அசோகமித்திரன்/அது

மறுபடியும் மனைவியோடு சண்டை. சண்டை போட்டு விட்டு அவள் சமைத்துப் போடுவதை மட்டும் சாப்பிட முடியுமா? காலைச் சாப்பாடு தவறிப் போய்விட்டது. இப்போது இராச் சாப்பாடுதான். ஆனால் படுத்துத் தூங்க வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நடுநிசியில் அவளோ குழந்தைகளோ விழிந்திருந்தால் வாசல் கதவு உடனே திறக்கும். இல்லாது போனால் நடுத்தெருவில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும்.
நல்லவேளை. கதவைத் தொட்டவுடனேயே திறந்து கொண்டுவிட்டது. உள்ளே இருட்டு. பாவம், அவளும் குழந்தை களும் காத்துக் காத்துக் கண்ணயர்ந்திருக்க வேண்டும். கதவைக் கூடத் தாளிடாமல்.
அவன் உள்ளே நுழைந்து விளக்கைப் போடாமல் கதவைத் தாளிட்டான். அது ஒரு விசித்திரமான போர்ஷன். கீழே சமையலிடமும் கூடியதோர் அறை. ஒரு குறுகிய மரப்படிக்கட்டு வைத்துப் பரண் மாதிரி ஒரு சிறு மாடியறை.
அவன் இருட்டிலே மாடிப்படி ஏறினான். மாடியில் கால் இடறிற்று. அவள்தான் சுருண்டு படுத்திருந்தாள்.
அவன் விளக்கைப் போடாமல் வேஷ்டி அணிந்துகொண்டு அவளருகில் படுத்துக்கொண்டான்.
அவள் தலையைத் தடவினான், தலைமயிர் விரித்துப் போட்டிருந்தது.
“தலையை வாரிப் பின்னிண்டிருக்கக் கூடாதா? எப்பலேந்து இந்த மாதிரி செண்ட் எல்லாம் பூசிக்கறே?”
அவள் பதில் சொல்லவில்லை.
“நீ கோச்சுக்கலேன்னா ஒண்ணு சொல்லறேன். இந்த செண்ட் வேண்டாமே, தெருவிலே பொணம் போற
வாசனையாயிருக்கு.”
அவள் ஒருமுறை சிலிர்த்துக்கொண்டாள். அவன் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டான், “இனிமே நாம சண்டை போட்டுக்கக் கூடாது. என்னென்னமோ விபரீதமாயெல்லாம் யோசனை வரது. செத்துப் பிசாசாய்ப்
போயிடலாமான்னு தோணறது.”
அவளுடைய மௌனம் அவனுக்கு ஆறுதல் அளித்தது.
சிறிது நேரத்தில் அவனுக்குப் பசி தாங்க முடியாமல் போயிற்று. “சாதம் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?” என்று கேட்டான். “நீ எழுந்திருக்க வேண்டாம். நானே போய்ப் போட்டுக்கறேன்.”
அந்த குறுகிய மரப் படிக்கட்டு வழியாகக் கீழறையை வந்தடைந்தான். அன்று வீடு திரும்பிய பிறகு முதல் முறையாக விளக்கு சுவிட்சைப் போட்டான். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு அவன் மனைவியும் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் தலை நன்றாக வாரிப் பின்னியிருந்தது. அப்படியானால் மாடியில் இருந்தது?
ஒரு கணம் மலைத்து நின்றவன் மாடியறைக்குப் பாய்ந்து சென்று விளக்கைப் போட்டான். அங்கு யாருமில்லை ஆனால் அந்த மட்டரக செண்ட்டின் மணம் மட்டும் அங்கு வீசிக்கொண்டிருந்தது. .
1981

One Comment on “அசோகமித்திரன்/அது”

Comments are closed.