தங்கேஸ்வரன்/அது

ஒரு அற்ப புழுவாக
இப்போது
நம் கண் முன்னால்
நெளிந்து கொண்டிருப்பது
நேற்று வரை பெரிய
மலைப்பாம்பாகத்தான்
இருந்தது

ஒரு சினனஞ்சிறிய
செம்மறி ஆட்டுக் குட்டியை
எசக் கேடாக முறை தவறி
விழுங்கப் போய்
ஆரம்பித்தது வினை

பறி கொடுத்த தாய்க்கும்
தெரியவில்லை
விழுங்கப்பட்ட குட்டிக்கும்
தெரியவில்லை
(சாகும் போதாவது உண்மை
தெரிய வேண்டாமா ? )
பாதுகாக்கும் மேய்ப்பரும்
கவனப் பிசகில்
சோரம் போய் விட்டார்
என்று சொல்லலாம்

அப்படி ஒரு நூதன உயிர் திருட்டு
அது மேற் கொண்டது
முதலில் செத்துப் போனது
நம்பிக்கை தான்

பெரிய பெரிய காட்டு மான்களையும்
மிளாக்களையும்
கரு மந்திகளையும் எளிதாக விழுங்கி
ஏப்பம் விட்டது
ஒரு சிறிய ஆட்டுக் குட்டியை
செரிக்க முடியவில்லை

பெரும் தாடைக்குள் இறங்குவதற்கு முன்
சரியாக அழைக்க கூட தெரியாமல்
” ம்மே… ம். மே “
என்ற அந்த மழலையின் அலறல் தான்
இந்த காடெங்கும் எதிரொலித்தது
இதன் காதிலும் விழுந்தது

தன் சாபம் தன்னைச் சுட.

ராட்சத மலைப் பாம்பு இருந்த இடத்தில்
இப்போது ஒரு புழு நெளிகிறது

இது இருந்த ஆகிருதிக்கு குறைந்தது
ஒரு சாரைப் பாம்பாகவாவது கிடக்க வேண்டாமா ?

இப்போதெல்லாம் தெருவில்
எந்த அற்ப புழுவை பார்த்தாலும்
முன்னொரு காலத்தில் இது எவ்வளவு
பெரிய மலைப்பாம்பாக இருந்ததோ
என்று எண்ணத் தோன்றுகிறது

அப்படியே அதன் சாபங்களும்
ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றன