
நான் ஆவிகளோடு பேசவும் நட்பு கொள்ளவும் தொடங்கிய திலிருந்து மனிதர்களுடனான எனது உறவை நான் முறித்துக் கொள்ளு முன்பே, தங்கள் பாதையில் அவர்கள் விலகிச் சென்றார்கள். எனது ஒரே நண்பன் வெள்ளைப் புறா வில்ஸனின் 13 புறாக்கள் வலுவான காற்றை எதிர்த்துப் பறந்ததைப் போல வெம்மையாலும் காற்றின் சீற்றத்தாலும் சிறகுகள் எல்லாம் உதிர்ந்து வயிறு கிழிந்து வட்டமான கண் விழி திறந்தே சிதறி இறந்து கிடந்தன. திறந்திருக்கும் புறாக்களின் விழிகளில் பாழடைந்த இரவுகளின் கருநீலம் நொறுங்கிக் கிடக்கிறது. காலை இளம் காற்றில் வில்ஸனும் நானும் புறாக்களின் மரணத்தைக் கண்டோம். புறாக்களைக் காகிதக் கூடையில் சேகரித்து நகரின் தெற்கேயுள்ள இலுப்பை மரத்தோப்பில் ஒரே குழியில் இட்டுப் புதைக்கும் வரை மட்டுமே என் நண்பன் என்னோடு நட்பாக இருந்தான். கோபத்தாலும் கண்ணீராலும் அவன் உடல் பதறிக் கொண்டிருந்தது. மண் தள்ளி மூடி இறுதியாக சவக்குழியின் தலைமாட்டில் கல்லை நட்டதும் என்னிடம் விடைபெறாமல் பிரிந்து சென்றான்.
அவனுடைய புறாக்கள் இறந்ததற்கு நான்தான் காரணமென்று உறுதியாகவும் நம்பிக்கையின்றியும் நம்பினான். புறாக்களின் புதைகுழிமேல் நட்ட கல்லே எங்களது பிரிவின் அடையாளமாக நிற்கிறது. அவனொரு பாதையில் போனபின் நானொரு வழியில் விலகிச் சென்றேன். இங்கே இரண்டே வழிகள்தான். வருவதற்கு ஒரு வழி, போவதற்கொரு பாதை. வந்த வழியில் திரும்பிப் போக முடியாது. போன பாதையில் திரும்பி வரமுடியாது. கட்டில் காலின் கீழிருந்து துவங்கும் இந்த நகரின் பாதைகளில் ஒன்று சூர்யோதயத்தை நோக்கிச் செல்கிறது. மற்றொன்று சூர்ய அஸ்தமனத்திலிருந்து திரும்பி வருகிறது. சூரிய அஸ்தமனத்திற்குக் கீழேதான் எல்லா இடுகாடுகளும். தினமும் நான் இடுகாடு வரை சென்று திரும்புவேன். பேய்களுக்காகப் பூத்திருக்கும் கள்ளிச் செடிகளும், சூரை முட்களில் மாட்டிக்கொண்டு காற்றில் கிழித்து வா வா எனப் பறந்து அழைத்துக் கொண்டிருக்கும் சவத்தின் மேல் போர்த்தப்பட்ட கோடித்துணிகளும் தாலாட்டி எறியப்பட்ட பாடைகளும் சூழ்ந்த கோலம் கொண்டிருக்கும் இடுகாடு வரை தினமும் உலாவச் சென்று மாலைப் பொழுதுகளைக் கழித்து திரும்புவேன் – என் நண்பனின் புறாக்கள் இறப்பதற்கு முன்.
நகரத்திற்கும் இடுகாட்டிற்கும் இடையில் நீளும் சாலையின் நடுவில் தேநீர் விடுதியொன்று இருக்கிறது. கேட்பாரற்று இறந்துபோய் அழுகிக் கொண்டிருக்கும் எருமை மாட்டின் தோலாலும் எலும்புகளைப் போன்ற மூங்கில்களாலும் தூக்கி நிறுத்தப்பட்ட கூடாரம் அது. உலாவலுக்கு இடையில் தேநீர் அருந்தவும் புகை பிடிக்கவும் அங்கு செல்வேன்.
தேநீர் விடுதியை நடத்திவரும் கிழவனைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் – கிழவன் அபின் விற்பான், கஞ்சா குடிப்பான், இரவில் பெண்களோடு வருபவர்களுக்கு இடம் தருவான்.. முட்டையை அழவத்தில் வைக்காமல் கைகளில் வைத்திருந்தே குஞ்சு பொரிக்கச் செய்திடுவான் என கதைகள். ஆனால் கிழவனைப் பார்த்தால் குழந்தையாக – பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவன் போல இருப்பான் – வயோதிகமாகவும் குழந்தையைப் போன்றும். எனக்கும் னக்கும் கிழவனுக்கும் நட்பு நேற்றிரவு நிகழ்ந்த விபத்தைப் பற்றிய உரையாடலிலிருந்து தொடங்கியது. ஒரு காரும் ராட்சத நெல் அறுவடை இயந்திரமும் மோதிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர், அறுவடை இயந்திரம் பலமாக சேதமடைந்தது. அதிவேகத்திலும் அளவுக்கு மீறிய போதையிலும் வாகன ஓட்டி இருந்ததால் விபத்து நிகழ்ந்தது. நகரத்தினுள் இவ்விபத்து நிகழ்ந்திருந்தால் அவ்விளைஞர்கள் பெருந்தொகையான மக்களைக் கொன்றிருப்பார்கள் என செய்திகள் கூறின. 14 குமார் அம்பாயிரம்
கிழவன் என்னிடம் நேற்று நடந்த விபத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனக் கேட்டான். உண்மையில் விபத்து நிகழ்ந்தது போல் இல்லை, யாராலோ நிகழ்த்தப்பட்டது போன்றதொரு வேகத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றேன். நீ கூறுவது உண்மையே. இப்பகுதியிலேயே பல காலமாக உலாவிக்கொண்டிருக்கும் ஆவியினால் தான் இவ்விபத்து நிகழ்த்தப்பட்டது. இவ்விபத்து நிகழ்ந்ததே பல விபத்துகளை தடுக்கத்தான் என்றான். பல தொழில்கள் செய்து இறந்து போனவன் ஆவி அது. அவன் முன்பு சிறந்த வாகன ஓட்டியாகவும் இருந்திருக்கிறான்.
நாம் நமது உரையாடலிடையே ஆவி என நேராகப் பொருள் தரும் வார்த்தையைப் பயன்படுத்துவது சகலத்தையும் பலவீனப்படுத்தி விடும். பழங்களைப் பெயர் சொல்லி அழைப்பதினால் அவை சீக்கிரமாக அழிந்துவிடுகின்றன. கானகத்தில் சில இலைகள் பெயர் சொன்னால் நம் இயல்பை இழந்து விடுகின்றன. ஆகையால் இனி ஆவிகளை ஆவி என்றுரைக்காமல் – “ன்யாக்” என்று வேறு மொழியில் அதே வார்த்தை தரும் வார்த்தையால் அழைப்போம் என்றான் கிழவன்.
ன்யாக்குகளில் எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு சிநேகம் எளிதுதானென்றும், திசையின்றி நியதியின்றி பூமிக்கு மேலே காற்றினூடாக ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டைப் போல்தான் ன்யாக்கின் மீதமிருக்கும் வாழ்க்கை. எனது வாடிக்கையாளர்களிலே சரியானவன் நீயே இதை பகிர்ந்து கொள்வதற்கு என்று நான் நினைப்பதாலும் உன்னிடம் இதைக் கூறுகிறேன் என்றான்.
நானும் “ன்யாக்”கோடு நட்புகொள்ள முடியுமா என்றேன். சிறிது நேரம் என்னை ஆழ்ந்து நோக்கிக் கிழவன் மௌனமாக இருந்து விட்டான். அன்று முதல் கிழவனின் தேநீர் விடுதிக்கு நான் இரவு வேளையில் செல்லத் துவங்கினேன். த்து
முன்னிரவுக்கு முன்பாக நான் தேநீர் விடுதிக்கு வந்தவுடன் கிழவன் நீண்ட மூங்கிலோடு இணைத்து சுருட்டி வைத்திருக்கும் சாக்குப் பையை இறக்கி கடையை அடைத்துவிட்டு, என் முன்னால் கருப்பு நிறப் பலகையை எடுத்துவைப்பான். பலகையில் குறுக்கும் நெடுக்கும் பவள நிறத்தில் மங்கலாகக் கட்டங்களும் கோணங்களும் வரைந்திருக்கும். கூடாரத்தின் மையத்தில் மேலேயிருந்து கீழ்நோக்கி தொங்கவிடப்பட்டிருக்கும் இராந்தலின் திரியைத் தூண்டிவிட்டு கரும்பலகையைப் பிரகாச மடையச் செய்வான். இருவருக்கும் இடையில் இருக்கும் கரும்பலகையில் அவனது சுருக்குப் பையிலிருந்து கூழாங்கல்லைப் போலவும் பல்லியின் முட்டையை போலவுமிருக்கும். எதிர்காலத்தின் கடவுளிட மிருந்தோ கடந்த காலத்து மூதாதைகளிடமிருந்தோ கிழவன்
பெற்றிருக்கும் மழாங்கற்களை கரும்பலகையின் கட்டங்களிடையே பரப்புவான்.
ஒரு எதிர்வினையை சிறு சமிக்ஞையை மனதில் நிறுத்தி பட்சிகளின் குரல்களால் பின்னிரவு கலையும்வரை பரப்பப்பட்ட மழாங்கற்கள் அசைகிறதா எனப் பார்த்தபடி அமர்ந்திருப்போம். இடையில் மூன்று நான்கு கோப்பைகள் தேநீர் போட்டு வைப்பான். பல இரவுகள் அக்கரும்பலகை முன் இருந்தாலும் மழாங்கற்களை உற்று நோக்கத் தொடங்கியவுடன் எனது எண்ணங்கள் அங்கிருந்து வேறெங்காவது எடுத்துச் சென்றுவிடும். ஒரு நாள் கிழவன், உனது கண் எதைப் பார்க்கிறதோ அதன்மீதே உன் கவனத்தை நிறுத்தி நில் என்றான்.
மழாங்கற்களை கரும்பலகையின் மங்கிய பவள நிறக்கோடுகளினூடே உற்று நோக்குவதின் மூலம் என் கவனிப்பை ஒருமுகப் படுத்தினேன். என் கவனத்தின் மூலம் கவனமின்மையை அடைந்தேன், கவனமின்மை எங்கும் நிறைந்து என்னை மிதக்கவைத்தது. நான் மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டேன்: ஒன்றை கற்றுக் கொள்வதென்று ஏதுமில்லை. பவளநிறக் கட்டங்களினூடாக கவனிப்பதின் மூலம் என் எண்ணங்களை சிந்தையை நகர்த்திக் கொள்வதுதான் அல்லது நாம் எதுவாக வேண்டுமோ அதுவாகவே மாறிவிடுவதுதான். கரும்பலகையும் கிழவனும் எனக்கு இதையே மௌனமாகப் போதித்தனர். தாமதமாக நான் புரிந்துகொண்ட பல இரவுகளுக்குப் பின் கிழவன் என்னிடம் கேட்டான், சற்று நேரத்திற்கு முன் நம்மோடு “ன்யாக்” ஒன்று இருந்ததை நீ உணர்ந்தாயா என்றான். நானொரு ஆழ்ந்த மனநிலையில் இருந்தாலும் “ன்யாக்” வந்ததையும் எங்களோடு இருந்ததையும் உணரவில்லை என்றேன்.
இன்று வந்த “ன்யாக்” புதியது அல்ல என்றாலும் ஏற்கனவே பரிச்சயமற்றதுதான். அவர் விட்டுச் சென்ற தடயத்தை மட்டும் உனக்குக் காட்டுகிறேன்.
கிழவன் எப்போதும் எங்களுக்கு இரவில் தேநீர் போடும்போது மூன்று நான்கு கோப்பைகளாகத்தான் போடுவான்.
இந்தா இது உனது, இந்தக் கோப்பை என்னுடையது. மூன்றாவதாய் இருந்த கோப்பையை என்னிடம் நீட்டினான். அவன் நீட்டிய கோப்பையில் கோப்பை நிறைய தேநீர் அப்படியே இருந்தது, இதைக் குடித்துப் பார் என்றான். அக்கோப்பையிலிருந்து சிறு மிடறு குடித்தேன். இரவின் ஆழங்களால் பின்னப்பட்ட எனது உணர்வுகளின் உறைநிலை நொறுங்குவதாக உணர்ந்தேன். சர்க்கரையின் இனிப்போ தேநீர்த் துகளின் உவர்ப்போ இன்றி ஒன்றுமில்லாததைப் போல் சுவையற்றிருந்தது.
கோப்பையிலிருந்த உள்ளீடற்ற தேநீரை விடுதியின் பின் வளர்ந்து தேநீர் விடுதியை பெரும் கருங்குடை போல் கவிழ்ந்து காத்து நிற்கும் மரத்தின் வேர்களில் ஊற்றினான். இதற்கு முன்பும் கிழவன் அக்கரிய மரத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் எப்போதும் தேநீரையே ஊற்றுகிறான்.
மழாங்கற்களை உற்று நோக்கத் தொடங்கியதும் கட்டங்களில் தானாகவே நகரத்துவங்கிவிடும் எனது விழிகள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து வேறெங்குவதுமாக அலைய கற்கள் கட்டங்களினூடாக நகரத் துவங்கும் வார்த்தைகளற்ற உணர்வுகளால் கிழவனுக்கும் எனக்குமிடையே ஆழ்ந்த மௌனம் நிறைந்துவிட்டது.
எனக்கும் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் டையில் கணங்கள் மறைந்து பொழுதுகள் வளர்ந்து பகல் இரவுகள் பெருக்கெடுத்தன. வார்த்தைகளிற்றிருக்கும் என்னுள் வார்த்தைகள் கைவிட்ட வெற்றிடத்தில் தசையால் உருகிய குளம் உருவாகத் தொடங்கியது.
நிறமற்ற குரல்களாகவும் நீராகவும் நெருப்பாகவும் ரூபமடையத் துடிக்கும் தீயின் உயர்வாகவும் தண்ணீரின் சலனமாகவும் எழுந்து கலைந்து அமிழ்ந்தன. உள்ளே அதன் கரைகளில் மோதியபடி இருந்தன. “ன்யாக்”குகளுக்கு வண்ணம் இல்லாததாலும் “ன்யாக்”குகள் வண்ணங்களை விரும்பாததாலும் நீரின் நிறமற்ற இயல்பிலும் தீயின் நிலையற்ற ரூபத்திலும் என்னை என் இதயத்தைப் பற்றிக் கொண்டன. ன்யாக்குகளின் விருப்பத்திற்கு என் இதயத்தை விட்டுவிட்டேன்.
எப்போதும் என்னுடனிருக்கும் ன்யாக்கை முதன்முறையாக கண்ணாடியின் குறுக்கே வழியும் நீர் ஒழுக்கைப் போல் கண்டேன். நீர் ஒழுக்கு கண்ணாடியை பின்னமடையச் செய்வதால் “ன்யாக் ஒரே நாளின் பல பொழுதுகளில் தோன்றி மறைவதாக உணர்ந்தேன். ஆனால் அது எப்போதும் என்னுடனே இருந்தது. மொத்த ஆயுளை வாழ்ந்து கழிக்காமல் தம் உடலை மட்டும் அழித்துக்கொண்டு அழிக்கப்பட்ட தங்கள் வாழ்வின் ஆற்றலை வாழ்ந்து வெளியேற்றிக் கொள்ளாத உள்ளுக்குள் அலறிக் கொண்டிருக்கும் மனிதர்களின் அழிந்த உடல்களின் ஆன்மாக்களே ன்யாக்காக ஆகின. தன்னைத் தானே தூக்கிலிட்டு இறந்துபோன பெண் ன்யாக் இடம் என்னுடன் ருந்த பல நாட்களின் இடைவெளியில் கேட்டேன்:
நீ ஏன் இறந்தாய்?
அன்பின்மையால் நான். இன்னும் இறக்கவில்லை.
அவன் உன்னை நேசித்தான் நீ
நான் தீவிரமாக நடித்தேன் ஆனால் இப்போது அவனைத் தேடுகிறேன்.
எங்கே அவன்?
அவன் இருப்பான் இங்கேதான், பூமியின் மேலேயோ பூமியின் உள்ளேயோ.
நான் வேறு பலரோடு உரையாடினாலும் தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொண்ட ன்யாக்தான், எப்போதும் என்னுடனிருந்து கதகதப்பான போர்வையைப் போல நான் விரும்பும் சிநேகித உணர்வை எனக்கு அளித்தது. மிதமான காற்றால் சுமந்து செல்லப்படு பவனைப் போல் உணர்ந்தேன்.
இந்த ன்யாக் உள்ளுணர்வைப்போல் உடனிருந்து வழிநடத்தும் நெரிசல்மிகுந்த பேருந்தில் பயணிக்கும்போது, அதோ அந்த மஞ்சள் நிறச்சட்டை இறங்கப் போகிறார். அவர் அருகில் செல் என்றொரு உணர்வு என் முதுகை நிறைக்கும். அவர் இறங்கிச் செல்வார், நான் அமர்ந்து செல்வேன். தொலைதூர ஊர்களிலிருந்து பேருந்துகள் கொண்டுவரும் அசதியான தூக்கம், பேருந்தில் நான் அமர்ந்தவுடன் என்னைப் பற்றிக்கொள்ளும், இதனால் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டிப்போய் வேறு ஊர்களை அடைந்திருக்கிறேன், ஆனால் இப்போது எனது கழுத்தை மயிற்பீலியால் யாரோ நீவியது போல் உணர்ந்து கண்விழித்தால் நான் இறங்கும் இடம் வந்திருக்கும். சிலவேளை, எனது நிறுத்தத்திற்கு முன்னமே இறங்கிவிடு என என் இதயத்தருகே கிசுகிசுக்கும், இறங்குவேன். நான் நகரத் தெருக்களில் நடக்கும்போது ஐந்தடி பின்னால் போய் மூன்றடி பக்கவாட்டில் நகர்ந்து மீண்டும் முன்னால் போ என என் மார்பில் கைவைத்து நேசத்துடன் தள்ளிவிடும். மேலும் எதிரே வருகிறானே நீலநிற ஜீன்ஸும் ஜிப்பாவும் அணிந்து வருபவன் உன்னைக் கடப்பதற்குள் இந்தச் சந்தில் திரும்பி விடு. பூட்டிய கதவுகளின் முன்னால் நீண்ட நேரம் நிற்காதே, பெருந்தீமை யென்பதால் இரவில் கண்ணாடி பார்க்காதே, காற்றில் உயர்ந்து தாழும் மரக்கிளையைப் பார்த்துக் கொண்டிரு நில் என்றொரு சொல்லும் திரும்பிச் செல் என்றொரு குரலுமாக என்னை வந்தடையும் ன்யாக்கின் சமிக்ஞைகளை நான் பின்பற்றியபோதெல்லாம் வஸ்துகளெல்லாம் திடத்தன்மை அழிந்து நான் மிதப்பதான நிலையில் மகிழ்ச்சியானவைகளே எனக்குக் கிட்டின. எனது தீர்மானங்களையும் என் செயல்களையும் என் வாழ்வோடு பிணைந்த சகலத்தையும் ன்யாக்கிடம் விட்டு விட்டேன். எல்லோரும் தம் வாழ்வை ன்யாக்கிடம் விட்டுவிட்டால் இந்த உலகமும் நமது வாழ்வும் மென்மையானதாக மாறிவிடும். மனிதர்களிடமிருந்தும் கோட்பாடு களிடமிருந்தும் இவ்வுலகை விடுவித்து ன்யாக்குகளின் வசம் ஒப்படைக்கும் காலம் வரும். தீவிரமாக வாழ்ந்து நிராசையோடு இறந்தவர்களால்தான் ஒவ்வொருவரின் தனி நியதிகளாக எல்லோருக்கும் பொதுவாக மாற்றாமல் ஆன்மாக்கள் அசைகளிலிருந்து உருப்பெறாமல் ஆசைகளே ஆன்மாவாக வரமுடியும் ஏற்கனவே இறந்தவர்கள் மனித நியாயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மனித நியதிகளுக்கு அப்பாற்பட்ட வர்கள் என்றாலும் நினைவின் நிழலை அறிந்து சில தாந்திரிக வாதிகள் ன்யாக்குகளை கட்டுப்படுத்தினார்கள் என்பதைவிட, மனிதர்களிடமிருந்து ன்யாக்குகளை சமாதிகளை மறைந்து நிற்கும் முட்புதர்களுக்கப்பால் மின்னலால் கிழிபடும் மேற்கு வானின் தூரம் வரை விரட்ட மட்டுமே முடிந்தது. தாந்திரிகவாதிகள் ன்யாக்குகளைக் சுண்டு மனிதர்கள் அஞ்சுவதையும் வெறுப்பதையும் உணர்த்த எறுக்கம் குச்சியால் அடித்து எரியும் அதன் கண்களில் சாம்பலை வீசி விரட்டினர். சாம்பலிலிருந்து மீண்டெழுந்த ன்யாக்குகள் தங்கள் மேல் மீண்டும் சாம்பல் படிவதை விரும்பாமல், எதுவுமற்ற தங்கள் பிரதேசங்களுக்கு விலகிப் போயின. நான் கிழவனிடம் ன்யாக்குகள் ஏன் மனிதர்களைப் பற்றிக் கொண்டு அலைக்கழிக்கிறதென்று கேட்டேன்.
கிழவன் அவனது சிறிய வாய் திறந்து பேசத் துவங்கினான். “ன்யாக்”குகளும் பழக்கத்திற்கும் நினைவுகளுக்கும் உட்பட்டது தான். அலைக்கழிவதில்தான் ஆன்மா உருவம் கொள்கிறது. நினைவு களிடமிருந்து தங்களை துண்டித்துக்கொள்ள உடனே முடிவதில்லை. பசியற்ற, பிணியற்ற, காலமற்ற உலகிற்குள் எதுவுமற்ற நிலையில் தங்களை இருத்திக்கொள்ள காலமற்ற காலத்தில் வாழ, சிறிது காலம் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே இருளுமில்லை ஒளியுமில்லை. எங்கும் ஊதா வண்ணம் நிறைந்த அக்கூட்டிற்குள் போகாமல் தாம் நேசித்தவர்களை, விரும்பி அருந்திய பானங்களை, பிடித்தமான பொருட்களைப் பற்றி பீடித்துக்கொண்டு, தாம் நுகர்ந்த வாசனைகளை விடாதிருக்கின்றன. நான் அறிந்த “ன்யாக்” அது எப்போதும் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்துக்கொண்டது. அது பீடித்துக் கொண்ட பின் யாரும் அந்நாற்காலியில் அமரவே முடியவில்லை. அதில் அமர்ந்தவர்களுக்கு எரிச்சல், நமச்சல், குடைச்சல் வந்துவிடும். பல காலம் அதன்மீது யாரும் அமர முடியாமல் முழுமையான பொருளாகவும் உயிர்பெற்ற தோற்றமாகவும் இருந்தது. சிறுவர்கள் மட்டுமே அதன்மீது ஏறி விளையாடி அதன் மர இணைப்புகளைக் குலைத்தார்கள். நொடித்து போனவர்களைப்போல் இற்று விழ இருந்தபோது தச்சனை அழைத்துவந்து இணைப்புகளை மராமத்து செய்து நாற்காலியினுள் ஐந்து ஆணிகளை செலுத்தியபோதுதான் நாற்காலியை விட்டகன்றது அந்த “ன்யாக்”. ஆவிகள் மனிதர்களை வாசனையால்தான் பற்றிக் கொள்கின்றன. ன்யாக்குகளிடமிருந்து மனிதர்கள் விடுபடவும் மனிதர்களிடமிருந்து ன்யாக்குகள் விடுபடவும் தாந்திரிகவாதிகளின் எறுக்கம் மிளார் அடியையும் சாம்பலால் தூஷிப்பதையும்விட, மறதி நினைவுகளை அழிப்பதுதான் மேன்மையான வழி என கிழவன் கூறினான்.
எனது பாதைக்கே திரும்பினேன், முடிவில்லாத ஒளியின் குறுக்கே பட்டத்தின் கருப்பு வாலாய் பறந்துகொண்டிருக்கும் தொலைவில்
சப்தமற்ற என் தனிமைக்குள் சென்றேன். இடுகாட்டிலிருந்து நகரை நோக்கி வளைந்து நீண்டு வரும் கல்பாதை மீது குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து தன் ஒளி ஊடுறுவும் கரங்களால் சேமித்து அவள் மார்பருகே இடக்கை வைத்து குவித்தபடி சேகரிக்கிறாள் குனிந்து நிமிர்ந்து…
அவள் ஒரு புதிய “ன்யாக்”. புதைகுழியிலிருந்து இப்போதே அவள் எழுந்திருக்கிறாள். ஒளி ஊடுறுவும் அவள் ஆன்மாவில் சேறு படிந்திருக்கிறது. அவளுக்காக ன்யாக்காக மாறிவிட்ட அவளுக்காக அவள் சமூகத்தாராலும், சகோதரர்களாலும் முற்காலத்துப் பேய்கள் விரும்பும் எள்ளும் முனைமுறிந்த நெல்லும் வளைந்து வரும் கல்பாதை மீது விதைக்கப்பட்டிருக்கின்றன. பாறை மேல் விதைக்கப்பட்ட அறுவடை காணாத தான்யங்கள் அவை. எப்போதும் கர்ப்பமாக இருந்துகொண்டிருக்கும் பிரசவம் அறியாத பாறைகளைப் போன்ற தான்யங்கள். பேய்க்காற்று அவைகளைக் கலைக்க, அவள் தன் இல் திரும்பி போகமுடியாதபடி, திசைகளைக் குழப்பி பாதையை அழித்து பூமியெங்கும் சிதறி காணாமல் போய்விடும் அவளைப் பின் தொடர்ந்து ஆன்மாவின் நினைவுகளுக்கு முன் சென்று அவள் மரண தினத்தில் நிற்கிறேன்.
ஒற்றைக் காலில் நின்று குமிழும் ஊதுபத்தி மனமும் சாமந்திப் பூக்களின் வாசமும் சாவிற்கென தரும் வாசனையையும் மீறி அவள் சதையின் தீய்ந்த நாற்றமே அந்த நாளைச் சூழ்ந்திருந்தது. அவளுக்காக பேசாமல் பெற்றோர்கள் மௌனமாக இருந்தபின் அவள் சகோதரர்கள் அன்பின் பெயரால் கட்டாயப்படுத்தலையும் கட்டாயப்படுத்தலையே அன்பாகவும் அவளை நெறுக்கினார்கள்; ஆத்திரமுற்றவர்களாக அவளை .நீ மணக்க முடியாது நீ நன்றாய் வாழ முடியாது எனக் கத்தினார்கள். அவள் சகோதரர்களாலும் பெற்றோர்களாலும் ஏன் யாராலும் கடவுள்களாலும் வழங்கமுடியாத சொர்க்க நரகத்திற்கப் பாலான இன்பத்தை சாதாரண பாயின் மீது அவள் உடலிலிருந்தே எழுப்பி அவளுக்கு வழங்கியவன் அவனுடைய இவ்வுடலை அவனுக்குத் தருவேன் இல்லையெனில் தீக்குத்தருவேன் என் மரணத்தைத் தீயை, தழுவியவள்.
சூரியன் மலைகளுக்குப் பின்னால் சமாதிகளுக்கு மேலிருந்து கிரணங்களை அகற்றிக் கொண்டதும் தனக்கு விதிக்கப்பட்ட பாதையில் தான்யங்களை சேமித்தபடி கிளம்புகிறாள். அவள் வாழ்ந்த இல்லம் நோக்கி அவள் ஒருநாளும் சென்று சேரமுடியாது. கன்னி கழியாத பெண்ணின் உக்கிரம் குடும்ப அழிவிற்கும் சகோதர நாசத்திற்கும் காரணமாகும் என்பதால், அவர்களால் இரைக்கப்பட்ட தான்யங்கள் அவளை வழி மறித்தன.
க்ரஷர் பறவையின் வயிற்றுக்குள் அகப்பட்ட உணவுத் துண்டைப்போல் தான்யப் பறவைகளிடையே அவள் சிக்கிக்
கொண்டாள். இனி, அவள் ஆன்மாவின் நினைவழியும் காலம் வரை பேய்கள் சூரையிட்டு மகிழும் எள்ளும் நெல்லும் சேமித்தபடி தானெப் போதும் அடைய முடியா வீட்டை நோக்கி வருவாள். அவள் பொறுக்கி முடிப்பதற்குள் சூரியனின் இளங்கதிர்கள் ஒளி பரப்ப, அவள் கைகளில் குமித்து சேமித்த தான்யங்கள் அவளிடமிருந்து ‘பிய்த்துக்கொண்டு போய் விதைத்த இடத்திலேயே சிதறி விடுகின்றது. அந்தியில் மீண்டும் இதையே தொடர்வாள். விதைகள் மீதிக் காலத்தை நூல்நூற்றுக் கழிப்பதைப் போல் அவள் மேல் விதிக்கப்பட்ட சாபம் இனி இதுதான், அவள் ஆன்மாவின் வாழ்வும் இதுதான்.
பாறைகளாக உருமாறி வழி மறிக்கும் தான்யங்கள் இடுகாட்டுப் பாதையெங்கும் இருக்கும் வரை, அவள் ஆன்மாவுக்குச் சுதந்திரமென்பதில்லை. பாறைகளுக்கிடையே ஆன்மா உழல வேண்டியதுதான். கடந்த காலத்திலிருந்தும் நினைவுகளிலிருந்தும் தங்களை உதிர்த்துக் கொண்ட ன்யாக்குகளே வெட்டவெளிக்குச் சாம்பல் நிறத்தை வழங்கி இன்ப துன்பங்களுக்கப்பால் சஞ்சரிக்கின்றன.
நான் அவள் ஆன்மாவை பாறைகளாக உருமாறி வழிமறிக்கும் தான்யங்களிடமிருந்து விடுவித்துவிட முடிவெடுத்தேன்.
இருள் நிறம் போர்த்திய அண்டங்காக்கைகளும் கிளிகளும் மைனாக்களும் பிணந்தின்னிக் கழுகும் அப்பாதையைக் கடந்துசெல்லும் யாதொரு பட்சியும் தான்யங்களைக் கொத்தவே இல்லை. பட்சிகளின் கண்களுக்கு தெரியவில்லையா, பட்சிகள் அத் தீய தான்யங்களை உண்ண விரும்பவில்லையா என – நானறியேன்.
தீவனக்கடையில் வாங்கிய நெல்லையும் எள்ளையும் வெள்ளைப் புறா வில்ஸனின் புறாக் கொட்டகைக்கு எடுத்துச் சென்று புறாக்களுக்கு இறைத்தேன். கூட்டமாக சாவு வீட்டின் ஒப்பாரியைப் போல முனகிக்கொண்டு கொத்தி கொத்தி இரையெடுத்தன. எனக்குள் உற்சாகமேற்பட தினமும் நெல்லும் எள்ளும் புறாக்களுக்கு இறைத்து வந்தேன். என் நண்பனின் அனுமதியோடு மூக்சகை, கூல்பசறை, கோழி கொண்டை போன்ற ஜாதிப் புறாக்கள் பதின்மூன்றையும் சிறிய கூண்டிலடைத்து வில்ஸன் கொடுத்தனுப்பினான். நான் எனதறையில் சில நாள் வைத்திருக்கிறேன் என்று கூறி எடுத்து வைத்தேன்.
புறாக்களை கல்லூரி மைதானமொன்றிற்கு எடுத்துச் சென்று கூண்டைத் திறந்து வெளியேவிட்டு கருப்பு மஞ்சள் தான்யத்தை நீளவாக்கில் இறைத்தபடியே நடந்து செல்வேன், புறாக்கள் என் பின்னே தான்யங்களை கொத்தித் தின்றபடியே வரும். பல நாட்கள் புறாக்களுக்கு இதைப் பழக்கிய பின் தீவன முடிச்சோடும் புறாக் கூண்டோடும் இடுகாடு நோக்கி கிளம்பினேன்.
என்னோடு எப்போதுமிருந்து வழிநடத்தும் “ன்யாக்” எனது செயலைத் தடுக்கும் விதத்தில் என்னை இடறிவிழச் செய்தது. மேலும் .
தனது சமிக்ஞைகளால் மறுப்பையும் எதிர்ப்பையும் காட்டியது.நான் முதன்முறையாக என்னை ஒப்புவித்துக்கொண்ட “ன்யாக்”கின்; சமிக்ஞைகளை, எரிச்சரிக்கைகளை மறுத்தேன். பகல் முழுக்க ஆழ்த்தப் பட்ட வெயிலால் இலைகளும் செடிகளும் வாடித் துவண்டு நின்றன. அவள் புதைமேட்டுக்கருகில் கூண்டை என் தலையில் இருந்து இறக்கிப் புறாக்களை வெளியே விட்டேன். பின் கூண்டை என் தலையில் – சுமந்தபடி நான் எடுத்துச் சென்ற எள்ளையும் நெல்லையும் இறைப்பதுபோல் பாவனை செய்தபடியே சென்றேன். நீண்ட இடுகாட்டு கல்பாதையெங்கும் பிற பட்சிகளின் கண்களுக்கு அகப்படாத தான்யங்களை நான் இறைத்துச் செல்வதாக நினைத்து கொத்தித் தின்றபடி என் பின்னால் வந்தன புறாக்கள்.
சூரியன் அஸ்தமிப்பதற்குள் இடுகாட்டுப் பாதை கடந்து நகரினுள் நுழைந்து என்னைப் பின்தொடர்ந்த புறாக்களோடு பாதையெங்கும் வழிமறித்த தான்யங்களை ஒன்றுவிடாமல் கொத்தித் தின்றபடி அவள் வீடு வரை வந்துவிட்டோம். அவள் வீடெது என்பதை தான்யங்கள் புறாக்களுக்கும் புறாக்கள் எனக்கும் காட்டின.
அவள் வீட்டு வாயிற்படியின் மாக்கோலத்தில் சிதறி இருந்த கடைசிப் பாறையையும் கல்பசறை அண்ணாந்து விழுங்கியவுடன் சூரியன் அஸ்தமித்தான்.
மெல்லி விசிலொலியில் புறாக்களை அழைத்துக் கூண்டிலடைத்து கூண்டோடு புறாக்களை வில்ஸனிடம் ஒப்படைத்தேன். வில்ஸன் அதற்குள் புறாக்கள் உனக்கு சலித்துவிட்டதா எனக் கேட்டான். ஆமாம். ஆனால் எனது தனிமையைப் போக்க அல்லது எனக்குத் தேவையான போது புறாக்களை எடுத்துச் செல்கிறேன் எனக்கூறி விடைபெற்றேன்.
இனி, அவள் ஆன்மாவின் முன்னால் பாதை இல்லை, திசை இல்லை. பூமி மீது விதைக்கப்பட்ட அறுவடையற்ற சாபத்தைப் போன்ற தான்ய பாறைகளை அவள் உருட்டத் தேவையில்லை. நினைவுகளும் அவளை விட்டகலும் காற்றைப் போல் திசையின்றிச் சுழலலாம். மீதமுள்ள அவள் ஆன்மாவின் ஆற்றல் அழியும் வரை அவளுக்கு விதிக்கப்பட்ட விதியை எனது குயுக்தியால் கச்சிதமாக வென்ற நிம்மதியுடன் அன்றிரவின் உறக்கத்தினுள் சென்றேன்.
காலை வேளையில் வழக்கம்போல் வில்ஸன் என் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துக் கொண்டு அவனது புறா கொட்டகைக்கு இருவரும் சென்றோம். தன்மையாக வீசிய தென்றலில் நான் எடுத்துச் சென்ற பதின்மூன்று புறாக்களும் வயிறு கிழிந்து கொட்டகை யெங்கும் சிதறி இறந்து கிடந்தன.
புறாக்களின் கிழிந்த வயிற்றுக்குள் ஒரே ஒரு தான்யம்கூட இல்லவே இல்லை.

One Comment on “குமார் அம்பாயிரம்/ன்யாக்”
Comments are closed.