
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 17
“ஏய், என்னடி செஞ்சுகிட்டு இருக்க? காது கேட்குதா, இல்லை
செவிடாயிருச்சா?” என்று அதிகாரமாகக் கத்தினார் குமரேசன்.
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூர்த்திக்கு இந்தச் சத்தமெல்லாம்
பழகிப்போய் வெகுநாட்களாகி விட்டன.
கூடுவாஞ்சேரியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்,
தரைத்தளத்தில் அடுத்தடுத்த வீடுகள் அவர்களுடையது. நடுவில்
மெல்லிய ஒரு தடுப்புச் சுவர்தான். அங்கே சற்று அதிர்ந்து
பேசினாலே இங்கே கேட்கும். குடிவந்த புதிதில் மிக எரிச்சலாக
இருந்தாலும் நாளடைவில் பழகி விட்டது.
ஆரம்பத்தில் ஒருநாள், “ஏங்க, பக்கத்து வீட்ல நாங்கல்லாம்
இருக்கோம்ல..? கொஞ்சம் மெதுவாத்தான் பேசுங்களேன்” என
அமைதியாகச் சொல்ல, “நான் என் வீட்லதான பேசுறேன். உங்க
வேலையப் பாருங்க” என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில்
வந்தது.
“இதோ வந்துட்டேங்க.. சொல்லுங்க. என்ன வேணும்?” என்றார்
வேகமாகப் படியிறங்கி வந்த அவருடைய மனைவி பூங்குழலி.
அவ்வளவு அழகான பெயரை, திருமணமானதில் இருந்து
ஒருமுறை கூட ரசித்துக் கனிவுடன் குமரேசன் அழைத்ததே
இல்லை.
“அந்த முதியோர் இல்லத்துக்குக் கொடுக்குறதுக்காக, பெட்டில
வச்சிருந்த காசோலையை எங்க? எந்தப் பொருளாவது இந்த
வீட்ல வச்ச இடத்துல இருக்கா?”.
“ஏங்க, நேத்து ராத்திரி நீங்கதான அதப் பெட்டில இருந்து எடுத்து
உங்க கைப்பைல வச்சீங்க. நீங்களே அத மறந்துட்டீங்க” என்று
பணிவாகவே கூறினார் பூங்குழலி.
ஒரு வினாடி அமைதியாக இருந்தாலும், மறந்தது தன் தவறுதான்
என்பதற்காகக் குரலைச் சற்றும் தாழ்த்தாமல், “ரொம்பப்
பேசாதடி. ஏன்… ஒனக்கெல்லாம் எதுவுமே மறக்காதோ?” என்று
அதற்கும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு, கைப்பையுடன்
வெளியே வந்தார் குமரேசன்.
அங்கே, அவருடைய ‘புல்லட்’ பைக்கைத் துடைத்துக்
கொண்டிருந்தான் மூத்த மகன் ராகவன். “போதுண்டா
துடைச்சது… போயி குளிச்சிட்டுக் கல்லூரிக்குச் சீக்கிரமாக்
கிளம்பு” என்று அவனை விரட்டிவிட்டு, வண்டியை ‘ஸ்டார்ட்’
செய்தார்.
“ஹெல்மட்ட மறக்காமப் போட்டுக்கங்க” என்று முனகியவாறு
உள்ளே போனான் ராகவன். “எல்லாந் தெரியுண்டா” என்றவாறு
அலட்சியமாக ஹெல்மட்டைத் தலையில் கவிழ்த்து, அதன்
வாரை இழுத்து மாட்டாமல் வண்டியை நகர்த்தினார். பின் சற்று
நின்று, “சின்னவன எங்கடி? இன்னுமா ஸ்கூலுக்குக் கிளம்பாம
இருக்கான்?” என்றார்.
“அவன் கிளம்பிக்கிட்டுதான் இருக்கான்க” என்றார் பூங்குழலி.
“ம். சீக்கிரம் புறப்படச் சொல்லு” என்று ஆணையிட்டவாறு
வண்டியை வேகங்கூட்டி, ‘தடதட’வென சப்தம் எழச் சென்றார்
குமரேசன்.
அவர் எப்போதுமே அப்படித்தான். தலையில் மகுடம் ஒன்று
வைக்காததுதான் குறை. அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக
இருக்கும் அவர், பள்ளியில் பணிபுரிவோரிடமும் சரி,
குடும்பத்தினரிடமும் சரி, அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.
அவர் தன் வேலையில் மிகவும் நேர்த்தியாக நடந்து
கொள்வதுடன், அதைப் போலவே, மற்றவர்களும் இருக்க
வேண்டுமென்று எதிர்பார்ப்பார். அவருக்கெதிரே பணிவாக
நடக்கும் ஆசிரியர்களும், அலுவலர்களும், அவருக்குப் பின்னே,
அவரை ‘ஹிட்லர்’ என்றுதான் ரகசியமாகக் குறிப்பிடுவார்கள்
என்று அந்தப் பள்ளியில் பணிபுரியும் மூர்த்தியின் நண்பர் ஒருவர்
அவரிடம் ஒருமுறை சிரித்தவாறு கூறியிருக்கிறார்.
குமரேசன் தலை மறைந்ததும் வெளியே வந்த சின்னவன் சூர்யா,
“அப்பா ஏம்மா இப்படி எல்லாரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டே
இருக்காரு? என் நண்பர்களோட அப்பாக்கள்லாம் எவ்வளவு
ஃப்ரண்ட்லியா இருக்காங்க தெரியுமா? சே.. இவர் மட்டுந்தான்
இப்படி..” என எரிச்சலாகச் சொன்னான்.
உள்ளிருந்து வந்த ராகவனும், “ஏம்மா, அவ்வளவு சுத்தமா
‘பளபள’ன்னு அவரோட வண்டியத் துடச்சி வச்சேனே,
பாராட்டவெல்லாம் வேணாம், சிடுசிடுன்னு பேசாமயாவது
இருக்கலாம்ல” என்று வேகமாகக் கேட்டான்.
சற்றுத் தள்ளி, தன் வீட்டு வாசலில் ‘பைக்’கைத் துடைத்துக்
கொண்டிருந்த மூர்த்தியின் காதுகளில் அவர்கள் பேச்சு எல்லாமே
விழுந்தது.
“யப்பா, அவர் அப்படித்தான். கல்யாணம் ஆன புதுசுல எனக்கும்
ரொம்ப வருத்தமாத்தான் இருந்துச்சி. அவர் மேல தப்பு
இருந்தாலுமே நம்மளத்தான் திட்டுவாரு. வீடே கிடுகிடுக்குற
மாதிரி சத்தம் போடுவாரு. ம்.. நாளாக ஆக அவருடைய
அதிகாரம், ஆர்ப்பாட்டமெல்லாம் அப்படியே பழகிப்
போயிருச்சி” என்று மெல்லிய குரலில் அங்கலாய்த்தார்
பூங்குழலி.
அந்த உரையாடலைக் கேட்ட மூர்த்திக்கு அவர்களின் துயரத்தை
எண்ணிப் பாவமாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் விடிவே
கிடையாதோ என்ற கேள்வி அவர் மனத்தில் தோன்றியது.
அந்த முதியோர் இல்லத்தின் மேலாளர் கணேசன்,
கணக்குப்பிள்ளையுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
குமரேசனின் ‘புல்லட்’ ஒலியைக் கேட்டதுமே இருவரும்
வேகமாக வெளியே வந்து, “ஐயா, வாங்க, வணக்கம்” என்று
வரவேற்றனர்.
பதிலுக்கு லேசாக உள்ளங்கையை மட்டும் உயர்த்தி விட்டு,
என்ஜினை அணைக்காமல் வண்டியில் அமர்ந்தவாறே, “ம்,
என்னய்யா, வாசல்ல இருந்து இங்க வர்றதுக்குள்ள வெய்யில்
தலையப் பிளக்குது. நாலு வேப்ப மரக்கன்னுகளை நட்டு வச்சா
நிழலோட, நல்ல காத்தும் கிடைக்கும்ல? இதெல்லாங்
கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டீங்களா?” என்று சத்தம்
போட்டார் குமரேசன்.
“ஐயா, நாளைக்கே செஞ்சீருவோம்யா…” என்று கணேசன்
மரியாதையாகச் சொன்னார்.
“இந்தாங்க. இந்த மாத நன்கொடை” என்று கைப்பையில் இருந்த
காசோலையைக் கவருடன் அவரிடம் கொடுத்த குமரேசன்,
“நாளைக்கு நாளைக்குன்னு தள்ளிப் போடாம இன்னைக்கே
வேலைய ஆரம்பிங்க.. அடுத்து நா இந்தப்பக்கமா வரும்போது
பார்ப்பேன்.. வரட்டுமா?” என்று சொல்லி விட்டு, அவர்கள்
வணங்கியதைக் கவனிக்காதது போல, வண்டியைத்
‘தடதட’வென்று கிளப்பியவாறே வேகம் எடுத்துச் சென்றார்.
அவர் போனதும் கணக்குப்பிள்ளை, “சார், மத்தவங்களை அதட்டி
உருட்டி வேலை வாங்குற நீங்களே இவர்கிட்ட பணிவாப்
பேசறதப் பாத்தா எனக்கு எப்பவுமே ஆச்சரியந்தான்” என்றார்.
“தம்பி, மத்தவங்க கிட்ட வேகம் பண்ணாத்தான் வேல நடக்கும்.
இவர்கிட்ட இப்படிப் பணிஞ்சு போனாத்தான் காரியமாகும்.
பாரு, ஒண்ணாந்தேதி ஆனதும் ‘டாண்’ணு ஐயாயிரம்
ரூபாய்க்குச் ‘செக்’ கொண்டுவந்து தர்றாரு. இந்தக் காலத்துல
யார் தருவா இப்படி? என்ன, மனுஷன் கொஞ்சம் சிடுமூஞ்சி.
ஒடம்பு முழுக்க ஆணவம். யாருக்குமே, ‘பார்றா… ‘தடதட’ன்னு
பைக்குல போற திமிரன்னு’ நினைக்கத்தான் தோணும்” என்றார்.
குமரேசன் அந்தப் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த
போது, அவர் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த அரசுப்
பேருந்து ஒன்று, திடீரென அவரை முந்திச் செல்லும் முயற்சியில்
அவரது ‘பைக்’கை உரசியவாறு முன்னேற, இவர் சற்று ஓரமாகச்
செல்ல, அந்த இடத்தில் கிடந்த மணலில் அவரது வண்டி சறுக்கி,
அப்படியே சாய்ந்து, தரையில் தேய்த்தவாறே போய் ஒரு பெரிய
கல்லில் மோதி விழுந்தார் குமரேசன்.
அதற்கு முன்பே வார் மாட்டாமல் அவர் தலையில் பேருக்குக்
கவிழ்ந்திருந்த தலைக் கவசம் தனியே தெறித்து விழுந்து விட்டது.
அவரது காதுக்கு மேலே பலத்த அடிபட்டு ரத்தம் வழிய
ஆரம்பித்தது. மயங்கிக் கிடந்த அவரது உடலெங்கும் பலத்த
சிராய்ப்புக் காயங்கள்.
அந்தப் பேருந்து நிற்காமல் போய்விட, சில வாகனங்கள் சற்றுத்
தயங்கி நின்று, பின் நமக்கேன் வம்பு என்று வேகமெடுத்துச்
செல்ல, மனித நேயத்தை இன்னும் இழக்காத சிலர் வேகமாக
இறங்கி ஓடி வந்தனர். அதில் ஒருவர் அவசரமாக 108
எண்ணுக்குத் தகவல் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் அவசர ஊர்தி ஆட்கள் வந்து அவரை ‘தாம்பரம்
அரசு மருத்துவமனை’யில் கொண்டுபோய்ச் சேர்த்தனர். அவரது
‘பைக்’கை அங்கு வந்த காவலர்கள் காவல் நிலையத்திற்குக்
கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.
காயங்களைத் துடைத்த பின், எட்டு இடங்களில் தையல்
போட்டனர். ஒரு காவலர் குமரேசனின் கைப்பேசியை எடுத்து,
அதில் உள்ள எண்களைப் பார்த்து அவர்களுக்குத் தகவல் தர
ஆரம்பித்தார்.
மருத்துவமனையில் குமரேசனின் படுக்கையைச் சுற்றி, அவரது
மனைவியும், மகன்களும், சில உறவினர்களும் நின்றிருந்தனர்.
மூர்த்தி பழைய மனவருத்தத்தை எல்லாம் ஓரங்கட்டி விட்டு
மிகவும் உதவியாக இருந்தார்.
பூங்குழலியின் கண்கள் அழுதழுது சிவந்திருந்தன. பிள்ளைகள்
இருவருமே தங்கள் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக்
கொண்டிருந்தனர். குமரேசன் அவருக்குத் தரப்பட்ட
மயக்கமருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த மருத்துவர், குமரேசனைப் பரிசோதித்து
விட்டுப் பூங்குழலியிடம், “ஒண்ணும் கவலைப்பட
வேண்டியதில்லம்மா. அவரது ‘க்ரூப்’ ரத்தம் இங்க இருந்ததால
உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லாமப் போச்சு. ஆனால், ஸ்கேன்
ரிப்போர்ட்டுல, அவர் தலைக்குள்ள ரத்தம் சில இடங்கள்ல
கசிஞ்சி உறைஞ்சி போயிருக்குறது தெரியுது. அதை
மாத்திரைகள் கொடுத்தே சரி பண்ணிடலாம்னாலும், முழுவதும்
சரியாக ஒரு மாசமும் ஆகலாம், ஓராண்டும் ஆகலாம். அதை
இப்போ சொல்ல முடியாது” என்றார்.
ஆனால், ஒரு வாரத்தில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி, மருத்துவமனையில்
இருந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.
மூர்த்திதான் ‘வேன்’ ஏற்பாடு செய்தார்.
சில வாரங்கள் கழிந்தன. மிக மெதுவான பேச்சும், ஞாபக
மறதியும், சோர்வுமாக குமரேசன் ஆளே மாறிவிட்டார். அவரது
அதிகாரக் குரல் ஒலிக்காமல் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பே
நிசப்தமாகி விட்டது போல மூர்த்திக்குத் தோன்றியது.
அன்று ஹெல்மட்டைத் தலையில் கவிழ்த்தியவர், அதன் வாரை
ஒழுங்காக மாட்டியிருந்தால் இவ்வளவு பெரிய விபத்தாக அது
ஆகியிருக்காது. ம்.. விதி வலியது அல்லவா..! ஆனால், அவர்
மனைவியும் மகன்களும் ஒரு வகையில் இப்போது
நிம்மதியாகவே இருப்பார்கள்; விடிவே இல்லை என்று தான்
எண்ணிய அவர்கள் பிரச்னைக்கு இப்படி ஒரு தீர்வை அவர்
நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஒரு விடுமுறை நாளில், மூர்த்தி குமரேசனின் வீட்டிற்குப்
போனார். பூங்குழலியும், பிள்ளைகளும்தான் அவரை வரவேற்று
உள்ளே அமர வைத்தனர். தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்த குமரேசன், “வாங்க மூர்த்தி” என்றார்.
அவர் அருகில் அமர்ந்தவாறே, “இப்ப எப்படி இருக்கிறீங்க
குமரேசன்?” என்று பரிவுடன் கேட்டார்.
“ஐயாம் ஓக்கே” என்று மிருதுவான குரலில் சொன்ன குமரேசன்,
“என்ன, அவ்வப்போது சின்னச்சின்ன விசயங்கள் மறந்துடுது.
சீக்கிரம் சோர்வாகிடுது” என்றார்.
பூங்குழலி தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். அவரது மகன்கள்,
“அங்கிள், நீங்க செஞ்ச உதவிகளை எல்லாம் மறக்கவே முடியாது
எங்களால்” என்றார்கள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின், குமரேசன் அவரது
அறைக்குள் மெதுவாகச் சென்று படுத்துவிட்டார்.
பின்பு மற்றவர்கள் கூடத்தில் வந்து அமர்ந்தனர். மூர்த்தியிடம்
பூங்குழலி, “சார், முன்பெல்லாம் அப்படியே சிங்கம் போலக்
கம்பீரமா அவரு வலம் வருவார். ஒருநாளும் இப்படி டிவி
முன்னால சோர்வா உட்காரவோ, படுக்கவோ மாட்டார். சின்னச்
சின்ன விசயத்துக்கெல்லாம் அடிக்கடிக் கோபப்படுறவர், இப்ப
இப்படி சாதுவா மாறி, பலவீனமா, தட்டுத் தடுமாறிச்
செயல்படுறதப் பார்த்து என்னால அழுகைய அடக்க முடியல
சார். இவர் பழையபடி எப்ப ஆவார்ன்னு துக்கம் தொண்டையை
அடைக்கிறது” என்று குரல் கமற, லேசாக அழுதவாறே
சொன்னார்.
ராகவன், “அங்கிள், முன்னல்லாம் அப்பா அடிக்கடி சப்தம்
போடுறாரே அப்படீன்னு வருத்தமாத்தான் இருந்துச்சு. ஆனா,
அவரப் பத்தி நினைக்கும்போது அவரோட மிடுக்கும், அவர்
புல்லட்ல பவனி வர்ற தோரணையும் ரொம்பப் பெருமையா
இருக்கும். இப்பத் திடீர்னு அவர் இப்படி ஒடுங்கிப் போய்விட்டத
எங்களால ஏத்துக்கவே முடியலை. முன்னப் போல அதிகாரமா,
‘டேய் ராகவா’ன்னு எப்பக் கூப்புடுவார்னு ஏக்கமா இருக்கு
அங்கிள்” என்றான் கண்களில் நீர் மல்க.
மூர்த்தி திகைத்துப்போய் என்ன சொல்வதென்று தெரியாமல்
அமர்ந்திருந்தார். அவர்களின் துயரம் இவ்வாறு இருக்கும் என்று
அவர் எதிர்பார்க்கவே இல்லை!
ஆசிரியர் குறிப்பு
திருக்குறட் செல்வர்’ துரை.தனபாலன் என்பவர் 28-11-1955ல் மதுரையில் பிறந்தவர். அறிவியல் பட்டதாரியான இவர், ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின், தமிழ்ப் பணியில் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, தனது ‘மாணவர்க்கேற்ற மணிக்குறள் நூறு’ எனும் நூலை அன்பளிப்பாக அளித்து, இலவசமாகத் திருக்குறள் வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதோடு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கதைகளையும், பாடல்களையும் மொழிபெயர்ப்பதுடன், 14 நூல்களையும் எழுதியுள்ள இவர் பல்வேறு விருதுகளும், பல பரிசுகளும் பெற்றுள்ளார்.

நன்றி அழகிய சிங்கர் ஐயா.
அருமையான கதை.