.... பாபாஜி...’’
‘‘ஒன்றுமில்லை. நாம் சிறிய குடிலுக்குள் அமர்ந்து சரீரம் பற்றி பேசிக்கொண்டிந்தோம். அந்தச் சிறிய குடிலே சரீரம். இப்போது வெளியே வந்து வானத்தின் கீழ் அமர்ந்து கங்கை எனும் ஞானத்தின் சாரலில் அமர்ந்து மரணமென்றால் என்ன என்று மேலும் பேசப்போகின்றோம் என்றவுடன் சுரத்குன்வர், குருவின் சிறு அசைவுகள் கூட இப்பேர்ப்பட்ட பொருள் பொதிந்ததா என்று வியந்தார்.
‘‘நீ தூங்கும்போது எங்கிருக்கிறாய். உன் கை, கால்கள், கண்கள், மூக்கு எல்லாமே அசையாமல் அப்படியே இருக்கின்றது. ஆனால், இவையெல்லாம் அப்படியே இருக்குமென்று உனக்கும் தெரியும். உலகிலுள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால், யாரும் தூங்கப் போகும்போது யாரும் பயப்படுவதில்லை. மாறாகஞ் பயம் வரும்போது அதில் வெளியே வருவதற்காக தூங்கக்கூட தவறுவதில்லை. தூக்கத்திற்குள் சென்றவுடன் சரீரம் கிட்டத்தட்ட சவம்போல் ஆகிவிடுகின்றது. என்ன... மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆனால், எங்கேயோ ஓரிடத்திற்குச் சென்று மட்டும் ஒடுங்கிவிட்டு, மறுநாள் காலை வந்து நன்றாக ஆனந்தமாக தூங்கினேன் என்று சொல்கிறார்களே. அப்படி எங்குதான் அவர்கள் செல்கிறார்கள். அப்படி சென்று ஒடுங்கி விட்டு மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்து சரீரத்தை பிடித்துக்கொள்கிறார்களே. தூக்கத்தில் உள்ள ஆனந்தம் என்னதென்று யாரும் யோசித்திருப்போமா.’’’
கபாடியா பாபா சொல்லிவிட்டு சற்று நிறுத்தினார். ராம்சுரத்குன்வர் வைத்த கண்வாங்காமல் கபாடியா பாபாவின் வாக்கிலிருந்து என்ன வருகிறது என்று கேட்டபடி இருந்தார்.
‘‘அது சரி இந்த தூக்கத்தின்போது இந்த சரீரத்தை விட்டு பின்னர் எங்கேயோ சென்று ஆனந்தத்தை அனுபவித்துவிட்டுஞ் நன்றாகத் தூங்கினேன் என்று சொல்பவன் எங்கு சென்று வந்திருக்கிறான். அப்படி என்ன ஆனந்தத்தை அனுபவித்தான். கனவு கூட காணாமல் அல்லவா போக ஆசைப்படுகின்றான். அப்போது சரீரம் போய் விடுமோ என்கிற பயம் அவனிடம் இல்லையே. சர்வ சாதாரணமாக அந்த இடத்திற்குப் போய் வருகிறானப்பாஞ் நீ கவனிக்கின்றாயாஞ்’’ பாபாஜி நிறுத்தினார்.
அருகேயுள்ள கங்கையின் பிரவாஹத்தில் கமணடலத்தை இட்டு நீரை நிரப்பினார். அருகேயுள்ள சுரத்குன்வருக்கு அளித்தார்.
எங்கோ ஒரு மெல்லிய ஊற்றொன்று மனதைப் பிளந்து கொண்டு சிறு கீற்றுபோல கசியத் தொடங்கியது.
‘‘பாபாஜி… ஆமாம். இப்போது நனவில் இருப்பவன் கனவில் சென்று கனவில் உள்ளவன் அதையும் தாண்டி, கனவுகூட இல்லாமல் அதையும் தாண்டிச் செல்கிறானே. மீண்டும் வந்து இந்த உடலில் அமர்ந்து கொள்கிறானே…’’
‘‘சபாஷ்... பிடித்துக் கொண்டு விட்டாய். இப்போது சரீரம் தனியாகவும், நனவிலும்... அதாவது இந்த உலகைப் பார்த்துக் கொண்டிருப்பவனைத் தனியாகவும், கனவு காண்பவனை தனியாகவும், அந்த கனவே இல்லாமல் அதையும் தாண்டிச் செல்பவனைத் தனியாகவும், மீண்டும் மறுநாள் வந்து கனவையும் அதைத் தாண்டிய இன்பத்தையும் சொல்லும் இவன் யாரப்பா... இவன் யார்... இவன் யார்….’’ அந்தப் பாறையின்மீது எழுந்து நின்றபடி முழங்கினார்.
‘‘பாபாஜி… இவன் யார் குருநாதா…’’
‘‘இவன்தானப்பா… ஜென்ம ஜென்மமாக ஒவ்வொரு உடலாகப் பிடித்துக் கொண்டும்… அது விழும்போது… மரணம் என்று சொல்லிக்கொண்டும்… நம்மை ஏமாற்றுகின்றான். அவனுக்குப் பெயர் அகந்தை. ஆங்கிலத்தில் Ego, Me.... அவனே இந்த ஐம்புலன்களையும் தனக்குச் சுகம் தரும் பொருட்டு இயக்குகின்றான். அதை நினைவில் கொண்டு மீண்டும் மீண்டும் இந்த சரீரம் வழியாக வரும் சுகத்தையே தான் என நினைக்கின்றான். இப்போது சரீரத்தை தாண்டி தூக்கத்திற்குள் சென்று ஒடுங்குகின்றான். அப்படி ஒடுங்குதல் எனும் கருணையைக் கூட இறைச்சக்தி அவனுக்கு அளித்திருக்கிறது’’
‘‘அதெப்படி… பாபாஜி…’’
‘‘ஆமாம் அப்பா... இந்தச் சரீரம் இல்லாமலும் நீ ஆனந்தமாக இருக்கின்றாயே… நீ உணர்ந்திருக்கிறாயா. நீ எங்கு ஒடுங்குகின்றாய் தெரியுமா. அந்த இடம் ஏன் ஆனந்தமாக இருக்கின்றது தெரியுமா என்று ரிஷிகள் கேட்கிறார்களப்பா. அந்த இடம் என்ன தெரியுமா. தூக்கத்தின்போது ஒடுங்கும் இடம் என்ன தெரியுமா…’’
‘‘சொன்னால் தெரிந்துகொள்கிறேன் பாபாஜி…’’
‘‘நீ ஒடுங்கும் இடமே ஆத்ம ஸ்தானம்.’’
‘‘என்ன… நாம் தூங்கும்போது ஒடுங்கும் இடம் ஆத்ம ஸ்தானமா…’’
‘‘ஆமாம்… சுரத்... அதனாலேயே ரிஷிகள் இதை நித்யப் பிரளயம் என்றார்கள். அந்த இடத்திலிருந்து வரும் ஆனந்தத்தை சிறிது அனுபவித்துவிட்டு ஆனால், எங்கேயிருந்தோம் என்று தெரியாமல் வந்து மீண்டும் எல்லோரும் சரீரத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனம் அங்கு ஒடுங்கியிருந்தது. மனதை விட பெரியதாக இருந்ததால் எங்கிருந்தோம் என்று சொல்ல இயலவில்லை. இது வெளிப்புறமாகப் பார்த்துப் பார்த்து பழக்கப்படிருப்பதால் உள்ளே என்ன இருக்கின்றது என்று பார்க்க இயலாதுஞ் ஏதோ இருட்டில் விழுந்து எழுந்து வருகின்றது’’ என்று சுரத்குன்வரை ஆழ்ந்து நோக்கினார்.
‘‘பாபாஜி… மரணத்திற்கு இதற்கும் என்ன தொடர்பு’’ ஏதோ கொஞ்சம் புரிந்ததுபோலும் இருந்ததுஞ் இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் ஆவல் உந்தித் தள்ளியது.
‘‘இருக்கிறதப்பா... இந்த அகந்தையை தென்னிந்தியாவிலுள்ள ஒரு ஞானி பேயகந்தை என்கிறார். அப்படிச் சொன்னவர் பெயர் பகவான் ரமண மகரிஷி…’’ என்று சொல்லி முடிக்கும்போது ஏதோ ராம்சுரத்குன்வரை மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ந்தார். ரமண மஹரிஷி என்கிற பெயரை முதன்முதலாக கேள்விப்படும்போது அவரின் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது.
கபாடியா பாபா.. விதையை நன்கு ஆழமாக ஊன்றினார். குருவைச் சந்திப்பதற்கு முன்பு குருவின் நாமத்தை அம்புபோல் இறக்கினார். ராம்சுரத்குன்வரின் உடல் மெல்லியதாய் நடுங்கியது. அது பயமல்ல. அந்த மகாபுருஷரின் நாமமே இதயத்தின் ஆழத்திற்கு மனதைத் துளைத்துக்கொண்டு செல்வதை கபாடியா பாபா ஆனந்தமாகப் பார்த்தார்.
நள்ளிரவை நெருங்கியபோது பௌர்ணமி நிலவு வானத்தில் இன்னும் ஜொலிப்பு கூடி பிரகாசித்தது. நீரின் மீது சந்திரனின் ஒளி வெள்ளிப்பாளம்போல பரவியது. ராம்சுரத்குன்வருக்குள்ளும் பௌர்ணமி நிலவு மெல்ல எழுந்தது.
‘‘பாபாஜி…. இந்தப் பெயரே என்னை என்னவோ செய்கின்றதே. மேலும் சொல்லுங்கள்’’ என்று தளர்ந்துபோய் அமர்ந்தார்.
‘‘அந்த அகந்தையே மனம். அந்த அகந்தையே ஒட்டு மொத்த எண்ணங்கள். எண்ணங்கள் தரும் அனுபவங்களைப் பதிவு செய்து அப்படியே அந்த வாசனைகளை அழிக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்ளும் இயந்திரமே அகந்தை. இதுதான் யார் என்று மறந்து ஆயிரம் ஆண்டுகளாக உலகின் சகல அனுபவங்களையும் தன்னுடையது என்று வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து சரீரத்தை பிடித்துக்கொண்டு., அந்தச் சரீரமே நான் என்று நினைத்துக்கொண்டு அது இறக்கும்போது தானே இறப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றது. இப்போது இந்த மனம், நான் என்பது யார் என்று நாம் பார்க்கத் தொடங்கினால்…’’ பாபாஜி நிறுத்தினார்.
‘‘அது தன்னை யார் பார்க்கின்றார் என்று பார்த்து... அதாவது இந்த அகந்தையே மனம் என்பதைப் புரிந்து கொண்டும், கவனித்தும் இருந்தால் மெல்ல அது தன் உற்பத்தி ஸ்தானத்திற்குச் சென்று விடும். அப்படிச் சென்று ஒடுங்கும்போதுதான் ஆஹா... நாம் இந்த ஆத்மா... ஆத்மா... என்றார்களே அங்கு வந்து அமர்ந்து கொண்டிருக்கிறோமே என்று வார்த்தையாக அல்லது அனுபூதியில் நிற்கும். அப்போது இந்த மனமே... உடலாகவும்... பிரபஞ்சமாகவும் உருவாக்கி வைத்திருந்த போலியான காட்சிகள் அனைத்தும் உடைந்து எங்கும் நிறைந்து நிற்கும் விளங்கும் ஆத்மாவாக அகந்தை கலந்து காணமல் போகும். சிறு ஓடை கங்கையில் கலந்து அந்த கங்கையும் பிரயாகையில் கலப்பது போலத்தான் அது. அங்கு சரீரத்தால் ஏற்பட்டிருந்த எல்லைகள் இல்லை. எல்லையற்ற பேரின்பம். சரீரத்தை தோற்றுவித்த அகங்காரம் இல்லை. சரீரமே இல்லாமல் இருக்கும் பேரானந்தமே இருக்கும்.’’
‘‘பாபாஜி… அப்போது மரணம் என்ற ஒன்றே இந்த அகங்காரம் ஒரு சரீரத்தை பிடிக்கும்போதுதான் நாம் உணர்கின்றோமா...’’
‘‘ஆமாம் சுரத். அந்த நான் எனும் எண்ணமே, போலியான அகந்தையானது சரீரத்தை பிடித்துக்கொண்டு தான் அழிந்து விடுவோமே என்று தொடர்ந்து சதா நேரம் தவித்துக் கொண்டேயிருக்கின்றது. அப்படி தவித்தலைத்தான் இங்கு எல்லோரும் பயம் என்று உணருகின்றனர். இந்த பயம் எல்லா விஷயங்களிலும் பரவுகின்றது. இந்த அகந்தை தான் காணாமல் போய் விடுவோமோ என்று பயப்படுவதை மரண பயம் என்கிறோம். இந்த சரீரம் அழிந்து போவதற்கு முன்னர் நம்முள் இந்த அகந்தை அழிந்து போனாலே போதுமானதப்பாஞ் சரீரம் நிலையானதல்லா என்று எத்தனை அறிந்தாலும் இதற்கு இந்த சரீரம் மீதுள்ள அபிமானத்தால் பயந்துகொண்டே இருக்கின்றது.’’
பாபாஜி… எனக்கு ஒரு சந்தேகம். அப்போது சரீரத்தை நான் என்று உணருகின்றேனே. இதை விட முடியவில்லையே. என்ன செய்வது.’’ ராம்சுரத்குன்வர் எல்லோரும் உணரும் எளிய உண்மையை கேள்வியாக்கி அமைதியானார்.
‘‘இந்த சரீரம்தான் நான் என்று உன்னிடம் வந்து சொன்னதாப்பாஞ் அதுவொரு கருவியல்லவா. அந்தக் கருவி உன்னிடம் அளிக்கப்பட்டிருப்பதன் பயனே இந்தக் கருவிக்குள் ஒளிந்து கொண்டிருப்பவனை அறிந்துகொள் என்பதுதான். இவன் யார் என்று அறிந்து கொண்டால் போதும். அதைத்தான் ரமண பகவான் நான் யார் என்று கேட்கச் சொல்கிறார்’’ மீண்டும் ரமண பகவானின் பெயரைச் சொன்னவுடன் உடல் சிலிர்த்து அடங்கியது.
‘‘பாபாஜி… இப்போது சரீரம் அழியும் என்று அதற்குள் இருப்பவன் தன்னை யார் என்று அறியாமல் இருக்கும் வரையில் மரணம் அடைந்து கொண்டேயிருப்பான் என்று அல்லவா வருகின்றது. அப்போது இந்தச் சரீரத்தின் மீதுள்ள அபிமானம் எப்படிப் போகும்’’ சட்டென்று சரசரவென்று உயர்ந்துகொண்டே வந்தார்.
‘‘இந்தச் சரீரத்தின் அழிவை இடையறாத பார்க்க வேண்டுமப்பா….’’
‘‘அதற்கு என்ன செய்ய வேண்டும் பாபாஜி’’
‘‘காசிக்குச் செல்லப்பா... அதுவொரு மகா மயானம். வெறும் இறப்பு மட்டுமல்ல. மீண்டும் யாரும் பிறக்காத பூமி அது. உடல் எரிந்து எரிந்து அடங்குவதைப் பார்ப்பாய். அவிமுக்தம்... அவிமுக்தம்... முக்தி க்ஷேத்ரம்… அதை அளிப்பவர் காசி விஸ்வநாதர்…’’ என்று சொல்லிவிட்டு ராம்சுரத்குன்வரைப் பார்த்தார்.
அதற்குள் செக்கச் சிவந்த சூரியன் வெளியே வந்தான். விடிந்தது. சுரத் மீது கிரணங்களை போர்த்திப் பரவினான். பாபாஜியை நமஸ்கரித்தார். அவரும் தன் ஆஸ்ரமக் குடிலை நோக்கி நடந்தார்.
இங்கே சுரத்குன்வர் வீட்டிற்குத் திரும்பினார். அடுத்த ஓரிரு கணங்களில் மீண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தார். அண்ணன் எதிர்பட்டார்.
‘‘எங்கு செல்கிறாய்.’’
‘‘ஊருக்கு.’’
‘‘எந்த ஊருக்கு.’’
‘‘எந்த ஊருக்குச் சென்றால் திரும்ப வருவது நம் கையில் இல்லையோ அந்த ஊருக்கு. புரியவில்லையா…. காசிக்கு…’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.
அந்த சுரத்குன்வர் எனும் இளைஞனின் முன்னால் குருவின் அருள் அவரைவிட வேகமாக அரூபமாக நடந்தது.
காசி விஸ்வநாதரும் வரட்டும் என்று காத்திருந்தார்.
- தொடரும்
