பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – பகுதி-4 – இராய செல்லப்பா


அரவிந்தர் – அன்னை : முதல் சந்திப்பு


1914 மார்ச் 7ம் தேதி பாரிஸிலிருந்து கிளம்பி, மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியை
அடைந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அரவிந்தர் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அவரைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே மிர்ராவுக்குப் புல்லரித்தது. இவர் தான், தினமும் தனக்குத் தியானத்தின்போது தரிசனம் தரும் கிருஷ்ணா என்பதை ஒரே நொடியில் தெளிந்தார். தன் அனைத்து அங்கங்களும் பூமியில் தொடுமாறு நமஸ்கரித்தார். இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி நாயகன் இவரே என்று புரிந்துகொண்டார். (அதாவது சிவபெருமானின் அவதாரம்).

அரவிந்தர் 1908ல் பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டிருந்தாலும், ஆன்மிகத்தில் ஏதோ ஒரு
புதுவழியை உருவாக்க வேண்டுமென்னும் பேரவாவுடன் முயன்று கொண்டிருந்தாலும்,
அதுநாள் வரை எந்த குறிப்பிடத்தக்க நிகழ்வும் ஏற்பட்டிருக்கவில்லை. மிர்ராவும் ரிச்சர்டும் அவருக்கு மென்மேலும் ஊக்கம் ஊட்டுபவர்களாக இருந்தனர். அது மட்டுமல்ல, ‘ஆர்யா’ என்ற ஆன்மிகப் பத்திரிகையைத் துவக்கி, அதில் தனது ஆன்மிகக் கருத்துக்களை வெளியிட வேண்டுமென்றும் ரிச்சர்டு தான் ஆலோசனை வழங்கினார்.

1914ல் அரவிந்தர் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 அன்று ஆர்யாவின் முதல் இதழ் வெளிவந்தது.

சுமார் ஓராண்டுக்குப் பிறகு, அதாவது 1915 ஃபிப்ரவரியில் அவர்கள் இருவரும்
பாரிசுக்குத் திரும்பவேண்டி வந்தது. காரணம், அப்போது துவங்கிவிட்ட முதலாம் உலகப் போர். அடுத்த ஆண்டு அதாவது 1916ல் ஜப்பான் பயணமாகி, 1920 வரையான
நான்காண்டுகள் அவர்கள் ஜப்பானில் கழித்தனர். டோரத்தி ஹாக்ஸன் என்ற ஆங்கிலப்
பெண்மணியும் அவர்களோடு கூடவே இருந்தார். பின்னாளில் இவருக்கு ‘தத்தா’ என்ற
ஆன்மிகப் பெயரை ஸ்ரீஅன்னை வழங்கினார். மிர்ரா, ஸ்ரீஅன்னையாக மாறும் முன்னரே
அவரைத் தன் குருவாக ஏற்று இறுதிவரை உடனிருந்த முதல் வெளிநாட்டு சீடர், தத்தா
தான் எனலாம்.

மிர்ரா ஜப்பானில் இருந்தபோது நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரனாத் தாகூரைச்
சந்திக்க நேர்ந்தது. தன்னைப் போலவே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த மிர்ராவை,
இந்தியா வந்து தனது சாந்தினிகேதன் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை
ஏற்குமாறு அழைத்தார், தாகூர். அது கூடவில்லை. மிர்ராவுக்கு தனது பரிசாக ஒரு
டைப்ரைட்டரை வழங்கினாராம்.

1920ல் ஏப்ரல் 24ம் தேதியன்று ஜப்பனிலிருந்து பாண்டிச்சேரி வந்து சேர்ந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அன்று வந்த ஆன்மிக விளக்காம் மிர்ரா அல்ஃபாசா நிரந்தரமாக இங்கேயேதங்கிவிட்டார்.

அந்தநாள், அரவிந்த ஆசிரமத்தில் ஒரு நன்னாளாகக் கருதப்படுகிறது.
(ரிச்சர்டு துறவறம் பூண்டவர் போல ஓராண்டு காலம் வட இந்திய யாத்திரை
மேற்கொண்டதாகவும், ஆனால் அதற்கிடையிலேயே மறுமணம் செய்து
கொண்டுவிட்டதாகவும் தெரிகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் மிர்ராவுக்கும் சட்டபூர்வமான விவாகரத்து ஏற்பட்டது).

ஸ்ரீஅன்னை உதயமாகுதல்தான் எந்த ஆன்ம சக்திக்காகக் காத்திருந்தாரோ, அந்த பெரும்சக்தி தான் மிர்ரா என்பதால், தனது ஆன்மிகத்தேடலைத் தீவிரப்படுத்தலானார் அரவிந்தர். அவரை மக்கள் ‘பகவான் அரவிந்தர்’ என்றே இப்போது அழைக்க ஆரம்பித்தனர்.

அரவிந்தரின் சீடராக வந்த வெளிநாட்டுப் பெண்மணி என்றே அதுவரை ஆசிரமத்தில்
கருதப்பட்டு வந்த மிர்ராவை, அவர் சாதாரணமானவர் அல்லர், அவர் தான்
ஆதிபராசக்தியின் அவதாரம் என்று அறிவித்தார் அரவிந்தர். அன்று முதல் மிர்ரா என்ற
பெயர் மறைந்து “ஸ்ரீஅன்னை” என்றே அவர் அழைக்கப் படலானார்.

1927ல் ‘தி மதர்’ என்ற சிறிய நூலை எழுதினார் அரவிந்தர். அதில் நாம் வழக்கமாகக்
குறிப்பிடும் அலைமகள், கலைமகள், மலைமகள் என்ற மூன்று சக்திகளுக்குப் பதிலாக,
உலகில் நான்கு சக்திகள் உலவுவதாகக் கூறுகிறார். அவற்றை முறையே: மகேஸ்வரி,
மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என்கிறார். (அதாவது, ஆதிபராசக்தியானவள்,
மென்மையாக இயங்கும்போது மகேஸ்வரி யாகவும், ஊழித் தாண்டவமிட்டு அழிக்கும்
சக்தியாகும்போது மகாகாளியாகவும் இரண்டாகப் பிரிவதாக அர்த்தம்). இந்த நான்கு
சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்த அவதாரமே “ஸ்ரீஅன்னை” என்கிறார். அதன் பிறகு தான்
எத்தகைய பேரவதாரம் நம் முன்னே மனித வடிவில் நடமாடுகின்றது என்பது
ஆசிரமத்திலேயே பலருக்குப் புரிய ஆரம்பித்ததாம்.

(ஒரே காலத்தில் இரண்டு அவதாரங்கள் பூமியில் எப்போதும் நிகழ்ந்ததில்லை.
சிவபெருமானாக ஸ்ரீஅரவிந்தரும், ஆதிபராசக்தியாக ஸ்ரீ அன்னையும் அவதரித்தது
கலியுகத்தின் துயரங்களுக்கு மாற்றாகவே எனக் கருதவேண்டியிருக்கிறது என்று எனது
குருநாதர் கூறுவார்).

1926 நவம்பர் 24ம் தேதி தான் அரவிந்த ஆசிரமம் அதிகாரபூர்வமாக ஏற்பட்டதாகக்
கருதலாம். ஏனெனில் அன்றுதான் ஸ்ரீஅரவிந்தர், தனது யோகத்தின் முக்கியக் கட்டமாக,
வெளியுலகத்திலிருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஆன்மிகத்
தவத்தில் ஈடுபடலானார். தன்னைச் சுற்றியிருந்த 24 சீடர்களையும் ஆசிரமம் என்பதாகப் பெயரளவில் இருந்த நிறுவனத்தையும் ஸ்ரீ அன்னையிடம் ஒப்படைத்தார்.

(தொடரும்)

2 Comments on “பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – பகுதி-4 – இராய செல்லப்பா”

  1. “ஸ்ரீஅன்னை உதயமாகுதல்தான் எந்த ஆன்ம சக்திக்காகக் காத்திருந்தாரோ…” என்ற பாரா இப்படி வர வேண்டும்:

    “ஸ்ரீஅன்னை உதயமாகுதல்:-

    தான் எந்த ஆன்ம சக்திக்காகக் காத்திருந்தாரோ…”

Comments are closed.