விஜயகுமார் ஜெயராமன்/ பூப்பு

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10

மாலை 4 மணி. எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் ஷிவானியை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தேன்.
நான் வழக்கமாக சில வினாடிகளில் கடந்துவிடும் அந்த சாலை சந்திப்பில் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிக வாகன போக்குவரத்து இருந்தது.
நான்கு பக்கமும் வாகனங்கள் சூழ்ந்துகொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் மிக மெதுவாகவே சிக்னலை கடந்துகொண்டிருந்தன. நானும்
அங்குலம் அங்குலமாக வாகனத்தை நகர்த்திக்கொண்டு இருந்தேன்.
இடதுபுறம் இருந்த நடைபாதையில் பாதசாரிகள் நடந்துகொண்டிருந்தார்கள். ஷிவானி என்னுடைய தோளை தட்டி “அப்பா, அப்பா” என்று அழைத்தாள்
“என்னம்மா, எதுவும் வேணுமா”
“இல்லப்பா, இந்த சைட்ல போற அந்த பொண்ண பாருங்கப்பா. அவளுக்கு உடம்பு
சரியில்ல போல இருக்கு. மயக்கம் வரமாதிரி இருக்குன்னு நினைக்கிறேன். பாவம்பா,
என்னான்னு பார்க்கலாமா” என்று ஷிவானி கேட்டதும்,
நான் இடதுபுறம் திரும்பி அந்த சிறுமியை கவனித்தேன். நடுத்தர உயரத்துடன்
ஒல்லியாக இருந்தாள். மிக மெதுவாக தள்ளாடுவதை போல நடந்துகொண்டு
இருந்தாள். அரசு பள்ளி சீருடையை அணிந்துகொண்டு இருந்தாள். கையில்
புத்தகப்பை இருந்தது.
“ஆமாம்மா, அப்படி தான் தெரியுது”
நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த சிறுமி தள்ளாடிக்கொண்டே
நடைபாதையை ஒட்டி இருந்த கட்டிட சுவரை நோக்கி சென்றாள். அருகில்
மூடிவைக்கப்பட்டிருந்த ஒரு தள்ளுவண்டியின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு
அப்படியே அமர்ந்துவிட்டாள்.
பதறிப்போன நான் வாகனத்தை இடதுபுறம் நோக்கி திருப்ப முயன்றேன். நான்கு
பக்கமும் வாகனங்கள் இருந்ததால் என்னால் வாகனத்தை திருப்ப இயலவில்லை.
எல்லா பக்கத்திலும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். சிக்னலில்
சிவப்பு விளக்கு விழுந்துவிடுமோ என்ற அவசரத்தில் சென்றுகொண்டிருக்கும்
வாகனங்களுக்கு இடையில் எப்படி இடதுபக்கம் என்னுடைய வாகனத்தை திருப்புவது
என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். பின்னால் இருந்து தொடர்ச்சியாக ஒலி
எழுப்பிக்கொண்டிருந்தார்கள். வேறு வழி இல்லாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு
சென்று சற்று தூரத்தில் இருந்த வளைவில் ஒரு யு டேர்ன் அடித்து சுற்றிக்கொண்டு
மீண்டும் அதே சிக்னலுக்கு வந்தேன்.
இருசக்கர வாகனத்தை நடைபாதையை ஒட்டி நிறுத்திவிட்டு நானும் ஷிவானியும்
அந்த சிறுமியை நோக்கி ஓடினோம்.
நான் அருகில் சென்று அந்த சிறுமியின் கையை தொட்டு,
“என்னம்மா உடம்பு சரியில்லையா. மத்தியானம் சாப்பிடலையா” என்று கேட்டதும்
ஒருவித அதிர்ச்சியுடன் என்னுடைய கையை உதறிவிட்டு இன்னும் சுவர் ஓரமாக
சுருங்கிக்கொண்டாள்.
ஏதோ புரிந்தவனாய், “ஷிவானி, நான் கொஞ்சம் தள்ளி போய்க்கிறேன். நீ அந்த
பொண்ணுட்ட என்னாச்சுன்னு கேளும்மா” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளிச்சென்று
நின்று கொண்டேன்.
ஷிவானியிடம் அந்த சிறுமி காதோரம் ரகசியம் பேசுவதை போல ஏதோ பேசுவது
தெரிந்தது. நான் நினைத்தது சரிதான் என்று நினைத்துக்கொண்டேன். ஷிவானி
இரண்டு மாதங்கள் முன்பு தான் மேஜராகி இருந்ததால் அதை பற்றிய புரிதல் எனக்கு
இருந்தது.
ஷிவானி என் அருகில் வந்து,
“அப்பா, அந்த அக்கா ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாங்க. கவர்மெண்ட் ஸ்கூல்ல
டென்த் படிக்கிறாங்களாம். ப்ளீடிங் இருக்கறத பார்த்துட்டு பயந்து
போயிருக்கங்காப்பா. மயக்கமா இருக்காம். எந்திரிக்கவே மாட்றாங்க. “
நான் எதிர்பார்த்தது தான்.
“நீ கொஞ்சம் பார்த்துக்கோம்மா. நான் போய் நாப்கின் வாங்கிட்டு வரேன். அந்த
பொண்ணு வீடு எங்க இருக்குன்னு கேட்டு வை. அவங்க வீட்டுல விட்டுட்டு
போய்டலாம்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக நடந்து மருந்து கடையை
நோக்கி ஓடினேன்.
ஒன்றுக்கு இரண்டாக நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
ஷிவானி அருகில் இருக்கும் தைரியத்தில் அந்த சிறுமி சற்று சகஜ நிலைக்கு
வந்திருப்பது புரிந்தது.
ஷிவானியிடம் நாப்கினை கொடுத்துவிட்டு,
“தள்ளுவண்டிக்கு பின்னால மறைவா போய் இப்போதைக்கு இதை வச்சிக்க சொல்லு.
ஒன்னும் பயப்பட வேணாம்னு தைரியம் சொல்லி கூட்டிட்டு வா”
சில நிமிடங்களில் இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். அந்த சிறுமியின்
புத்தகப்பையை நான் எடுத்துவந்து இருசக்கரவாகனத்தின் முன்புறத்தில்
வைத்துக்கொண்டேன்.
அருகில் வந்த அந்த சிறுமியிடம்,
“ஒன்னும் இல்லம்மா. பயப்படாத. உங்க வீடு எங்கம்மா இருக்கு.”
“கார்பொரேஷன் பெரிய டாய்லெட் பக்கத்துல இருக்கு அங்கிள்”
அந்த இடத்தில் ஒரு குடிசை பகுதியை கவனித்திருக்கிறேன். அதுவா என்று
கேட்கவில்லை. போகும் வழியில் அந்த சிறுமியே சொல்லட்டும் என்று
நினைத்துக்கொண்டு,
“சரிம்மா, ஏறி உக்காரு. போலாம்”
தயங்கிக்கொண்டே வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
கார்பொரேஷன் டாய்லெட் கடந்ததும் அந்த குடிசை பகுதி கண்ணில் பட்டது. வலது
பக்கம் கைகாட்டினாள். நான்கு குடிசைகளை கடந்து வந்த குடிசை வீட்டின் முன்
வாகனத்தை நிறுத்த சொன்னாள்.
வண்டி சத்தம் கேட்டதும் வெளியே வந்த ஒரு பெண்மணி என்னையும் ஷிவானியையும்
குழப்பத்துடன் பார்த்தாள்.
அந்த பெண் சிறுமியின் தாயாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
சிறுமி அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடியதும் என்ன ஏது என்று புரியாமல் என்னை
பார்த்த அந்த பெண்ணிடம்,
மெதுவான குரலில், “உங்க பொண்ணு வயசுக்கு வந்துடுச்சிங்க. ரோடு சைட்ல மயக்கம்
வந்த மாதிரி உக்கார்ந்து இருந்ததால அவளுக்கு தைரியம் சொல்லி கூட்டிட்டு
வந்தோம்”
விஷயத்தை கேட்ட அந்த பெண் முகத்தில் சந்தோஷம் தெரியவில்லை. ஏதோ
ஒருவிதமான பயமும் தவிப்பும் தான் தெரிந்தது.
சில வினாடிகள் கடந்து, “ரொம்ப நன்றிங்கய்யா” என்று சொல்லிவிட்டு ஒரு பழைய மடக்கு கட்டிலை
விரித்துப்போட்டு,
“இங்கே கொஞ்ச நேரம் உக்காருங்கய்யா, இதோ வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு
உள்ளே ஓடினாள்
சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த அந்த பெண்,
“மஞ்ச தண்ணி தலைக்கு ஊத்திவிட்டு உக்கார வச்சிட்டு வந்திருக்கேங்கய்யா. நீங்க
பண்ண உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டேன். இந்த பாப்பா உங்க
பொண்ணுங்களா. நீ என்னம்மா படிக்கிறே”
“எட்டாவது படிக்கிறேன் ஆன்ட்டி” என்று ஷிவானி சொல்லவும்,
“அய்யா, டீ வாங்கிட்டு வரேன். குடிக்கிறீங்களா”
“வேணாங்க. டைம் ஆகிடுச்சு. நாங்க கிளம்பனும். இதை வச்சிக்கோங்க” என்று
சொல்லிக்கொண்டே நான் கையில் வைத்திருந்த நாப்கின் பாக்கெட்டுகளை
கொடுத்தேன்
அதை வாங்கிக்கொள்ள மறுத்த அந்த பெண்
“இதெல்லாம் பழக்க வேணாங்க. அப்புறம் அதையே கேட்கும் பொண்ணு. மூணு
வேளை துன்றதுக்கே துட்டு இல்ல, இந்த லட்சணத்துல இதெல்லாம் எப்படி
வாங்கிக்கொடுக்க முடியும். துணியே போதும்ங்க”
வற்புறுத்தி அந்த பெண்ணின் கையில் நாப்கின் பாக்கெட்டுகளை திணித்தேன்
“அவ படிக்கிற பள்ளிக்கூடத்துல இந்த நாப்கின் கொடுக்கற மெஷின் ஒன்னு ஆறு
மாசத்துக்கு முன்னால பெரிய பெரிய அரசியல்வாதிங்க எல்லாம் வந்து விழா
கொண்டாடி வச்சுட்டு போனாங்க. அது வெறும் ஒரு மாசம் தான் வேலை செஞ்சுச்சு.
இப்போ ஒரு ஓரமா துருப்புடிச்சி போய் கிடக்கு”
“அவங்க அப்பா?” என்று நான் இழுத்ததும்,
“அந்தாள் குடிச்சி குடிச்சியே செத்துட்டாருங்க. இவ ஒரே பொண்ணு. நான் வீட்டு
வேலை எல்லாம் பார்த்து ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கேன்”
இடது பக்கம் மூன்றாவது குடிசையில் இருந்து ஒரு பெண் எட்டிப்பார்த்து,
“என்ன சுசிலா, வீட்டுக்கு விருந்தாடி போல இருக்கு. என்ன விஷேஷம்” என்று
கேட்டாள்
“அதெல்லாம் ஒன்னும் இல்லேக்கா, இவங்க வீட்டுல வீட்டு வேலைக்கு ஆளு
வேணுமாம். யாரோ என்னோட பேரை சொல்லி இருப்பாங்க போல இருக்கு. அதான்
தேடிட்டு வந்துருக்காங்க”
கேள்வி கேட்ட அந்த பெண் குடிசைக்குள் போனதும் என்னை பார்த்த சிறுமியின் தாய்
சுசிலா,
“தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க கிட்ட சொன்னா இந்த ஏரியாவுக்கே விஷயம்
தெரிஞ்சிடும். அதான் சொல்லல” என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் சென்று ஒரு
தட்டில் சில பலகாரங்களை எடுத்துவந்து நீட்டினாள்
“இன்னைக்கு ஒரு மஞ்சத்தண்ணி பங்க்ஷன்ல பாத்திரம் கழுவ கூப்டுருந்தாங்க. அங்க
கொடுத்தாங்க. நல்லா இருக்கும் சாப்புடுங்க”
தட்டில் இருந்த மைசூர் பாக்கில் கொஞ்சம் பிட்டு வாயில் போட்டுக்கொண்டேன்.
செல்பேசி ஒலித்தது. அழைத்தது மனைவி.
“இவ்வளவு நேரமா என்ன பண்றீங்க. வீட்டுக்கு எப்போ வருவீங்க” என்று கேட்டாள்.
“வந்துகிட்டே இருக்கோம்மா. டிராபிக் அதிகமா இருக்கு” என்று அவளை
சமாளித்துக்கொண்டு இருக்கையில் சிறுமியின் தாய் எழுந்து குடிசைக்குள் சென்றாள்.
“ஊர்லேர்ந்து அம்மாவும் அப்பாவும் வந்துருக்காங்க. உங்க கிட்ட பேசணுமாம்”
“எதை பத்தி”
“ஷிவானியை பத்தி தான். அவளுக்கு பூப்புனித நீராட்டு விழா வைக்கணுமாம். எப்போ
வைக்க போறோம்னு கேக்கறாங்க”
ஏற்கனவே பேசிய விஷயத்தை மீண்டும் ஏன் கிளப்புகிறார்கள் என்று கோபம் வந்தது
எனக்கு.
“அதை பத்தி தான் ஏற்கனவே பேசிட்டோமோ. எனக்கு அதுல விருப்பம் இல்ல.
ஷிவானிக்கும் புடிக்கலன்னு அவளே சொல்லிட்டா. நான் சொன்னதுக்கு நீயும் தானே
சரின்னு சொன்னே. இப்போ என்ன” என்று நான் கேட்டதும்,
“அப்போ நீங்க பெண்ணுரிமை, பகுத்தறிவுன்னு ஏதேதோ சொல்லி என்னை
சமாளிச்சிட்டிங்க. இப்போ அம்மா அப்பா பேசினப்புறம் தான் பங்க்ஷன்
வைக்கணும்னு எனக்கும் ஆசை வந்துடுச்சி. போன வருஷம் உங்க பெரியப்பா பையன்
தஞ்சாவூர்ல அவரு பொண்ணுக்கு எவளோ க்ராண்டா பங்க்ஷன் வச்சாரு. அது மாதிரி
வைக்கணும்” அவள் பேசிக்கொண்டே இருக்க,
எனக்கு வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,
“இதை பத்தி பேசறதுக்கு இனிமே ஒன்னும் இல்லை. என்னோட பொண்ணை
காட்சிப்பொருளா உக்கார வைக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால
பங்க்ஷன் எல்லாம் வைக்க போறதில்லைன்னு உங்க அப்பா அம்மா கிட்டே தெளிவா
சொல்லிடு” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன்.
என்னையே பார்த்துக்கொண்டு இருந்த என் மகள் ஷிவானி நான் சொன்னது தான் சரி
என்பது போல ஆமோதித்து தலையை ஆட்டி சிரித்தாள்.
உள்ளே சுசிலா தன் மகளிடம் பேசுவது தெளிவாக காதில் விழுந்தது.
“பலகாரம் கொஞ்சம் சாப்புடு கண்ணு” என்று சொல்லிவிட்டு சற்று இடைவெளி
விட்டவள்,
“கண்ணு, அம்மா ஒன்னு சொன்னா கேப்பியா. நீ வயசுக்கு வந்தத யார்கிட்டேயும்
சொல்லக்கூடாது சரியா. பள்ளிக்கூடம் முடிக்கறவரைக்கும் யார்ட்டையும் சொல்லாத
கண்ணு. தெரிஞ்சா கழுகு மாதிரி பொண்ணு கேட்டு சுத்தி சுத்தி வர
ஆரம்பிச்சிடுவானுங்க. அம்மா உன்னை எப்படியாவது காலேஜ்ல சேத்துடுறேன்.
அம்மா மாதிரி லோல்படாம நல்லா படிச்சி பெரிய வேலைக்கு நீ போணும் கண்ணு.
புரிஞ்சுதா”
வெளியே வந்த சுசீலாவிடம்,
“நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்தேன்

ஆசிரியர் குறிப்பு

விஜயகுமார் ஜெயராமன் – 48 வயதாகும் இவர் குடும்பத்துடன் நெய்வேலியில் வசித்துவருகிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். மலேசியா தமிழ்மணி மன்றம் நடத்திய உலகளாவிய சிறுகதை போட்டி, கல்கி நினைவு சிறுகதை போட்டி, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்திய சிறுகதை போட்டி, புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை நடத்திய சிறுகதை போட்டிகள், தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதை போட்டி, உதிரிகள் மின்னிதழ் நடத்திய சிறுகதை போட்டி என பல்வேறு சிறுகதை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வென்றுள்ளார்.
‘யோகி’ என்ற புனைப்பெயரிலும் கதைகள் எழுதி வருகிறார்.
‘பயணம்’ என்ற சிறுகதை தொகுப்பு, ‘டுவிலைட் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பு, ‘ராஜ ராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும்’ என்ற குறுநாவல், ‘விதியை வெல்லும் மனிதம்’ என்ற குறுநாவல், ‘கண்ணாடி’ என்ற ஒரு நாவல் ஆகியவற்றை எழுதி உள்ளார். இவை அனைத்தும் அமேசான் கிண்டில் உள்ளிட்ட வலைத்தளங்களில் படிக்க கிடைக்கின்றன

துடுப்பதி ரகுநாதன்/மாயமான் காப்பகம்! – விருட்சம் நாளிதழ்

2 Comments on “விஜயகுமார் ஜெயராமன்/ பூப்பு”

Comments are closed.